பாஸ்கரர் தோன்றி 900 வருடங்கள் ஆனதை முன்னிட்டு 2015 ஜனவரி 31ம் தேதி அன்று சாரடோகா உயர்நிலைப் பள்ளியின் மாகஃபீ கலையரங்கில் Overseas Volunteers for a better India குழுவினர் ஒரு பல்கலை நிகழ்ச்சியை நடத்தினர். கணிதம் மற்றும் அறிவியல் மேதையான பாஸ்கரர், தன் மகளின் பெயரான 'லீலாவதி' என்பதாகவே ஒரு கணிதப்புதிர் நூலை எழுதினார். முக்கோணவியல் (trigonometry), இயற்கணிதம் (algebra), வானியல் (astronomy) போன்ற பல துறைகளில் பாஸ்கரர் எழுதிவைத்த கோட்பாடுகள், பல நூற்றாண்டுகள் கடந்தபின்னரே ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டன. புவியீர்ப்புச் சக்தியால் கிரகங்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுவதை பாஸ்கரர் அறிந்திருந்தார். பூமியின் சுற்றளவை 99%க்கும் மேல் துல்லியமாகக் கணித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு அரங்கம் நிரம்பிவழிந்தது மகிழ்ச்சியளித்தது. பாரதத்தின் கணித வரலாற்றின் சிறப்பைக் கொண்டாடுவதில் இந்திய அமெரிக்கருக்கு எத்தனை ஆர்வம். நிகழ்ச்சி மிகவும் சுவையாகவும், அறிவுக்கு உணவாகவும் பெருமிதம் தருவதாகவும் இருந்தது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியான மராத்தி நாடகம் பாஸ்கரரின் வாழ்வையும், அதை விவரிக்கும் தற்காலக் குடும்பத்தையும் மாறி, மாறி ஒரே மேடையில் காட்டிப் பிரமிக்க வைத்தது. மராத்தி வசனத்துக்கு, நாடகமேடையின் மேற்பகுதியில் ஆங்கில மொழிபெயர்ப்பு காண்பித்தது புரிந்துகொள்ள உதவியது. நடிப்பும், ஸ்ரீக்ருபா நடனப்பள்ளியின் நடனமும் அபாரம். மேலும் பாஸ்கரர் மற்றும் வேதகணிதத்தின் சூட்சுமங்களை விளக்கிய கணிதப் பேராசிரியர்களின் உரைகள் கணிதப் பிரியர்களுக்குப் பெருவிருந்து.
கதிரவன் எழில்மன்னன், சாரடோகா, கலிஃபோர்னியா |