Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
புது யுகம் பிறக்கிறது
- மு. தளையசிங்கம்|மார்ச் 2008||(1 Comment)
Share:
Click Here Enlargeகெளரி இன்னும் கண்ணைத் திறக்கவில்லை. ஆஸ்பத்திரிக் கட்டிலில் அசையாமல் கிடக்கிறாள். பக்கத்தில் சுற்றிப் போர்த்த அந்தச் சிறு உருவம் கிடக்கிது. அது உருவமா?

உள்ளே எலும்பென்பது இருக்குமா? அந்தக் கண்கள்? அந்த வாய்? உயிர் இருக்கிறது. ஆனால், எத்தனை நாளைக்கு?

கனகரத்தினம் கல்லாய் நிற்கிறான். கெளரி இனி கண்ணைத் திறக்கும்போது அவன் என்னத்தைச் சொல்வது? எப்படிச் சொல்வது?

கனகரத்தினத்தின் நெஞ்சு கனக்கிறது. நேற்று, முந்தாநாள் - ஏன், இரண்டு மாதங் களுக்கு முன், கெளரி அந்தக் கதையை ஆரம்பித்தது முதல் - அவன் என்னென்ன வெல்லாம் சொன்னான்!

கனகரத்தினத்தால் தாங்க முடியவில்லை. வேதனையோடு நினைவுகள் சேர்ந்து நெஞ்சை அமுக்கின்றன.

இரண்டு மாதங்களுக்கு முன்பு...

'அரோகரா' என்று கேலியாகக் கத்திக் கொண்டு சாமி அறைக்குள் எட்டிப் பார்த்தான் கனகரத்தினம். கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.

ஊதுபத்தியைப் பற்றவைத்து சாமிப் படத்துக்கு முன்னால் கும்பிட்டுக் கொண்டு நின்ற கெளரி ஒருகணம் திரும்பினாள். முகத்தில், மேலே ஒரு மெல்லிய புன்னகை நின்றாலும், அடியிலிருந்த சினம் தெரிய வில்லை. கனகரத்தினத்தின் கையிலிருந்து அறைக்குள் நுழைந்த சிகரெட் புகையைப் பார்த்த பின், அந்த மெல்லிய புன்னகையும் மறைந்துவிட்டது. திரும்பவும் தலையைத் திருப்பிக்கொண்டு கும்பிடத் தொடங்கினாள்.

கனகரத்தினம் கவலைப்படவில்லை. முன் விராந்தையில் இருந்த சோபாவில் போய் கெளரி வரும்வரையும் காத்திருந்தான். அவனுக்கு அதெல்லாம் பழக்கம். கெளரியின் உரிமை அது. அவனுக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அவளுக்கு இருக்கிறது. அதில் அவன் தலையிடக்கூடாது. அது அவளின் தொழுகைச் சுதந்திரம். பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்றுதான் இல்லா விட்டாலும், ஒரு படித்த மனைவிக்குக் கடைசியில் அந்தச் சுதந்திரமாவது இருக்க வேண்டும். கெளரி அடிக்கடி எழுப்பும் வாதம் அது. அதில் அவள் உண்மையான கண்டிப்புங்கூட. இப்போ கொஞ்சம் முந்தி கனகரத்தினத்தையும் அவனது சிகரட்டையும் நோக்கிவந்த அந்தச் சுண்டிச்சிவந்த பார்வை அதற்கு ஓர் உதாரணம். சாமி அறைக்குள் போய் விட்டால், கெளரி வேறு ஓர் அவதாரம். அவர்கள் வீட்டில் அந்த அறை மட்டும் ஒரு தனியான கலாசார டிப்பார்ட்மென்ட். கெளரிதான் அதற்கு அதிகாரி. கனக ரத்தினத்தின் கலாசாரம் அதற்கு முற்றிலும் மாறானது. புரட்சிகரமானது. வீட்டில் எங்குமே ஆட்சி செய்தது. ஆனால், சாமி அறைவாசலுக்கு அப்பால் மட்டும் அது போவதில்லை. அப்பால் கெளரியின் ஆட்சி. புரட்சி பக்திக்குப் பணியவேண்டும். பணிய விரும்பாவிட்டால், அதில் தலையிடாமலே இருந்து விடலாம். அது பயமுறுத்தல் அல்ல; ஒப்பந்தம், மரியாதை. கனகரத்தினத்துக்கு அதெல்லாம் பழகிப்போய்விட்டது. எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், தொழுகைச் சுதந்திரம் என்பதில் எல்லாம் நம்பிக்கை வைக்கும் பேர்வழியல்ல அவன்.

சாமி அறைக்குள் போய்நின்று அந்தப் பழைய கலாசாரத்தோடு, அந்தப் பழைய பரம்பரைத் தொடரோடு கௌரி தொடர்பேற்படுத்திக் கொள்கிறாளா? ஐக்கியப்பட்டு விடுகிறாளா?
அவனுடைய கட்சி வேறு. ஊதுபத்தி சாம்பிராணிபோட்டு மணித்தியாலக் கணக்காக நின்று ஏதாவது ஒரு படத்துக்கு முன்னால் முணுமுணுத்துத்தான் ஆக வேண்டுமென்றால், முன் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த மார்க்ஸ், லெனின் படங் களை அவன் சிபாரிசு செய்யத் தயார். ஆனால், கெளரியின் ரசனை வேறு ரகம். கோவணத்தோடு நிற்கும் முருகன் தரவழி களைத் தவிர மற்றவர்களுக்கு அவள் உலகத்தில் அனுமதி இல்லை. அவள் வேறுயுகப் பேர்வழி - எப்போதோ பிறந்து, காலங்காலமாய் வளர்ந்து, முதிர்ந்து, இப்போது செத்துக் கொண்டிருக்கும் பழைய யுகம். பிறந்து கொண்டிருக்கும் இப்புதிய யுகத்தைச் சேராதவள் அவள். கெளரியைப் பற்றிய கனகரத்தினத்தின் அபிப்பிராயம் அது. என்றாலும் அவளுடைய விசயங்களில் அவன் தலையிடுவதில்லை. ஏதோ அவள் பட்டபாடு என்ற எண்ணம். அவனுடைய மாபெரும் இலட்சியமான 'உலகப் புரட்சி'க்கு அவளின் அந்தச் சின்னஞ் சிறிய நான்கு சுவர் அறையிலிருந்து ஆபத்து வரப்போவ தில்லை. எனவே, அறைக்கு வெளியே நின்று கிண்டல் பண்ணுவதுகூட அனாவசியம். ஆனால், அப்படிச் செய்வதில்தான் அவனுக்கு ஓர் ஆனந்தம்.

சிலநேரம் சென்று வெளியேவந்த கெளரியின் முகத்தில் பழைய சினம் இருக்கவில்லை. ''உங்களுக்கு எந்த நேரமும் பகிடி!'' என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே வந்தாள். முகத்தில் நிம்மதி நிறைந்த சாந்தி நின்றது. நெற்றியில் விபூதிப் பொட்டு ஒளிவிட்டது - கூடவே, தாய்மையின் பூரிப்பு.

கெளரியின் முகத்தில் அப்படி ஒரு களை சதா ஒளியிடத்தான் செய்யும். ஆனால், முக்கியமாக அவள் சாமி அறையிலிருந்து வெளிவரும்போது அந்தக் களையின் ஒளி வட்டங்களைக்கூடக் கண்டுவிடலாம் என்ற ஒரு பிரமை ஏற்படும். கனக ரத்தினத்துக்கு அந்தத் தோற்றம் கெளரியின் அம்மாவை நினைவூட்டும். அவன் சின்னவனாய் இருக்கும்போதே இறந்து போன அவனின் தாயாரை நினைவூட்டும். அம்மாவின் அம்மாவை, தாயாரின் தாயாரை என்று, அதற்குப் பின் ஒரு தொடர் நினைவுகள் ஓடும். எல்லோர் முகங்களிலும் அதேவித அமைதி; தெய்வீகக்களை; ஒளிவிடும் விபூதிப் பூச்சு. 'அதுதான் கிழக்குப் பண்பாடு' என்று ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் சொல்லும். சாமி அறைக்குள் போய்நின்று அந்தப் பழைய கலாசாரத்தோடு, அந்தப் பழைய பரம்பரைத் தொடரோடு கெளரி தொடர் பேற்படுத்திக் கொள்கிறாளா? ஐக்கியப் பட்டு விடுகிறாளா? ஆச்சரியத்தோடு கனகரத்தினம் தன்னையே அப்படிக் கேட்டுக்கொள்வான்.

அந்தக் கேள்விகளுக்கு அவனால் விடை கண்டுகொள்ள முடியாவிட்டாலும், கெளரி யின் முகத்தில் நிற்கும் அந்த அமைதி நிறைந்த களைக்கு, மனத்துக்குள் அவனால் மரியாதை கொடுக்காமல் இருக்க முடியாது. அவனின் பழக்க வழக்கங்கள் பழைய பரம்பரைப் பழக்க வழக்கங்களாய் இருக்கலாம். ஆனால், அவற்றில் உள்ள அமைதியும் பொறுமையும் போற்றப்படக் கூடியவைதான். அவனது புரட்சி எண்ணங் களில், அவன் காணும் புதுயுகப் பெண் களில், அவற்றின் வெறுமையினால் ஏற்படும் குறையை அப்போதுதான் அவனால் உணரமுடியும். ஆனால், அதற்காக கெளரி யிடம் அதிக அன்பைக் காட்டுவதைத் தவிர, தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள அவன் விரும்புவதில்லை. கட்சியும் கொள்கையும் அறிவை அடிப்படையாகக் கொண்டவையே ஒழிய உணர்ச்சியை அடிப் படையாகக் கொண்டவையல்ல என்ற பழக்கமான அவனின் சுலோகத்தை, அதற்குக் காரணமாகவும் காட்டிவிடுவான்.

'இண்டைக்கென்ன டைம்டேபிளில் ஒரு மாற்றம்? பகல் பத்து மணிக்கும் ஒரு கும்பிடு! ஞாயிற்றுக்கிழமை யெண்டும் பாராமல்?' என்று கெளரியைப் பார்த்து அவன் கேட்டபோது, பகிடியோடு ஓர் இனந் தெரியாத வாஞ்சையும் சேர்ந்து நின்றது.

'உங்களுக்கென்ன ஊர் சுற்றியிற்று வருவேங்க; விடிஞ்சாப் பொழுதுபட்டா, கட்சி கட்சியெண்டு பீத்துவேங்க, வேறென்ன தெரியும்?'

'அடேயப்பா, புதிசா ஏதோ தெரிஞ்சு வைச்சிருக்கிற போலிருக்கே!' என்று கனகரத்தினம் உதட்டைப் பிதுக்கி முகத்தைக் கோணலாக்கிச் சிரித்தான். 'என்ன அமெரிக்கன்காரங்கள் சந்திரனுக் குப் போயிற்றாங்களா? அல்லது நூறு மெகடன் அணுகுண்டை வெடிக்க வைச் சிற்றாங்களா? அல்லது, கென்னடிதான் ஒரு கொம்யூனிஸ்ட்டாக மாறியிற்றேரா?'

'போங்களப்பா, உங்களுக்கு எப்பவாவது நல்லதாக ஏதாவது கதைக்க முடிகிறதா?' என்றாள் கெளரி.

கனகரத்தினத்துக்குச் சாடையாகச் சுட்டது. எப்போதாவது அவன் நல்லதாக இல்லாத ஏதாவதைப்பற்றிக் கதைத்த துண்டா? நிரந்தரப் புரட்சி, தொழிலாளர் எழுச்சி, சோஷலிஸ அமைப்பு, முதலாளி வர்க்க ஒழிப்பு என்பவற்றைவிட நல்லவை வேறு இருக்கிறதா?

'சரி, நீ நல்லதாக ஏதாவது கதை பாப்பம்?' என்றான் கெளரியைப் பார்த்து வேண்டுமென்றே.

'சுசீலா இருக்கே...' என்று ஆரம்பித்தான் கெளரி.

ஆனால் கனகரத்தினம் விடவில்லை. 'எந்தச் சுசீலா?' என்று இடைமறித்தான்.

'என்ன, சுசீலாவைத் தெரியாதா?' என்று ஆச்சரியப்பட்டாள் கெளரி.

கனகரத்தினத்துக்குச் சிரிப்பாக வந்தது. கெளரி சொல்பவை அவ்வளவு முக்கிய மற்றவை என்று காட்டிக் கொள்வதில் அவனுக்கு ஒரு சந்தோசம். 'என்ன பெரிய சரித்திரப் பிரசித்தி பெற்றவர்களைப் பற்றி சொல்லியிற்று ஆச்சரியப்படுகிறவள் போல ஆச்சரியப்படுகிறாயே? சுசீலா எண்டால் என்ன, லெனின் ஸ்டாலின் எண்ட எண்ணமா?'

கெளரி அதைப் பொருட்படுத்தவில்லை. 'நம்மோடு வாசிற்றியில் இருந்துதே அது' என்றாள் அவள்.

கனகரத்தினம் கொஞ்சமும் அதைப்பற்றி நினைக்க விரும்பாதவன்போல், 'சரி அந்த சுசீலாவுக்கு என்னவாம்?' என்றான் அசிரத்தையாக.

'அதுக்குப் பிறந்த முதல் குழந்தை செத்துப் பிறந்திருக்காம்! முகம், கண், மூக்கெல்லாம் அசிங்கமாக இருந்திச்சாம்! என்னவோ வியாதியெண்டு இப்ப கோமளா சொல்லி யிற்றுப் போகுது.'

'அவளுக்கு வீ.டி.யாக்கும்!' என்றான் கனகரத்தினம்.

'யாருக்கு?'

'பிள்ளையைப் பெத்த சுசீலாவுக்கோ கிசீலாவுக்கோ?'

'சும்மா பைத்தியம் கதைக்காதீங்க' என்று பதைபதைத்துச் சொன்னாள் கெளரி. 'உங்கட நாக்கல்ல அழுகிப்போகும் அப்படி சொன்னா. அவள் எவ்வளவோ நல்லவள். அவள் ஒரு ரிலீஜியஸ் கேஸ்'

'அப்ப அவனின்ர புருஷனுக்காக்கும்!' என்றான். கனகரத்தினம் எந்தளவிலும் தன் காரணம் பிழைக்காதது போல்.

கெளரிக்கு கனகரத்தினம் இன்னும் கூடுதலான ஒரு பாவத்தைச் செய்து விட்டதுபோல் பட்டிருக்க வேண்டும். அவளின் பதைபதைப்பு இன்னும் கூடிற்று. 'மற்றவையெல்லாம் தன்னைப் போல எண்ட எண்ணமாக்கும். ஏனிப்படி வீணாப் பாவத்தைத் தேடிக் கொள்றேங்க? அது ஒரு சாமிப் போக்கு. சுசீலாவைவிட நல்லம். என்னுடைய பற்ச்மேற்ஸைப் பற்றி எனக்கு தெரியாதா? ஞமுண்டு வருசத்துக்கு முந்தி யிருந்த உங்களுக்கென்ன தெரியும்? நீங்க தான் முந்தி அங்கையும் இஞ்சேயும் திரிஞ் சிங்களெண்டு இப்பேயும் கதைக்கீனம்.'

'சரி அதுக்கு இப்பவேன் ஒரு 'சண்டே ஸ்பெசல்' கும்பிடு போட்டனி? சுசீலாவின்ர குழந்தை உயிர்த்தெழ வேண்டுமெண்டா?' கனகரத்தினம் கதையை மாற்றினான். தன்னைப் பற்றிய புதைபொருள் ஆராய்ச்சி தோல்வியைத்தான் கொண்டு வரும் என்று அவனுக்குத் தெரியும்

'இல்லை, உங்கட பிள்ளைதான் சுகமாகப் பிறக்க வேண்டுமெண்டு. மூண்டு வருஷத்துக்குப் பின், அருமை பெருமையாகக் கிடைச்சிருக்கெண்டு அக்கறை இருக்கா, உங்களுக்கு?'
கனகரத்தினம் 'ஓ' வென்று சிரித்தான். சிரித்துக் கொண்டே சொன்னான்: 'அதுக்குதானா நீ இப்ப ஸ்பெசல் கும்பிடு போட்டாய்? பைத்தியம்! நீ எரிக்கிற கற்புறமும் ஊதுபத்தியும் நம் நாட்டுப் பணத்தை ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் அனுப்புமேயொழிய, கடவுளட்ட ஒண்டும் சொல்லாது! இந்த விசயங்களுக்கெல்லாம் கடவுளட்டக் கேட்கிறதும், காசி கதிர்காமம் போறதுவும் இந்தக் காலத்தில் செய்யிற தில்லை; அது அந்தக் காலம். இது அணுக்குண்டுக்காலம் கெளரி, இது அணுக்குண்டுக் காலம்! விஞ்ஞானம் எதையும் செய்யும். கடவுளட்டக் கேட்கிறத விட்டிற்று டொக்டரட்டப் போகோணும்.'

'சரி சரி, உங்கட லெக்சர் போதும்' என்று சொல்லிக் கொண்டே, அவள் அதை முடிக்கு முன்பே கெளரி தன்பாட்டில் குசினிப்பக்கம் போய்விட்டாள். கனக ரத்தினம் தொடர்ந்து சிரித்தான்; அது ஒரு வெற்றிச் சிரிப்பு.

உங்கள் விஞ்ஞானம், உங்கள் அறிவு, நோக்கமும் முடிவுந்தான் முக்கியம் - வழியல்ல என்ற கொள்கை எல்லாம் இதைத்தானா செய்தன
கனகரத்தினம் ஒரு பொதுவுடைமைவாதி. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே அவன் அப்படி. இப்போ கொழும்பில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதே சமயம், ஒரு முக்கிய தொழிற்சங்கத்தின் செயலாள னுங்கூட. கட்சி விவகாரந்தான் அவனது முக்கிய வேலை; உத்தியோகம் இரண்டாந்தர யந்திரத் தொழில்! தனிப்பட்ட முன்னேற் றத்தில் அவனுக்கு நம்பிக்கை இல்லை! மனித குலத்தின் பொது முன்றேற்றத் தில்தான் அவனுக்கு நம்பிக்கை. அதற்குத் தடையாய் உள்ள பிற்போக்குச் சக்திகளை அகற்றும் விசயத்தில் அவனது கட்சிச் சகாக்களைவிட அவன் மிகவும் தீவிர மானவனுங்கூட. அகிம்சை, பொறுமை என்பவற்றை அவன் அடியோடு வெறுத் தான். அவற்றின் மூலம் பிற்போக்குச் சக்திகளைக் களைத்தெறிய முடியாது என்பது அவனது அசையாத நம்பிக்கை. புரட்சியும், சர்வாதிகாரமுந்தான் அவனுக்குப் பிடித்த வழி. கட்சி மாறாகச் சொன்னாலுங்கூட, 'பலத்தைப் பலம்தான் அழிக்க வேண்டும்' என்பதுதான் அவனது தனிப்பட்ட கொள்கை.

திபெத்தைச் சீனா கைப்பற்றியபோது, இந்தியாவில் அது ஆக்கிரமிப்பு நடத்திய போது, அவனுக்க அவை 'தவிர்க்க முடியாத உலகப் புரட்சியின் சில கட்டங்களாக'த்தான் பட்டன. பரீட்சார்த்தமாக வெடிக்கப்பட்ட அதிக மெகடன் அணுக் குண்டுகள், அவனைப் பொறுத்த வரையில், அதே செய்தியைத்தான் கொடுத்தன. வழி எப்படியாய் இருப்பினும், தன் நோக்கம்தான் தலை சிறந்தது என்பது அவனது நம்பிக்கை. அதை கெளரியும் உள்ளுக்குள் உணர்ந் திருந்தாள் என்பது அவனுக்குத் தெரியும். ஆனால், கெளரி, வழியைப் பற்றிக் கவலைப்பட்டாள். கனகரத்தினத்துக்க அந்தக் கவலை இருக்கவில்லை. மாறாக, அது ஒருபழைய பரம்பரைப் பிற்போக்குச் சுபாவம் என்று சிரித்தான். அடுத்த இரண்டு மாதங்களாக கெளரி கவலைப்படும் போதெல்லாம், கனகரத்தினம் அப்படித்தான் சிரித்தான்; அப்படித்தான் பகிடி பண்ணினான். ஆனால், அடுத்த இரண்டு மாதம் வரைக்குந் தான், அதற்குப் பின்?

கெளரி கண் திறந்து ஐந்தாறு நிமிடங்களா கின்றன. கஷ்டப்பட்டுப் பிரசவித்த பின், கெளரி இப்போதுதான் கண் திறக்கிறாள். நிதானமாக, அறிவு வந்தபின், அங்கு மிங்கும் அவள் கண்கள் தேடுகின்றன.

கனகரத்தினத்தின் முகத்தில் அப்படி எழுதி ஒட்டிவிட்டிருக்கிறதா?

'பிள்ளை எங்க?' என்று பயத்தோடு அவள் கேட்கிறாள்.

பிள்ளை கிடக்கும் பக்கத்தைக் கனகரத்தினம் காட்டுகிறான். போர்வையை அகற்றிக் காட்டும் படி அவள் வேண்டுகிறாள். பேசாமல் நிற்கிறான் கனகரத்தினம். அவளால் பொறுக்க முடியவில்லை. கஷ்டத்தோடு தானே முயல்கிறாள். அதைப் பொறுக்க முடியாமல் கனகரத்தினமும் உதவுகிறான். போர்வை அகற்றப்பட்டு உருவம் தெரிகிறது. அடுத்த கணம் கெளரி கீச்சிட்டுக்கொண்டே முகத்தைத் திருப்பி விடுகிறாள்.

கனகரத்தினத்துக்கு எப்படித் தேற்றுவ தென்று தெரியவில்லை. ஐந்து நிமிடங்களுக்குப் பின், கனகரத்தினத்தின் பக்கம் அவள் பார்வை திரும்புகிறது. அதில் நிற்கும் அந்தக் கேள்வி:

'அப்போ, உங்களுக்கு வீ.டி.தானா? உங்களுக்கும் அதுதானா?'

'இல்லை, கெளரி இல்லை! இது என்ன வியாதியெண்டு தெரியவில்லையாம்! அணுக்குண்டுகளின் றேடியோ அக்டிவ் தூசுகளினால் வந்திருக்கலாம் எண்டு டொக்டர்ஸ்மார் சொல்லீனம்' என்று கனகரத்தினம் சொல்லும்போது, அவனுக்குக் கண்ணீர் வடிகிறது.

கெளரியின் கண்கள் விரிகின்றன. பின்பு, ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவள் போல் மறுபக்கம் தலையைச் சாய்த்துக் கொள் கிறாள். முன்பு இருந்த விம்மல் குலுங்கல் ஒன்றும் இல்லை. ஆனால், கண்களில் நீர் ஆறாகப் பெருகி ஓடுகிறது. கனகரத்தினத் தின் நெஞ்சை அந்தக் காட்சி நெருடுகிறது. என்னத்தை நினைத்து அவள் அழுகிறாள்?

கடைசியில், 'உங்கள் விஞ்ஞானம், உங்கள் அறிவு, நோக்கமும் முடிவுந்தான் முக்கியம் - வழியல்ல என்ற கொள்கை. எல்லாம் இதைத் தானா செய்தன' என்றா நினைக்கிறாள்?

'அழாதே கெளரி, அழாதே! எல்லாம் கடவுளின் செயல்!' என்று என்ன சொல் கிறோம் என்றே தெரியாமல் உளறினான் கனகரத்தினம்.

'இல்லை!' என்றாள் கெளரி. முனகினாலும் நிதானமாகக் குரல் வந்தது: 'இல்லை, இது கடவுளின் செயலல்ல! உங்கள் முன்னேற்றம் எங்கட கடவுளையே கொண்டு போட்டுது!'

மு. தளையசிங்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline