Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
அவனும், இவனும்
- ஷைலஜா|மே 2010|
Share:
ஸ்ரீதரனுக்கு வேலை போய்விட்டது. நிதி நெருக்கடியால் பெரிய பெரிய அமெரிக்க நிறுவனங்களில் ஆட்குறைப்பு தீவிரமானதில் தாயகம் திரும்ப வேண்டிய பலரில் ஸ்ரீதரனும் ஒருவனானான்.

பாஸ்டனில் உள்ள ஒரு பிரபல நிதி நிறுவனத்தில் முதலீட்டு ஆலோசகராய், இருபத்தி ஆறு வயதில், இந்திய ரூபாய் அளவில் மாதம் மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவனுக்கு இந்த அதிர்ச்சியான செய்தியை திருச்சியில் காவேரிக்கரையை ஒட்டிய கிராமத்தில் வசிக்கும் தன் பெற்றோரிடம் எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை. முழுக் குடும்பமும் தன்னையே நம்பி இருப்பதை ஸ்ரீதரன் உணர்ந்திருந்தபடியால் வேலை போன விஷயத்தை உடனே ஊருக்குத் தெரிவிக்கத் தயங்கினான். இரண்டு வருஷமாய் சம்பாதித்ததெல்லாம் அக்காவின் திருமண செலவுக்கும் அம்மாவின் வைத்தியச் செலவிற்குமே பெரும்பாலும் போய்விட்டதால் சேமிப்பு ஒன்றும் அதிகமாக இல்லாத நிலையில் ஊருக்குப் போவதைப் பற்றி நினைக்கவே பயந்தான்.

ஓரிரு மாதங்கள் தங்கி நிலைமை சீராகும்வரை பொறுத்துப் பார்க்கலாம் என்று தோன்றிய நேரத்தில் அன்று அவன் அண்ணா, கிராமத்தில் பள்ளி வாத்தியாராக இருப்பவர், போனில் அந்தத் துயரச் செய்தியைத் தெரிவித்தார்.

ஸ்ரீதரனுக்கு நெஞ்சை அடைப்பது போல இருந்தது. வலியும், வேதனையும் அனுபவிக்கிறபோது தான் அதன் தாக்கத்தை உணர முடியும் என்கிற உண்மை புரிந்தது.
"ஸ்ரீதரா! அம்மாதான் பைபாஸ் சர்ஜரி நடந்து முடிந்ததும் இதயநோயில் அவஸ்தைப்பட்டுண்டு எப்போ நம்மை விட்டு போயிடப் போறாளோன்னு பயந்துண்டு இருந்தோம். ஆனா... ஆனா... இன்னிக்கு காத்தாலை திடீர்னு நம்ம அப்... அப்பா ஹார்ட் அட்டாக்குல போயிட்டார்டா..." கதறினார்.

"அய்யோ... அண்ணா, நெஜமாவா? அப்பாவா செத்துப் போயிட்டார்? டாக்டர் வந்து பார்த்து அதை நிச்சயமா சொன்னாரா? டவுனுக்குக் கூட்டிண்டு போனீங்களாண்ணா?" உரத்த குரலில் அதிர்ச்சியுடன் கேட்டான் ஸ்ரீதரன்.

"எல்லாம் பண்ணினோம் ஸ்ரீதரா, பேச அவகாசமில்லை. ஒடனே கௌம்பு. பாடிய எப்படியாவது காவந்து பண்றோம். துளசிதளத்துல உடம்பைக் கெடத்தி வச்சிட்டோம். வாத்யாருக்கு சொல்லி ஆகவேண்டியத நான் பாக்கறேன். மன்னிதான் அம்மாவை சமாதானம் பண்ணிண்டு இருக்கா. நீ ஒடனே பொறப்பட்டு வா... காத்துண்டு இருக்கோம்."

ஸ்ரீதரனுக்கு நெஞ்சை அடைப்பது போல இருந்தது. வலியும், வேதனையும் அனுபவிக்கிறபோது தான் அதன் தாக்கத்தை உணர முடியும் என்கிற உண்மை புரிந்தது. அப்பாவின் இழப்பின் முன்பு தனக்கு வேலை பறிபோனது ஒன்றும் பெரிய இழப்பாகத் தோன்றவில்லை.

வெடித்த அழுகையை அடக்கிக்கொண்டு ஒரு வழியாய் அந்நிய மண்ணிற்கு விடை கொடுத்துவிட்டு அவசர அவசரமாய் புறப்படத் தீர்மானித்தான். எத்தனை பிரயத்தனம் செய்தும் உடனே டிக்கட் கிடைத்து இந்தியாவிற்குப் புறப்படுவது அவ்வளவு எளிதாக இல்லை. கடைசிப்பயணம் என்பதால் அத்தனை மனவேதனையிலும் அண்ணாவின் நான்கு வயது பெண் வர்ஷாவிற்கு அவள் போனில் ஆசையுடன் கேட்டாள் என்று கலர் க்ரேயான் பென்சில் பாக்கெட்டுகளை வாங்கிப் போட்டுக்கொண்டான்.

"பரவாயில்லைடா... நான் இங்க ஆக வேண்டியதை முடிச்சிட்றேன். பாவம், உனக்குத்தான் அப்பாவோட முகமுழி கெடைக்காம போறது, ஸ்ரீதரா..." ஸ்ரீதரன், தண் அண்ணாவின் பேச்சில் மேலும் மனம் உடைந்து போனான்.

மூன்றாம் நாள் விடியற்காலை ஊர் வந்தபோது வாசலில் ஒரு மூலையில் கல் ஊன்றி கீற்றுத் தடுப்பு போட்டிருந்ததைக் கவனித்தான். மன்னியின் கை வண்ணத்தில் மயிலும். அன்னமும் வலம்வரும் கோலவாசல், வெறிச்சென்றிருந்தது.

திண்ணை மீது அனாதையாய் கிடந்தது நாளிதழ். அப்பா இருந்திருந்தால் அது இந்த நேரம் அவர் கையில் இருந்திருக்கும். திண்ணையில் காலை மடித்துச் சம்மணமிட்டு அமர்ந்து அப்பா பேப்பர் படிக்கும் அழகே தனி. 'சடசட' என்று தாள்களைப் புரட்டாமல், பிறந்த குழந்தையைத் தூக்குகிற மாதிரி நேர்த்தியாய் அரவணைத்துக் கையிலெடுத்துப் படிப்பார். படித்தபின் பட்டுப்புடவையைப் பாதுகாப்பது போல அதனைச் சீராய் மடித்து அலமாரியில் வைப்பார். அப்பாவின் காரியங்கள் எல்லாமே நன்றாக இருக்கும்.

அப்பாவின் நினைவு அதிகமாய் ஆட்கொள்ளுவதை ஸ்ரீதரன் உணர்ந்தான். எதையுமே இழந்தபிறகு அதன் மதிப்பு இரண்டாகிவிடும் என்று ஓர் அறிஞர் சொல்லியது பொருளுக்கு மட்டுமல்ல என்பது நிதர்சன உண்மை.

"ஹய், ஸ்ரீதர் சித்தப்பா வந்தாச்சு" வர்ஷா வழக்கம் போலக் கூவிக்கொண்டு வந்தாள். "சித்தப்பா கலர் க்ரேயான் வாங்கிண்டு வந்தியா?" விரல்களைப் பிடித்து ஆசையாய் கேட்டாள்.

"ஸ்ரீ... த... ரா! அப்பா போயிட்டார்டா ஆ... ஆ... ஆ..." அக்கா அலறிக் கொண்டு ஓடிவந்து கட்டிக் கொள்ளவும் ஸ்ரீதரன் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை அடுத்த அரைமணி வரை கொட்டித் தீர்த்தான்.

ஆயிற்று, அப்பா செத்துப் போய் பத்து நாள்கள் ஓடிவிட்டன.

சாவுதான் எப்பேர்ப்பட்ட விஷயம்? இத்தனை காலமும் அருகிலிருந்தவரை இனி பார்க்க முடியாது. அவர் பேச்சைக் கேட்க முடியாது. இனி அந்த இடத்தில் காற்றின் ஆக்கிரமிப்புதான் என்பதைச் சாதாரண விஷயமாய் நினைக்க முடிகிறதா என்ன?

ஸ்ரீதரன் காற்று வாக்கில்கூடத் தனக்கு வேலை போய்விட்ட சேதியை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. அம்மா, அண்ணா, அக்கா என்று எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் தனது அமெரிக்க டாலரின் தேவை இருப்பதை அவன் வீட்டுச் சூழ்நிலையைப் பார்த்துப் புரிந்து கொண்டான்.
அக்கா செஞ்சுலட்சுமி அவனைத் தனியே அழைத்து, "டேய் ஸ்ரீதரா? எங்காத்துக்காரர் கரூர்ல ஒரு ஜவுளிக்கடை வைக்க பிரியப்படறார். முதல் போடப் பணத்துக்கு உன்னைத்தான் கேக்கப் போறாராம்" என்று சொன்னாள்.

மன்னி வத்சலா தன் பங்குக்கு, "மச்சினர் சம்பளத்துல டவுன்ல ஒரு ஃப்ளாட் வாங்கலாம்னு யோசிக்கறோம். வர்ஷா பெரியவளானா நம்மள மாதிரி கிராமத்துல இருப்பாளா, அதுக்குத்தான் இப்பவே வாங்கிப் போட்டு வாடகைக்கு விட்டுடலாம்" என்றபோது ஸ்ரீதரனின் அம்மா முணுமுணுத்தாள்.

"ஏண்டிம்மா அவனே லீவு போட்டு அதுல எத்தனை நாள் சம்பளம் கட் ஆகப்போறதோ, அரக்கப்பறக்க ஓடி வந்திருக்கான். அப்பாவோட முகமுழி கிடைக்கலேன்னு வருத்தமா இருக்கறவன் கிட்ட ஆளாளுக்கு உங்க பிரச்சினைகளைச் சொல்லணுமாக்கும்? சித்த நிம்மதியாக இருக்க விடுங்கோளேன்."

"அம்மாவிடம் மட்டும் சொல்லிடலாமா, எனக்கு வேலை போயிட்டுதம்மா'ன்னு?" நினைத்தபோதே ஸ்ரீதரனுக்குப் பகீரென்றது. ஏற்கனவே துக்கத்தைத் தாங்க முடியாமல் நடைப்பிணமாய் உலவுகிறவளின் முன்பு இந்த இடியைப் போய் இறக்கினால் தாங்குவாளா?

"எப்படி இருக்க ஸ்ரீதரா? நாங்கள்ளாம் இப்படி கிராமத்துலேயே பள்ளிக்கூட வாத்தியார், கோயில் தர்மகர்த்தான்னு உழண்டுண்டு இருக்கிறச்சே நீயாவது நன்னா படிச்சி அமெரிக்கா போய் கொள்ளை கொள்ளையாய் சம்பாதிக்கறே, சந்தோஷம் மாமி... ஸ்ரீதரனுக்கு இந்த வருசம் பொண்ணு பாத்துடுங்கோ. ஒரு வருஷத்துக்குள்ள கல்யாணம் பண்ணா செத்துப் போனவா ஆசீர்வாதம் கெடைக்குமாம்! மூஞ்சில கல்யாணக்களை அம்பிக்கு வந்துடுத்து" என்று துக்கம் கேட்க வந்த இடத்தில் விவஸ்தை இல்லாமல் பேசிப் போனார் தர்மகர்த்தா சாம்பசிவம்.

பத்துக்காரியங்கள் முடிந்து பதினோராம் நாள், "என்னப்பா ஆரம்பிச்சிடலாமா?" காரியம் பண்ணிவைக்கும் வாத்தியார், அண்ணாவிடம் கேட்டார்.

ஸ்ரீதரனின் அண்ணனின் பெயர் 'அண்ணன் பெருமாள்' என்பதால் அவன் எல்லாருக்கும் 'அண்ணா'தான்!

"ஆரம்பிக்கலாம்... எல்லாம் தயாரா இருக்கு" என்றார் அண்ணா.

"பிள்ளைகள் ரெண்டு பேரும் இப்படி ஒக்காருங்கோ" என மணைப் பலகைகளைக் காட்டினார்.

இருவரும் அமர்ந்தனர்.

ஒரு பொணம் ஊர்ல எப்படா விழும்னு காத்துண்டிருக்கிற ஈன வாழ்க்கை. ஆனாலும் இதுவும் ஒரு வேலை தானேன்னு, மான அவமானம்னு பாக்காம சமீப காலமா செஞ்சிண்டு வரேன்.
அண்ணாவுக்கு உட்காரும் போதே பஞ்சகச்சம் நழுவ ஆரம்பித்தது. முப்பத்தி அஞ்சு வயசுக்குத் தொப்பை போட்டதின் பலன் உட்காரும் போதே மூச்சிறைத்தது.

வாத்தியார் தர்ப்பைப் புல்லைப் பிய்த்து ஹோம குண்டத்தைச் சுற்றி வைத்தார். பிறகு இருவரிடமும் இரண்டிரண்டு புல்லைக் கொடுத்து, "காலுக்கடியில் போட்டுக்கோங்கோ..." என்றார்.

வாழை இலைக் கிழிசலில் தொன்னை செய்தபடியே "இன்னிக்கு பிரேதமா அலையற உங்கப்பாவோட ஆவிக்கு அன்னம் படைச்சி, ஹோமம் பண்ணி பிதுர் ரூபத்துக்கு மாத்தறது. நாளைக்கு அந்த பிதுர் ரூபத்தைத் தாத்தா கொள்ளுத்தாத்தா பிதுர்க்களோட சேர்க்கணும்... இன்னிக்கு உங்கப்பாவோட பிரேதமா நினைச்சி ஒரு பிராம்மணனுக்கு சாதம் போடணும். இதுதான் சவுண்டிங்கறது" என்று விளக்கியபடியே தூண் ஓரம் நின்ற ஸ்ரீதரனின் ஒன்றுவிட்ட பெரியப்பாவிடம், "என்ன ஓய் 'அவன்' வந்தாச்சா?" என்று கேட்டார்.

"பேச ஆரம்பிச்சேளா அப்பவே 'அவன்' வந்தாச்சு" பெரியப்பாவும் 'அவன்' என்பதை அழுத்திச் சொல்லவும் ஸ்ரீதரன் வியப்பாய் நிமிர்ந்து பார்த்தான்.

"சரி சரி... 'அவன்' குளிச்சானா?" வாத்தியார் மறுபடி கேட்டார்.

"கெணத்தடில குளிச்சிண்ட்ருக்கான் சுவாமி. பார்த்துட்டுதான் இவ்விடம் வந்தேன்."

"குளிச்சிட்டு வரட்டும்... எல்லாம் நம் கண் முன்னாடி நடந்தாதான் திருப்தி. இல்லேன்னா ஆத்துல குளிச்சிட்டு வந்தேன்னு பொய் சொல்லிடறா."

"சித்தப்பா... சித்தப்பா.. நீ வாங்கிண்டு வந்த க்ரேயான் பென்சிலை சம்பத் கேக்றான்." வர்ஷா கூவிக் கொண்டு கூடத்திற்கு வந்தாள்.

"யாரு சம்பத்து?" ஸ்ரீதரன் கேட்கவும், பெரியப்பா, "என் பேரன்தான். புலியூர்லேந்து புறப்படச்சே ஒட்டிண்டு வந்துட்டான்" என்றார் பெருமையாக.

"சம்பத்துக்கும் தரேனே!" என்று எழுந்தான் ஸ்ரீதரன்.

"விழுப்பு படக்கூடாது பையா!" எச்சரித்தார் வாத்தியார்.

"சரி மாமா... மேஜை மேல இருக்கு. தந்துட்டு வரேன்" என்று சொல்லி எழுந்தவன் கூடத்திலிருந்தே பார்வையைப் புழக்கடைக்குத் தாவவிட்டான்.

அங்கே அவன் வயதை ஒத்த இளைஞன் ஒருவன் வெறும் துண்டை மட்டுமே கட்டிக் கொண்டு ஈரவேஷ்டியை ஒரு கையால் தூக்கிப் பிடித்தபடி நின்றிருந்தான்.

க்ரேயான் பென்சிலை சம்பத்திடம் கொடுத்துவிட்டுக் கை அலம்புகிற சாக்கில் கொல்லைப்புறம் போனவன் மிகவும் இளம்பருவத்தில் இந்த வேலைக்கு வரநேர்ந்தவனை அருகில் ஏறிட்டான்.

"நீங்கதான் அமெரிக்கா பிள்ளையா?" அவன் ஆவலுடன் கேட்டான். மெலிந்த தேகத்தில் முழிகள் மட்டும் பெரிசாய் காட்சி அளித்தன.

ஸ்ரீதரன் மென்மையாய் தலையாட்டினான்.

"வாத்தியார் சொல்லியிருந்தார். அதான் கேட்டேன்... நானும் ஒரு பி.ஏ. பட்டதாரிதான். ஆனா வேலையே கெடைக்கல இன்னும்... ரொம்பக் கஷ்டப்பட்டு அம்மா நாலு ஆத்துல தளிகை பண்ணி, அப்பளாம் இட்டு என்னைப் படிக்கவச்சா. ஒரு வருஷம் ஆறது. வேலையே கெடைக்கல, ஸார். அதான் இந்த 'தொழி'லுக்கு வந்துட்டேன். ஏன்னா அம்மா படுக்கைல நோயாளியா விழுந்துட்டா. ஆத்துல ரொம்ப கஷ்ட ஜீவனம்."

'அவன்' சோகமாய் சொல்லி முடிக்கவும் 'த்சுத்சு' என்றான் ஸ்ரீதரன்.

"இதுலயும் ஒண்ணும் ரொம்ப வருமானம் இல்ல.. வாத்தியார் எடுத்துண்டது போக மீதி ஏதோ கிடைக்கும். ஒரு பொணம் ஊர்ல எப்படா விழும்னு காத்துண்டிருக்கிற ஈன வாழ்க்கை. ஆனாலும் இதுவும் ஒரு வேலை தானேன்னு, மான அவமானம்னு பாக்காம சமீப காலமா செஞ்சிண்டு வரேன். ஸார், உங்களுக்கு யாரையாவது தெரியுமா? எனக்கு. ஒரு வேலை வாங்கித்தர முடியுமா? அமெரிக்கா போகணும்னு ஆசை இருந்தது. இனிமே அதெல்லாம் நடக்காது. நீங்க கொஞ்சம் ஹெல்ப் செஞ்சா ரொம்ப நன்றியோட இருப்பேன்."

'அவன்' கை குவிக்கவும் கூடத்திலிருந்து, 'அவ'னை வரச் சொல்லுங்கோ" என்று வாத்தியார் கத்தினார்.

"சித்தப்பா! கலர் க்ரேயான் பென்சில்ல படம் வரைஞ்சாலும், அந்தக் காமிரா உள் இருட்டுல எல்லாம் கறுப்பா தெரியறதே?" என்று சிணுங்கியபடி கையில் நோட்டோடு வந்தாள் வர்ஷா.

"வெளிச்சத்துல தாம்மா வர்ணமெல்லாம் தெரியவரும். அதுவரை எல்லாம் இருட்டுல ஒரே நிறமாத்தான் இருக்கும் வர்ஷா" சொல்லியபடி "அவ"னைத் தொடர்ந்தான் "இவ"னும்.

*****


(கலைமகள் 'ரஸவாதி நினைவுச் சிறுகதைப் போட்டி'யில் 2008ம் ஆண்டு பரிசு பெற்ற சிறுகதை)

ஷைலஜா
Share: 




© Copyright 2020 Tamilonline