தெரியுமா?: 'சொல்லின்செல்வி' உமையாள் முத்துவுக்குப் பாராட்டு
ஃபிப்ரவரி 21, 2015 அன்று ஃப்ரிஸ்கோ ஹெரிடேஜ் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தமிழ் ஆராதனை விழாவின் முக்கிய அம்சமாக, சாஸ்தா தமிழ் அறக்கட்டளையும் தென்றல் மாத இதழும் இணைந்து, 'சொல்லின்செல்வி' திருமதி. உமையாள் முத்து கவுரவிக்கப்பட்டார். இவர் 16 வயதுமுதல் 56 ஆண்டுகளாக, உலகெங்கிலும் 6000 மேடைகளுக்குமேல் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

ஏற்புரை ஆற்றிய உமையாள் முத்து, "ஒரு குறளுக்கு ஒரு டாலர் வழங்குவதன்மூலம் 'தமிழ் படித்தால் பிழைப்பில்லை" என்னும் தவறான எண்ணத்தைத் தகர்த்துள்ளீர்கள். ஒவ்வொரு டாலரும் தமிழ் படித்தால் வாழ்வுண்டு என்ற நம்பிக்கையைக் குழந்தைகளுக்கு உண்டாக்கும். இந்தக் குழந்தைகள் சம்பாதித்துள்ள முதல் வருமானம் திருக்குறள்மூலம் கிடைத்துள்ளது என்பதே தமிழுக்குப் பெருமை" என்றார்.

அவர் ஒரு சுவையான சம்பவத்தை நினைவு கூர்ந்தார். "சுப்பிரமணியதாஸ் என்ற திருக்குறள் அவதானி ஒருவர் கி.ஆ.பெ. வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார். மகளிடம், இன்றைக்கு நம் வீட்டில் 9 உண்டா என்று கேட்கிறார் கி.ஆ.பெ. அதாவது 'விருந்து' உண்டா என்று அர்த்தம். வந்தவரோ அம்மா நான் 95ல் இருக்கிறேன் அதனால் ஒன்றும் வேண்டாம். அதாவது நான் 'மருந்து' சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். ஆகையால் ஒன்றும் வேண்டாம் என்கிறார். திருக்குறள் அதிகார எண்களைக் கொண்டு புதியதொரு மொழியையே வீட்டுக்குள் உருவாக்கலாம்" என உமையாள் முத்து கூறியதை அவையோர் ரசித்தனர்.

இதனை ஒருங்கிணைத்து வழிநடத்தி வரும் திரு. வேலு ராமன் அவர்களுக்கு 'திருக்குறட்செல்வர்' என்ற பட்டத்தைச் சொல்லின் செல்வி வழங்கினார். "14 வருடங்களாக அமெரிக்காவில் தென்றல் செய்துவரும் அரிய தமிழ்ச்சேவையை வெகுவாகப் பாராட்டுகிறேன்" என்றும் அவர் கூறினார்.

சின்னமணி,
ப்ளேனோ, டெக்சஸ்

© TamilOnline.com