தேர்தல் மாநாடுகள்!
சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர் களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசுகையில், ''தேர்தலைச் சந்திக்க அ.தி.மு.க. தயாராகிவிட்டது. எப்போதும் இல்லாத அளவுக்கு அ.தி.மு.க. வலுவாக உள்ளது. மக்களுடன் அ.தி.மு.க.வுக்கு உள்ள கூட்டணி முன்பைவிட மிகவும் வலுவாக உள்ளது'' என்று கூறிச் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தயார்நிலையைத் தெளிவுபடுத்தினார்.

தேர்தலுக்கு இன்னும் ஐந்தாறு மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.கவும், தி.மு.க.வும் இப்போதே தேர்தலுக்கு ஆயத்தமாகி விட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த அ.தி.மு.க. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கனியை கைப்படுத்த வேண்டும் என்பதில் முனைப்பாகச் செயல்படத் தொடங்கி விட்டது. காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தந்த வெற்றி அ.தி.மு.க.வுக்கு தெம்பைத் தர, வெற்றிக்கு முக்கியக் காரணமான பெண் களைக் கவரும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

பிற்பட்ட மாணவர்களுக்கு இலவசச் சைக்கிள் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலதிட்டங்கள், உழவர் பாதுகாப்புத் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு அறிவித்து, அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு மகளிர் நலமேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மாநில மாநாடு மற்றும் சுயஉதவிக் குழு உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி ஒன்றை அ.தி.மு.க அரசு நடத்தியது. இவ்விழாவில் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு அம்சங்களையும், திட்டங் களையும் அறிவித்தார் முதல்வர். மகளிர் சுயஉதவிக்குழுக்களை அ.தி.மு.க. அரசியலாக் கிறது என்று தி.மு.கவும் அதன் தோழமை கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.

தி.மு.க.வும் தன் பங்குக்கு மகளிருக்கான 33 சதவீகித இடஒதுக்கீட்டைக் கையில் எடுத்துக் கொண்டு, அதற்கான பெண்கள் பேரணி ஒன்றை நடத்திப் பெண்கள் வாக்கு களை கவருவதில் அ.தி.மு.க.வுக்கு தாங்களும் சளைத்தவர்களல்ல என்பதை நிருபித்தது.

மகளிர் மாநாட்டைத் தொடர்ந்து உழவர் பாதுகாப்புத் திட்டத்திற்கான மாநாட்டை அ.தி.மு.க. அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இத்திட்டத்திற்கான தொடக்க விழா பிரம்மாண்ட விழாவாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற் காக மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் விவசாயத் தொழில் செய்யும் மகளிருக்கு பண்ணை சார்ந்த மற்றும் பண்ணை சாராத வேளாண் நடவடிக்கைகளில் பயிற்சி அளித்தல், வேளாண் விரிவாக்கத் திட்டத்தை அமல் செய்தல் ஆகிய திட்டங்களை அறிமுகம் செய்து தங்கள் அரசு விவசாயி களின் நலன் காக்கும் அரசு என்று சொல்லாமல் சொன்னார் ஜெயலலிதா.

அடுத்து அரசு ஊழியர்கள் மாநாட்டிற்குத் தயாரிப்பு நடந்து வருகிறது. அக்டோபர் 22-ம் தேதி நடக்கவிருந்த மாநாடு சில காரணங் களால் டிசம்பர் மாதம் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்துச் சங்கங்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் விரும்புவதாகத் தெரிகிறது. தனிநபர் மற்றும் ஒரு சில சங்கங்களை முன்னிலைப்படுத்தி மாநாடு நடத்தப்படுவதை முதல்வர் விரும்பவில்லை என்றும் செய்திகள் உலா வருகின்றன.

சுமார் 10 லட்சம் அரசு ஊழியர்கள் இம்மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் அரசு ஊழியர்களுக்குப் பல்வேறு சலுகைகளை அள்ளிவழங்குவார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

எதிர்க்கட்சிக் கூட்டணி இவற்றை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com