BATM: பொங்கல்விழா
ஜனவரி 31, 2015 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் பொங்கல்விழா கொண்டாடியது. கிராமத்துக் குடில், செங்கரும்பு, மதுரை மல்லிகை எனச் சிறுவர் முதல் பெரியோர்வரை பாரம்பரிய உடையணிந்து, திறந்தவெளியில் பொங்கலிட்டு, குலவையிட்டு மகிழ்ந்தனர். பறையிசைக் குழுவினர் கிராமியப் பாடல்களுடன் அரங்கை வலம்வந்தனர். துணிக்கடை, நகைக்கடை, புத்தகக்கடை என ஒரு சிறிய கிராமச்சந்தையே அங்கு உருவாகியிருந்தது.

மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவரான திரு. தமிழன் விழாவைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். 1965 ஆண்டின் மொழிப்போரில் இறந்தோருக்கு நினைவஞ்சலி செலுத்தபட்டது. பத்மஸ்ரீ விருதுபெற்ற கலிஃபோர்னிய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், இந்திய தூதரக அதிகாரிகள் திரு. அசோக் வெங்கடேசன், திரு. பாஸ்கரன், டெஸ்லா மோட்டார் தலைமைத் தகவல் அதிகாரி திரு. ஜெய் விஜயன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். கரகம், காவடி, வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல்கள், கிராமிய நிகழ்ச்சிகள், திரையிசை நடனம் என அரங்கமே அதிர்ந்தது. ஜூலை மாதம் 2 முதல் 5ம் தேதிவரை நடைபெறவுள்ள வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ்விழாபற்றி அறிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் முத்திரை பதித்த திருமதி. உமையாள் முத்து அவர்கள் தலைமையில் 'தமிழ் தழைத்திடத் தளராமல் உழைப்பது தாயகத் தமிழரே! புலம்பெயர் தமிழரே!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

அப்துல்லா கான்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com