Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சியாமா சாஸ்திரிகள் தினம்
சிறந்த நடனங்களின் சங்கமம்
பெருங்கவிக்கோர் பெருவிழா
நாடக விமர்சனம்: 'மாயா'
சங்கரா விழி அறக்கட்டளையின் ஜுகல்பந்தி
- |ஏப்ரல் 2004|
Share:
Click Here Enlargeவட அமெரிக்காவை மூடுபனி மறைக்கும் இக்குளிர் காலத்தில் வெயிலைத் தேடி பல பறவைகள் கிழக்கே பறந்து விடுகின்றன. அவற்றில் பல மார்கழி விழாவில் கீதமழை பொழியும் கானப்பறவைகள். இசைக்காற்று சற்றே இப்படி வீசாதா என்று ஏங்கி இருந்த விரிகுடா ரசிகர்களை ராகவன் - நசிகேதா இருவரின் இசை வாள்வீச்சில் இறக்கிப் புண்ணியம் கட்டிக் கொண்டது சங்கரா விழி அறக்கட்டளை (SEF).

SEF என்று பிரபலமாகி இருக்கும் Sankara Eye Foundation செய்து வரும் நற்பணி கொஞ்சம் நஞ்சமல்லவே! அறுவை சிகிச்சைகள் மூலம் வருடம் 40,000க்கும் மேற்பட்ட விழிகளில் ஒளியேற்றியுள்ளது. காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஆசீர்வாதத்தில் தளிர்த்து விழிவங்கி, கோயமுத்தூர் மருத்துவமனை, அமெரிக்கக் கிளைகள் எனத் தழைத்துள்ளது. வாரம் ஒரு கிராம சிகிச்சை முகாம் என்று கடந்த 25 ஆண்டுகளாக, தலைமுறைகளைத் தாண்டி இலவசமாக பார்வை வரம் அளிக்கப் பாடுபடுகிறது.

டாக்டர் ரமணி அவர்களின் காலாட்படையாக இங்கே சேவை செய்து வரும் விரிகுடா இளைஞர்களின் இலட்சியக்கனவு -- 2020க்கு முன்பு இந்தியர்கள் அனைவருக்கும் 20/20 பார்வை தருதல். அந்த அசுர முயற்சிக்குக் குரல்கொடுக்க (எப்படி சிலேடை!) வந்திருந்தனர் நசிகேதா - ராகவன் குழுவினர்.

ஜனவரி 17 அன்று Foothill கல்லூரி வளாகத்தில் இந்துஸ்தானிக்கும் கர்னாடகத்துக்கும் எனத் தத்தம் பாரம்பரியத்துக்கு வக்காலத்து வாங்கி இளைஞர்கள் இசை விவாதத்தை அரங்கேற்றியது கண்கொள்ளாக் காட்சி. அன்று மாலை மேடையேறிய இருவரின் பிரபலம் கருதி இரு தரப்பட்ட மக்களும் பெருத்த எதிர்ப்பார்ப்புடன் அரங்கில் நிறைந்திருந்தார்கள்.

'சங்கட ஹரண தேவா' என்று வினாயகரைத் துதித்துத் தொடங்கிய நசிகேதாவுடன் சேர்த்து மலஹரி ராக 'பஞ்ச மாதங்க' மூலம் பிள்ளையார் சுழி போட்டுக் கொண்டார் ராகவன். ஒருவர் மற்றொருவரின் ஆழத்தைச் சோதித்துப் பார்த்த இந்த முதல் பாடல்களே அவையோரைத் தலையசைக்க வைத்தன. அடுத்து வந்த கீரவாணி ராகம் இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை விளையாட்டாக விஸ்வரூபமெடுத்தது. அவையோர்கள் பாரபட்சமின்றி இருவருக்கும் கரவொலி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
Click Here Enlargeகிட்டத்தட்ட அதே ஸ்வரங்களைத் தழுவி இருந்த ஹிந்துஸ்தானி கீர்வாணியை நசிகேதா பாடியதும் ராகவன் தன் பாணியில் சௌக்கியமாக இங்குமங்கும் கமகங்களை அறிமுகம் செய்து வளர்த்தார். இந்த ராக சங்கமம் ஒரே சாயலான இரண்டு குமரிகள் ஒயிலாக நடனம் செய்து 'எங்கே, நீ ஆடு பார்க்கலாம்' என்று சவால் விடுவது போன்ற பிரமிப்பைத் தோற்றுவித்தது. மேல் ஸ்தாயி சஞ்சாரங்களில் கணீர் குரலில் பாடி கைதட்டலை அள்ளிக்கொண்ட நசிகேதாவுக்குச் சளைக்காமல் தன் மந்தர ஸ்தாயி வீச்சைக் காண்பித்து மந்திரக் கட்டுப் போட்டது ராகவனின் குரல். ராக்கெட் வேகத்தில் வந்த துரித கால ஆலாபனைக்கு விடையாக, கர்னாடகத்துக்கே உரித்தான ப்ருகா சங்கதிகளைக் கேடயமாகப் போட்டுப் பாடியது ராகவனின் முதிர்ச்சியைக் காண்பித்தது. ராகவனும் நசிகேதாவும் முறையே 'அம்ப வாணி' (முத்தையா பாகவதர்) மற்றும் 'நடனாகரா' (ரவிசங்கர்) பாடல்களைத் திறம்பட அரங்கேற்றினர். முத்தாய்ப்பாக அமைந்த ஸ்வர ப்ரஸ்தாரங்களை ராகவனின் உறுதியான தாட்டுப் பிரயோகங்கள் மெருகேற்றின.

செஞ்சுருட்டியில் அமைந்த பாலமுரளிகிருஷ்ணாவின் அஷ்டபதியை அடுத்து, சிறு இடைவேளைக்குப் பின் வந்தது நசிகேதா 'பாஜோரே பாஜோ' என்ற பாரம்பரிய அளிப்பு. அதை ஒட்டிய மோஹன கல்யாணியில் ராகவனே மெட்டமைத்த மகாகவியின் 'வருவாய் வருவாய்' நிகழ்ச்சியின் முதல் தமிழ்ப்பாடலாக இனித்தது. ஹிந்துஸ்தானிப் பாரம்பரிய தரானாவும் ராகவனின் தில்லானாவும் விறுவிறுப்பாகக் கேட்டோரை நிமிர வைத்தன.

கீரவாணியிலும் சரி பிறகு வந்த மோஹன கல்யாணியிலும் சரி ராகவனுக்குப் பக்க பலமாக வாசித்த வத்சன் அவர்களின் வயலின் இசை - அளவில் பாதாம் அல்வா, சுவையில் அமிர்தம். வாதிராஜா அவர்களின் கொன்னக்கோல் மற்றும் தனியாவர்த்தனம் அவரது சிறந்த வித்வத்தையும் மேடை அனுபவத்தையும் எடுத்துக்காட்டுவதாக இருந்தது. அவரது மிருதங்கத்தில் எழுந்த 'மீட்டு' நாதம் அவரது குரு டி.வி.ஜி அவர்களை நினைவூட்டும் அளவு அருமை! ரவி குட்டாலா அவர்களின் உற்சாகமான வாசிப்பும் தபேலா 'போல்' சொன்னதும் சுவாரஸ்யம் கூட்டின.

'பவானி தயானி' என்ற கம்பீரமான சிந்து பைரவி வாழ்த்து பொழிந்த நசிகேதாவைத் தொடர்ந்து பத்ராசல ராமதாசரின் மங்களத்தை ராகவன் பாட அவையோர் தாளத்துடன் சேர்த்து கைதட்டிக் கலந்து கொண்டார்கள். கோர்வையாக அமைந்த விளக்கவுரைகளும், நசிகேதா-ராகவன் இருவரும் தொய்வில்லாமல் தொடர்ந்து நிகழ்ச்சியை எடுத்துச் சென்ற பாங்கும் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள். ஆனால் எத்தனையோ ஜுகல்பந்திகள் செளகர்யமாக ஹம்சத்வனி முதலான ராகங்களைத் திரும்பத் திரும்ப அளித்துள்ளன. அதை மீறி இரண்டு மென்பொருள் பொறியியலாளர்கள் வித்தியாசமான ராகங்களைத் திறம்பட அரங்கேற்றியது பாராட்டத்தக்கதே! மொத்தத்தில் SEFன் ஜுகல்பந்தி விழியற்றோர் நம்பிக்கைக்கும் விளக்கேற்றி வைக்கும் ஒரு அரிய கூட்டு முயற்சி. ஆனாலும் உடனடியாகப் பயன்பெற்றது அங்கு வந்திருந்த செவியுள்ளோர்தாம்!
More

சியாமா சாஸ்திரிகள் தினம்
சிறந்த நடனங்களின் சங்கமம்
பெருங்கவிக்கோர் பெருவிழா
நாடக விமர்சனம்: 'மாயா'
Share: 




© Copyright 2020 Tamilonline