ஆஸ்டின்: காதலர்தின சிறப்புப் பேச்சரங்கம்
ஃபிப்ரவரி 15, 2015 அன்று ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் காதலர்தின சிறப்புப் பேச்சரங்கம் ரவுண்டுராக்கில் உள்ள பெஹ்ரைன்ஸ் ராஞ்ச் கம்யூனிட்டி சென்டரில் நடைபெற்றது. 'சொல்லின்செல்வி' திருமதி. உமையாள் முத்து சிறப்புரையாற்றினார். சங்கச் செயலாளர் திருமதி. சுகந்தி கோவிந்த் வரவேற்புரையாற்றினார்.

உமையாள் முத்து அவர்கள், "இலக்கியம் மற்றும் வெள்ளித்திரையில் காதல் - பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் மற்றும் வாலியின் பங்களிப்பு" என்ற தலைப்பில் சுவைபடப் பேசினார். சங்க இலக்கியத்தில் காதல், முற்காலக் காதல், தற்காலக் காதல் இவற்றின் பரிணாம வளர்ச்சியை சினிமாப் பாடல்கள், கவிதை வரிகளில் சொல்லி, நகைச்சுவை ததும்பப் பேசினார். இதனால் உற்சாகமடைந்த பார்வையாளர்கள் திரு. சண்முகம், திரு. காங்கேயன், திரு. ராம்குமார் ஆகியோர் பழைய சினிமாப் பாடல்களை பாடி, பேச்சரங்கத்திற்கு அழகூட்டினர். இறுதியில் சங்கத் தலைவர் திரு. அன்பு கிருஷ்ணசுவாமி நன்றியுரையாற்றினார். விழாவை ஏற்பாடு செய்யத் துணையிருந்த டாக்டர். சின்ன நடேசன் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார். சங்கத் துணைத்தலைவர் திரு. சங்கர் சிதம்பரம் மற்றும் தினகர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

சுகுணா கவர்னர்

© TamilOnline.com