ஃபிப்ரவரி 7, 2015 அன்று, ப்ளேனோ சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில், இர்விங் DFW வித்யாவிகாஸ் பள்ளி வளாகத்தில் 8வது திருக்குறள் போட்டி நடத்தப்பட்டது. சரியாகச் சொல்லும் ஒவ்வொரு குறளுக்கும் ஒரு டாலர் பரிசு எனத் தரும் இந்தப் போட்டியில் 11 வயது நந்தினி 333 குறள்களை முழு அர்த்தத்தடன் கூறி முதல் பரிசு வென்றார். 4 வயது சண்முகவ் 40 குறள்களை ஒப்பித்து மழலைப் பிரிவில் முதலிடம் பெற்றார். பிரணவ் மற்றும் அபிராமி பிற வயதுப் பிரிவுகளில் முதல் பரிசுகளை வென்றனர் மொத்தம் 135 குழந்தைகள், 3300 எண்ணிக்கையிலான குறள்களை ஒப்பித்தனர். கோப்பல், கொங்கு, DFW வித்யாவிகாஸ், பாலதத்தா, அவ்வை மற்றும் ப்ளேனோ தமிழ்ப் பள்ளிகளிலிருந்து மாணாக்கர் பங்கேற்றனர். பெரியவர்களுக்கும் போட்டி நடைபெற்றது.
கல்வியின் பயன் போன்ற கருத்துகளில் கட்டுரைப் போட்டி நடந்தது. இன்றைக்கு அவ்வையார் இருந்தால் 'தொலைக்காட்சி பார்க்காதே' என்று ஆத்திச்சூடி எழுதியிருப்பார் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார். முதல் பரிசுகளை லக்ஷ்யா, சீதா, அஜய் மற்றும் பெரியவர் பிரிவில் தீபா ஆகியோர் பெற்றனர்.
ஃபிப்ரவரி 21ம் தேதி ப்ளேனோ QD Academy வளாகத்தில் நடந்த அவ்வை அமுதம் போட்டியில் ஆத்திசூடி, நல்வழி, கொன்றை வேந்தன், மூதுரை என நான்கிலும் போட்டிகள் நடைபெற்றன. 120 குழந்தைகள் பங்கேற்றனர் முதல் பரிசுகளை சீதா, ஆதனா, லக்ஷ்யா, கீயா, அபினவ், சஹானா, சண்முகவ் (மழலை), ப்ரக்ருதி, காவ்யா, ஷன்மதி, நித்யா நந்தினி ஆகியோர் பெற்றனர். இவர்களில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முதல் பரிசுகள் பெற்றவர்கள்.
அவ்வையும் அறமும், அவ்வை வள்ளுவர் பார்வையில் செய்நன்றி போன்ற சிந்தனைக்குரிய தலைப்புகளில் பேச்சுப்போட்டியும் நடந்தது. சினம் காக்க என்று பேசிய சீதா முதல்பரிசு பெற்றார். லக்ஷ்யா, நந்தினி பிற பிரிவுகளில் முதல் பரிசு பெற்றனர்.
மாலை 5 மணிக்கு ஃப்ரிஸ்கோ ஹெரிடேஜ் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தமிழ் ஆராதனை விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் ஆராதனை விழாவின் முக்கிய அம்சமாக, சாஸ்தா தமிழ் அறக்கட்டளையும் தென்றல் மாத இதழும் இணைந்து 'சொல்லின் செல்வி' திருமதி. உமையாள் முத்து அவர்களை கவுரவித்தனர். (இதுபற்றிய விவரங்களை 'தெரியுமா?' பகுதியில் வேறொரு பக்கத்தில் காணலாம் - ஆசிரியர்).
சொல்லின்செல்வி பேசுகையில் "திருக்குறள் அலையை இங்கு உருவாக்கியுள்ளீர்கள் என்றுதான் நினைத்து வந்தேன். ஆனால் ஆத்திசூடி, நல்வழி, மூதுரை, கொன்றை வேந்தன், கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி என தமிழ்ப் பேரலையையே உருவாக்கியிருப்பதைப் பார்த்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினார்.
பாரதியார் பாடல்களுக்கு வெவ்வேறு தமிழ்ப் பள்ளி மாணவ மாணவியரின் நடனநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தாய்மொழி நாளில் இந்த விழா நடந்தது குறிப்பிடத்தக்கது. நடனங்களை புவனா அருண் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியை ஜெய்சங்கர் மற்றும் பழனிசாமி தொகுத்து வழங்கினர். திருக்குறள் போட்டியை வெங்கடேஷ் தலைமையேற்று நடத்தினார், அண்ணாமலை ஆராதனை விழா ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். அருண்குமார், விஜயகுமார், வெங்கடேசன் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டர் குழுக்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர்களை டாக்டர். ராஜ் வழிநடத்தினார். விசாலாட்சி வேலு நன்றியுரை கூறினார்.
சின்னமணி, டெக்சஸ் |