தெரியுமா?: மேரிலாண்ட் மாகாண போக்குவரத்து ஆணையர் டாக்டர் ராஜன்
தமிழகத்தில் பிறந்த அமெரிக்க இந்தியரான டாக்டர் ராஜன் நடராஜன், 2014 டிசம்பர் 29ம் தேதி மேரிலாண்ட் மாகாணத்தின் போக்குவரத்துத் துறை ஆணையராக , மாண்ட்கோமெரி கவுண்டி சர்க்யூட் கோர்ட் வளாகத்தில் பதவி ஏற்றார். (இவரைப்பற்றிய முழு விவரங்களுக்குப் பார்க்க: தென்றல், செப்டம்பர் 2011)

புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்துக்காட்டில் பிறந்த டாக்டர் ராஜன், மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.

கவர்னர் மார்ட்டின் ஓ'மலேயின் ஆட்சியில் வெளியுறவு மற்றும் தொழில்துறையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியபோது பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தினார். அரசு–தனியார் துறைகளை இணைத்துச் செயல்படுத்துவதில் ராஜன் வல்லவர். மேரிலாண்டில் ITக்குத் தனித்துறை வேண்டும் என்று கவர்னரிடம் எடுத்துக்கூறி உருவாக்க வழிசெய்தார்.

கவர்னர் ஓ'மலேவின் இந்தியப் பயணத்தில், பல்வேறு மாநிலங்களுடன் வர்த்தக, நல்லுறவு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக ராஜன் முன்னின்று ஏற்பாடுகள் செய்தார். சீனா , ஐக்கிய அரபு நாடுகள், தென் கொரியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, சிங்கப்பூர், நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் மேரிலாண்ட் மாகாணத்திற்கும் இடையே உறவு மேம்படவும், பல்வேறு தொழில்துறை ஒப்பந்தங்கள் ஏற்படவும் முக்கியப் பங்காற்றினார்.

இவரது சாதனைகளைப் பாராட்டிய கவர்னர், மேரிலாண்ட் போக்குவரத்துத் துறை ஆணையராக நியமனம் செய்துள்ளார். பதவிக்காலம் மூன்றாண்டுகள். துறை ஆணையராகப் பதவியேற்ற முதல் இந்தியர், தமிழர் என்ற பெருமையை டாக்டர் ராஜன் பெறுகிறார். ராஜனின் மனைவி டாக்டர் சாவித்ரி ராஜன் அமெரிக்க விவசாயத்துறை விஞ்ஞானி. இவர்களுக்கு ராம், பாலா என்று கல்லூரியில் பயிலும் மகன்கள் உள்ளனர். டாக்டர் ராஜனின் புதிய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com