Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
இரண்டாவது மரணம்
- ஜீ.முருகன்|பிப்ரவரி 2012|
Share:
அவனைத் தேடி அவனுடைய சகோதரன் வந்துவிட்டுப் போனதாக அலுவலகத்தில் சொன்னதும் குழம்பிப்போனான். வீட்டுக்கு வரச்சொல்லி தன்னுடைய விலாசத்தை ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார்.

அவனுக்கு உடன் பிறந்த சகோதர்கள் யாரும் இல்லை. இருந்த ஒரே தம்பியும் பத்து வருஷங்களுக்கு முன்பே இறந்து போய்விட்டான். தூரத்து உறவில்கூட அப்படி யாரும் இந்த நகரத்தில் வசிப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. எந்த சொந்தபந்தக் கொடிகளும் எட்டாத தூரத்திலிருக்கிற நகரமிது. யார் அவனைத் தேடி வந்திருக்க முடியும்?

அவன் மறுத்தான். வேறு யாரையோ தேடிவந்திருக்க வேண்டுமென்று அலுவலக உதவியாளனிடம் வாதிட்டான். இவனுடைய ஊர், பேர் எல்லாவற்றையும் அவர் சரியாகச் சொன்னதாக அவன் உறுதிப்படுத்தினான்.

அலுவலகத்தை விட்டுக் குழப்பத்துடனேயே புறப்பட்டான். அழைப்புச் சீட்டுகளுடன் வீடுகளைக் கண்டுபிடித்து பழுதான டிவிக்களை சரிசெய்து தருவது அவனுக்கு வேலை. ஆறு வருஷங்கள் கழிந்துவிட்டன, இந்த வேலையை மேற்கொண்டு. இந்த நகரம் முழுக்க அவனுக்கு அத்துப்படி. இதுநாள்வரை ஒரு உறவினைக்கூட இங்கே அவன் சந்தித்ததில்லை.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டுத் திரும்புவம் அந்த விலாசத்தைப் பார்த்தான். அவனுடைய அறையிலிருந்து பக்கம்தான். நடந்தேகூட அங்கே போய்விடலாம்.

போய் பார்த்துத்தான் ஆகவேண்டுமா என்ன? போகாமலேயே இருந்துவிடலாம். ஆனால் அவருக்கு என் விலாசம் தெரிந்திருக்கிறது, மீண்டும் என்னைத் தேடிவந்து விட்டால் பார்க்காமல் இருந்ததற்கு என்ன சமாதானம் சொல்வது?

யாராக இருந்தாலும் அவர் ஒரு மனிதர், அதிலும் என் உறவுக்காரர், என்னைத் தெரிந்திருப்பவர், சந்திக்க விரும்புபவர். தினம் தினம் எத்தனையோ விலாசங்களுக்குப் போய் எத்தனையோ விதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர்களில் ஒருவராக இவரையும் நினைத்து ஏன் போய்ப் பார்க்கக்கூடாது? இறுதியாக அவரைப் பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தான்.

எத்தனையோ முறை இதே தெருவில் அவன் போய் வந்திருக்கிறான் என்றாலும் இந்த வீட்டை அவன் கவனித்ததில்லை. சற்று உயரமான மதில் அவன் பார்வையை மறைத்திருக்கிறது. வீடு கண்ணில் பட்டிருந்தால் அதன் தோற்றம் நிச்சயம் அவன் கவனத்தைக் கவர்ந்திருக்கும்.

இதேபோன்ற வீட்டை வேறு எங்கோ பார்த்திருப்பது போல அவனுக்கு நினைவு. அவனுக்கு வியப்பாக இருந்தது. இந்த நகரத்திற்குப் பொருத்தமில்லாத ஒரு வீடு. இரண்டு மரத்தூண்கள் தாங்கி நின்ற முன் கூரைக்குப் பின்னால் உள்ளடங்கியமாதிரி ஒரு பெரிய கதவு. கதவிலிருந்த செதுக்குச் சிற்பங்கள், வடிவங்கள் எல்லாமே அவனுக்குப் பரிச்சயமானவை. அவன் வீட்டுத் தலைவாசலில்கூட இதே பாணியிலான செதுக்கல்கள் உண்டு.

அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினான். கதவுக்குப் பின்னால் யாரைச் சந்திக்கப் போகிறோமோ என்ற பெரும்புதிர் அவனைக் கிளர்ச்சிக்குள்ளாக்கியது. கதவின் தாழ்ப்பாள் நீங்கும் சத்தம் கேட்டது. கதவு திறந்துகொண்டு ஒரு பெண் வந்து நின்றாள். இதற்குமுன் எப்போதும் அவளை அவன் பார்த்ததில்லை.

"நீங்க..."

பெயரைச்சொன்னதும் அவளுடைய முகம் மலர்ந்தது.

"உள்ள வாங்க"

நீண்டநாட்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விருந்தாளியை வரவேற்பது போல அவனை அவள் வரவேற்றாள்.

விசாலமான ஒரு வரவேற்பறைக்குள் அவன் நுழைந்தான். நான்கு தூண்கள் வைத்து ஒரு கோயில் மண்டபம் போல அது கட்டப்பட்டிருந்தது. கூரையில் சதுரமான ஒரு திறப்பு. அதைச் சுற்றி மேல்சுவர். சுவரின் நான்கு பக்கங்களிலும் நான்கு ஜன்னல்கள். தூண்களுக்கு நடுவே பிரகாசமான ஒளி மேலிருந்து வந்து தரையில் விழுந்தது. அங்கே ஒரு குழந்தை அழுதபடி இருந்தது.

"உட்காருங்க" என்று ஒரு நாற்காலியைக் காண்பித்தாள் அவள். பெட்டியைச் சுவர் ஓரமாக வைத்துவிட்டு அவன் உட்கார்ந்தான்.

"உங்கண்ணா நீங்க வருவீங்கன்னு இன்னிக்கெல்லாம் வீட்லதான் இருந்தார். இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆண்டாள கூட்டிகிட்டு வர்ரதுக்கு ஸ்கூல் வரைக்கும் போயிருக்கார். இப்ப வந்துடுவார்."

குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, "சித்தப்பா வந்திருக்காங்க பாரு, அவுங்க எதிர்க்க அழக்கூடாது என்ன. இங்கியே அவருகூட விளையாடிக்கிட்டிரு, காப்பி வச்சிக் குடுக்கலாம்."

குழந்தையை அவனுக்கு எதிரில் கொண்டு வந்து இறக்கிவிட்டாள்.

அவள் உள்ளே போய் மறைந்ததும் குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டான். அது அழுகையை நிறுத்திவிட்டு வியப்புடன் அவனைப் பார்த்தது. அவனுடைய பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுக்க அது பிரயத்தனப்பட்டதைக் கண்டு அவனே எடுத்துக் கொடுத்தான். வாங்கியதும் அவனையே பார்த்துக்கொண்டு அவசரத்துடன் வாயில் வைத்துக்கொண்டது.

மாடிக்குச் செல்லும் இந்த மரப்படிகளில் ஏற்கனவே அவன் தாவி ஏறிச் சென்றிருப்பதுபோல ஒரு நினைவு. இந்தக் கதவுகளின் வழியேகூட எண்ணற்ற தடவை அவன் போய் வந்திருக்கிறான். எப்போதோ அவன் நுகர்ந்திருந்த ஒரு மணத்தை இந்த ஜன்னல்களில் நுழைந்து வந்த காற்று சுமந்து வந்தது. பழைய மணம். காலத்திலும் தூரத்திலும் வெகு தொலைவு பயணித்து இங்கே வந்திருக்கிறது.
காப்பியுடன் அவள் வந்தாள். காப்பியை அவனிடம் கொடுத்துவிட்டு குழந்தையை வாங்கிக்கொண்டு தூணுக்குப் பக்கத்தில் போய்த் தரையில் உட்கார்ந்துகொண்டாள். பெரிய ரகசியம் ஒன்றை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறாள் அவள். அது உடையப்போகும் ஆனந்தம் அவளிடம் தெரிந்தது.

"நேத்துதான் மாமாவுக்கு காரியமெல்லாம் முடிஞ்சது" என்றவள், சற்று இடைவெளிவிட்டு, "காரியத்துக்காவது கூப்பிடுங்கன்னு அவருக்கிட்ட சொன்னேன். அவர்தான் வேணாம்ன்னு சொல்லிட்டார்"

காப்பியை மெல்லப்பருகிக் கொண்டே அவன் கேட்டுக் கொண்டிருந்தான். சகஜமான அவளுடையபேச்சு அவனை ஆச்சர்யப்பட வைத்தது.

"மாமாவுக்கு வயசாயிடுச்சி. எண்பதுக்குக் கிட்டத்தட்ட இருக்கும். இவ்வளவு வயசுவரை வாழ்ந்ததே பெரிய விஷயம். இதுக்கெல்லாம் தெய்வ குடுப்பன வேண்டும். நாமெல்லாம் அறுவதையே தாண்டுறமோ என்னமோ. அத்தை சாவும்போது அவுங்களுக்கு அறுவத்தியஞ்சு வயசுதான். அப்பெல்லாம் இவர் அங்க இங்க ஓடி வேலை செஞ்சுகிட்டிருந்தார். இந்த வீட்டையே அவருதான் கட்டினார். எல்லா வேலையும் அவரோடதுதான். மரவேலை முடியமட்டும் இரண்டு வருஷமாச்சி. இந்த வீடுகட்டுன செலவுல ரெண்டு வீடு கட்டியிருக்கலாம்" என்று சொல்லி அவள் சிரித்தாள்.

"நீங்க இந்த ஊருக்கு வந்தபோதே அவருக்குத் தெரியும். உங்கள வீட்டுக்கு கூப்பிடலேயேங்கிற வருத்தம் அவருக்கு எப்பவும் உண்டு. மாமா இருக்கிற வரைக்கும் எதுவும் உங்களுக்குத் தெரியவேணாம்ன்னு விட்டுட்டார்."

‘மாமா’ என்று அவள் குறிப்பிடுவது யாரை என்றுதான் புரியவில்லை அவனுக்கு. ஏற்கனவே, இவனுக்கு எல்லாமே தெரியும் என்பதுபோல ஏன் பேசுகிறாள் இவள்?

வெளியே ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.

"அவர் வந்துட்டார்" என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறப்பதற்காக எழுந்து போனாள்.

அவரை எதிர் கொள்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். ஏனோ அவன் மனம் பதற்றமடைந்தது. சிரித்துக்கொண்டே அவர் உள்ளே வந்தார். பின்னால் கான்வென்ட் உடையில் இருந்த மகளுடன் அவளும் வந்தாள்.

"அப்பு வந்து ரொம்ப நேரமாச்சா?" என்று கேட்டுக்கொண்டே அவனிடம் வந்தார்.

"இப்பதான் கொஞ்சம் நேரமாச்சி" என்று எழுந்தான்.

"உட்கார் உட்கார்" என்று சொல்லிக்கொண்டே இன்னொரு நாற்காலியை அருகில் இழுத்துப்போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.

இதற்குமுன் அவன் அவரைப் பார்த்திருக்கிறான். அவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது. பெரியம்மா சாவின்போதுதான் அது. அவனிடம் வந்து பேசியிருக்கிறார். அவன் என்ன செய்கிறான், என்ன படிக்கிறான் என்று விசாரித்தார். அவர் யார் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் அப்பா பிறந்து வளர்ந்த ஊருக்குப் போனால் அதுபோல நிறையப் பேர் அவனிடம் விசாரிப்பது வழக்கம்தான்.

வேட்டி சட்டையில் மிகச் சாதாரணமாகத்தான் அவர் இருந்தார். கபடமில்லாத ஒரு முகம். மீசையை வழித்துவிட்டிருந்தார்.

"வேலையெல்லாம் முடிஞ்சாச்சி இல்லையா?"

"முடிச்சிட்டுதான் வந்தேன்" என்றான். அவரை எப்படி அழைப்பது என்று விளங்கவில்லை அவனுக்கு.

"ஆண்டாளம்மா இங்க வாங்க."

அந்தப் பெண் அவரிடம் போய் ஒட்டிக்கொண்டு நின்று சங்கோஜத்துடன் இவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"நம்மப் பாட்டி பேரத்தான் இவளுக்கு வச்சிருக்கேன்" என்று சிரித்தவர்,

"ரொம்ப பழைய பேரா இருக்குன்னு எல்லோரும் சொன்னாங்க. ‘ஆண்டாள்’ நல்லாத்தானே இருக்கு" என்று அவனைப் பார்த்து மீண்டும் சிரித்தார்.

அவனுக்குப் பக்கத்திலிருந்த காலி டம்ளரை எடுத்துக்கொண்டு அவன் மனைவி உள்ளே போனாள்.

"சித்தப்பாவுக்கு வீட்டச் சுத்தி காமிக்கலாமா?" என்று தன் மகளிடம் சொல்லிக்கொண்டே அவர் எழுந்தார்.

"அப்பு வா" என்று அவனை அழைத்தார்.

அவனுடைய சித்தப்பாவை அவன் அய்யா இப்படித்தான் அழைப்பது வழக்கம். அந்த வார்த்தையை அப்படியே இவர் பயன்படுத்தியது இவனை வசியப்படுத்தியது. தயங்கியபடி எழுந்து அவருக்குப் பின்னால் நடந்தான். அச்சிறுமியும் நாணம் தெளிந்தவளாக ஓடிவந்து இவன் கையைப் பிடித்துக்கொண்டாள்.

எல்லா அறைகளும் வரவேற்பறையை ஒட்டியே இருந்தன. ஒரு கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனவர் தயங்கி வெளியே நின்ற அவனை "உள்ள வா" என்று கூப்பிட்டார்.

அறை இருட்டாக இருந்தது. முதலில் எதுவுமே அவனுக்குப் புலப்படவில்லை. அது பூஜை அறை. சிறுசிறு மின் விளக்குகளுக்குப் பின்னால் நிறைய சாமி படங்கள் மாட்டி வைக்கப்பட்டிருந்தன. எல்லாப் படங்களும் அலங்காரமான ஒரு மர ஸ்டாண்டில் பொருத்தப்பட்டிருந்தன.

கீழே தனியாக ஒரு படம் மாட்டியிருந்தது. புதிதாக அதற்கு மாலை அணிவித்திருந்தார்கள். சிறிய மின்விளக்குதான் என்றாலும் உருவத்தைத் துல்லியமாகவே அது காட்டியது. வயதான ஒருவரின் ஓவியம். அந்த மனிதரை அவன் பார்த்திருக்கிறான். இந்த முகம் யாருடையது? அருகில் நின்றுகொண்டிருந்தவரை அவன் திரும்பிப் பார்த்தான்.

"இது...?"

"தெரியலையா?"

மீண்டும் அந்த ஓவியத்தை அவன் பார்த்தான்.

அவன் அய்யாதான் அது. எப்படி மறக்க முடியும்?

அதிர்ச்சியுடன் அதையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அவருடைய வாழ்நாளில் புகைப்படமே எடுத்துக் கொள்ளவில்லை என்று அவன் அம்மா சொல்லியிருக்கிறாள். ஆனால் இங்கே அவருடைய ஓவியம் ஒன்று இருக்கிறது.

"ஆண்டாளம்மா சாமி கும்பிடுங்க" என்று அவர் தன் மகளிடம் சொன்னார்.

அவள் கைகளைக் கூப்பி கும்பிட்டாள்.

"அப்பு வா போகலாம்’‘ என்று அவனை வெளியே கூட்டிக்கொண்டு வந்தார்.

இன்னொரு அறைக்குள் நுழைந்ததும் அந்த மணம் திரும்பவும் அவன் நாசியில் உக்கிரமாகத் தாக்கியது. அது என்ன என்பதை அவன் புரிந்துகொண்டான். சிறுவயதில் அவன் அய்யாவின் பிணத்தருகே நின்றிருந்தபோது நுகர்ந்த மணம்தான் அது.

அவர் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலுக்குப் பின்னால் சுவரில் சதுரமாக மஞ்சள் பூசி சாம்பல்பட்டை இட்டு பொட்டு வைத்திருந்தார்கள். அருகே ஒரு குத்துவிளக்கு எரிந்தபடி இருந்தது. அறையின் ஒரு மூலையில் இருந்த நாற்காலியைப் பார்த்துத் திகைத்து நின்றான். கறுத்த நிறத்தில் அது கம்பீரமாக உட்கார்ந்திருந்தது. அவன் அய்யா செய்து முடிக்காமல் விட்டுப்போன நாற்காலியைப் போல ஒன்று. அச்சு அசல் அதுவேதான்.

அவர் சொன்னார், "போன ஞாயிறு எட்டில்தான் அப்பா உயிர்விட்டார்."

இருபது வருஷங்களாகிவிட்டன அவர் இறந்து என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். அவன்தான் அவருடைய சிதைக்கு கொள்ளி வைத்தவன். இப்போதுதான் அவர் இறந்தார் என்றால்?

அவனுடைய அம்மாவைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னால் அப்பாவுக்கு வேறு சில பெண்களுடன் உறவு இருந்ததாக அவனுக்கு சொல்லியிருக்கிறார்களே தவிர இப்படித் தனியாக ஒரு குடும்பம் உண்டென்று யாரும் சொன்னதில்லை. அதற்கான தடயங்களும் இதுநாள் வரை அவனுக்குப் தென்பட்டதுமில்லை.

‘ஒரு மனிதனின் வாழ்க்கை இரண்டாகக் கிளைத்து இரண்டு மரணப்பூக்களைப் பூப்பது சாத்தியம்தானா?" என்று அவன் தன்னையே கேட்டுக்கொண்டான்.

‘என்னுடைய அப்பா முன்பே இறந்து விட்டார். இது என்னுடைய அப்பா இல்லை. இது கற்பனையான ஓவியம் மட்டுமே. அப்படி ஒருவரை நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய கற்பனையால் என்னைக் குழப்ப வேண்டாம். நான் போய்விடுகிறேன். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்’ என்று அவன் அவரிடம் சொல்ல நினைத்தான். ஆனால் சொல்ல முடியவில்லை. அவருடைய உறவைத் துண்டித்துக் கொள்வதற்கான துணிச்சல் அவனுக்கு வரவில்லை.

‘கணவன் மனைவி இருவரும் நம் வரவால் எவ்வளவு மகிழ்ந்து போயிருக்கிறார்கள், எதற்காக நம்முடன் உறவு கொண்டாட வேண்டும்? நம்மால் ஆகக்கூடியது என்ன இருக்கிறது இவர்களுக்கு?’

இவர்களுக்கு எல்லாமே தெரியும். ஒரு கனவைப் புதிர்போல அவனுக்கு முன் பரிமாறிவிட்டு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை ஏன் இத்தனை புதிராக இருக்கிறது? எனக்குத் தெரியாமல் இன்னும் எத்தனை புதிர்களை அது தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது?

மரப்படிகளின் வழியே அவனை மாடிக்கு அழைத்துக்கொண்டு போனார். அங்கு அவருக்குத் தனி அறை ஒன்று இருந்தது. அது அவருடைய அலுவலக அறை. துணி வியாபாரம் செய்வதாக அவனிடம் சொன்னார்.

எதிரெதிரான இரண்டு ஷோபா நாற்காலிகளில் அவர்கள் உட்கார்ந்தார்கள்.

"இந்த ஓவியத்தை யார் வரைந்தது?" என்று முத்துசாமி கேட்டான். "அய்யாவோட படம் ஒன்னுகூட எங்ககிட்ட இல்லை. போட்டோவே எடுத்துக்கலைன்னு அம்மா சொன்னாங்க."

"நான் கிராமத்தில் இருந்தபோது ஒரு நாடோடி ஓவியன் வரைந்து கொடுத்தான்" என்றார் அவர்.

அவருடைய கண்கள் கலங்கியிருந்தன. இருவரும் பேசாமல் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தார்கள்.

அவர் சொன்னார், "இதெல்லாம் கனவுபோலத்தான் இருக்குது. இந்த ஊருக்கு நீ வந்தபோது சந்தோஷமா இருந்தது. அதே சமயத்தில் நான் கண்டுகிட்டிருந்த கனவ எங்க கலச்சிடப் போறியோன்னு பயமாவும் இருந்தது."

இரவு உணவை அவர்களுடனேயே சாப்பிட்டான்.

புறப்படும் முன்பு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கேட்டார், "அப்பு இங்கேயே தங்கிக்கொள்ளேன். இதுவும் உன்னுடைய வீடுதான்"

‘இது எப்படி என்னுடைய வீடாக முடியும்?’

பிறகு வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு அவன் கிளம்பி வந்துவிட்டான்.

வாழ்க்கையின் பெரிய ரகசியமொன்று பல வருஷங்கள் புதைந்திருந்து இன்று வெளிப்பட்டிருக்கிறது. அதுவாக வந்து அவனுக்கு முன்னால் பெரிய ஓவியமாக விரிந்திருக்கிறது. அந்தரங்கமான நிழல்களாக, பரவசப்படுத்தக்கூடிய ஒளியாக, பூடகமான தூரிகைத் தீற்றல்களாக, புதிரான வண்ணச் சேர்க்கைகளுடன்... அது கனவின் மொழி போல, தர்க்கம், ஒழுங்குக்கு அப்பாற்பட்டது.

இனி இந்த ஓவியத்தை என்ன செய்வது?

அவன் அய்யாவுக்கு இன்னொரு குடும்பம் இருந்ததும், அங்கு இன்னொரு கிளையாக அவர் வாழ்ந்து மடிந்ததும் தெரிந்தால் அவன் அம்மா என்ன சொல்வாள், எப்படி இதை எதிர்கொள்வாள்?

இரவு வெகுநேரம் அவன் தூங்கவில்லை. மொட்டை மாடியில் கைப்பிடிச் சுவர்மேல் உட்கார்ந்து இரவு நகரத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய சகோதரனை நினைத்த போதே அவன் மனம் கனத்தது. தன்னை மன்னித்து விடும்படி அவனிடம் கேட்கவேண்டும் போல ஓர் உணர்வு எழுந்தது.

ஜீ.முருகன்
Share: 




© Copyright 2020 Tamilonline