Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
புளுகு
- எஸ்.வி.வி|அக்டோபர் 2014|
Share:
புளுகு சொல்லக் கூடாதுதான். அப்படி வைத்துக்கொண்டால் முடியுமா? ஒருவன் கடன் கேட்க வருகிறான். நம் மனசில் படுவதை நிஜமாகச் சொல்ல வேண்டுமானாலும் "உன் யோக்கியதையைப் பார்த்து ஒருவனும் கடன் கொடுக்கமாட்டான்" என்றுதான் சொல்லவேண்டும். அப்படிச் சொல்லலாமா? உடனே ஒரு புளுகைச் சிருஷ்டி செய்கிறோம். "ஐயோ! இப்பொழுதுதானப்பா இருநூறு ரூபாயைக் கொண்டுபோய்க் கட்டிவிட்டு வருகிறேன். நம் பக்கத்து மனை விலைக்கு வந்தது. அதை வாங்கிப் போட்டுப் பணத்தைக் கட்டிவிட்டு வந்துகொண்டே இருக்கிறேன். பணமிருந்தால் உனக்குக் கொடுக்காமல் இருப்பேனா?" என்கிறோம். கடன் கேட்க வருபவர்களைப் பார்ப்பதற்கு முன்னேயே எத்தனையோ புளுகுகள் மனதில் உதிர்ந்துவிடுகின்றன. கடன் கேட்க வருபவன் முகத்தைப் பார்த்தாலே தெரியும். உடனே நாம் ஒரு வேஷம் போட ஆரம்பித்துவிடுகிறோம். "வா அப்பா, வா. உன் வீட்டுக்குத்தான் வரவேணுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். நாளன்றைக்குத் தகப்பனார் திதி வருகிறது, கையில் ஒரு செப்புப் பைசா இல்லை. உன்னைத்தான் கேட்கலாமென்று நினைத்தேன். அதற்குள் நீயே வந்து சேர்ந்தாய்" என்று ஆரம்பிக்கிறோம்.

"பேஷ் பேஷ் ரொம்ப சரியாய்ப் போய்விட்டது. நானும் அதற்காகத்தான் இங்கு வந்தேன். (கைமாற்றுக் கொடுக்கிறதற்கல்ல, வாங்குவதற்கு) எனக்கு முன்தான் நீ மூக்கால் அழ ஆரம்பித்து விட்டாயே. இரண்டு பேரும் கட்டிக்கொண்டு அழலாம் வா" என்கிறான். பிறகு இரண்டு பேரும் கட்டிக்கொண்டு சிரிக்கிறோம்.

கடன் கேட்க வருகிறவர்களில் மற்றொரு ரகம் உண்டு. வெகுநாள் சிநேகிதன் இருக்கிற நிலவரத்தை ஜாடையாய்த் தெரிந்து கொண்டு பிறகு கேட்கப் போகிறவன். அவனைப் பார்த்தாலும் நன்றாய்த் தெரியும். "இன்றைய தினம் ஜவேஜு எப்படி? எல்லாம் கொஞ்சம் சமர்த்திதானே?" என்று மெதுவாய் நோண்டுகிறான். "ஆஹா! சமர்த்திதான் அதற்கென்ன குறைச்சல் காலையிலிருந்து? முதலில் பால்காரன் பணத்துக்கு வந்தான், பிறகு தயிர்க்காரி வந்தாள். தேதி பதினைந்தாச்சு, வீட்டு வாடகை கொடுக்கவில்லை. நாளைய தினம் பிள்ளையின் காலேஜ் சம்பளம் கட்டாவிட்டால் அபராதம் போட்டுக் கட்ட வேண்டும். பணம் எங்கிருந்து வரப்போகிறதோ, சுவாமிக்குத்தான் வெளிச்சம். இருக்கட்டும். ஈசுவரன் எத்தனை நாள் சோதனை பண்ணுகிறானோ பண்ணட்டும். சொன்னால் வெட்கக்கேடு. என் தாடியைப் பார்த்தாயோ இல்லையோ? நம்பினால் நம்பு நம்பாவிட்டால் விடு; க்ஷவரம் பண்ணிக்கொள்ள இரண்டணா இல்லை. இது என் தற்கால நிலைமை."

சாதாரணமாய் மனித சுபாவம், ஏழ்மைத்தனம் வாஸ்தவமாயிருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் பணக்காரன் போல நடிக்கும். கடன் கேட்க வருபவனிடத்தில் மாத்திரம் இல்லாத ஏழ்மைத்தனத்தையும் சிருஷ்டி பண்ணிக்கொண்டு சொல்லும்.

பொய் கலக்காமல் எப்படி இருக்க முடியுமென்று இன்னொரு சந்தர்ப்பத்தைச் சொல்லுகிறேன் பாருங்கள். வெகுகாலமாகச் சந்திக்காத பழைய சிநேகிதன் திடீரென்று ஊரிலிருந்து வந்து சேருகிறான். அடிநாட்களில் இணை பிரியாமல் இருந்தவர்கள். எத்தனையோ தரம் நம் வீட்டுக்கு வரும்படியாக அவனைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவன் வந்தானே என்று நமக்குப் பரம சந்தோஷம். நம் சம்சாரம் மனசும் அப்படி இருக்குமென்று சொல்ல முடியுமா? முன்னாடி எத்தனையோ தரந்தான் பார்த்திருக்கிறோமே!

இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்.


என்று அதிகப் பரிவோடு பேசிக் கொண்டிருக்கும்போது உள்ளுக்குள் மனசு அடித்துக் கொண்டிருக்கிறது. கடைசியில் ஏதோ ஒரு புளுகைச் சொல்லிச் சமாளித்து சிநேகிதனை அனுப்பிவிடுகிறோம். அந்தப் புளுகைச் சொல்லாவிட்டால் நம் வீட்டு நிலைமை என்னவாகிறது? பிறகு வீட்டில் இருக்கிறதா, 'கூறாமல் சந்நியாசம் கொள்' என்றாரே, அம்மாதிரிச் சந்நியாசமாய்ப் போய்விடுவதா?

இந்தப் புளுகுகளெல்லாம் அதிகக் கெடுதலில்லாமல் சில அனுகூலங்களை உத்தேசித்தவை. சிலவற்றைப் புளுகாகவே நாம் நினைக்கிறதில்லை; இன்கம்டாக்ஸ் கணக்கைத் தப்பாய்க் கொடுக்கிறது ஓர் அவமானமா? புதுச்சேரியிலிருந்து சில்க் வாங்கி மறைத்துக் கொண்டு வந்துவிட்டால் அதை ஒரு தப்பாய் நினைக்கிறோமா என்ன? வண்டியில் நம்மோடு வருகிறவனே, "அதைக் கசக்கித் தலையில் கட்டிக்கொண்டு விடுங்க, ஸார்" என்று சொல்லிக் கொடுப்பான். டிக்கெட்டில்லாமல் ரெயில் பிரயாணம் செய்கிறவனை யாராவது காட்டிக் கொடுக்கிறார்களா? "அடே பையா! டிக்கெட்டுப் பார்க்க வருகிறாரடா. பெஞ்சுக்கடியிலே புகுந்து கொள். நான் காலால் மறைத்துக் கொள்ளுகிறேன்" என்று நாமாய்த்தானே சொல்லுகிறோம். அரை டிக்கெட் வாங்காமல் அழைத்துக்கொண்டு போகிற குழந்தை, மூன்றடி உயரம் இருக்கிறது. வயசு என்னவென்றால் ஒன்றரை என்கிறோம். இதெல்லாம் புளுகா என்ன? கவர்ன்மெண்டு பணத்தை ஏமாற்றுகிற விஷயத்தில் எதுவும் புளுகு ஆகாது. யாரும் நம்மைப் புளுகன் என்று சொல்லவே மாட்டார்கள்.

இந்தப் புளுகெல்லாம் கிடக்கட்டும். இவை ஏதோ ஓர் அனுகூலத்தை உத்தேசித்துச் சொல்லுகிறவை. ஒரு காரிய சாதகமுமில்லாமல் புளுகுகிறார்களே அதை என்னவென்று சொல்லுகிறது? "மூற துட்டை மூட்டையாய் அளக்கிறானடா அப்பா" என்றார்களே அவற்றை?!

ஒரு பிசாசுக் கதையையோ, சூனியம், ஏவல், பாம்பு, யானை, காட்டிலிருக்கும் புலி, சிங்கம் இவற்றைப் பற்றியோ பேச்சு ஆரம்பித்து விடுங்கள். வரிசை வரிசையாய் ஒருவன் ஒருவனாய் ஆரம்பிக்கிற புளுகுகளைப் பாருங்களேன்!

"நான் அனந்தபூரிலிருக்கும்பொழுது ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவளுக்குப் பத்து வயசு தானிருக்கும். தமிழ்ப் பெண். இந்துஸ்தானி என்பது தெரியாது. பிசாசு பிடிக்கிறபோது இந்துஸ்தானியைப் பொழிந்து கொட்டுகிறது, ஸார். அந்தப் பெண்ணுக்கு எப்படி ஸார் இந்துஸ்தானி வந்தது?" என்று ஒருவர் ஆரம்பிப்பார்.

"நீங்கள் அனந்தபூரிலென்றல்லவா சொல்லுகிறீர்கள்? எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலே நான் கண்ணாலே பார்த்தேன், ஸார், ஒரு பதினெட்டு வயசுப் பிள்ளை. பளபளவென்று ஏதோ ஒரு பாஷையிலே உபந்நியாசம் பண்ணுகிற மாதிரிப் பேசுகிறான். என்ன பாஷையென்று ஒருவருக்கும் தெரியவில்லை. ஒரு டாக்டர் வந்து பார்த்தார். அவர்தான் சொன்னார் - அது ஜெர்மன் பாஷையென்று. 'இது என்ன டாக்டர்?' என்று ஆச்சர்யமாய்க் கேட்டோம். 'எனக்கும் ஒன்றும் புரியவில்லை' என்று கையை விரித்து விட்டுப் போய்விட்டார். பிசாசு ஏவல் என்று இருக்கிறது, ஸார். நமக்கு வேண்டுமானால் தெரியிவில்லையே தவிர..."

"இருக்கிறது என்பதற்கு ஆட்சேபம் என்ன? என் மச்சினி கேஸையே கேளுங்க, ஸார். கழுத்திலே தங்கச் செயின் போட்டுக் கொண்டிருப்பாள். திடீரென்று செயின் கழுத்தில் இராது. அலறியடித்துக் கொண்டு தேடினால் பத்து வீடுகள் தாண்டி அங்கிருந்து ஒருத்தி கொண்டு வருவாள். விழுந்து கிடந்தது என்று. வீட்டிலே இருக்கிறவர்கள் புடைவைகள் எல்லாம் ஒரு கூடையில் போட்டிருக்கும், ஸார். என் மச்சினி புடைவை மாத்திரம் பற்றி எரிந்துவிடும், ஸார். மற்ற எல்லாப் புடைவைகளும் அப்படியே இருக்கும். ரொம்ப நாளாய் இம்மாதிரி நடந்து வந்தது. பேப்பரிலே இதைப்பற்றி யார் வேண்டுமானால் வந்து பார்க்கலாமென்றும் இதற்குக் காரணம் சொல்ல முடிந்தவர்கள் முன்வரலாம் என்றும் எழுதினோம். யார் வந்தார்கள்? வந்துதான் என்ன சொல்லுகிறது?"

எப்படி இருக்கிறது புளுகு! மேற்சொன்ன சம்பவங்கள் நடக்கக் கூடியதாய் இருக்கலாம். சொன்னவன் மச்சினிக்கு அம்மாதிரி நடந்ததா என்பதைப் பற்றித்தான் சந்தேகம்.
"பீத்திக் கொள்ளுகிறான்" என்று சொல்லுவார்களே அம்மாதிரி ஏற்படுகிற புளுகுகள் விசேஷம்.

ஒருநாள் கிளப்பில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். வெய்யிற் காலம். நாற்காலி, மேஜை எல்லாவற்றையும் கூடத்துக்கு வெளியில் தூக்கிப் போட்டுக்கொண்டு சுற்றி உட்கார்ந்து அரசாங்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

"பாம்பு! பாம்பு!" என்று யாரோ கத்தினார். "எங்கே? எங்கே?" என்று எல்லோரும் அலறினார்கள். "சூபர்வைசர் காலின் கீழ்" என்றார்கள். சூபர்வைசர் ஒரு எம்பு எம்பி ஆகாச மண்டலத்தில் மறைந்துவிட்டார். அவர் பக்கத்தில் 'பப்ளிக் பிராஸிகூடர்' உட்கார்ந்திருந்தார். அவர் ஸ்தூலசரீரம். கால்களை முட்டி தேய மேஜைக்குள் விட்டுக்கொண்டிருந்தார். அவர் அலறி அடித்துக் கொண்டு கிளம்பினதில் முட்டியிடித்து, மேஜை கவிழ்ந்து, அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியோடு பின்னாடி சாய்ந்து, இரண்டு கரணங்கள் போட்டுத் தரையில் புரண்டார். அதற்குள் மாட்டு ஆஸ்பத்திரி டாக்டர் அவரை அபாய இடத்திலிருந்து அப்புறம் இழுத்து விட்டார்.

"எல்லாம் தூர நில்லுங்கள். யாரேனும் ஒருவர் போய் மூங்கில் ஒன்று கொண்டாருங்கள்" என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் தளகர்த்தர் மாதிரி அதிகாரத்தை வகித்து நின்றார். நாற்காலிகள் இழுக்கப்பட்டும் மேஜை சாய்ந்தும் ரெயிலோடு ரெயில் மோதிக்கொண்ட இடம் மாதிரி இருந்தது அந்த இடம்.

இந்த அமர்க்களத்தில் அந்தப் பாம்பு அமெரிக்கா வரையில் பிரயாணம் செய்திருக்கலாம். அதன் தலையெழுத்து இங்கே போட்டிருந்தது. அங்கேயே ஒரு மூலையில் சுருட்டிக்கொண்டு கிடந்தது. அதை அடித்துக் கொன்றுவிட்டார்கள். அப்புறம் கிளப்பு ஹாலுக்குள்ளேயே போய் உட்கார்ந்து கொண்டோம். என்ன பாம்பென்று பலமாக விவாதம் பண்ணினோம். 'கட்டுவிரியன்' என்றார் ஒருவர். 'நல்ல பாம்புதானையா' என்றார் மற்றொருவர். அதற்குள் பாரஸ்டு ரேஞ்ச் ஆபீஸர் அங்கே வந்து சேர்ந்தார். பாம்பின் சங்கதியைச் சொன்னதும், "ப்பூ! பாம்புக்கா இவ்வளவு அமர்க்களம்! நித்தியம் காட்டில் ஆயிரம் பாம்புகளை நான் தாண்டிக் கொண்டு போகிறேன். நான் என்ன செய்கிறேனென்று நினைக்கிறீர்கள்? என் கைக்கம்பு நுனியில் தூக்கி அப்புறம் எறிந்துவிட்டு நான்பாட்டுக்குப் போவேன்" என்றார்.

"ஆமாம், காட்டில் எத்தனையோ பாம்புகள் இருக்குமே உங்கள் காட்டில் புலி, சிறுத்தைகூட இருக்கோ, இல்லையோ?"

"அப்பா! கேட்க வேண்டுமா? ஆனால் அதெல்லாம் நம்மகிட்ட வராது."

"பாரஸ்டு ரேஞ்சாபீஸர் என்று தெரியும்போல் இருக்கிறது?"

"இல்லை. மனுஷ்ய நடமாட்ட வழி தெரியும் அவற்றிற்கு."

"நீங்கள் ஏதாவது புலியைச் சுட்டிருக்கிறீர்களா?"

"என்ன கேள்வி?" என்று ரேஞ்சாபீஸர் ஒரு சிரிப்புச் சிரித்தார். "எத்தனையோ கொன்றிருக்கிறேன். அதில் மூன்று பலே துஷ்டப் புலிகள். ஒவ்வொரு நகமும் ஏழடி நீளம். அவற்றின் உள்ளே பஞ்சைத் துருத்தி மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள்."

அதற்குள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரம்பித்தார். "புலிகள் கிடக்கட்டுமையா. குள்ள நரிகள் எவ்வளவு அபாயகரமானவை தெரியுமா? குறவர் 'காங்'கைப் பிடிக்க வேணுமென்று ஒருநாள் காட்டுக்குள்ளே போனேன். ஜவான்களையெல்லாம் மூன்று பர்லாங்குக்கு அப்புறம் நிறுத்திவிட்டு நான் மாத்திரம் தனியாய்ப் போனேன். நன்றாய் இருட்டிவிட்டது. ஐம்பது குள்ள நரிகள் வந்து என்னைச் சுற்றிக்கொண்டு விட்டன. என்ன கத்தல், என்ன மண்ணை வாரி இறைக்கிறது! இன்னொருவனாயிருந்தால் அந்தப் பயத்திலேயே செத்துப் போயிருப்பான். எனக்கு ஒரு பயமும் ஏற்படவில்லை. இத்தனைக்கும் ரிவால்வர் எடுத்துக்கொண்டு போகவில்லை. கையில் இருந்த பிரம்பு ஒன்றுதான். நடுவில் நின்று கொண்டேன். பிரம்பை நாலு பக்கத்திலும் வீசு வீசென்று வீசினேன். அப்பா! என்ன ரோஷத்தோடு மேலே வந்து வந்து பாய்கிறதுகள், தெரியுமோ? நான் சளைக்கவில்லை. எல்லாவற்றையும் பிணமாய்ச் சாய்த்துவிட்டேன். அதில் ஒன்று என்னைப் பிடித்துக் கீறியிருக்கிறது, பாருங்கள். இன்னும் வடு அப்படியே இருக்கிறது; இந்த இடத்தில் தடவிப் பாருங்கள். அங்கே இல்லை; இன்னும் கொஞ்சம் மேலே; அதுதான்; அதுதான், ஒரு தழும்பாய்த் தட்டுப்படவில்லை?"

"அப்பப்பா! ஒரே புளுகு, காராமணி மூட்டை. ஆனால் அதில்தான் லோகம் இருக்கிறது. லோகத்தையேதான் ஒரு பெரிய புளுகு என்கிறார்களே!"

எஸ்.வி.வி
Share: 




© Copyright 2020 Tamilonline