Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கற்பு நிலை
- டி. செல்வராஜ்|மார்ச் 2005|
Share:
ஆண்டிப் பகடையின் மகள் பொம்மியை உங்களுக்குத் தெரியுமா? நாகரிகத்தின் கால் சுவடே படாத மலை மடிப்பில், எங்கோ, ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும் தேயிலைத் தோட்டத்தில் தோட்டி வேலை செய்யும் ஒரு சக்கிலிப் பெண்ணைப் பற்றி நீங்கள் எப்படித் தெரிந்து கொண்டிருக்க முடியும்?

அதோ, நான்காவது லாயத்தின் கடைக் கோடிக் காமிராவில், சாக்கடையை ஓடினாற்போல், நான்கைந்து மூங்கில்கள் தூண்களாக நாட்டப்பட்டு காட்டுக் குழைகளும், வனத்து மலர்களும் தோரணமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறதே, அதுதான் பொம்மியின் தகப்பன் ஆண்டிப்பகடையின் வீடு. அந்த எலி வலைக்குள் தான் அந்தக் குடும்பம் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக வாழ்ந்து இனவிருத்தியும் செய்து வருகிறது. மார்பிலும், தோளிலும் தவழ்ந்து சிலும்பும் சிகையை அள்ளிக் கொண்டை போட்ட வண்ணம், தப்பட்டையை ஓங்கி ஓங்கி அறைந்து வளையம் வந்து ஒயிலாட்டம் போடுகிறானே அவன்தான், பொம்மியின் மூத்த அண்ணன் முத்தன். தப்பட்டையின் ஓசையைக் கேட்கும் போது யாரோ செத்துப் போய்விட்ட மாதிரித் தோன்றுகிறதல்லவா? அப்படி ஒன்றும் எக்கச்சக்கமாக நடந்து விடவில்லை. மாறாக வானத்தையே விதானமாகக் கொண்ட அம்மூளிப் பந்தலின் கீழ் பொம்மிக்குத் திருமணம் நடைபெறப் போகிறது அந்த உற்சாகத்தில் தான் முத்தன் இவ்வளவு கும்மாளம் போடுகிறான். கிரீன் பாரஸ்ட் பகடைகள் சாவுகளிலும் சரி, கல்யாணத்துக்கானாலும் சரி இப்படி ஒரே மாதிரிதான் தப்பட்டையை அடிப்பார்கள்.

மாலை மயங்கி மலைப்பகுதியில் இருள் கவியட்டும். இந்தப் பட்டையின் கோரக் குரலும், உறுமி மேளத்தின் ஓங்காரமும் அந்தப் பள்ளத்தாக்கை கலகலக்கச் செய்யப் போகிறது. ஏனெனில், காலிப் பாட்டில்களை எடுத்துக் கொண்டு இப்போது கிளம்பியிருக்கும் ஆண்டிப் பகடை பட்டைக் கடையில் பாட்டில்களில சாராயத்தை நிரப்பிக் கொண்டு மாலையில்தான் லாயத்துக்கு வந்து சேருவான். சாராயப் புட்டிகளை அவன் கொண்டு வந்து இறக்கினால் தான் திருமண விழா சூடு பிடிக்கும். பக்கத்து எஸ்டேட்டுகளில் இருந்தெல்லாம் இந்த கல்யாணத்துக்கென லீவு எடுத்துக் கொண்டு வந்திருக்கும் தோட்டிகள் அனைவரும் - பால் பேதமின்றி மதுவைக் குடித்துத் தீர்த்து விட்டார்கள் என்றால் போதும் அந்த இடமே அமர்க்களப்படும்.

மணப்பெண் பொம்மிதான் இதற்கு விதிவிலக்கா என்ன? அவளும் மூக்கு முட்டக் குடிப்பாள். குடித்துவிட்டுக் கணவனை இழுத்துக் கொண்டு வந்து வீதியிலே நிற்பாள். ஆடைகுலைய, அங்கம் குலுங்கி அதிர, அவனை அங்குமங்கும் இழுத்துப் பறித்துப் பேய்க் கூத்தாட்டம் போடுவாள். வட்ட வளையம் வந்து தெம்மாங்கு பாடிக் கும்மியடித்துக் குழறுவாள். அவளுக்கு அன்பும், உற்சாகமும் ஏற்பட்டுவிட்டால் தூஷண வார்த்தைகள் தான் தெறித்துப் பறக்கும்.

இப்படியும் ஒரு பெண் ஜென்மம்! இந்தப் பெண் பேயைத் தேர்வு செய்வதற்கு ஆண்டிப்பகடையும், அவன் குடும்பத்தினரும் எவ்வளவு பாடுபடுகிறார்கள். ஒருவனிடத்தில் வைத்துப் பார்த்து விட வேண்டும் என்று எத்தனை சிரமப்படுகிறார்கள்? இந்த கிழட்டு ஆண்டிதான் எத்தனை தடவை அப்பாவிடம் வந்து கெஞ்சி பிராமிசரி நோட்டு எழுதிக் கொடுத்து, இவள் கல்யாணத்துக்கெனப் பணம் வாங்கிக் கொண்டு போயிருக்கிறான்? அன்று கடைசியாக இரண்டு வாரத்துக்கு முன்பு ஆண்டி எங்கள் வீட்டில் வந்து கால்கடுக்க நின்றது என் நினைவுக்கு வருகிறது.

எங்கள் தாத்தா ஆறுமுகம் கங்காணி கிரீன் பாரஸ்ட்டு எஸ்டேட்டுக்கு திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து கூலிகளைத் திரட்டிக் கொண்டு வந்த காலத்தில் - சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முந்தி இந்த எஸ்டேட்டில் வந்து கால் ஊன்றி, மூன்று தலைமுறை களாக எங்கள் குடும்பத்துக்கு உழைத்துப் போடுவதையே தலையெழுத்தென இருக்கும் விஸ்வாசமுள்ள குடும்பம் என்பதினாலோ என்னவோ ஆண்டிப்பகடை பணம் என்று வந்து கேட்டால் போதும், பிராமிசரி நோட்டு எழுதிப் பணம் கொடுக்கத் தயங்குவதில்லை. அடுத்த தலைமுறையையும் எங்கள் குடும்பத்துக்கு அடிமைப்படுத்தும் சூட்சமமாகவும் இது இருக்கலாம். நமக்கு எங்கே தெரியப் போகிறது பெரியவர்களின் அந்தரங்கம்! இந்தத் தடவையும் ஆண்டிப் பகடை பணத்துக்காகக் கைகட்டி வாய் புதைத்து நின்றான்.

"என்னலே, இன்னுமா ஒனக்கு அந்தப் பைத்தியம் போகல" என்று அவனைப் பார்த்து அதட்டிக் கேட்டவண்ணம் அப்பா நாற்காலியில் அமர்ந்து மீசையை வருடிக் கொண்டே வெளி வராந்தாவில் சுவர் ஓரமாக உடம்பை மறைத்துக் கொண்டு நிற்கும் பொம்மியைப் பார்க்கிறார்.

"கொள்ளாக் கொமரு, வில்லாச் சரக்குண்ணு எத்தனை நாளைக்குத்தான் வச்சுக்கிட்டு இருக்கது சாமி! கேட்டு வாரவன் கையிலே புடிச்சுக் குடுத்திட்டா தலைச் சுமைய இறக்கிவச்ச மாதிரி இருக்குமே" என்றான் ஆண்டி.

அப்பா தனக்குள்ளேயே சிரித்துக் கொள்கிறார்.

"ஏ புள்ளே பொம்மி! இப்படி வா" அப்பாவின் குரலில் அதிகாரம் தொனிக்கிறது. பொம்மியின் உடம்போ சுவற்றில் முழுமையாக மறைந்து விடுகிறது.

"ஏ மூதி! இப்படி வாண்ணா..." தலையக் குனிந்த வண்ணம் நாணம் கொப்பளிக்க ஜன்னலோரமாக வந்து நிற்கின்றாள் பொம்மி.

"இங்க பாரு. புள்ளே. இவன் கிட்டையும் மருவாதியா இருப்பியா? இல்லே புடிக்கலேண்ணு சொல்லி இவன் கிட்டேயும் தாலியை அறுத்தெறிஞ்சு போட்டு வந்து நிண்ணு ஒங்கப்பம் உசிரை வாங்கப் போறியா?"

மூன்று பேர் கைப்பிடித்து, மூன்று பேரிடத்திலும் தாலிச் சரட்டை அறுத்துக் கொடுத்து விட்டு நான்காவது கல்யாணத்துக்கெனக் கழுத்தைத் தடவிக் கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்தால் இப்படித் தானே கேட்கத் தோன்றும்.

பொம்மியோ பதில் பேசாமல் மெளனமாக நிற்கின்றாள். அடேயப்பா அவளுக்கு இவ்வளவு வெட்கம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அப்பா பதிலை வரவழைப்பதற்காக வேண்டி அவளை மீண்டும் அதட்டுகிறார். ஆண்டி கூட அவளை முறைத்துப் பார்க்கிறான்.

"நீங்க ஒண்ணு. ஒரு பொம்புளெப் புள்ளகிட்டே கேக்க கேள்வியா இது? மனங் கொண்டது மாளிகையிண்ணு வாழட்டுமே. அது அவபாடு, அவளைக் கட்டிக்கிட்டுப் போறவன் பாடு. ஆண்டி கேக்கறதைக் குடுக்கறதா இருந்தா குடத்து அனுப்புவீங்களா, அதை உட்டுப் போட்டு என்ன வெல்லாமே பேசுதீகளே?" என்று அம்மா அடுக்களையிலிருந்து வந்து குறுக்கிடவும், அப்பாவின் பேச்சு அந்தரத்தில் முறிந்து நின்றது.

"எவ்வளவுப்பா வேணும்?" என்று காரியத்தில் கவனம் செலுத்தலானார் அப்பா.

"நாலாம் கல்யாணம் தானே? இவளுக்கு என்னமாவது சேலை துணிமணி எடுக்கணும். எங்க சாதி சனங்க எல்லாம் வருவாங்க. மவ கல்யாணத்திலே ஆண்டிப் பகடை குறை வச்சுப் போட்டாண்ணு பேச்சு வரப்புடாதில்லா?" என்று இறுதியாக ஒரு கேள்வியையும் தூக்கிப் போட்டுவிட்டுப் பேச்சை நிறுத்தினான் ஆண்டி.

"இங்கு பாரு புள்ளே, மூணு கல்யாணத்துக்கும் நோட்டு எழுதிக்குடுத்து, எழுதிக் குடுத்துக் கடனாளியாப் போயிட்டான் ஆண்டி. இந்த இடத்திலாவது புத்தியோட மருவாதியா இருந்த வாழ்க்கை நடத்தணும். அவ்வளவுதான் நான் சொல்வேன்" என்று பொம்மிக்குப் புத்தி சொல்லிவிட்டு, ‘எவ்வளவு நூத்தி அம்பது போதுமா?’ என்று கேட்டு ஆண்டி அதை ஆமோதிக்கும் பாவனையில் தலை ஆட்டவும் பேப்பரையும் ரெவின்யூ ஸ்டாம்பையும் எடுத்து மேஜை மீது வைத்துப் பிராமிசரி நோட்டின் ஷரத்தைத் தொடங்குகிறார் அப்பா.

"ஏய் பொம்மி! ஒனக்குக்கூட கல்யாணமா? அடிசக்கையிண்ணானாம்" என்று அவளைக் கேலி செய்கிறான் என் கடைக்குட்டித் தம்பி.

ஒரு கணம் அப்பா என்ன சொல்கிறார் என்பதைக் கவனித்தவள் அவன் பக்கம் திரும்பி, "ஏன்யா, ஒமக்கு வருத்தமா இருக்கா. நீரு என்னையக் கட்டிக்கிடுதீரா, வாக்கப்பட்டுக்கிடுதேன்" குறும்பு தொனிக்கச் சிரித்துக் கொண்டு சொல்கிறாள். அசிங்கத்தை மிதித்துவிட்டவனைப் போல் கையையும் காலையும் உதறிக் கொண்டு தம்பி ஓடுகிறான். பொம்மி அவனிடத்தில் அப்படித்தான் பேச்சுக் கொடுப்பாள். அவனிடத்தில் என்ன எஸ்டேட்டில் யார் அவளிடத்தில் வாக்குக் கொடுத்தாலும் சரிதான், இப்படிப்பட்ட வெடுக்குத் துடுக்கான பதில்தான் கிடைக்கும். இரண்டு கால்களையும் அகல விரித்த வண்ணம் பாதையையை மறித்துக் கொண்டு சண்டி மாடு மாதிரி நின்று கொண்டு கால்களை மேலும் கீழும் வீசிச் சண்டை போடத் தொடங்கினாள் என்றால், மிக மிக நீசத்தனமான வார்த்தைகள்தான் அவள் வாயிலிருந்து விழும். ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டால் போதும் பட்டைக் கடைக்குப் போய் மூக்கு முட்டச் சாராயத்தைக் குடித்துவிட்டு நாற்சந்தி வீதியில் நின்று எஸ்டேட் துரைத்தனத்தாரையும், அதிகாரிகளையும் வாய்க்கு வந்தவாறு திட்டித் தீர்த்து விடுவாள். பிறகு அங்கேயே தன் உணர்வற்றுப் பிதற்றிக் கொண்டு கிடப்பாள். அப்புறம் யாராவதுதான் அவளை இழுத்துக் கொண்டு வந்து ஆண்டியின்ட காமிராவில் கிடத்த வேண்டும்.

இப்படிப்பட்ட படு கேவலமான பெண்ணிடம் தான் எப்பேர்ப்பட்ட அழகு குடி கொண்டிருக்கிறது! அதிகச் சிவப்பும் அதிகக் கருப்பும் இல்லாமல் உழைப்பின் இறுக்கமும், இளமையின் பொலிவும் பரிமளிக்கும் காந்தமுகத்தில் வழிய எண்ணெய் தேய்த்துக் கொண்டு இடுப்புவரை நீண்டு கிடக்கும் அளகபாரத்தைத் தள்ளிச் செருகிய வண்ணம், மார்புச் சதை திமிற சேலையை வரிந்து கட்டிக் கொண்டு வேலைத் தனத்துக்குப் கிளம்பி விட்டாள் என்றால், கிடாரி மேய்ச்சலுக்குக் கிளம்பிவிட்டது போலிருக்கும்.
ஆனால் அவள் நடந்து கொள்கிற முறையோ...?

எனக்கு உண்மையில் ஆண்டிப் பகடையின்பால் அனுதாபம்தான் ஏற்பட்டது. தன் மகள் ஒருத்தனிடமாவது மரியாதையாக நிரந்தரமாக மனைவியாக வாழ வேண்டும் என்பதற்காக அவன் எவ்வளவு சிரமப்படுகிறான்.

இரண்டு ஆண்டுகள் கழித்து இன்றைக்குத்தான் எஸ்டேட்டுக்கு வந்திருக்கிறேன். கிரீன் பாரஸ்ட் எஸ்டேட்டில் இரண்டு மூன்று குழந்தைகளும் ஒரு கிழவியும் மலேரியா நோய்க்குப் பலியானதைத் தவிர எந்தவிதமான விசேஷமோ, மாற்றமோ கிடையாது. முக்கியமாகச் சொல்லப்போனால் என் நண்பன் வேலாயுதம் எஸ்டேட்டுக்குக் கொழுந்து நிறுத்தும் உத்தியோகஸ்தனாக மாற்றலாகி வந்து சேர்ந்திருக்கிறது.

மாலை மயக்கம், மலை முகடுகளில் எல்லாம் இருள் கவிந்து கொண்டு வருகின்றது. கோடங்கி ராமசாமி தன் உடுக்கை எடுத்துத் தட்டிக் கொண்டு குரல் எடுத்துப் பாடி அனுமாரை வரவழைக்க முயற்சிப்பது, லாயங்களில் இருந்து எழும் புகை மூட்டத்தைத் தாண்டி என் காதில் படிகிறது. இரண்டு ஆண்டுகளாகப் பட்டின வாசமாகையால் அந்தத் தொழிலாளர்களின் குரலைக் கேட்பதில் கூட ஒரு எரிச்சல் ஏற்படுகிறது. கையில் இருந்த புஸ்தகத்தை மூடிவிட்டு, ராந்தலை இறக்கி வைத்துவிட்டு, டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு வேலாயுதத்தின் பங்களாவுக்குப் புறப்பட்டேன்.

வேலாயுதத்தின் வீட்டு வாசலில் நுழைந்ததும், நுழையாததுமாக நான் கண்ட காட்சி என்னால் சகிக்க முடியவில்லை. எனக்குள்ளேயே என்னையறியாமல் ஒரு எரிச்சல் மூண்டது. வேறு யாருமல்ல பொம்மிதான். வாசற்படியில் கையை உயர்த்தி நிலைப் படியைப் பிடித்தவாறு நின்று கொண்டிருந்தாள். வேலாயுதமோ பல் இளித்து இளித்து அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

என்னைக் கண்டதும் ஏனோ அவர்கள் பேச்சு நடுவில் முறிந்து போயிற்று.

"ஏய்! கிச்சனிலே போயி பாத்திரங்களைத் துலக்கி வைத்துட்டுப் போ... நாளைக்கு வந்து ஏற்பாடு பண்ணறேன்" உத்தியோகஸ்தன் என்ற தோரணையில் சொன்னான் அவன். பொம்மி எதிர்பாராத விதமாக என்னைச் சந்தித்து விட்டதாலோ என்னவோ, ஒன்றும் பேசாமல் வெளிச்சுவர்ப் பக்கமாக நகர்ந்து பின்கட்டுப் பக்கம் போனாள். வேலாயுதத்தைப் பற்றி எனக்கு முன்னமேயே தெரியும். படிக்கும் போதே அவன்! நான் என் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தேன். ஏதோ ஒன்றைத் தொடுவதற்கு பதிலாகச் செக்குமாட்டைப் போல் பேச்சு சுவாரஸ்ய மற்று வளைய வளைய வந்து கொண்டிருந்தது.

"அடேடே! மறந்திட்டேன் பார்த்தியா. கடையிலிருந்து காப்பி வாங்கிட்டு வரச் சொல்லறேண்டா" என்று சொல்லிக் கொண்டே வேலாயுதம் எழுந்து அடுக்களைப் பக்கம் போனான்.

கணநேரம்தான். என்ன நடந்ததோ தெரியவில்லை. யுத்த களத்தின் பயங்கர ஓலம் அடுக்களையின்றும் எழுந்தது. நான் பதறிப்போய் எழுந்தேன். வேலாயுதம் பரபரப்பாக உயிரைக் கையில் ஏந்திக் கொண்டு என்னை நோக்கி ஓடிவந்தான். அவன் நாசியிலிருந்து தாரை தாரையாக உதிரம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

"என்னடா? என்ன நடந்துச்சு?"

பயம் கொண்ட குழந்தையைப் போல எனக்குப் பின்னால் ஒளிந்து கொண்டான் வேலாயுதம்.

பத்திரகாளியைப் போல வந்து நின்றாள் பொம்மி.

"என்னையெத் தேவடியாளிண்ணாடா நெனச்சுகிட்டே?" ஆங்காரத்துடன் கேட்டாள்.

நான் திகைப்பூண்டை மிதித்து விட்டவனைப் போலானேன்.

அவள் அப்படியானால்?... அப்படியானால்?

டி. செல்வராஜ்
Share: 




© Copyright 2020 Tamilonline