Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
மோகினி
- பூவை எஸ். ஆறுமுகம்|அக்டோபர் 2020|
Share:
கையில் பிரித்து வைத்திருந்த திருமண அழைப்பைப் படித்துமுடித்த சுந்தரேசனுக்கு ஆச்சர்யமும் அனுதாபமும் மாறி மாறி உண்டாயிற்று. விசுவநாதன் என்ற பெயருடன் ஒட்டியிருந்த பி.ஏ. என்ற இரண்டு எழுத்துக்கள் அவன் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன. மணமகள் புவனா; அவளைமட்டுமே அவனுக்குத் தெரியும். அவர்கள் இருவரையும் ஜோடி சேர்க்க இருக்கும் விதியைப்பற்றிக் கொஞ்ச நேரமாகிலும் அவனால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

பி.ஏ. படித்துவிட்டு, இருந்திருந்து இந்த ஊமைப் பெண்ணைத்தானா கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்? ஒருவேளை இத்தகைய சதிக்கு அவனுடைய வறுமைதான் காரணமாக இருக்குமோ? இதை நினைக்கவே, சுந்தரேசனுக்கு மாப்பிள்ளையாக வரப்போகும் விசுவநாதன்பேரில் அளவு கடந்த இரக்கம் ஏற்பட்டது.

அவன் புவனாவை ஓரிரண்டு சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறான். விதிவசமாக ஊமை என்ற ஒரு குறையைத் தவிர மற்றப்படி அழகில் அவள் 'ஏ ஒன்!'

ஏதோ சொற்பகாலம் பரிச்சயம் ஏற்பட்ட தன்னை ஞாபகம் வைத்து அழைப்பு அனுப்பியுள்ள சுவாமிநாதய்யருக்காக வேண்டி, அவர் பெண் கல்யாணத்திற்கு எப்படியும் போய்த்தான் ஆகவேண்டுமென்று முடிவு கட்டினான்

"ஸார், இன்னொரு லெட்டர் உங்களுக்கு; முதலில் கொடுக்க மறந்துவிட்டேன்" என்று சொல்லிக்கொண்டே ஒரு கடிதத்தைக் கொடுத்துச் சென்றான் தபால்காரன்.

மதுரையில் நடக்கும் சுவாமிநாதய்யர் வீட்டுக் கல்யாணத்துக்கு அவசியம் போய்வர வேண்டுமென்று அம்மா எழுதியிருந்தாள். அந்தக் கடிதத்தைப் பார்த்த சுந்தரேசனுக்கு வியப்பு மேலிட்டது. அந்த வீட்டைப்பற்றி அம்மாவுக்கு எப்படித் தெரியும்? அவள் அவ்வளவு அக்கறையாகக் கல்யாணத்திற்குப் போகச் சொல்லும் காரணம் என்ன?!

சுந்தரேசனுக்கு ஒன்றும் புரியவில்லை. சாதாரண விஷயங்களுக்கெல்லாம் மூளையைக் குழப்பிக்கொண்டு, காலத்தை விரயப்படுத்தக் கூடாதென்பது அவன் கருத்து. ஆகவே அவன் கல்யாணத்துக்குப் போவதென்று முடிவு செய்தான்.

★★★★★


போட்டோ ஆல்பத்தில் காணப்பட்ட அந்தப் படத்தைச் சுந்தரேசன் எவ்வளவு நேரம்தான் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தானோ தெரியாது. நினைவின் சுழற்சியில் எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவன் மனதில் அலைபாய்ந்தெழுந்தன.

'மீனா' என்ற இரண்டு எழுத்துக்கள் போட்டோவின் கீழ் இருந்தன. மீனா வேறு யாருமில்லை; புவனாவின் உடன்பிறந்த தங்கை. புவனாவின் முகூர்த்தப் பத்திரிகையைப் பார்த்ததிலிருந்து அவனுடைய இதய அந்தரங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஆசை காட்டி நின்ற அந்த மீனாவின் எழில் பிம்பம் காட்சியளித்தது. மீனாவின் நினைவு முகமே அவனை புவனாவைப்பற்றி அதிகம் நினைக்கத் தூண்டியது.

மதுரையிலிருந்து மாற்றலாகி அவன் தஞ்சாவூருக்கு வந்து ஒரு வருஷம் இருக்கலாம். அதற்குள் எத்தனையோ தடவை அந்த இரு சகோதரிகளைப்பற்றியும் அவன் நினைத்துப் பார்த்ததுண்டு. புவனா ஊமை என்ற விஷயம் மீனா சொல்லத்தான் சுந்தரேசனுக்குத் தெரியவந்தது. அதுமுதற்கொண்டு புவனாமீது அவனுக்கு ஒரு தனி அனுதாபம்.

'முன் பாவாடை, தாவணி சகிதம் காட்சியளித்து மனம்விட்டுப் பழகிப் பேசிவந்த மீனா இதற்குள் எப்படி எப்படி மாறிவிட்டிருப்பாளோ?' என்று எண்ணினான்.

அப்போது அவன் மதுரை கலெக்டர் ஆபீஸில் கிளார்க்காக வேலைக்கு வந்தான். வேலைக்குப் புதிதாகையால் அவனுக்கு ஆபீஸில் முதலில் பழக்கம் ஆனவர் சுவாமிநாதய்யர்தான். அத்துடன் அவர் தம் வீட்டின் முன்னிருந்த ஒரு அறையையும் அவனுக்கென்று ஒதுக்கிக் கொடுத்தார்.

ஒருநாள் "ஸார், 'காம்பவுண்ட் இன்டரெஸ்ட்' கணக்கு ஒன்று புரியவில்லை. அப்பா உங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளச் சொன்னார்" என்று மீனா அறிமுகப்படுத்திக் கொண்டாள் முதன் முதலாக. அதுமுதல் பாடத்தில் சந்தேகங்கள் கேட்கும் வியாஜத்தில் மீனா அடிக்கடி சுந்தரேசன் அறைக்கு வரலானாள். சுந்தரேசனும் அவளுடன் சௌஜன்யமாகப் பழகிவந்தான்.

★★★★★


அன்று வீடு கலகலப்பாக இருந்தது. பிடில் நாதம் இங்கிதமாகக் காற்றில் இழைந்தது. என்ன விசேஷம் என்று சுந்தரேசனுக்கு விளங்கவில்லை. அப்பொழுது கையில் காப்பியுடன் மீனா உள்ளே நுழைந்தாள். அத்துடன் பக்ஷணங்களும் இருந்தன.

"ஸார், எடுத்துக்கொள்ளுங்கள். நாலைந்து மாதமாக அத்தை வீட்டில் இருந்த அக்காள், இன்று அம்மாஞ்சியுடன் ஊருக்கு வந்திருக்கிறாள். வேறொன்றுமில்லை."

பக்ஷணங்களைச் சுவைத்த வண்ணம், "உன் சொந்த அக்காளா, மீனா? எனக்குத் தெரியாதே!" என்றான் சுந்தரேசன். ஆனால் அப்படிச் சொன்ன பிற்பாடுதான் ஏன் அவ்விதம் கேட்டோமென்றிருந்தது அவனுக்கு.

சொல்லி வைத்தாற்போல அதேசமயம் குழாயில் தண்ணீர் பிடித்துச் சென்றாள் புவனா. ஒருமுறை அவளை அப்படியே விழுங்கிவிடுபவன் போலப் பார்த்து நின்ற சுந்தரேசனைக் கண்டதும், மீனா என்ன நினைத்தாளோ?, "ஸார், அவள்தான் புவனா! என் அக்காள். ஆனால் பாவம்..."

"என்ன மீனா?" என்று கவலையுடன் கேட்டான் சுந்தரேசன்.

"இவ்வளவு அழகைக் கொடுத்திருக்கும் பகவான் அவள் ஊமையையும் போக்கடித்து விட்டால்..." என்று நிறுத்தினாள். அவள் குரல் கம்மியது.

சுந்தரேசன் அதற்குமேல் பேசவில்லை. புவனாவின் வருங்கால வாழ்க்கை அவன் உள்ளத்திலே அனுதாபத்தை உண்டுபண்ணியது.

அடுத்த நாள் எதிர்பாராதவிதமாகச் சுந்தரேசனைத் தஞ்சாவூருக்கு மாற்றிவிட்டார்கள். சுவாமிநாதய்யரிடம் விடைபெற்றுச் செல்லுகையில் கண்கலங்க நின்ற மீனாவும் புவனாவும் அவன் கண்களை விட்டு அகலவில்லை.

★★★★★


சுபயோக சுபதினத்தில் புவனா மிஸஸ் விசுவநாதனாக மாறும் வைபவத்தைக் காண்பதற்காக ஆஜரானான் சுந்தரேசன். கல்யாண வீட்டில் மாப்பிள்ளைகளுக்கு நடப்பதைக் காட்டிலும் ஒருபடி மேலாகத் தனக்கு ராஜோபசாரம் நடப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனான் சுந்தரேசன்.

புது மாப்பிள்ளை விசுவநாதன் ரொம்பவும் குஷாலாகச் சுந்தரேசனுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தான். ஆனாலும் சுந்தரேசனுக்கு விசுவநாதன் ஒரு புதிராகவே தோற்றமளித்தான். தான் கைப்பிடித்த மனைவி ஊமை என்பதறிந்தும் அதைப்பற்றி லவலேசமும் விசுவநாதன் குறைபட்டவனாகத் தெரியவில்லை. அல்லது தெரிந்துகொண்டு தான் 'அதுவே தன் தலை எழுத்து' என்று மனதைச் சமாதானம் செய்துகொண்டு விட்டானோ என்றெல்லாம் எண்ணினான்.

புவனா வாய் திறந்து பேசமுடியாது. அதற்கு வட்டியும் முதலுமாக அவள் விழிகள் பேசுமே! குறுநகையை ஒளித்துவைக்கும் சிமிழ் உதடுகள் ஆயிரம் இன்பக் கதைகள் பேசுமே! சுந்தரேசன் இம்மாதிரி அந்தப் புதுத் தம்பதிகளைப்பற்றி என்னவெல்லாமோ சிந்தித்தான்.

அன்று, லீவ் முடிந்து சுந்தரேசன் ஊருக்குப் புறப்படுவதற்காகப் பெட்டி படுக்கைகளைக் கட்டிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்த்த அறையில் பாட்டுச் சத்தம் தெளிவாகக் கேட்டது. மீனாவின் குரல் அல்ல என்பதை அனுமானித்த அவன், கூர்ந்து கவனித்தான். ஒருகணம் அவனுக்குப் பூமியும் ஆகாயமும் ஒன்றாகச் சுழல்வது போலத் தோன்றியது. யார் பாடுவது? புவனாவல்லவா? அப்படியென்றால் அவள் ஊமையில்லையா? மீனா முன்பு சொன்னது பொய்யா? அல்லது ஆலவாய்ப் பெருமான் இப்போதுதான் அவள் பெற்றோரது பிரார்த்தனைக்கு மனமிரங்கி அருள் சுரந்திருக்கிறாரோ?

மீண்டும் ஒருமுறை நோக்கினான். மீனா தன்னையே வெறித்துப் பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டதையும் கண்டுகொண்டான். செப்பிடு வித்தை பார்ப்பதுபோலவே அவனுக்குப் பட்டது.
ஆச்சர்யத்தில் மூழ்கி உட்கார்ந்திருந்த சுந்தரேசனிடம் ஒரு வாண்டுப்பயல் ஓடி வந்து ஒரு கடிதத்தை நீட்டியதும்தான் அவனுக்குச் சுய உணர்வு வந்தது. அது மீனா எழுதிய கடிதம்:

அன்பரே,
முதலில் என்னை மன்னித்துவிடுங்கள். எதிரும் புதிருமாக நின்று தங்களிடம் மன்னிப்பைப் பெறவேண்டிய நான், இப்படிக் கடிதம் மூலம் மன்னிப்புக் கோருவதைத் தவறாக எண்ணமாட்டீர்களே?

சிறிது நேரத்துக்கு முன்பு புவனா பாடியதைக் கேட்டு தங்கள் முகத்தில் ஏற்பட்ட கலவரத்தைக் கண்ட மாத்திரத்திலே அன்று நான் செய்த தவறை - சொன்ன பொய்யை உணர்ந்தேன். என்றோ விளையாட்டாகச் சொல்லப் போக, அதை அப்படியே ஞாபகம் வைத்துக் கொள்வீர்களென்று நான் நினைக்கவேயில்லை. புவனா ஊமையல்ல. அன்று முதன்முதலில் அவளைக் கண்டபோது, நீங்கள் பார்த்த பார்வையைக் கொண்டு எங்கே அக்காள்மீது காதல், கீதல் கொண்டுவிடுவீர்களோ என்று சந்தேகப்பட ஆரம்பித்தது என் மனம். அவள் நினைவில் அப்புறம் உங்கள் மனம் வீணாக அலைபாய நேரிடுமே என்ற அச்சம்! ஏன் தெரியுமா? அக்காள் எங்கள் அம்மாஞ்சிக்காகவே 'ரிசர்வ்' செய்யப்பட்டிருந்தாள். அதற்காகவே, அதுவும் உங்கள் சொந்தநலனை உத்தேசித்து அவ்விதம் ஒரு பொய்யைக் கற்பித்துக் கூற நேர்ந்தது. அவள் ஊமை என்று நான் சொன்னதற்குச் சரியாக அன்று அவளுக்கு அசாத்தியமான பல்வலி. வாயைத் திறக்கவே முடியவில்லை. என்னைப் பிடித்த நல்லகாலம், அடுத்த நாளே உங்களை மாற்றிவிட்டார்கள். மறுதினம் நீங்கள் வீட்டில் இருந்திருந்தால் என் 'குட்டு' வெளிப்பட்டிருக்குமோ, என்னவோ ?

விளையாட்டாகச் செய்த குற்றம்; நியாயத்தை நிர்ணயித்து என்னை மன்னிப்பது உங்கள் பொறுப்பு,

மறந்து விட்டேன். எங்கள் அம்மாஞ்சி யார் தெரியுமா? அவர்தான் இந்த விசுவநாதன்.

இப்படிக்கு,
மீனா


மீனாவின் குறும்புத்தனத்தைக் கண்ட அவனுக்குச் சிரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால், அந்த க்ஷணம் மீனா ஒரு புதிர்போலக் காட்சியளித்தாள் சுந்தரேசனுக்கு. விதியின் ஆடலரங்கிலே மோகினி போலப் பல்வேறு உருவங்களில் தோன்றி மறையும் மீனாவை அவன் எப்படி மறப்பான்?

பயணத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்த சுந்தரேசனைக் கண்டு சுவாமிநாதய்யர் திகிலடைந்தார்.

"மிஸ்டர் சுந்தரேசன், என்ன அதற்குள் ஊருக்குப் புறப்பட்டுவிட்டீர்கள்? மீனா சொன்னாள்; ஓடோடி வந்தேன். முதலில் இன்றைக்கே இன்னும் ஒரு வார லீவுக்கு எழுதிப் போடுங்கள். உங்களிடம் என்றைக்கோ சொல்லியிருக்க வேண்டிய விஷயம், இன்று தான் நேரில் கூறச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்த நாளில் - அதாவது வாலிப வயதில் - எனக்கும் உங்கள் அம்மா சரசுவுக்கும் கல்யாணம் செய்துவைப்பது என்று நிச்சயித்திருந்தார்கள் எங்கள் பெற்றோர்கள். ஆனால் விதி எங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டது. திடீரென்று நல்ல பூஸ்திதியுடன் இருந்த என் தந்தைக்குப் பலவிதங்களில் நஷ்டமேற்பட்டது. உலகத்தில் பணம்தானே ஜீவநாடி? ஆகவே எங்கள் எண்ணம் கைகூடாமற் போய்விட்டது.

உத்தியோகத்துக்கென்று வந்த உங்களைப்பற்றி விசாரித்தறிந்த நான், அப்போதே ஓர் இன்பக் கனவு கண்டேன். அதற்கு அனுசரணையாகவே மீனா உங்கள்மீது அத்யந்த அன்பு கொண்டிருக்கிறாள். எப்படியும் மீனாவை உங்கள் வசம் ஒப்புவித்து மன நிம்மதியடைய எண்ணி உங்கள் தாயாரிடம் சொன்னேன். அவளும் சம்மதித்துவிட்டாள்... உங்கள் இருவர் ஜாதகங்களும் இழை குறையாமல் பொருந்தியிருக்கின்றன. மனம்போலத் தானே மாங்கல்யம்? என்னைக்கொண்டே உங்கள் அபிப்பிராயத்தைக் கேட்கச் சொல்லிவிட்டாள் உங்கள் அம்மா. அன்று பூர்த்தி பெறாதிருந்த எங்கள் மனோரதம் உங்கள் விஷயத்திலாவது நிறைவேறவேணும்... சம்மதம் தெரிவியுங்கள். வருகிற வியாழன் ரொம்பவும் பேஷான நாள்.. அன்றைக்கே நிச்சயதார்த்தம் செய்து விடலாம்" என்றார் சுவாமிநாதய்யர்,

அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஏதோ கனவில் நிகழ்வது போலவே தோன்றியது சுந்தரேசனுக்கு. அன்று மதுரைக் கல்யாணத்துக்கு அவசியம் போய் வரவேண்டுமென்று அம்மாவிடமிருந்து வந்திருந்த கடிதத்தின் தாத்பர்யமும் அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. இவ்வளவு எளிதில் - இவ்வளவு சீக்கிரமாக - மீனா தன்னுடையவளாக ஆகிவிடுவாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

அவன் அகக்கண்முன் மாயமோகினி மீனாவுடன் தான் நடத்தப்போகும் இன்ப வாழ்க்கையின் காட்சிகள் எழுந்தன. அந்த நினைவில் அவன் இலேசாகச் சிரித்தது, கல்யாணத்துக்குத் தன்னுடைய பூரண சம்மதத்தைத் தெரிவிப்பது போலிருந்தது.

பூவை எஸ். ஆறுமுகம்
Share: 




© Copyright 2020 Tamilonline