Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கழுதை தேய்ந்து.....
- சிவசங்கரி|ஜனவரி 2008|
Share:
Click Here Enlargeசெய்தித்தாளின் மூலையில். எளிதில் கண்ணில் பட்டுவிடாத ஓர் ஓரத்தில் அந்த விளம்பரத்தை அச்சிட்டிருந்தார்கள்.

அவலமான தன் நிலையை எடுத்துச் சொல்லிக் கணவனின் மருத்துவச் செலவுக்காகப் பணம் கேட்கும் ஒரு பெண்ணின் வேண்டுதல்.

‘தனியார் கம்பெனியில் எழுத்தராகப் பணியாற்றும் 33 வயதாகும் என் கணவர் திரு. சேதுராமனுக்கு இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து, மாற்றுச் சிறுநீரகம் பொருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அறுவை சிகிச்சைக்கும், தொடர்ந்து மருத்துவக் கவனிப்புக்குமாக ஒரு லட்ச ரூபாய் வரை தேவைப்படுகிறது. வயதான பெற்றோர், மனைவி, மூன்று குழந்தைகள் ஆகியவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என் கணவருக்கு இருப்பதாலும், அவரது உடல்நிலையின் தீவிரம் கருதியும் இச்சிசிச்சையினை அவசரமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. ஏழ்மை நிலையிலுள்ள எங்களால் இப்பெரிய தொகையை உடனடியாகச் செலுத்த முடியாமல் தவிக்கிறோம். எனவே, கருணை மனமும், உதவும் மனப்பான்மையும் கொண்ட அனைவரையும் தாராளமாகப் பொருள் தந்து உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அனுப்ப வேண்டிய முகவரி...’

தொடர்ந்து படிக்க முடியாமல் பேப்பரை மடித்து டீப்பாயின் மீது போட்டாள் பூரணி.

என்ன ஒரு பரிதாபம்! நிலைமை எவ்வளவு மோசமானதாக இருக்க வேண்டும். இப்படி இரு கைகளையும் நீட்டி ‘பணம் தாருங்கள்’ என்று கேட்டு விளம்பரம் செய்வதற்கு!

சின்ன வயசு, மூன்று குழந்தைகள். அப்பா அம்மா வேறு. வெறும் கிளார்க் உத்தியோம். என்ன பெரிய சேமிப்பு இருந்திருக்கப் போகிறது! பதினைந்து தேதி ஆனாலே குழம்பு ரசமாகி, தயிர் மோராகும் வருமானத்தில் சேமிப்புக்குக்கூட இடம் உண்டா என்ன! அதுதான் விளம்பரமே சொல்கிறதே? ‘ஏழ்மை நிலை’ என்று!

ச்சே... இப்படிப்பட்டவர்களுக்குப் போய் லட்சக்கணக்கில் செலவாகும் வியாதி யெல்லாம் வருவானேன்! ஏழைகளுக் கெல்லாம் சுகவீனமே வரக்கூடாது. வெறும் தும்மல், ஜலதோஷம், தலைவலி - போதும். மற்ற சிறுநீரக, இருதயப் பெரிசுகளெல்லாம் காசுள்ளவர்களுக்கு வேண்டுமானால் வரட்டுமே!

இப்படிப் பிரிவுபடுத்தி இயற்கை அமைத்து விட்டால், பணக்காரர்களெல்லாம் காசைத் தெருவிலாவது கொட்டிவிட்டு நோயின்றி இருக்கவே விரும்புவார்கள். நிச்சயம்.

ஆனால், எங்கே? விரலுக்குத் தக்க வீக்கமாய் தாங்கக் கூடியதாய் எந்தச் செலவு வருகிறது! நல்லதோ, கெட்டதோ அத்தனைக் கும் தகுதிக்கு மீறின அளவில்தான் பணத்தைக் கொட்ட வேண்டிய நிலை அல்லவா எங்கும் எதிலும் காணப்படுகிறது!

‘ஹ¤ம்!’ - பூரணி தன்னால் இதுதான் முடியும் என்கிற தினுசில் நீளமாய் பெருமூச்சொன்றை வெளியிட்டாள்.

அது சரி, யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியும் என்பார்களே, அது பொய்யா! தெரிந்திருந்தால் இப்படி ஓர் ஏழைக் குடும்பத்தைக் கஷ்டப்படுத்துவாரா?

பூரணி மறுபடி பேப்பரை எடுத்து விளம்பரத்தைப் படித்தாள்.

அறுவை சிகிச்சைக்கும் தொடர்ந்து மருத்துவக் கவனிப்புக்குமாக... இத்தனை பெரிய நோயால் அவதிப்படும்போது ஆபீசுக்குப் போய் வருவதெல்லாம் நடக்காது. அப்படியானால் பால், மளிகை, வீட்டு வாடகை, பள்ளிகூடச் செலவுகள்.. இன்னும் அதற்கும் இதற்கும்... என்ன செய்வார்கள்?

நினைக்க நினைக்க வேதனைதான் அதிகமாயிற்று. விளம்பரத்தைப் படித்தபோது உண்டானதைவிட இப்போது இரக்கம் பெருகிற்று. என்ன செய்வோம் என்கிற தவிப்பைத் தொடர்ந்து இப்படி வெட்டியாய்ப் பரிதாபப்படுவதோடு, ஏதாவது செய்தேயாக வேண்டும் என்கிற தீர்மானமும் எழுந்தது.

நம்மாலான உதவியாய் ஏதாவது பணம் அனுப்பினால் என்ன? இருட்டு அறைக்குள் தடுமாறிக் கொண்டிருக்கையில் யாரோ விளக்கை ஏற்றிவிட்ட மாதிரி பூரணி நிமிர்ந்தாள்.

அனுப்ப வேண்டும்... கண்டிப்பாய். கூடவே நாம் மட்டும் அனுப்பிவிட்டு உட்காராமல் தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி முடிந்தவரை உதவும்படிக் கேட்க வேண்டும். ஆளுக்குக் கொஞ்சமாய்ப் போட்டு, சேர்த்து அனுப்பினால் நிச்சயம் அந்தக் குடும்பத்துக்கு உதவியாகத்தான் இருக்கும். சிறுதுளி பெரு வெள்ளம்.

பண உதவி செய்ய வேண்டும் என்ற உறுதி ஏற்பட்டபின், ஏனோ கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. எப்படியும் அந்தச் சேதுராமன் பிழைத்துவிடுவார் என்ற நம்பிக்கை எழுந்தது.

தன்னளவில் தலைதூக்கிய சின்னத் திருப்தியுடன் பூரணி எழுந்தபோது கேசவனின் ஸ்கூட்டர் வாசலில் வந்து நின்றது.

முன்புறக் கொக்கியில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் பையை அவிழ்த்து அதிலிருந்து வட்ட டிபன் டப்பாவைப் பூரணியிடம் கொடுத்தவன், ‘டிபன் ஏதாச்சும் இருந்தாக் குடு, இல்லாட்டி வெறும் காபி மட்டுமாவது உடனே குடு, தலைவலி தாங்க முடியலை..’ என்றவாறே உள்ளே வந்தான்.

அவன் உடை மாற்றி முகம் அலம்பி வருவதற்குள் மதியம் செய்திருந்த மசால் வடையில் நான்கை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தாள். அதைத் தின்றுகொண்டே, ‘என்ன இன்னிக்கு டி.வி. போடலியா? ஆரம்பத்துலேர்ந்து அவங்க ஸ்டேஷன்ல வணக்கம் அறிவிப்புப் போடறவரைக்கும் பார்க்கறவளாச்சே நீ!’ என்று கிண்டலாகப் பேசியவனிடம் மெளனமாகக் காபியை நீட்டினாள்.

‘ஏய், என்னாச்சு? கோவமா என்ன?’ என்ற அவனது அடுத்த கேள்விக்கும் பதிலேதும் சொல்லாமல் அவள் காலி டம்ளருடன் உள்ளே போக, கேசவன் பின்தொடர்ந்தான்.

‘உடம்பு சரியில்லையா பூரணி? முகமே வாட்டமா இருக்கே? டாக்டராண்ட வேணா போவமா?’ ஒரு கையால் அவளை அணைத்து மறு கையை அவள் நெற்றியில் வைத்து ஜுர சூடு ஏதாவது உணர முடிகிறதா என்று பார்த்தான்.

‘ப்ச்... அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. என்னமோ மனசே சரியா இல்லை, எதுவுமே பேசப் பிடிக்கலே...’

‘மனசு சரியா இல்லியா? ஏன்? எங்கம்மா, தங்கச்சி யாராவது வந்திருந்தாங்களா? அவங்க வந்துட்டுப் போனாத்தான் வழக்கமாக நீ இப்படி மூஞ்சியத் தூக்கிட்டு நிப்பே!’

பேச்சு வேண்டாத திசையில் போவதை உணர்ந்த மாதிரி அவள் பேப்பரை எடுத்து அந்த விளம்பரத்தைக் காட்டினாள்.

‘ஓ, இதுவா! நா காலைலியே பார்த்தனே! இதுக்குப் போய் உன் மனசு சரியில்லாமப் போவானேன்?’

‘உங்களுக்குப் பாவமா இல்லே? எவ்வளவு வேதனையோட வேண்டுகோள் விடுத்திருக்காங்க. ஓர் ஏழைக் குடும்பத்துக்கு ஆண்டவன் இப்படிக் கஷ்டத்தக் குடுக்கக் கூடாதுங்க!’

‘அதுக்கென்ன செய்யறது! அதெல்லந்தான் விதினு சொல்றது! தினம் இந்த மாதிரி தினசரிகளிலும் பத்திரிகைங்களிலும் பத்து விளம்பரமாவது வந்துகிட்டுதான் இருக்கு... உனக்குதான் ஒண்ணையும் படிக்கற வழக்கமே இல்ல! ஆமா, இன்னிக்கு மட்டும் எப்படி அதிசயமா கண்ணுல பட்டுச்சு?’

நம்மள மாதிரி நிறைய பேர் இந்த விளம்பரத்தப் பார்த்திருப்பாங்க, அதுல கொஞ்சம் பேருக்காவது பணம் அனுப்பணும்ன்ற நினைப்பு வந்திருக்காதா? அதனால ஒரேயடியா ஐநூறு ரூபா அனுப்பறதுக்குப் பதிலா இருநூத்தி அம்பது அனுப்பிச்சா போதும்னு தோணுது. நம்ம தகுதிக்கு இவ்வளவுதான் இப்ப முடியும்.
‘சரி, எனக்கு உங்களை மாதிரிப் பேப்பரையும், கண்டதையும் படிக்கற ஆர்வம் இல்லைன்றத ஒத்துக்கறேன்! இப்ப அந்த நக்கல் எதுக்கு? இன்னிக்கு வேலையெல்லாம் முடிச்சிட்டு சும்மா உக்காந்திருந்தப்போ பேப்பர்ல டி.வி. ப்ரோக்ராம் என்னனு பார்க்கலாமேன்னு தோணிச்சு, பார்த்தேன். எதேச்சையா இந்த அறிவிப்பு கண்ணுல பட்டுச்சு... நீங்களும்தான் இத பாத்திருக் கீங்க... ஐயோ பாவம்னு வருத்தப்பட முடியாட்டியும் இந்த நையாண்டிக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே!’

‘அடடா. ஏதோ பேச்சுக்குச் சொன்னா கோவிச்சுக்கிட்டியே! படிச்சப்ப எனக்கும் வருத்தமாத்தான் இருந்துச்சு. ஆனா, என்ன செய்ய முடியும் சொல்லு... எங்க ஆபீஸ் அக்கெளண்டண்ட் தேவராஜு தெரியு மில்லே, அவர் மகனுக்குக்கூட இதே மாதிரிதான் கிட்னி ரெண்டும் கெட்டுப்போய் ஆபரேஷன் செஞ்சாங்க. இப்ப ஓரளவு நல்லாயிட்டான்னாலும், அப்ப பாவம், குடும்பமே திண்டாடிப் போயிடுச்சு! நல்லவேளை, அவன் சம்சாரம் கவர்மெண்ட் உத்தியோகத்துல இருக்கக்கண்டு இப்பிடிப் பணம் கேட்டு விளம்பரம் செய்யற அளவுக்கு நிலைமை மோசமாப் போகாம தப்பிச்சாங்க! இப்ப, நம்மளையே எடுத்துக்க... நெருப் புன்னா வாய் வெந்திடுமா? நாளைக்கே எனக்கும் ஏதாச்சும் ஒண்ணு வந்திடுச்சுன்னு வெச்சிக்க...’

வார்த்தையில்கூட அது வருவதை விரும்பாதவள் போல அவள் அவசரமாகப் ‘போதுங்க. ஏன் என்னென்னவோ பேசறீங்க?’ என்று பதறினாள்.

கேசவன் மெல்லச் சிரித்தான்.

‘மனுஷ உடம்புதானே பூரணி? எது வேணாலும் வரத்தான் செய்யும். எல்லாத்துக் கும் தயாராத்தான் இருக்கணும்... ஆனா, நமக்கெல்லாம் வந்தா உதவி செய்ய நம்மளப் பெத்தவங்க இருக்காங்க. கடவுள் புண்ணியத்துல, வசதியாவும் இருக்காங்க. ஆனா, நீ சொல்ற மாதிரி இது பாவமான கேசுதான்! நாம வேணா ஏதாச்சும் உதவி செய்வமா?’

பூரணி சட்டென்று நிமிர்ந்தாள். கணவனின் நினைப்பும், தன்னுடையதும் ஒரே மாதிரி இருக்கும் சந்தோஷம் கண்களில் வெளிச்சம் போட்டது.

‘ஆமாங்க, அதச் சொல்லத்தான் வந்தேன். கட்டாயமா நாம ஏதாச்சும் பணம் அனுப்பிச்சே ஆகணும். ஒரு ஐநூறு ரூபா அனுப்புவமா?’

‘ஐநூறா?’

கேசவன் யோசித்தான். அப்புறம் மெதுவாகப் பேசினான்.

‘தாராளமா அனுப்புவம். ஆனா, தீபாவளிக்குப் பட்டுப் புடவை வேணுன்னு கேக்கக்கூடாது, சரிதானா?’

எதற்கும் எதற்குமோ அவன் முடிச்சுப் போடுவது எரிச்சலை எழுப்ப பூரணி ‘ச்சே’ என்றாள். ‘நா எவ்வளவு வேதனையோடு பேசறேன்னு உங்களுக்குப் புரியவே இல்லே. அதான் இப்படிக் கிண்டலடிக்கறீங்க! எனக்குப் பட்டுப்புடவை என்ன, வேற ஒரு புடவையும் வேணாம், அந்தப் பணத்தையும் இவங்களுக்கு அனுப்பிடுங்க, போதுமா?’

அவள் தொடையில் மெல்லத் தட்டி, ‘ஸாரி...’ என்று சொன்னபோது அவன் குரலில் மன்னிப்புக் கோரலும் ஒருவிதக் கரிசனமும் கலந்திருந்தன.

‘உன் வேதனை எனக்குப் புரியதும்மா... ஆனா நீ இவ்வளவு சீரியஸா இந்த விஷயத்த எடுத்துக்கிட்டு மனச உழப்பிக்க வேண்டாம்னுதான் அப்படிச் சொன்னேன். நம்மள மாதிரி நிறைய பேர் இந்த விளம்பரத்தப் பார்த்திருப்பாங்க, அதுல கொஞ்சம் பேருக்காவது பணம் அனுப்பணும்ன்ற நினைப்பு வந்திருக்காதா? அதனால ஒரேயடியா ஐநூறு ரூபா அனுப்பறதுக்குப் பதிலா இருநூத்தி அம்பது அனுப்பிச்சா போதும்னு தோணுது. நம்ம தகுதிக்கு இவ்வளவுதான் இப்ப முடியும். அத்தோட இவங்க ஒருத்தருக்கே நிறைய அனுப்பறதவிட இன்னொருத்தருக்கும் பிரிச்சு அனுப்பலாமே? என்ன சொல்றே?’

பூரணி அடி உதட்டைக் கடித்துக்கொண்டு சிந்தித்தாள்.

‘அதுவும் வாஸ்தவந்தாங்க. இனிமே எப்ப இந்த மாதிரி விளம்பரம் வந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்த சொல்லுங்க. மறக்காம உதவி செய்வோம். அதோட, நம்ம உறவுக்காரங்க, இங்க அக்கம்பக்கத்துல எல்லாம் கேட்டுப் பார்க்கட்டுமா, ஆளுக்குக் கொஞ்சமா போட்டா கணிசமா அனுப்பலாமே?’

‘அதெல்லாம் சரிப்பட்டு வராது பூரணி. நீ போய் பணம் கேக்க ஆரம்பிச்சின்னா என்னவோ உனக்குத் தானமா குடுக்கற மாதிரி தூக்கிக்குவாங்க... நம்மவரைக்கும் என்ன முடியுதோ அதச் செய்வோம், போதும், என்ன?’
இருநூற்றி ஐம்பது ரூபாய் என்று முடிவானபின், பூரணி பேப்பரைப் பார்த்து அந்த விலாசத்தைக் குறித்து அவனிடம் கொடுத்தாள்.

எவருக்கோ ஏதோ நல்லது செய்யப் போகிறோம் என்ற எண்ணம் அலாதி நிறைவைத் தந்தது.

சற்றே உற்சாகத்துடன் டி.வி. பார்த்து, ‘செய்திகள்’ நேரத்தில் சாப்பாடு முடிந்ததும் கேசவன் தெருமுக்குக் கடைக்குச் சென்று ஒரு சிகரெட் பிடித்து, பீடா வாங்கி வந்தான்.

சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு பீடாவை மென்றபடியே வாசல் பிரம்பு நாற்காலியில் சற்று நேரம் உட்கார்ந்திருந்தபோது, பூரணி திடுமென நினைத்துக் கொண்ட மாதிரி கேட்டாள்.

‘ஏன் அப்ப தடக்குனு ‘நமக்கும் இப்படி வந்திட்டா’னு ஆரம்பிச்சிட்டீங்க? எனக்குப் பகீர் ஆயிடுச்சு! சும்மா வெளையாட்டுக்குக்கூட அப்பிடிப் பேசாதீங்க..’

‘அத இன்னுமா நினைப்பு வெச்சுக்கிட்டிருக்கே? இந்த மாதிரி பெரிசா வியாதி வர்றப்ப அதத் தடுக்கற சக்தி யார் கைல இருக்கு? முன் ஜாக்கிரதையா சிகிச்சைக்காவது பணத்த சேமிச்சு வெச்சுகிட்டம்னா ரொம்ப சிரமப்படாம இருக்கலாம். அனாவசிய செலவெல்லாம் குறைக்கணும்னு நா அப்பப்ப சொல்றப்ப உனக்குக் கோவமா வருமே, எல்லாம் இந்த மாதிரி ஒரு நிலைமை திடும்னு வந்திட்டா சமாளிக்கத்தான். இப்பப் புரியுதா?’

கண்களை மூடி ஒரு நிமிஷம் தீவிரமாக யோசனை செய்தபின் பூரணி தலையசைத்து அவன் சொன்னதை ஆமோதித்தாள்.

‘கரெக்டுங்க.. இப்பவே புடிச்சு சேமிச்சாதான் நாளைக்கு நோய் நொடி, இல்ல, பசங்க ஸ்கூல், அது இதுனு வர்றப்ப சரியா இருக்கும்..’

பேசியவள் நிறுத்தினாள். குரலைத் தழைத்துக் கொண்டாள்.

தர்மம் செய்யறதும், கஷ்டத்துல இருக்கறவங்களுக்கு உதவறதும் நல்ல காரியம்தான். அதுக்காக நம்ப நிலைமைய நினைச்சுப் பார்க்காம இருந்தா எப்படி? கையில இருக்குன்றதுக்காக இப்ப அனுப்பிட்டா அப்புறம் தொடர்ந்து இதே மாதிரி செய்ய முடியுமா? கஷ்டம். அதனால அனுப்பறத நூறாக்கிடுங்க.
‘முகம் தெரியாத அந்த நோயாளியோட கஷ்டம் தாங்க முடியலைதான். ஆனாலும், நிதானமா நினைச்சுப் பாக்கறப்போ, ‘தலைக்கு மிஞ்சிதான் தர்மம்’னு பெரியவங்க சொல்லியிருக்கிறது ஞாபகத்துக்கு வருது. அறிவிப்பப் பார்த்ததும் உண்டான படபடப்புல இருநூத்தி ஐம்பது ரூபா அனுப்பலாம்னு தீர்மானிச்சதுகூட, நம்ம அந்தஸ்துக்கு அதிகம்னு தோணுது! தர்மம் செய்யறதும், கஷ்டத்துல இருக்கறவங்களுக்கு உதவறதும் நல்ல காரியம்தான். அதுக்காக நம்ப நிலைமைய நினைச்சுப் பார்க்காம இருந்தா எப்படி? கையில இருக்குன்றதுக்காக இப்ப அனுப்பிட்டா அப்புறம் தொடர்ந்து இதே மாதிரி செய்ய முடியுமா? கஷ்டம். அதனால அனுப்பறத நூறாக்கிடுங்க. போதும்.’’

‘நாங்கூட சொல்லணும்னு நினைச்சேன், இருநூத்தி ஐம்பது அதிகம்னு அப்பவே பட்டுச்சு! ஆனா, நீ அவ்வளவு வருத்தத்தோட சொல்றப்ப...’

அவனை முடிக்க விடாமல் பூரணி குறுக்கிட்டாள்.

‘நாம மட்டும் என்ன பெரிய கோடீச்வரங்களா? நூறு ரூபா போதும். அனுப்பணும்னு சொன்னதும் மறக்காம உடனே சரினு சொன்னீங்களே, அதுவே பெரிசு!’

இரவு தூங்கும்போது, தான் அனுப்பும் நூறு ரூபாய் அந்தக் குடும்பத்துக்கு மிகமிக உதவியாக இருப்பதாகவும், கலங்கிய கண்ணோடு வரும் அந்த இளம் மனைவி, ‘உங்களுக்குத்தான் எவ்வளவு பெரிய மனசு, நீங்க நல்லா இருக்கணும்’ என்று வாழ்த்துவதாகவும் தோன்றியவை கனவா, பிரமையா என்று புரியவில்லை.

ஆனால், இரவு முழுவதும் சரியாக உறங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்து எழுந்ததில் காலையில் எழுந்ததுமே வலது நெற்றிப் பொட்டில் வலி நமநமவென்று பிராண்டியது.

அதைப் பொருட்படுத்தாமல் காபி, டிபன் சமையலைக் கவனித்து முடிப்பதற்குள் நெற்றிப்பொட்டிலிருந்து வலி பின் மண்டைக்குத் தாவியிருந்தது.

என்றாலும், எட்டரை மணிக்குக் கேசவன் அலுவலகத்துக்குக் கிளம்பும்போது, ‘ஆபீசுக்குப் போனதும் மறக்காம மணியார்டர் பண்ணிடுங்க. விலாசத்தை எடுத்துக்கிட்டீங்களா?’ என்று நினைவூட்ட, ‘நல்லவேளை ஞாபகப்படுத்தினே.. ஆபீஸ் பரீட்சைக்குப் பணம் கட்ட நேத்துதான் கடைசி நாள்ன்றதால கையில இருந்ததப் போட்டுக் கட்டிட்டேன். ‘காஸ்’ சிலிண்டர் வந்தா வேணும்னு வெச்சிருக்கியே அந்தப் பணத்தைக் குடு. சிலிண்டர் வர எப்படியும் ரெண்டு நாள் ஆகும். அதுக்குள்ள பாங்க்லேருந்து ‘டிரா’ பண்ணி கொடுத்துர்றேன்’ என்றான் கேசவன்.

‘பாங்க்லேருந்து ‘டிரா’ பண்ணணுமா? ஏன்? அவ்வளவு சீக்கிரமா எல்லாப் பணமும் செவழிஞ்சு போச்சு? சம்பளம் வர இன்னும் நாலு நாள் இருக்குதே?’

‘ஏன்னு கேட்டா எப்படி? இந்த மாசத்துல மட்டும் மூணு புது சினிமா, நாலு தரம் ஹோட்டல்ல டின்னர் எல்லாம் இருந்திருக்கு. மறக்காத! பத்தாததுக்கு அடுத்த வீட்டம்மா குடுத்தாங்கன்னு சொல்லிப் புதுப் புடவையை வேற வாங்கி நூறு ரூபா இன்ஸ்டால்மெண்ட் குடுத்திருக்கே... அப்புறம் எப்படிச் செல்வாச்சுனு கேட்டா என்னத்த சொல்றது? சரி, சீக்கிரமா பணத்தைக் குடு.’

உள்ளே போனவள், தலையை ஒரு ¨காயல் அமுக்கிப் பிடித்தவாறே நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து வந்தாள். அதைக் கொடுத்துவிட்டு, ‘இத வச்சிக்கங்க, ஆனா மணியார்டர் ஐம்பது ரூபா அனுப்பிச்சா போதும். மிச்சம் உங்க செலவுக்கு இருக்கட்டும். சேமிச்சு வச்சிருக்கிறத எடுத்துட்டே இருந்தம்னா அப்புறம் அவசரம், ஆபத்துன்னா நாம என்ன செய்றது?’ என்றாள் லேசான வருத்தத்துடன்.

அவன் ஸ்கூட்டரை உதைத்துக் கிளம்பும்போது, ‘ஞாபகமா அனுப்பிடுங்க. போன வாரம் எங்கக்காவுக்கு மதுரைக்கு எழுதின லட்டரை நாலு நாளு வெச்சிருந்து கடைசிலே நானே போய் போஸ்ட் செஞ்ச மாதிரி இதையும் மறந்திடாதீங்க! திருப்பதிக்குப் போக மஞ்சத் துணியில முடிஞ்ச வெப்பாங்களாமே, அடிக்கடி பார்த்து நினைவுபடுத்திக்க, அந்த மாதிரி முடி வேணா போட்டு அனுப்பட்டுமா?’ என்று சிரிக்காமல் அவள் கூற, ஆபீஸ் போகும் கேசவன் அவசரத்தில் வெறுமே தலையாட்டிவிட்டுச் சென்றான்.

நுழைந்ததும் நுழையாததுமாய் அலுவலகத்தில் காத்திருந்த வேலைகளும், நண்பர்களும், அரட்டையும், காண்டீனும் அவனை ஆக்ரமித்ததில் மணியார்டரும், அந்தச் சிறுநீரக நோயாளியின் அவஸ்தையும் சுத்தமாய் நினைவிலிருந்து விலகிப்போயின.

சாயங்காலம் வீடு திரும்பியபோது, பூரணியின் தம்பியும் அவன் புது மனைவியும் வந்திருந்தார்கள்.

‘அடிக்கடி கூட்டிக்கிட்டு வந்தாத்தானே நம்ம உறவு மனுஷங்க கூடப் பேசிப்பழக முடியும்? ஹனிமூன் போயிட்டு வந்து, பதினைஞ்சு நாளுக்கு மேல் ஆகுது, இப்பத்தான் நம்ம வீட்டுக்கு வழி தெரிஞ்சிருக்கு பாருங்க.’

கணவனும் மனைவியுமாய் அந்தப் புது தம்பதியை விருந்தால் திணற அடித்து, இரவு பஸ் ஸ்டாண்ட் வரை சென்று பஸ் ஏற்றிவிட்டு வரும்போது பணி பத்துக்கு மேல் ஆகியிருந்தது.

‘...அவங்க பொறந்த வீட்ல விருந்துக்குப் போனப்ப ‘போயிட்டு வாங்க’னு கையத் தட்டிக்கிட்டு அனுப்பிட்டாங்க. அதுக்காக நாம சும்மா இருக்க முடியுமா? மொதமொத தம்பியும் அவன் பொண்டாட்டியுமா நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க, சரியான மரியாதை செய்யாட்டி எப்படி! என்ன புது ஷிப்பான் புடவைக்காக கண்ணாடி வச்சு தச்ச ஜாக்கெட் பீஸ் ஒண்ணு வாங்கினமே, நாப்பது ரூபா குடுத்து, அத வெத்தலை பாக்குல வெச்சு குடுத்திட்டேன். என்னங்க, நா செஞ்சது சரிதானே? எனக்கு மறுபடி வாங்கிக்கிட்டா போச்சு!’

உடை மாற்றும்போது சட்டைப் பாக்கெட்டிலிருந்து பர்ஸ், பணம் எடுத்து அலமாரியில் வைக்கையில் பூரணி எழுதிக் கொடுத்திருந்த விலாசச்சீட்டு பறந்து விழுந்தது.

‘என்ன சீட்டுங்க அது?’

‘அ... அது... அதுவா? வந்து மணியார்டர் பண்ணச் சொல்லி...’

பூரணி திரும்பி நின்றுகொண்டு அவனைப் பார்க்காமல் பேசினாள்.

‘மறந்திட்டீங்களாக்கும்! உங்க ஞாபகமறதிதான் உலகப் பிரசித்தம் ஆச்சே! போவுது விடுங்க! இன்னிக்கு எதிர்பாராத விருந்தாளிங்களால வேற செலவு! இதுல மணியார்டர் அனுப்பாம இருந்ததுகூட நல்லதுக்குத்தான்!’

தன் பேச்சு தனக்கே சமாதானமாகாத மாதிரி தோன்ற சற்றே நிதானித்தவள், உறுத்தலை மறைக்கும் விதமாய் மெல்லச் சொன்னாள், ‘நம்மள மாதிரி எல்லாருந்தான் பேப்பர் பார்த்திருப்பாங்க... நிறைய வசூலாகியிருக்கும். நாம தந்துதான் அவங்களுக்கு விடியப் போகுதா என்ன? கடல்ல கரைச்ச பெருங்காயம்! அடுத்த தரம் அனுப்பிக்கிட்டா போவுது!’

சிவசங்கரி
Share: 




© Copyright 2020 Tamilonline