Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
துரோகம்
- பாவண்ணன்|அக்டோபர் 2007|
Share:
Click Here Enlarge'ஒங்கள உட்டா ஒத்தாசைக்கு யார்கிட்ட போவேன் சார்?'

உடைந்த குரலில் கெஞ்சிய முனுசாமியை ரொம்ப நேரத்துக்கு நேருக்கு நேர் பார்க்கச் சங்கடமாய் இருந்தது. அவனது கண்கள் புதைந்த குண்டுகள் போல உள்ளடங்கிப் பரிதாபமாய் இருந்தன. பருத்த உடல் வாகுக்குச் சற்றும் பொருத்தமற்ற முறையில் கைகளை மடித்துக் கட்டின தோற்றம் அவனுக்கு. தோள் அசைவுகளில் அபரிமிதமான பணிவு. சரணடைதலின் சாயல் அது. ஒரு வினாடிக்கும் குறைச்சலாகவே அவனைப் பார்க்க முடிந்தது என்னால். அப்புறம் பதில் எதுவும் இன்றி நகர்ந்து அறையின் ஓரம் நடந்து ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்று கொண்டேன். மனசில் ஏகப்பட்ட உளைச்சல்கள்.

இந்த வேலைக்கு வந்ததில் இருந்தே கசப்பான அனுபவங்கள் மாறி மாறி நேர்ந்து நசுக்கின என்னை. அதிகாரியிலும் சேர்த்தியற்ற, தொழிலாளியிலும் சேர்த்தியற்ற நபும்சக உத்தியோகம் இது. அமைதிதான் கொஞ்சம் கொஞ்சமாய் பலியானது. எந்த இடத்திலும் முடங்கிவிடாமல் இலாகாவின் ப்ராஜெக்டுகளுக்காக ஊரூராகச் சுற்றும் நாடோடிகள் நாங்கள். கும்பலாகவே சுற்றினாலும் ஒரு மெல்லிய இழை தொழில் அந்தஸ்தைப் பிரித்துக் காட்டி வித்தியாசப் படுத்திக் கொண்டுதான் இருந்தது. அத்தனை பட்டவர்த்தனமாய் அது தெரிந்து விடாத படிதான் வேலை முறைகள் இருக்கு மெனினும், ஏதாவது பிரச்சனை என முளைத்துவிடும்போது, தகுதி நிலைகளின் வித்தியாசம் ஒரு பெரிய திரையாகக் கண்களை மறைந்துவிடும். எந்தப்பக்கமும் சேரமுடியாமல் திண்டாடுவது என் நிலைதான்.

எந்த முகாமுக்காவது புறப்படச் சொல்லி உத்தரவு கொடுத்ததும், பிரச்சனையற்ற சூழலுக்கே பிரார்த்திக்கும் மனம். அதைரியம் அல்ல இது. மோசமான ஒன்றைச் சகித்துக் கொண்டு முற்றிலும் பைத்தியக்காரத்தனமான நிலைபாடுகளை அதிகாரத்தின் பொருட்டுத் தலைவணங்கி ஏற்று நடப்பதெல்லாம் கேலிக்குரிய விஷயமாக ஆகிவிடும் அனுபவத்தால்தான்.

நடந்தது இதுதான். மங்களூரின் எல்லையில் இருக்கும் ஊரொன்றில் எங்கள் ப்ராஜெக்ட் சோதனைகளை முடித்துக் கொண்டு எல்லாரும் புறப்பட்டோம். அப்போதே இரவு எட்டு ஆகிவிட்டிருந்தது. மேல் அதிகாரி, நாலு டெக்னீஷியன்கள், இரண்டு மஸ்தூர்கள், நான் எல்லோரும். முனுசாமிதான் வண்டி ஓட்டினான். காலை புறப்படும் போதே சாயங்காலம் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று சொல்லி இருந்தான். அவன், உதிரி உறுப்புகளை மாற்றிப் மாற்றிப் போட்டுச் சோதிக்க வேண்டிய கட்டாயம். இன்னும் இரண்டு நாள்களில் தரக்கட்டுபாட்டு பிரிவின் சோதனை நிச்சயிக்கப்பட்டிருந்ததில், ஏகப்பட்ட கெடுபிடிகள் எங்கள் மேல். எத்தனை நேரமானாலும் செய்து முடித்தே ஆக வேண்டிய நிர்பந்தம். இந்தச் சூழலில் முனுசாமியின் கோரிக்கையை ஒதுக்கி விட்டோம். அந்த எரிச்சல் அவன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிநதது. இருபுறமும் காடு சூழ்ந்த மலைப்பாதையில் எங்கள் வண்டி போதை ஏறிய குதிரை போல ஓடி வந்தது. மெதுவா மெதுவா என்று அவ்வப்போது சொல்லத்தான் செய்தோம். எங்கள் கெஞ்சுதல்கள் எதுவுமே எடுபடவில்லை. இவர்களோடு பல நாள்கள் வாழ்ந்திருந்த எனக்கு இந்த மனோபாவம் நன்றாகப் புரிந்திருந்தது. புயல் வேகத்தின் காரணமாக கொஞ்ச நேரத்திலேயே நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்துவிட்டோம். இறங்கிக் கொண்டதும் அதிகாரி என்னிடம் அடுத்த நாள் காலை எட்டு மணி அளவில் வண்டி விடுதிக்கே வந்துவிடட்டும் என்று முனுசாமியிடம் சொல்லச் சொன்னார். அதையே திருப்பிச் சொன்னேன் நான். முனுசாமியும் மஸ்தூர்களும் ஊர் எல்லையில் முகாமிட்டிருந்த கூடாரங்களை நோக்கிச் சென்றார்கள். அடுத்த நாள் காலை வண்டிக்கு எதிர்பார்த்து எதிர்பார்த்து அலுத்துப் போனது. ஆத்திரத்தில் பிதற்றிக் கொண்டிருந்தார் அதிகாரி. அவருடைய பதவி உயர்வு இந்த ப்ராஜெக்டின் வெற்றியோடு சம்பந்தப்பட்டிருந்தது. என் நொண்டிச் சமாதானங்கள் எதுவும் எடுபட வில்லை. அவருக்கு எதிராக எல்லோரும் சேர்ந்து சதி செய்வதாய்க் குற்றம் சாட்டினார். ஓயாத பேச்சின் முடிவில், முகாம் வரைக்கும் போய் வண்டி எடுத்துவரச் சொன்னார். தர்மசங்கடமான நிலை எனக்கு. அந்தச் சூழலிலிருந்து தப்பித்தால் போதும் என்ற சலிப்பில் கிளம்பிவிட்டேன்.

முகாமில் வண்டியும் இல்லை. முனுசாமியும் இல்லை. தொலைவிலேயே ஒரு பார்வையில் புரிந்துவிட்டது. வேறுவழியில் கிளம்பி இருப்பானோ என்று நினைத்தேன். கூடாரங்களின் வாசல்களில் கட்டுச் சோற்றோடு மஸ்தூர்களைப் பார்த்ததும் தவிப்பு. முந்தைய இரவு தங்களை இறக்கி விட்டுப்போன வண்டி இன்னும் வரவில்லை என்று பதட்டத்துடன் சொன்னார்கள். இனம்புரியாத பீதி என்னைத் தொற்றிக் கொண்டது.

திரும்பி வந்து அதிகாரிக்குச் சொன்னேன். அநாகரிகமான வார்த்தைகளால் ஒட்டு மொத்தமாய்த் திட்டினார் அவர். கருகின தோசை போல அவர் முகம் தென்பட்டது. பேசும்போது தன் கன்னங்களைக் கோபமாய்ப் புடைக்க வைத்துக் கொண்டார். உடனே தொலைபேசியில் வேறொரு ஊரில் இருந்த கோட்ட அதிகாரியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னார். உரையாடலின் போது அடிக்கடி முகத்தைத் துடைத்துக் கொண்டார். சிறிது நேரத்துக்குள் அபரிமித மான சோக உணர்வு எல்லாரையும் கவ்விக் கொண்டது. எதுவுமே பேசாமல் அதிகாரி சுவரை வெறித்தபடி ஒரு சில வினாடிகள் நின்றிருந்தார். அப்புறம் டெக்னீஷியன்களை அனுப்பிவிட்டு என்னை மட்டும் கூட வரச்சொல்லித் தெருவில் இறங்கினார். பின்பற்றுவது தவிர வேறு வழியில்லை எனக்கு.

அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனை விசாரித்துக் கொண்டு போய் எங்கள் இலாகா வண்டியையும் முனுசாமியையும் காணவில்லை என்று புகார் கொடுத்துவிட்டுத் திரும்பினோம். ரொம்பவும் தளர்ந்து போய் இருந்தார். நண்பகலை நெருங்கும் வேளை முகாமில் இருந்து மஸ்தூர் ஓடிவந்து தகவல் சொன்னான். பக்கத்தூரில் வண்டி விபத்துக்குள்ளாகி முனுசாமி ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், மோதப்பட்ட ஆள் இறந்ததாகவும் பதட்டத்தோடு நிறுத்தி நிறுத்திச் சொல்லி முடித்தான். சற்றும் எதிர்பாராத பயம் கவ்வியது எங்களை. ஒருவரை ஒருவர் கலவரத்தோடு பார்த்துக் கொண்டோம். சிறிது நேரத்துக்குள் வந்த இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகள் விஷயத்தை ஊர்ஜிதம் செய்தன. உடனே வாடகைக்கு வண்டி அமர்த்திக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். தலை, கை, கால்களில் கட்டுகளுடன் படுத்திருந்தான் முனுசாமி. அந்த ஊர் போலீஸ் வழக்குப் பதிவு செய்திருந்தது. இரவு எங்களை விடுதியில் விட்ட பிறகு அருகில் இருந்த சொந்த ஊருக்கு வண்டி யோடு போனதாகவும், தங்கிவிட்டு அதிகாலையில் திரும்பி வந்ததாகவும், வளைவுகள் மிக்க காட்டுப்பாதையின் அடர்த்தியான பனியும், தூக்கமின்மையின் களைப்பும் சிறிது நேரத்துக்குத் தடுமாற வைத்துவிட திருப்பமொன்றில் வண்டி அளவு மீறி வளைந்து நடந்துவந்த ஆளை மோதி சரிவில் உருண்டு விட்டதாகவும் சொன்னான். தன் வேலையை எப்படியாவது காப்பாற்றித் தரும்படி அழுதான் அவன். அதிகாரி எந்தவித உணர்ச்சியையும் பிரதிபலித்து விடாத படி முகத்தை இறுக்கமாக வைத்திருந்தார். 'பாப்பம், பாப்பம், நம்ம கைல என்ன இருக்குது' என்று பொதுவாய்ச் சொன்னார். நான்தான் அவன் படுக்கையில் உட்கார்ந்து அவனுக்கு வேண்டிய மட்டும் சமாதானம் சொன்னேன்.

ஒரு மாசம் வேலைக்கு வரவில்லை அவன். நொறுக்கின வண்டியை ஸ்டேஷனில் இருந்து விடுவித்து சீர்படுத்த முப்பதாயிரம் செலவானது. கோட்ட அதிகாரியின் சீற்றம் அளவு கடந்திருந்தது. எங்கள் அதிகாரியும் ஓய்ந்த நேரத்திலெல்லாம் குற்ற அறிக்கை தயாரிப்பது, தண்டனையின் விதம், ஒழுங்கு விதிகளில் சிலவற்றுக்கு லாகவமாய்ப் பொருந்தும் பிரிவுகளின் எண்கள் எனத் திரும்பத் திரும்ப அலுப்பூட்டுகிற மாதிரி என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். விபத்தைத் தனது பதவி முன்னேற்றப் பாதையில் விழுந்த கறைபோல எண்ணிக் கொண்டு அதை அகற்றி முழுக்கத் தூய்மை செய்வதே தன் கடமை என்ற நினைப்பில் இருந்தார். வேறு எந்தச் சிந்தனையும் இல்லை; உத்தியோக ரீதியாய் அவர் கூடவே இருந்தாக வேண்டிய நிர்பந்தம் எனக்கு.

உடல் புண்கள் ஆறி வேலையில் முனுசாமி சேர்ந்ததும் வேட்டையில் சிக்கிய எலியைப் பூனை பார்ப்பது போல அதிகாரி நோட்டமிட்டார். அவனது வணக்கங்களையோ, கைகூப்புதல்களையோ ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை அவர். சட்டென முனுசாமியைத் தனிமைப்படுத்திவிட்டு என்னை உள்ளே அழைத்துப்போய் குற்றப் பத்திரிகையைத் தயார் செய்தார். தப்பிக்க நினைத்த என் முயற்சிகள் பலிக்கவில்லை. இலக்கணமான ஆங்கிலத்தில் தடுமாறுபவர் அவர். இரண்டு மணி நேரம் உட்கார்ந்து குற்றங்களைக் கோவைப்படுத்தி எழுதினேன். இந்தக் காரணங்களால் ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்றும், விடையை 48 மணி நேரத்தில் தரவேண்டும் என்றும் முடித்திருந்தேன். முனுசாமியை நினைத்த போது பாவமாய் இருந்தது. வரைவு நகலுடன் கோட்ட அதிகாரியைப் பார்க்கப் போனார் அதிகாரி.

சோர்ந்து போய் வெளியே வந்ததும் முனுசாமி நெருங்கினான். அவனைப் பார்க்கவே வருத்தமாய் இருந்தது.

'என்ன சொல்றாரு சார் பெரியவரு'

'சார்ஜ்ஷீட் தரணுமாம்'

'நீங்கதான் எழுதினிங்களா?'

சங்கடத்துடன் அவனை நிமிர்ந்தேன்.

'ஆக்ஸிடென்ட்டானது தப்புதா, இல்லன்னு சொல்லல. தலவிதி அப்பிடி சார். என் நெலமையும் யோசிச்சுப் பாக்கணும். நமக்கு வேலதா பெரிசு. ஊரூரா ஓடி ஓடி செய்யணும்னு பொழப்பு. ஒரு ஜேஈ போனா இன்னோர் ஜேஈ வராரு. ஒரு ஏஈ போனா இன்னோர் ஏஈ வராரு. ஆனால் எல்லோருக்கும் ட்ரைவர் ஒருத்தர்தான். மாசத்துக்கு ரெண்டு மூணு நாளு லீவ் கெடைச்சாலே ஏதோ லாபம். அப்பப்போயி பொண்டாட்டிகூட இருந்தாதான் உண்டு. ரெண்டு மாசமா டார்கெட் டார்கெட்னு ஊருக்கே உடல, சுத்திக்னே இருந்தம். ஊருக்குப் பக்கத்ல வந்ததும் ஊட்டு ஞாபகம் வந்திடுச்சி. அன்னிக்கு சாய்ங்காலமே பர்முஷன் கேட்டேன். நீங்க என்னடான்னா ராத்திரி ஆக்கிட்டீங்க. அவ்ளோ நேரத்துக்கு மேல ஊருக்கு வண்டி இல்ல. அதான் சொல்லாமக் கொள்ளாம கெளம்பிட்டன். சீக்கிரமா திரும்பிரனும்னுதா நெனச்சன். என் தலையெழுத்து வழில இந்தமாதிரி ஆய்டுச்சி. நா இன்னாசர் செய்றது.'

அவனது நிலை கஷ்டமாய்த்தான் இருந்தது. ரொம்பவும் உடைந்து விடுவான் போலத் தோன்றியதால் வெளியே அழைத்துக் கொண்டுபோய் டீ சாப்பிட்டோம். கவனத்தைத் திருப்பினேன்.

நண்பகலில் அதிகாரி வந்தார். வாசலில் இருந்த எங்களைப் பார்க்காதது போல் அறைக்குள் போய் உட்கார்ந்தபடி பெயர் சொல்லி என்னை அழைத்தார்.

'என்ன சொல்றான்'

'யாரு சார்'

'முனுசாமிதா. இவ்ளோ நேரம் ரொம்ப க்ளோஸா பேசிக்னிருந்திங்க போல..'

'சும்மா வேற விஷயம். இதப்பத்தி ஒண்ணுமில்லை'

'இங்க பாருங்க. நீங்க ஒரு அதிகாரிங்கறத மறந்துராதீங்க. எந்த நேரத்திலேயும் டிபார்ட்மெண்டுக்கு விஸ்வாசமா இருக்கணும். எதுவா இருந்தாலும் மறைக்காம எங்கிட்ட சொல்லுங்க'

கடுப்பாயிருந்தது; பொங்கிய வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு மீண்டும் அதே பதிலைச் சொன்னேன். சாந்தமான குரலையும் மீறி எரிச்சல் சிதறியது.

'சரி, சரி, பெரிய ஆபீஸ்ல காட்டனன். ஓக்கே சொல்லிட்டாங்க! கூப்ட்டு குடுத்து கையெழுத்த வாங்கிக்குங்க. என்ன பதில் தரான் பாப்பம்'

'நீங்களே குடுக்கலாமே'

'அது தெரியாமயா ஒங்ககிட்ட சொல்றன். சொல்றபடி செய்ங்க'

வெளியே முனுசாமியிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஒரே பிரதியைத் தந்து விட்டு இன்னொரு பிரதியை அதிகாரியிடம் சேர்ப்பித்துத் திரும்பினேன். விதிமுறைகளின் நடவடிக்கைகள் அலுப்படைய வைத்தன. என் இருக்கைக்கு முனுசாமியும் பின் தொடர்ந்தான்.

'இதுல இன்னா எழுதி இருக்கு சார்..?' அவனைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. வாங்கிப் படித்துக் காட்டினேன். அவன் கண்கள் கலங்கின. ஊன்றின குச்சி போல ரொம்ப நேரத்துக்கு நின்றிருந்தான். 'இப்ப இன்னா செய்யணும் சார்'.

'தப்புகள ஒத்துக்கிறியா இல்லியான்னு எழுதித்தரணும் முனுசாமி'

'அதான் எப்படி ஆச்சின்னு சொன்னேனே சார்'

'எழுதித் தரணும் முனுசாமி'

'எழுதித் தந்தா உட்டுடுவாங்களா சார்?'

'ஏற்கனவே போலீஸ் கேஸ் ஒண்ணு. தெனமும் வந்து போலீஸ்காரன் பாடா படுத்தறான். இது நடுவுல இந்தச் சட்டம் வேறயா சார்'

'டிபார்ட்மெண்ட்ஸ் ரொம்ப ப்ரஷர் முனுசாமி, வேற வழியில்ல'

'நீங்களே பதில் எழுதிக் குடுங்க சார்'

'நானா'
அந்த நேரத்தில்தான் உடைந்த குரலில் முனுசாமி கெஞ்ச, சங்கடத்தில் நகர்ந்து நின்றேன். சமீபத்திய அனுபவங்களைப் புரட்டியதும் நொறுங்கிப் போனது மனசு. மிகவும் களைப்பாக உணர்ந்தேன். எதையும் விமர்சிக்க இது தருணமல்ல எனச் சொல்லிக் கொண்டேன்.

திரும்பவும் மேசைக்கு வந்து எழுதத் தொடங்கினேன். முனுசாமியின் கதையை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தேன். குறிப்பாக வீட்டைப் பிரிந்திருந்த அவன் சூழலை, எவரையும் புண்படுத்தாத வார்த்தை கள்தான் கைகொடுத்தன. இருளடைந்த முகத்துடன் முனுசாமி என்னையே பார்த்த படியிருந்தான். அரைமணி நேரத்தில் வேலை ஆனது. மீண்டும் ஒரு தரம் படித்து மேலும் சில செருகல்களுடனும், திருத்தங்களுடனும் வடிவமைத்து தட்டச்சு செய்து கொள்ளச் சொல்லி முனுசாமியிடம் தந்துவிட்டேன. நன்றியில் அவன் கண்கள் பளபளத்தன. அவன் வெளியே சென்றதும் யாரோ ஓசையின்றி என் பின்னால் நிற்பதையுணர்ந்து திரும்பினேன், அதிகாரி. இரையைத் தவறவிட்ட பூனையின் கண்கள்போல வெறியுடன் இருந்தன அவர் கண்கள். அவரைப் பார்ப்பதே ஒருவித எரிச்சலைத் தந்தது. அவரைத் தவிர்க்க இயலாது என்பதையும் உணர்ந்தேன்.

'நீங்கதா அவனுக்கு வக்கீல் போல'

'எழுதத் தெரியலன்னு சொன்னான். என்ன செய்ய முடியும், சொல்லுங்க. எல்லார்க்குமா இங்கிலீஷ் தெரியுது'

கடைசி வார்த்தையை வேண்டுமென்றே அழுத்தினேன்.

'ஒரு ஆபீஸர் ஆபீஸ்க்குத்தா சின்சியரா இருக்கணும். அதுக்குத்தா சம்பளம். துரோகம் பண்றதுக்கில்ல'

என்னை மிகவும் உசுப்பிவிட்டது இவ்வார்த்தைகள். வாதிக்க இது சந்தர்ப்ப மில்லை என்பதால் அமைதியானேன். என் மெளனம் அவர் தொடர்ந்து பேசத் தடையாய் இருந்தது. புறப்பட்டுப் போய்விட்டார்.

மறுநாள் என்னை அறைக்குள் அழைத்தார் அதிகாரி. முனுசாமியின் பதில் திருப்தியற்றது என்றும், தண்டனைக்குரிய விதி எண்களைச் சரியாகக் கண்டுபிடித்தாகிவிட்டது என்றும் அவர் சொன்னார். அவர் மேசையில் ஏகப்பட்ட ஒழுங்குவிதிப் புத்தகங்கள். இது மாதிரி சந்தர்ப்பங்களில் முன்னோர்கள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பழைய பைல்களையெல்லாம் காட்டினார். நான் எவ்வளவு பெரிய விசுவாசி பார்த்தாயா? என்று கேட்கிற பெருமிதம் அவர் கண்களில் ஒளிவிட்டது. மிகவும் சுருக்கமாக என்ன செய்யலாம்? என்று மட்டும் கேட்டேன். இன்னொரு குற்றப்பத்திரிகையையும் எழுதச் சொன்னார். பதினைந்து நாள்கள் இடை வெளியில் ஒரு இலாகா விசாரணைக்கு ஏற்பாடு செய்ய உத்தேசித்து இருப்பதுதான் புதிய விஷயம். கறாரான ரகசியம் இதை என்னிடம் கடுமையான குரலில் கூறிவிட்டு கோட்ட அலுவலகத்துக்குப் போய்விட்டார். வெளியே வந்ததும் முனுசாமி நெருங்கி வந்தான். என்ன பேசினோம் என அறிய ஆவலாய் இருந்தான். உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை எனக்கு. சொல்லிவிட்டு தெரிஞ்சமாதிரி காட்டிக்காத என்றேன். மிகவும் உறைந்து யோசித்தான் அவன்.

ஆஸ்பத்திரியில் இருந்ததற்கான ஆதாரங் களையெல்லாம் காட்டி விசாரணைக்கான உடல் ஆரோக்கியமும், மன நிலையும் தனக்கில்லை என்பதால் ஒத்திப் போட வேண்டும் என்ற திட்டத்தை மாத்திரம் சொல்லிக் கொடுத்தேன். எழுத்து மூலமாய்த் தான். ஆனாலும் பலிக்கவில்லை இது. குறிப்பிட்ட தேதியில் விசாரணை நடந்தது. எங்கள் இலாகாவின் வேறு ஊர்ப் பிரிவில் இருந்து அதிகாரிகள் வந்திருந்தார்கள். நான் இல்லை. இரண்டு மூன்றுமணி நேரங்களில் முடிந்துவிட்டது. முனுசாமி என்ன ஆகுமோ என்று கலங்கினான். மறுநாள் காலை கோட்ட அலுவலகத்துக்குத் தரவேண்டிய அறிக்கையை எழுதச் சொன்னார். ஏழு பக்க அறிக்கை முடிவை மாத்திரம் அதிகாரியைக் கலந்தா லோசித்து திங்கட்கிழமையன்று தானே எழுதிக் கொள்வதாய் வாங்கிக் கொண்டார். துரதிர்ஷ்டவசமாய் பிரயாணத் திட்டஙகளால் ஒன்றும் நடக்கவில்லை. நடுவில் அடுத்த ஊரில் எங்கள் ப்ராஜெக்ட் வேலைகளின் கெடுபிடி. இரவும் பகலுமான வேலைகள் இந்நிலையில் கொந்தளிக்கும் உணர்ச்சி களுடன் நடமாடினான் முனுசாமி. எந்தச் சமயமும் அழுதுவிடுவான் போல இருந்தது. லீவ் எடுத்துக் கொண்டு போகலாமே என்று சொன்ன அறிவுரையை ஏற்கவில்லை அவன்.

இதற்கு நடுவில் நீதிமன்ற நோட்டீஸ்கள் வரவும் மிகவும் பரபரப்பாகிவிட்டது சூழல். இரண்டு நஷ்டம் கோரும் நோட்டீஸ்களே. இறந்தவனின் மனைவியுடன் ஒன்று. தாயுடையது மற்றொன்று. தலா இரண்டு லட்ச ரூபாய் கோரும் மனுக்கள். முனுசாமி இடிந்து போனான்.

இரண்டாவது கட்ட விசாரணையும் இறுதிக் கட்ட விசாரணையும் பத்து நாட்கள் இடைவெளியில் நடந்தன. இதற்கான மடல்களையும் நானேதான் அதிகாரிக்கு எழுதித்தர வேண்டி இருந்தது. முனுசாமிக்கும் அதை மொழிபெயர்த்து விளக்க வேண்டி யிருந்தது. என் புத்திக்குத் தட்டுப்பட்ட விதிகளின் ஓட்டைகள் பற்றியும் எடுத்துரைத் தேன். வெளியில் சொல்லிப் பார்த்தபடி யில்லாமல் இறுதி விசாரணையின் போது உணர்ச்சிகளின் விளிம்பில் சம்பந்தா சம்பந்தமின்றி ஏதேதோ பேசினான் முனுசாமி என்பது வருத்தம் தந்தது. முடிவு அறிக்கை க்காகக் காத்திருந்தோம்.

குறிப்பிட்ட நாளில் அதிகாரி வண்டியில் புயல்போல வந்து இறங்கினார். காலை வந்தனங்களையெல்லாம் தலையசைப் பினாலேயே ஏற்றுக்கொண்டு கிடுகிடுவென எய்யப்பட்ட அம்புபோல நடந்து அறைக்குள் மறைந்துவிட்டார். சிறிது நேரத்துக்குப் பின்பு எனக்குஅழைப்பு வந்தது. முனுசாமி பதட்டத்தோடு என்னைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

கைப்பையைத் திறந்து சில தாள்களை எடுத்து என் பக்கம் நகர்த்திப் படிக்கச் சொன்னார் அவர். என் மேல் நம்பிக்கை யற்றதால் கோட்ட அலுவலகத்தில் வைத்துத் தானே எழுதியதாய் கர்வமுடன் சொன்னார். ஆறு மாசம் சஸ்பென்ட். இரண்டு வருஷ இன்க்கிரிமெண்ட் கட். இதுதான் விசாரணை எழுதிய தீர்ப்பு. திடுக்கென்று தூக்கிப் போட்டது. என்னையே கொண்டு போய் முனுசாமியிடம் கொடுக்கச் சொன்ன தோரணை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது ஒரு மோசமான நாடகம் போலத் தோன்றியது. என் மறுப்புக்களைக் கொஞ்ச மும் மதிக்கவில்லை அவர். சொன்னது சொன்னதுதான் என்று சாதித்தார்.

தாள்களையெல்லாம் அள்ளிக் கொண்டு வெளியே இருக்கைக்கு வந்தேன். தானாகவே முனுசாமி என் முன் வந்து நின்றான். அவனுக்கெனத் தரப்பட வேண்டிய தாளைத் தந்து விஷயத்தை உடைத்துச் சொன்னேன். எதிர்பாராதவிதமாய்க் கோபமுற்றான் அவன். ஆத்திரத்தில் உறுமினான்.

'ஆபீஸர்லாம் சேர்ந்து இப்பிடித் துரோகம் பண்ணீட்டிங்களே. நாயமா சார் இது' என் சமாதானம் எதையும் பொருட்படுத்தாமல் உச்ச ஸ்தாயியில் சத்தமிட்டான் அவன். மோதிவிடுவான் போல நெருங்கி நின்று கூச்சலிட்டான். இதுவரைக்கும் பார்த்திராத முனுசாமியின் முகம் அது. 'ப்ளீஸ், கொஞ்சம் அமைதியாக இருங்க' என்றபடி எழுந்த என்னை மறித்து அவன் கூவினான்.

'நீங்க சொல்லிக் குடுத்த மாதிரிதான் சார் செஞ்சன். கடசில இப்டி முதுவுல குத்தீட்டீங்களே சார்.'

பாவண்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline