ஃபிப்ரவரி 15 அன்று நியூ ஜெர்சி நாட்டிய சங்கமம், ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவன் கோவில் அரங்கத்தில், 'நாட்டிய சேவை' விழாவில் 'சந்நிதி' என்னும் படைப்பை மேடையேற்றியது. இதில் நியூ ஜெர்சியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். நேரடி இசைக்குழுவுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பல பூக்களைக்கொண்டு தொடுக்கபட்ட பூமாலைபோல ஐந்து கடவுளரைப் பற்றிய ஐந்து பாடல்களை மல்லாரியுடன் இணைத்து இது அமைக்கப்பட்டிருந்தது.
"ஸ்ரீ கணபதினி" என்னும் தியாகராஜ கீர்த்தனையுடன் துவங்கியது. "தணிகைமலை வாழும் திருமுருகா" என்ற பாடலின் நடனம் அழகாக இருந்தது. "சந்திரசூட சிவசங்கர" என்னும் புரந்தரதாசர் பாடலை வர்ணமாக ஆடியது சிறப்பு. தொடர்ந்து, தேவிமீதமைந்த "ரஞ்சனி ம்ருது பங்கஜலோசனி" என்னும் தஞ்சை சங்கர ஐயர் பாடலுக்குக் கலைஞர்கள் ஆடியவிதம் கோவிலுக்கே பார்வையாளர்களைக் கொண்டுசென்றது. ஜெயதேவர் அஷ்டபதியான "ஹரிரிகமுக்த" என்ற கிருஷ்ண பரமாத்மாவின் லீலை விளக்கத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இந்த நாட்டிய சங்கமம், பரதநாட்டியம் அறிந்தவர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கும் நாட்டியத் திறனை வெளிப்படுத்த சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருகிறது. வெவ்வேறு குருக்களிடம் பயின்ற கலைஞர்கள் வேறுபாடின்றி, நாட்டியக்கலை மேம்பாட்டையே குறிக்கோளாகக் கொண்டு நடனமாடியது சிறப்பு.
அபர்ணா ராம், டாக்டர் முத்துசாமி, எடிஸன், நியூ ஜெர்சி |