சென்னை மாநகராட்சியின் துணைமேயர் கராத்தே தியாகராஜன் தலைமறைவாகிவிட, அவர் எங்கிருக்கிறார் என்பதைப் பற்றிப் பல்வேறு யூகங்களையும், சந்தேகங்களையும் பத்திரிகைகளும், மின்னூடகங்களும் விதவிதமான தகவல்களைக் கடந்த சில வாரங்களாக வெளியிட்டன. ஆனால் தியாகராஜன் தன்னுடைய செல்பேசி மூலம் பல்வேறு பத்திரிகைகளுடன் தொடர்பு கொண்டு தான் தலைமறைவாகவில்லை என்றும், தன்னுடைய சொந்தப் பணி காரணமாக வெளியூர் சென்றிருப்பதாகவும், விரைவில் சென்னை வருவதாகவும் கூறினார். ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்கிற விவரத்தைச் சொல்லவில்லை.
தியாகராஜன் தலைமறைவுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் அவர் சார்ந்த அ.தி.மு.க.வோ, தமிழக அரசோ இந்த விஷயத்தில் எதுவும் கூறாமல் மெளனம் காத்துவருகின்றன. ஆளும்கட்சி மட்டுமல்லாது, தமிழக எதிர்க்கட்சிகள்கூட எந்தவிதமான கருத்தும் கூறாமல் விலகி நிற்பது குறிப்பிடத்தக்கது.
தியாகராஜனின் மனைவி ஜோதி, தன் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், தன் கணவர் மற்றும் தன் குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பத்திரிகைகளில் பேட்டியளித்தது மட்டுமல்லாமல், நீதிமன்றத் திற்குச் சென்று தங்கள் வீட்டிற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தமிழக அமைச்சர் ஜெய குமார் இப்பிரச்சனைகள் பற்றி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது மட்டு மல்லாமல் தியாகராஜன் மீது எந்தவிதமான வழக்கும் இல்லை அவர் இன்றுவரை அ.தி.மு.க.வில்தான் இருக்கிறார் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல மைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலருமான ஜெயலலிதா சென்னை மாநகராட்சியிலுள்ள அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர்களைத் தலைமைச் செயலகத்திற்கு அவசரமாக அழைத்தார். அந்தச் சந்திப்பில் நகரமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் பற்றி அதிருப்தி தெரிவித்தது மட்டுமல்லாமல் துணைமேயர் கராத்தே தியாகராஜனின் நடவடிக்கைகள் குறித்தும் தன் அதிருப்தியை வெளியிட்டார். அப்போது அவர்களை முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எச்சரித்த தாகவும் செய்திகள் பத்திரிகைகளில் வந்தன.
முன்னர் சென்னை மாநகராட்சி மன்றத் தில் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தவர் தியாகராஜன். அப்போதைய தி.மு.க. ஆட்சியின் கடைசி காலத்தில் காங்கிரசி லிருந்து விலகி அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அ.தி.மு.க.வில் அவருக்குத் தென்சென்னை மாவட்டச் செயலர் பதவி அளிக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் போட்டி யிட்டு, அதில் அ.தி.மு.க. பெரும்பான்மை இடங்களைப் பெறவே தியாகராஜன் துணை மேயராகப் பதவியேற்றார்.
தியாகராஜன் பொறுப்பேற்றதிலிருந்தே அவர் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றங்களைக் கூறிவந்தன. முக்கியமாக அவரது காருக்கு மாநகராட்சி சின்னம் பதித்த கொடி கட்டியது எதிர்க்கட்சி களிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. மேலும் ஒருவருக்கு ஒரு பதவி என்கிற நீதிமன்ற உத்தரவுப்படி அப்போது மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் பதவி விலக நேர்ந்ததை அடுத்துத் துணை மேயராக இருந்த தியாகராஜன் மேயருக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவானது.
இதைத் தொடர்ந்து பல்வேறு கால கட்டங்களில் சென்னை மாநகராட்சிக் கவுன்சிலர்கள் பற்றியும், துணை மேயர் தியாகராஜன் பற்றியும் பல்வேறு புகார்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு வந்துகொண்டே இருந்தன. மேலும் கலை வாணன் கமிஷனராக இருந்தபோது மாநகராட்சியில் விடப்படுகிற ஒப்பந்தப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், சென்னை நகரின் விளம்பரப் பலகைகள் வைத்ததில் முறை கேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஒரு காலகட்டத்தில் துணைமேயர் தியாக ராஜனுக்கும், இப்போதைய சென்னை மாநகராட்சி கமிஷனர் விஜயகுமாருக்கு மிடையே மோதல்கள் ஏற்பட்டு வலுத்த சமயத்தில்தான் தியாகராஜன் தலைமறைவானார்.
இந்நிலையில் கமிஷனருக்கு எதிராக அ.தி.மு.க. கவுன்சிலர் பன்னீர்செல்வம் தீக்குளிக்க முயற்சி செய்த விவகாரத்திற்குப் பிறகுதான் துணைமேயர் தியாகராஜன் மீது முதல்வர் கடும் அதிருப்தி அடைந்தார் என்றும், அதன் பிறகே தியாகராஜன் தலைமறைவாகிப் போனார் என்றும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கராத்தே தியாகராஜன் கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல் பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்ட தாலும் கட்சியை விட்டு அவரை நீக்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்ட தோடு, இனி தியாகராஜனுடன் அ.தி.மு.க வினர் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
துணைமேயரை மாற்றிவிட்டு வேறு நபரை நியமிப்பதிலும், மாநகராட்சியைக் கலைப் பதிலும் உள்ள சட்டச் சிக்கல்களை அரசு ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
கேடிஸ்ரீ |