அ.தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் நிதி நிலைமையைக் காரணம் காட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக அரசுப் போக்கு வரத்து, மின்வாரியம், ஆவின், சிவில் சப்ளைஸ் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் பல்வேறு அதிரடித் திட்டங்களை மேற்கொண்டதோடு ஊழியர்களுக்கு தீபாவளி சமயத்தில் 8.33 சதவீத போனஸ் மட்டுமே வழங்கி வந்தது.
இம்முறை தீபாவளிக்கு வழக்கம் போல் 8.33 சதவீத போனஸ்தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத் தொகை ஆகமொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து போக்குவரத்து மற்றும் மின்வாரியத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தங்களை தமிழக அரசு அறிவித்து ஊழியர்களிடையே சுமுகமான உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்குவரத்து ஊழியர்கள் ஒப்பந்தத்தைச் சில சங்கங்கள் ஏற்க மறுத்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன. ஆனால் வேலைநிறுத்தப் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அ.தி.மு.கவுக்கு ஆதரவான சங்கங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
அதுபோல் மின் ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதிய உயர்வாக 500 ரூபாயை அளிக்க அரசு முன்வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஊதிய ஒப்பந்தம் 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அறிவித்தது. மேலும் கடந்த டிசம்பர் 2000 முதல் 2002 நவம்பர் வரை ஓய்வுபெற்ற மின் ஊழியர் களுக்கு சில சிறப்புச் சலுகைகளும் அறிவித்தது. ஆனால் சில சங்கங்கள் குறைந்தபட்ச ஊதிய உயர்வாக 500 ரூபாயை ஏற்க மறுத்துவிட்டன. ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத் திற்கான அழைப்பையும் விடுத்தன.
இதற்கிடையில் முதல்வரின் போனஸ் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக மாநில அரசுப் பொதுத்துறையில் செயல்படும் சிஐடியு தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. அரசுக்கு சொந்தமான குடிநீர் வடிகால் வாரியம், அரசு மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், அரசு சிமெண்ட், கூட்டுறவு நூற்பாலைகள், கனிமவள நிறுவனம், தமிழ்நாடு மாக்னைசட் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக போனஸ் வழக்கப் படவில்லை. அவர்களுக்கு போனஸ் மறுக்கப்பட்டுள்ளது. எனவே அரசு போக்கு வரத்தைப் போலவே அத்தனை மாநில பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த ஆண்டு 20 சதவீதம் போனஸ் அறிவிக்க வேண்டும் என்றும் இச்சங்கங்கள் வலியுறுத்தின.
இது இப்படி இருக்க, போக்குவரத்து, மின்சாரம், கைத்தறி, விவசாயிகள் வரிசையில் அரசு ஊழியர்களும் தங்களுக்கான சலுகைகளையும், கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக் கிறார்கள். அரசு ஊழியர் மாநாட்டில் பதில் கிடைக்கும்.
கேடிஸ்ரீ |