ஒரு பணக்கார வியாபாரி, அவனுக்கு ஒரே மகன். வியாபாரியின் மனைவி பிள்ளைக்கு ஐந்து வயதாக இருக்கும்போது இறந்துவிட்டாள். எனவே அவனே தாயும் தந்தையுமாக இருந்து மகனை வளர்த்து ஆளாக்குகின்றான்.
மகன் வளர்ந்ததும் ஓர் அழகிய பெண்ணை மணமுடித்து வைக்கின்றான். அங்கேதான் வந்தது வினை. மருமகளுக்கு மாமனாரை அறவே பிடிக்கவில்லை. கணவனிடம் அடிக்கடி செல்வத்தை எல்லாம் எழுதி வாங்கிக் கொள்ளச் சொல்கிறாள். அதற்கு அவன், "கவலைப்படாதே! அவருக்கு ஒரே மகன் நான். செல்வமெல்லாம் எனக்கேதான். அவசரப்படாதே" என்கிறான். அவள் விடாமல் நச்சரிக்கிறாள்.
மனைவியின் தொல்லை தாளாமல் அவன் தந்தையிடம் சென்று, "அப்பா... உங்களுக்கு வயதாகிக்கொண்டே போகிறது. ஏன் நிர்வாகத்தை நீங்கள் என்னிடம் ஒப்படைத்து விடக்கூடாது?" என்று கேட்கின்றான். தந்தைக்குப் புரிகிறது. இந்த உலகப் போக்கைப் புரிந்துகொண்டு ஒதுங்கிவிட எண்ணி, அவர் தன் சொத்தையெல்லாம் அவன் பெயருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்.
சில மாதங்கள் மருமகள் மௌனமாக இருக்கிறாள். திரும்பவும் தொடங்குகிறது நச்சரிப்பு. மாமனார் தொடர்ந்து இருமியபடி முன்வராந்தாவில் இருப்பது அவளுக்குச் சம்மதமில்லை. கணவனிடம் அவள், "சீக்கிரமே நான் ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகிறேன். அந்த வராந்தாவின் முன்னறை நமக்குத் தேவைப்படும். எனவே வீட்டின் பின்புறத்திலே ஒரு ஷெட்டைக் கட்டி, அங்கே அவரைத் தங்கவைத்து விடுங்கள்" என்கிறாள்.
மனைவிமேல் கொண்ட ஆசையில் அவனும் அப்படியே செய்கிறான்.
அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அவன் நல்ல பிள்ளையாக வளர்கிறான். பாட்டனாருடனே அவன் பெரும்பகுதி நேரத்தை அவன் செலவழிக்கிறான். அவர் மடியிலே அமர்ந்துகொண்டு கதை, நகைச்சுவைத் துணுக்குகள், அனுபவங்களை எல்லாம் அவர் சொல்லக் கேட்டு ரசிப்பது அவனுடைய பொழுதுபோக்கு. தாத்தாமேல் அவனுக்கு மிகவும் பிரியம். தன் தாய், பாட்டனாரை நடத்தும் முறை அவனுக்குப் பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் தாயிடம் பாட்டனார் அடங்கிப் போவதாக நினைத்துக் குமுறுகிறான்.
ஒருநாள் பாட்டனார் மடியிலே அமர்ந்து கதை கேட்டுக் கொண்டிருந்தபோது, உள்ளே பெற்றோர் இருவரும் எதையோ தேடுவது தெரிந்தது. இவன் பாட்டனாரின் மடியில் இருந்து வேகமாக எழுந்து உள்ளே சென்றான். "அப்பா, என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டான்.
"உன் தாத்தாவுக்கு உணவுநேரம் ஆகிவிட்டது. அவருக்கு உணவுதரும் மண்தட்டைத் தேடிக் கொண்டிருக்கிறோம். நீ பார்த்தாயா?" என்று தந்தை கேட்க, அவன் விஷமப் புன்னகையோடு "அதை பத்திரமாக என் பெட்டியில் வைத்திருக்கிறேன்" என்று கூறினான்.
"என்ன! அந்த மண்தட்டையா உன் பெட்டியில் வைத்திருக்கிறாய்? எதற்காக?" என்று கேட்க, "இல்லையப்பா, அது வேண்டும். எதிர்காலத்தில் பயன்படும்" என்கிறான் மகன். "என்ன சொல்கிறாய்?" என்று தந்தை கேட்டார்.
"அப்பா உங்களுக்கு வயதாகிப் போனால், நீங்கள் எப்படி உங்களுடைய தந்தைக்கு மண்தட்டில் சாப்பாடு கொடுக்கிறீர்களோ அதைப்போல நானும் உங்களுக்குக் கொடுக்க வேண்டாமா? அப்போது இதுபோன்ற தட்டு கிடைக்காது என்பதனால் இப்போதே எடுத்து பத்திரப்படுத்தி வைத்தேன்" என்றான் மகன்.
பெற்றோர் வெட்கத்திலே பேச்சிழந்தனர். தமது தவறை உணர்ந்தனர். அதன் பிறகு அன்போடும் மரியாதையோடும் பெரியவரை நடத்தத் துவங்கினர்.
பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா
*****
(இந்தக் கதை 'பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் சின்ன கதைகள்' என்ற பெயர்கொண்ட MP3 CDயில் கவிஞர் பொன்மணி அவர்களால் சொல்லப்பட்டது. வெளியீடு: Sri Sathya Sai Books and Publications Trust, Tamil Nadu, Chennai.) |