Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
என்.சி. மோகன்தாஸின் 'தவழும் பருவம்' நாவலிலிருந்து ஒரு பகுதி...
- என்.சி.மோகன்தாஸ்|நவம்பர் 2011|
Share:
அன்று ராத்திரி.

விஜி தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள்.

விஜயகுமார் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு அதுவரை இந்தி பேசின டி.வி.யை ஆப் பண்ணினான்.

கதவெல்லாம் தாழ் போடப்பட்டு இருக்கின்றனவா என்று செக் பண்ணினான்.

ஹாலில் சாம்பவி சும்மான்னாலும் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தாள். அவளுக்கும் தொட்டிலுக்கும் இடையே கட்டிலை நகர்த்தி விஜயகுமார் படுக்கையை விரித்துப் போட்டான்.

"சாம்பி தூங்கிட்டாயா?"

"இல்லை" என்றாள் வறட்சியுடன்.

"ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கிறது. தண்ணி வேணுமா?"

"வேண்டாம்" என்று ஒரு வார்த்தையுடன் நிறுத்திக் கொண்டாள்.

அவள் என்னவோ சொல்ல வருகிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. என்ன சொல்லப் போகிறாள் என்பதையும் யூகிக்க முடிந்தது.

"இப்படி காட்டு" என்று அவளது வலது கை, வலது காலை பிடித்து விட்டான். ஆயுர்வேத களிம்பை தடவினான், குனிந்து அவளது நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு "தூங்கு" என்று லைட்டை நிறுத்தி விடிவிளக்கை ஆன் பண்ணினான்.

அறைக்குள் நீல ஒளி ராஜ்யம் நடத்திற்று. ஃபேன், ஓசை எழுப்பிற்று.

சாம்பவி அவன் பக்கம் கழுத்தை திருப்பி "தூக்கம் வருதா. நான் உங்ககிட்டே பேசணும்னு சொன்னேனே" என்றாள்.

"ஓ! உனக்கில்லாத உரிமையா பேசு..."

"இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பாடு?" என்றாள்.

அந்த வார்த்தைகள் அத்தனை கிளியராய் வரவில்லை. சற்று நசுங்கிப் போய் வெளிப்பட்டன. கொஞ்ச நாட்களாகவே அவளுடைய பேச்சு அப்படித்தான் இருக்கிறது. அப்படித்தான் பேச முடிகிறது அவளுக்கு.

"நீங்க படற கஷ்டத்தை என்னால பார்த்துட்டிருக்க முடியவில்லை. தகிக்கிறது. வெளியே ஓடியாடி வியாபாரம் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்தால் இங்கும் உங்களுக்கு நிம்மதியில்லை. ஓய்வெடுக்க முடியவில்லை. சதா வேலை... வேலை... இந்த பாரத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு சுமப்பதாய் உத்தேசம்?"

"சாம்பி நேரமாகிறது தூங்கேன்"

"இல்லை. இதற்கு ஒரு முடிவு தெரியாமல் என்னால் தூங்க முடியாது. இன்று ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். உங்களுடைய சிரமம் என்னை போட்டு வதைக்கிறது"

"எனக்கென்ன சிரமம்... நான்...?"

"வேண்டாம். வியாக்யானம் ஒண்ணும் தேவையில்லை. என் மேல் நீங்கள் நிஜமாலுமே அன்பு வைத்திருக்கிறீர்கள் என்றால் என் பேச்சை கேட்டாகவேண்டும். உடனே நீங்கள் வேறு கல்யாணம் செய்து கொண்டாக வேண்டும்."

"உடனேயேவா... காலைல போதாதா?" என்று அவன் சிரிக்க, "தமாசெல்லாம் போதும். நான் சீரியசாகத்தான் சொல்கிறேன். இத்தனை பிரச்சனைகளை சுமந்து கொண்டு உங்களால் எப்படி சிரிக்க முடிகிறது? உங்களோட வாழ்க்கை வீணாகிக் கொண்டிருக்கிறது."

"இன்னொரு கல்யாணம் பற்றி என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எனக்கு அப்படி ஒரு சிந்தனையே வரலை சாம்பவி."

"வரணும். கல்யாணம் பண்ணிட்டு நீங்க சந்தோஷமா இருக்கணும்."

"எப்படி சாம்பி. எப்படி முடியும்? நீ இந்த நிலைமையில இருக்கும் போது...”

"நான் இருந்தால் அது என்னோட தலைவிதி. அனுபவிச்சுட்டுப் போறேன். அதுக்காக நீங்க ஏன்...? நீங்க ஏன் தண்டனை அனுபவிக்கணும்? நீங்க ஏன் வருத்திக்கணும்?"

"உனக்கு ஒண்ணுன்னா அது எனக்கும் இல்லையா? இன்பம்னாலும் சரி. துன்பம்னாலும் சரி. ரெண்டு பேரும் பங்கு போட்டுக்கிறதுதானே முறை?”

"இன்பத்துல சரி. துன்பத்துல எப்படி பங்கு போட்டுக் கொள்ள முடியும்? என் வேதனை எனக்கு. நீங்க சந்தோஷத்தை அனுபவிக்காம இருந்தால் என் வலி போயிருமா, இல்லை எனக்குதான் குணமாயிருமா?"

"இருந்தாலும்...நான் இப்போ இத்தனை சவுகர்யமாயிருக்கேன்னா அதுக்கு காரணம் நீ. உன் அன்பு, உன்னுடைய தூண்டுதல். உன்னுடைய ஒத்தாசை. மொத்தத்துல இந்த வளர்ச்சியே உன்னாலதானே!"

அவள் சற்று நேர மவுனத்திற்கு பின், "உங்களோட தளர்ச்சிக்கும் நான் காரணமாயிரக் கூடாதுன்னுதான் சொல்கிறேன். ப்ளீஸ்... இன்னொரு கல்யாணம் பண்ணிக்குங்க! எனக்கு நீங்க முக்கியம். நம் குழந்தையும்..."

அப்போது தொட்டிலிலிருந்து ஜலம் ஒழுகிற்று. குழந்தை விசும்பலுடன் புரள, விஜயகுமார் எழுந்து அதை தூக்கி, அடியிலிருந்த துணியை மாற்றி படுக்க வைத்தான். தரையில் சிதறியிருந்த ஈரத்தை துணியால் துடைத்து பாத்ருமிற்கு போய் கை கழுவி வந்தான்.

"இந்த வேலையையெல்லாம் இன்னும் எத்தனை நாளுக்குதான் நீங்களே செய்து கொண்டிருக்க முடியும்?"

"அதுக்காக...? கல்யாணம் ஒண்ணுதான் வழியா. வேலைக்காரி வைத்தால் போறாதா?"

"போறாது. நான் சொல்வதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். வீட்டு வேலை மட்டும் இங்கு பிரச்சினையில்லை. வெறும் வேலை என்றால் வேலைக்காரி போதும். இங்கே உங்களுக்கு தேவை வேலைக்காரி இல்லை. நல்லதொரு துணை. உங்களுடைய செயல்களுக்கும் பிசினஸிற்கும் ஒத்தாசை செய்கிற, உதவுகிற, ஆலோசனை சொல்கிற ஒரு பார்ட்னர்!"

"அதற்கு தான் நீ இருக்கிறாயே; அப்புறம் எனக்கென்ன கவலை..."

"நான் இருந்து என்ன பிரயோசனம்? இன்னும் இருப்பதுதான் என் கவலையே. கொஞ்சம் பொறுங்கள். நான் சொல்லி முடித்து விடுகிறேன்" என்று குறுக்கே பேச வந்தவனை தடுத்தாள். 'பிசினஸில் உங்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். அதையெல்லாம் தலைமுழுகிவிட்டு வீட்டுக்கு வரும்போது நானும் என்னுடைய நோயும் உங்களுக்கு பாதிப்பு தரக்கூடாது. வீட்டுக்கு வந்தால் உங்களுக்கு நிம்மதி வேண்டும். ஓய்வு வேண்டும்; சந்தோஷம் தர வேண்டும். அதற்காகத்தான் சொல்கிறேன். என்ன சொல்கிறீர்கள்...?"

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை, பேசாமல் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தவன் அப்படியே தூங்கிப்போனான்.

அவள் இன்று நேற்று ஒன்றும் இதை ஆரம்பிக்கவில்லை. ஒரு மாதமாகவே அவனை நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவன் இதுவரை பிடியே கொடுக்கவில்லை. அவளும் அவனை விடுவதாயில்லை.

சாம்பவிக்கு தூக்கம் வர மறுத்தது. வெளியே நாய் ஒன்று குரைத்தது. சைக்கிள் வண்டியில் மணியாட்டிக் கொண்டு பலகாரம் நகர்த்திப் போனார்கள். ஃபேன் காற்றையும் மீறிக் கொண்டு கொசுக்கள் காதிடம் வந்து நர்த்தனம் புரிந்தன.

அவளுடைய சிந்தையெல்லாம் மெல்ல மெல்ல பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

****

நான்கு வருடங்களுக்கு முன்பு....

அவன் கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தபோது தென் மாவட்டங்களுக்கு டூர் ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது அவள் ஈரோடில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அப்பா அங்குதான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். டூரில் அவளுடன் தோழிகள் பட்டாளமே வந்திருந்தது. அவர்கள் அரட்டையும் சந்தோஷமுமாய் திருச்செந்தூருக்கு போய்விட்டு கன்னியாகுமரி வந்தனர்.

அங்கே கியூவில் நின்று படகு ஏறி, ஓடி, அடி வயிறு கலங்கி, விவேகானந்தர் பாறை பார்த்துவிட்டு திரும்புவதற்குள் நேரமாகி விட்டிருந்தது. பஸ் கிளம்ப வேண்டும் என்று அவசரப்படுத்தினர்.

அவர்களுக்கோ தாகமாயிருந்தது. ரோடோரத்தில் விஜயகுமார் வண்டியில் இளநீர்களை குவித்து வைத்துக் கொண்டு நிற்க அங்கே ஒடினார்கள். அவன் பேண்ட்டும் பனியனும் போட்டுக் கொண்டு அத்தொழிலுக்கு லாயக்கில்லாதவன் போலிருந்தான். அவர்களை மலையாளி என நினைத்து, "கரிக்கு வேணுவோ...?" என்றான்.

அதை கீதா திரித்து, "ஏய் சாம்பவி... உன்னை கருப்பு என்கிறான்டி!" என்று இடித்தாள். "மிஸ்டர். நான் கருப்பாகவா இருக்கேன்..." என்று சாம்பவி வேண்டுமென்றே அவன்மேல் ஏவுகணைகளை ஏவ, அவன் ஒரு நொடி ஆடிப்போனான்.

"இல்லை...இல்லை! நான் இளநீ வேணுமான்னு தான் கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க! உங்களோட அழகையும், வனப்பையும் பார்த்ததும் நீங்கல்லாம் மலையாளின்னு நினைச்சுட்டேன்?" என்று அவன் வழிய.

"ஐஸ்! ஐஸ்!" என்று ஒருத்தி கத்தினாள்.

"ஐஸ் வைக்கலீங்க. நிஜமாதான் சொல்றேன்!" அதற்குள் அந்த பக்கம் ஐஸ் வித்துக் கொண்டிருந்தவன், "கூப்பிட்டீங்களாம்மா" என்று வர, அவர்களுக்கு சிரிப்பு தாங்கவில்லை.

விஜயகுமார் எங்கே தன் வியாபாரம் போய் விடுமோ என்று "இல்லேப்பா போ!" என்று அவனை விரட்டிவிட்டு கொடுவாளை அவசரமாய் எடுக்க, அது தவறி விழுந்தது. அதை எடுத்து "வெட்டட்டா..." என்று கேட்டு சரக்சரக் கென வெட்டி துளை போட்டு, ஸ்ட்ரா போட்டு கொடுத்தான். ஐந்து நிமிடத்திற்குள் இருபத்தைந்து பேர்களுக்கு அசராமல் சப்ளை பண்ணினான். அவனுடைய சுறுசுறுப்பும் அப்பாவி பேச்சும் சாம்பவியை கவர்ந்தன.

அவர்கள் குடித்து முடிப்பதற்குள் பஸ்சிலிருந்து மேடம் அவசரப்படுத்தினார். டிரைவர் ஹாரனடிக்க, அவர்கள் மட்டையை தூக்கி போட்டுவிட்டு ஒட ஆரம்பித்தனர்.
"ரூவா...ரூபா!"

"ஏன்ய்யா பறக்கிறே...பஸ்கிட்டே வா. அங்கே பேகில் பர்ஸ் இருக்கு எடுத்து தரேன்" என்று சாம்பவி அவனை அழைத்துக் கொண்டு ஓடினாள். அவள் ஏறவும் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது.

"ஐயோ...என் பணம்! பணம்!" என்று அவன் பின்னாவலேயே ஓடினான். "ஹோல்டன்...ஹோல்டன்! ஸ்டாப்...ஸ்டாப்!"

அவன் கத்திக் கொண்டு ஓடி வருவதை பார்த்து சிட்டுக்கள் சிரித்தன. கையசைத்து உற்சாகம் பெற்றன. சாம்பவி ஜன்னல் வழியாய் எட்டி நூறு ரூபாய் நோட்டை அவன் மேல் வீசினாள்.

அவன் அதை பிடிக்க வேண்டி தாவினான். ஆனால் அது பஸ் போன ஸ்பீடில் பின்னாலேயே அடித்துக் கொண்டு போயிற்று. அவனும் தம் பிடித்து ஓடி தாவ, அங்கேயிருந்த கல்லில் கால் இடறி பொலத்தொன்று குப்புற விழுந்தான்.

விழுந்த வேகத்தில் அவனுடைய கிளி மூக்கு உடைந்து ரத்த தானம் செய்தது. பனியனையும் மீறி நெஞ்சில் சிராய்த்திருந்தது. முழங்கை, முழங்காலெல்லாம் தோல் பிறாண்டி எரிந்தது. அத்தனை வலிக்கிடையிலும் அவன் பணம் போய்விட்டதே என்று கவலைப்பட்டான்.

அவன் எழ முடியாமல் படுத்திருக்க, பெண்கள் கூவி பஸ்சை நிறுத்தினர். சாம்பவி முதலில் இறங்கி அவனிடம் வந்தாள். ரத்தத்தையும் அவனுடைய முனகலையும் பார்க்க அவளுக்கு பரிதாபமாயிருந்தது.

மெல்ல அவனை தூக்கி, "அடி பட்டிருச்சா?" என்று கேட்டு, "ஸாரி. வெரி ஸாரி"

"பணம்! பணம் நூறு ரூபா!"

"அதான் கொடுத்தேனே!"

"பறந்து போச்சு" என்று அவன் கண் கலங்கினான். அதற்குள் மேடம் கடுகடுப்புடன் வந்து, "சாம்பி! யு ஆர் க்ரூயல்! பணத்தை அங்கேயே கொடுக்கறதுக்கென்னவாம்?" என்று கத்தினார்.

"ஸாரி மேடம்... பணம், பஸ்ஸிலிருந்தது."

"ஷட் அப்! உன்னால் டென்மினிட்ஸ் லேட்! பணம் எங்காவது கிடத்திறதா பாருங்கள்!"

சிட்டுக்கள் மாடர்ன் டிரெசுடனும், சேலையுடனும் அங்குமிங்கும் தேடின. சலித்துக் கொண்டன. "பஸ்சை நிறுத்தியிருக்கவே கூடாது. எல்லாம் உன்னால வந்தது சாம்பவி!"

அந்த நூறு ரூபாய் நோட்டு பறந்து விட்டிருந்தது. "தென் வாட் டு டூ? பணத்தை யார் அழறது...?" மேடம் கொந்தளித்தார்.

கூட வந்தவர்கள் நமக்கேன் வம்பு என்று நழுவி சாம்பவி 'ஐ ஷல் பே!' என்று அவனது கையில் திணித்தாள். அதை வாங்கிக் கொள்ளும்போது அவனுடைய கண்கள் அவளுடைய கண்களை நன்றியோடு சந்தித்து தாழ்ந்தன.

அந்த நொடிகள் அவளுக்குள் ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தின. அவனை நோகடித்து விட்டோமே என்று வருந்தினாள்.

"கம்...கம்...லெட்ஸ் கோ!" மேடம் அவளை அழைத்துக் கொண்டு நடந்தாள். பஸ் புறப்பட்டு, புழுதியில் மறைகிற வரை சாம்பவி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அடுத்த சில நாட்களுக்கு அவளால் அவனை மறக்க முடியவில்லை. அவன் பிழைப்பிற்காக இளநீர் விற்கிறான். அவனும் மனிதன்தான். பணத்தை அங்கேயே கொடுத்திருந்தால் அந்த மாதிரி அவன் ஓடி வந்திருக்க வேண்டியிருந்திருக்காது. அத்தனை பேர் மத்தியில் விழவும் வேண்டியிருக்காது.

பெண்கள் அதுவும் வயதில் குறைந்த பெண்கள் கேலி செய்தபோது அவனது மனம் எத்தனை காயப்பட்டிருக்கும்...? அவன் எந்த ஊரோ...என்ன பெயரோ...?

அதன் பிறகு அவள் அந்த சம்பவத்தையே மறந்து போனாள். அவனை திரும்ப பார்ப்போம் என்று கூட அவள் நினைக்கவில்லை.

ஆறு மாதங்களுக்குப் பிறகு மதுரைக்கு அவள் இண்டர்வியூ ஒன்றிற்குப் போன போது அவனும் அங்கே இருக்க. அவளுக்கு ஆச்சர்யம்! இவன் எப்படி இங்கே...?

இளநீர் விற்றவனுக்கு இங்கே என்ன வேலை...? மனதிற்குள் அந்த சந்தேகம் எழுந்தாலும்கூட, அவனை திரும்ப பார்க்க முடிந்ததற்கு சந்தோஷப்பட்டாள். அப்போது அவன் அன்று பார்த்த முகமாய் இருக்கவில்லை.

மிடுக்குடன் சட்டையை இன் பண்ணி ஜீன்ஸ் அணிந்திருந்தான். டிப்டாப்பாக தெரிந்தான். அவனுடைய முகத்தில் ஒரு களை இருந்தது. இன்டர்வியூ முடிகிறவரை அவன் அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆனால் அவளுக்கு படபடப்பாக இருந்தது.

அவளுக்கு இண்டர்வியூ முதலில் முடிந்துவிட, அவனும் வரட்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள். அவன் வந்ததும், "என்னை ஞாபகமிருக்கிறதா?" என்றாள் புன்னகையுடன் "மறக்க முடியுமா சாம்பி?"

"அட! என் பெயர் உங்களுக்கு எப்படி...பியூன் அழைத்த போது கவனித்தீர்களா...?”

"இல்லை. அன்று உங்களுடைய தோழிகளும் மேடமும் அழைத்த போது..."

"ஸாரி...வெரி ஸாரி. அன்றைக்கு உங்களை ரொம்பவும் ரத்தம் சிந்த வைத்துவிட்டேன். நீங்கள் தவறாக நினைக்க வில்லையென்றால் நான் ஒன்று கேட்கலாமா... நீங்கள் எப்படி இங்கே...?"

"இளநீர் விற்றவன் இங்கே எப்படி என்று கேட்கிறீர்களா? நியாயமான கேள்விதான். நானும் கூட டிகிரி படித்தவன்தான், வீட்டில் வறுமை, அன்று அம்மா அப்பா வெல்லாம் நாகர்கோவில்ல இருந்தார்கள். வேலைக்காக அலைந்து, திரிந்து ஏமாந்து கடைசியில் இளநீரைத் தேர்ந்தெடுத்தேன். நாகர்கோவில் என்றால் வீட்டில் தெரிந்து விடும் என்று கன்னியாகுமரியில் கடை போட்டேன். சைடு-பை-சைடு வேலைக்கும் அப்ளை பண்ணிகிட்டிருக்கேன்."

"உங்களுக்கு சொந்த ஊர்...?” சாம்பவி கேட்டுக் கொண்டே நடந்தாள்.

"நாகர்கோவில்ல புதுகுடியிருப்புலதான் தங்கியிருந்தோம். அங்கே தான் எங்க வீடு"

ரோடில் இளநீருடன் ஒருவர் அழைக்க. "குடிப்போமா...?" என்றாள். புன்முறுவலுடன் "எனக்கு சலிப்பு" என்று ஒதுங்கினான். "சும்மா வாங்க! எத்தனை பேத்துக்கு வெட்டி கொடுத்திருப்பீங்க. ஒரு நாளைக்கு அடுத்தவங்ககிட்டேயிருந்து வாங்கிதான் குடியுங்களேன்!" என்று அழைத்துப் போனாள்.

"ரெண்டு இளநீர்ப்பா!" சொல்லிவிட்டு சாம்பவி அவனை பார்த்தாள். அந்த இளநீர்க்காரன் தொழிலுக்கு புதிது போலிருக்கிறது. காயை எடுத்து வெட்டத் தெரியாமல் வெட்டினான். விட்டால் கையையே வெட்டிக் கொள்வான் போலிருக்க விஜயகுமாருக்கு பக்பக்கென்று இருந்தது.

"இப்படி கொடுப்பா!" என்று அவனிடமிருந்து வாங்கி நிமிடத்தில் வெட்டி அவளுக்கும் கொடுத்து அவனும் குடித்தான். இளநீர்க்காரன் அவனை வினோதமாய் பார்க்க-"என்னப்பா அப்படி பார்க்கறே... எனக்கும் ஜோலி இது தான்!"

பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது "ஆனாலும் நீங்கள் உங்கள் தொழிலை பீற்றிக் கொண்டிருக்க வேண்டியதில்லை?" என்றாள்.

"ஏன் இளநீர் விற்பது அவமானமா?"

"அப்படியில்லை. படிக்க முடியாதவர்கள் அந்த தொழிலை பார்க்கட்டும். நீங்கள் நல்ல வேலை தேடலாமே!"

"தேடி களைத்துப் போனேன். அரசாங்க வேலைக்கு அப்ளை செய்ய வயது காலாவதியாச்சு. தொழில் ஒன்றுதான் எனது நம்பிக்கை!"

"அப்போ வேறு தொழில் பாருங்க! கொஞ்சம் முதலீடு போட்டு..."

"அங்கேதானே மேடம் பிரச்சினை! முதலீடு யார் போடுவா... எங்கிருந்து...?"

"உங்களுக்கு தேவை முதலீடுதானே? பேங்கில் கேட்டுப் பாருங்களேன்"...

"எல்லாம் கேட்டுப் பார்த்தாச்சு. ரெகமண்டேசன் வேணும்; செக்யூரிட்டி வேணும்,"

அதற்குள் அவளுக்கு பஸ் வந்துவிட, "நான் வருகிறேன். இந்த அட்ரஸிற்கு எழுதுங்கள்! என்று அவள் ஓடி ஏறிக் கொண்டாள். அவசரத்தில் அவனுடைய விலாசத்தை வாங்காமல் போனதை பின்னால்தான் அவள் உணர்ந்தாள். அவளுக்கு வெறுப்பாய் வந்தது.

அவன் தொடர்பு கொள்வான் என்று பார்த்தாள். அவன் எழுதவே இல்லை. அவளை சந்தித்து விட்டுப்போன இடைவேளையில் அவனுக்கு விபத்தொன்றின் மூலம் பெரும் சோகம் ஒன்று நிகழ்ந்திருந்தது.

அந்த பஸ் விபத்து அவனுடைய பெற்றோர்களை கொண்டுபோயிற்று. அவன் அனாதை போலுணர்ந்தான். அந்த துக்கத்தில் இருந்து விடுபட ரொம்பவும் சிரமப்பட்டான். இடையில் இளநீர் பிசினசும் போயிற்று. அதில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை.

சாம்பவி அவனுக்கு வேலை கிடைத்ததோ என்னவோ என்று எப்போதாவது நினைப்பாள். அவன் ஏன் கடிதம் எழுதவில்லை...? நாமாவது போய் பார்ப்போமா என்று கூட யோசிப்பாள். அவன் கொடுத்திருந்த அடையாளத்தை வைத்து எப்படியும் அவனை கண்டுபிடித்து விடலாம். ஆனால் அங்கே நமக்கென்ன வேலை...? தனியாக போவதற்கு வீட்டில் அனுமதிக்கமாட்டார்கள். ஒருமுறை மதுரைக்கு தனியாய் இண்டர்வியூ போனதற்கே அம்மா திட்டினாள்.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது தெய்வமே அவர்களை சேர்த்து வைப்பதுபோல அவளுடைய அப்பாவிற்கு நாகர்கோவிலுக்கு டிரான்ஸ்பர் ஆயிற்று.

என்.சி.மோகன்தாஸ்
Share: 




© Copyright 2020 Tamilonline