ஆத்ம சாந்தி (அத்தியாயம் 11)
மீண்டும் சதி

பரத்துக்குத் தன் பாட்டி வள்ளியம்மாளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள உடனடியாகச் சரியான சமயம் கிடைக்கவில்லை. ஒய்வுக்குக்கூட நேரமில்லாமல் புதிய எஞ்சின் கண்டுபிடிப்புப் பணியில் விஷ்வனாத்தின் கை

சொடுக்கலுக்கும், கண் சிமிட்டலுக்கும் ஈடுகொடுத்து வேலை செய்யவேண்டி இருந்தது. பெரும்பாலான நாட்கள் அலுவலகத்திலேயே தங்கவேண்டி வந்தது. ஆரம்பத்தில் பதற்றமாகவும், ஒன்றும் புரிபடாமலும்

இருந்தது. ஆனால் இரண்டே மாதத்தில், விஷ்வனாத் மனதில் நினைப்பதை உடனே புரிந்துகொண்டு செய்யுமளவுக்குச் சாமர்த்தியம் ஆகிவிட்டான் பரத். விஷ்வனாத்துக்கு தன் கணக்கு தப்பவில்லை என்று இதில்

பரத்தைவிட அதிகப் பெருமை மனதுக்குள் இருந்தது. ஆனாலும் பரத்துக்கு மனதில் ஒரு சந்தேகம் மட்டும் ஓயவில்லை. புதிய எஞ்சின் கண்டுபிடிப்பு இரண்டு தளங்களில் ஓடிக்கொண்டிருந்தது. வெளிப்படையாக,

கேந்திரா மோட்டார்சின் ஆராய்ச்சிப்பிரிவில் சில வடிவமைப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. இதனோடே, விஷ்வனாத், பரத், டாக்டர் மித்ரன் மற்றும் வாணி இவர்களைக் கொண்ட ரகசியக்குழு வேறு

வடிவமைப்புக்களிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தனர்.

மற்றவர்கள் பார்வைக்கு இவையெல்லாம் ஒரே ஆராய்ச்சியின் வெவ்வேறு பகுதிகள்போலத் தோன்றினாலும், பரத்துக்கு இரண்டும் சம்பந்தமேயில்லாத வெவ்வேறு ஆராய்ச்சிகளாகத் தோன்றியது. இரண்டுக்கும் என்ன

சம்பந்தம்? எதற்காக விஷ்வனாத் இப்படி இரண்டு தளங்களில் வேலை செய்கிறார்? எல்லாரையும் ஒரே ஆராய்ச்சியில் ஈடுபடுத்தினால் சீக்கிரம் வேலையை முடிக்கலாமே? இப்படி பரத்தின் ஒரு சந்தேகம் பல சந்தேகக்

கேள்விகளாகியும், விஷ்வனாத்திடம் கேட்டுத் தெளிந்துகொள்ளும் தைரியம் அவனுக்கு வரவில்லை. கேந்திராவும் தன் புதிய பொறுப்பினால் அதிக வேலைச்சுமையைத் தாங்கிக்கொண்டிருந்தாள். பரத்தை அடிக்கடி

பார்க்கவும் அவளுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. விஷ்வனாத்மூலம் பரத் திறமையாக வேலை செய்கிறான் என்ற செய்திமட்டும் அவளுக்குக் கிடைத்தது.

பரத் நேரம் கழித்துச் சில நாட்கள் வேலை முடித்து வீட்டுக்குத் திரும்ப வேண்டியிருந்தால், வீடு திரும்ப பஸ்ஸோ, ரயிலோ அந்த அகாலவேளையில் கிடைக்காது என்பதால் அவன் அலுவலகத்திலேயே தங்கிவிடுவான்.

விஷ்வனாத் இதை ஒருநாள் கவனித்து அவனிடம் காரணம் தெரிந்துகொண்டதும், இனி நேரம் ஆகிவிட்டால் கம்பெனிக் காரிலேயே வீட்டுக்குப் போய்வரலாம் என்று உத்தரவிட்டார். இந்த விவரத்தை விஷ்வனாத்மூலம்

தெரிந்துகொண்ட கேந்திரா அன்றிரவு வேண்டுமென்றே நேரம் கழித்து அலுவலகத்தைவிட்டுக் கிளம்பினாள்.

இரவு ஒன்பதைத் தாண்டியிருந்தது. கதிரேசனுக்கு தூக்கம் கண்ணைச் சொக்கியது. வயதாகிவருகிறது என்று நினைத்துக்கொண்டார். அவர் பெண் வாணி, அவரை இந்த வேலையை விட்டுவிட்டு வீட்டில் அக்கடா என்று

ஓய்வெடுக்கச் சொல்லி நச்சரித்துவருகிறாள். இவர்தான் கேட்டபாடில்லை. அவர்கள் சம்பாஷணை வழக்கமாக இப்படி இருக்கும்....

"அப்பா, என்ன முடிவெடுத்தீங்க?"

"எதைப்பத்தி? உன் கல்யாணத்தை பத்தியா?"

"என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்?"

"படிப்பு முடிக்கணும்னு சொன்னே, அப்புறம் வேலை கிடைக்கணும்னு சொன்னே. எல்லாம் ஆச்சு. வயசும் ஆயிட்டே போவுது."

"பேச்சை மாத்தாதீங்க. நாந்தான் இப்ப வேலை பாக்குறேன், நல்லா சம்பாதிக்கிறேன் இல்லை. நீங்க இன்னும் எதுக்கு வேலைக்குப் போகணும்? அதுவும் நேரம் கெட்ட நேரத்துலே வண்டி ஓட்டிக்கிட்டு, இந்த வயசுலே

இது தேவையா?"

"உடம்புல இன்னும் தெம்பு இருக்கும்மா. உன் கல்யாணம் நிச்சயம் ஆவட்டும். இந்த வேலைய நான் விட்டுடறேன். சரிதானே. நீ அதுக்கு ஒத்துக்க, நான் இதுக்கு ஒத்துக்கறேன். எனக்கும் உன்னைக் கரையேத்திட்டு

கிராமத்துக்குப் போய் ஆத்தாவோட இருந்துறணும்னு தான் ஆசை."

"பாக்கலாம்பா, இனிமேலா ஒருத்தன் பொறக்கப்போறான்? உங்களுக்கும் எனக்கும் பிடிக்கிறமாதிரி யாராவது கிடைக்கட்டும். எல்லாம் வரட்டும் பாக்கலாம்."

கதிரேசனுக்கு கடந்த இரண்டு மாசங்களாக இந்த மாதிரி சம்பாஷணைகளின் முடிவில், "யாரவது என்னம்மா? உன்கூட வேலை பாக்குற நம்ம பரத் தம்பியைப்பத்தி என்ன அபிப்ராயப்படறே?" என்று கேட்கத் தோன்றும்.

ஆனால், சாதாரண நட்பாக இருந்துவிட்டு, இப்படி ஒன்று கேட்கப்போய் வாணியின் மனதில் கல்மிஷத்தைக் கலக்க அவர் விரும்பவில்லை. ஒருநாள் பரத்திடமே தனியாக இதைப்பற்றிக் கேட்டுவிடுவது என்று

முடிவுகட்டினார். இன்று, பரத் நேரம் கழித்து வீட்டுக்குப் போவதால், அவனை வீட்டில் விடவேண்டிவரும், அப்போது மெள்ள இதைப்பற்றிக் கேட்கலாம் என்று நினத்திருந்தார். ஆனால் அந்த நினைப்பு பலிக்கவில்லை.

பரத் வேலையை முடித்து உடலை முறுக்கிக்கொண்டு களைப்பை உதறி எழுந்தான். வயிறு பசிப்பதை அப்போதுதான் உணரமுடிந்தது. இரண்டே மாதத்தில் எவ்வளவு மாறிவிட்டது! இந்த வேலையில் சேருமுன்,

பரத்துக்குப் பசி ஒருநொடிகூடத் தாங்காது. வீட்டில் அதற்குள் கஸ்துரி எதுவும் செய்து வைக்கவில்லை என்றால், காச்மூச்சென்று கத்திவிட்டுக் கனகராஜ் வீட்டுக்குப் போய் எதையாவது கொட்டிக்கொள்வான். அதுவும்

இல்லாவிட்டால், தெருக்கோடி நாயர்தான் அவனுக்கு அன்னபூரணிபோல பஜ்ஜியோ, வடையோ டீயோடு கொடுப்பார். இப்போதோ பசி, தூக்கமெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை. இந்த மாற்றம் எப்படி

நேர்ந்ததென்பது பரத்துக்குப் புரியாமலே இருந்தது. பிறகு கொஞ்சநாளில், பெரிசாக வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறி இதற்குக் காரணம் என்று தெரிந்துகொண்டான். இந்த முயற்சியில் எப்படியும்

வெற்றியடையும்வரை வேறு நினைப்புகளுக்கோ, கவனக்கலைப்புக்கோ இடம் தரக்கூடாது என்று முடிவெடுத்திருந்தான்.

அவன் கிளம்ப எத்தனித்த நேரம், இண்டர்காம் சிணுங்கியது. "ஹலோ பரத் ஹியர்"

"ஹலோ மிஸ்டர் ரைட் ஹேண்ட், உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா? செக்யூரிட்டியைத் தவிர எல்லாரும் போயாச்சு." அது பெண்குரல் என்பதுமட்டும் தெரிந்தது ஆனால் இணைப்புக் கோளாறாலோ

எதனாலோ, அது கேந்திராவின் குரல் என்பதை பரத்தால் அறியமுடியவில்லை. இந்த நேரத்தில் அதுவும் ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஒரு பெண் ஃபோன் செய்தால் அது வாணிதான் என்று முடிவுகட்டிவிட்டான்.

"கிளம்பியாச்சு. அப்ப உங்க ஃபோன் வந்தது, ஆமா என்ன வாணி இந்த நேரத்துலே கூப்பிட்டிருக்கீங்க? எனிதிங்க் அர்ஜண்ட்?"

கேந்திராவுக்கு ஒரு நல்ல படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது பவர் கட் ஆனதுபோல் இருந்தது. ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, "என்ன பரத் என் குரல்கூட மறந்துட்டீங்களா? நான் கேந்திரா"

"சாரி கேந்திரா மேடம். லைன் கிளயரா இல்லை. அதுவும் இன்னேரம் நீங்க கூப்டுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலை."

"சரி பரவாயில்லை. இப்பதான் நானும் கெளம்பறேன். கதிரேசன்தான் சொன்னாரு நீங்க இன்னும் கிளம்பலை, உங்களையும் வீட்ல விடணும்னு. நான் வண்டி எடுத்துட்டுப் போயிட்டா நீங்க இங்கியே தங்கவேண்டி

வரும். அதனாலேதான் கிளம்பறதுக்கு முன்னே கூப்பிட்டேன். அப்புறம் இந்த என் பேரோட இந்த மேடம்ங்கிற வாலைச் சேக்காதீங்க. ப்ளீஸ்..." கேந்திராவுக்கு இன்னும் அவன் தன் குரலை அடையாளம்

கண்டுகொள்ளாத ஆத்திரமும், அவன் அன்னியப்படுத்துவதும் உள்ளத்தைப் பொங்கவைத்ததோடு, கூட சாம்பார், சட்னி எல்லாம் கூட வைத்தது.

"சாரி கேந்திரா. நீங்க அங்கியே ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் இங்க எல்லா பேப்பர்சையும் உள்ளே பூட்டிட்டு வரணும்."

"சரி நான் உங்க ரிசர்ச் ரூம் வெளிலதான் இருக்கேன். கதவைத் திறங்க நீங்க வேலையை முடிச்சதும் கிளம்பலாம்."

"என்னை ஏதாவது டெஸ்ட் பண்றீங்களா? சீரியசாதான் சொல்றீங்கனா, மறுபடியும் சாரி. இது ரகசிய ஆராய்ச்சி அறை. இங்க எங்க நாலு ப்ராஜக்ட் ஆட்களுக்கு மட்டும்தான் வர அதிகாரம் இருக்கு. இதை மீறினா,

என் பாஸ், உங்க அப்பா, என் வேலையைக் காலி பண்ணிடுவாரு. அப்புறம் நான் மறுபடியும் யாருக்காவது கார் ரிப்பேர் ஆகுமா? அதைச் சரிபண்ணி நான் வேலை வாங்கலாமானு நடுரோட்டுல நிக்க

வேண்டியதுதான்."

பரத் தங்கள் முதல் சந்திப்பை நினைவுபடுத்தியதும் கேந்திரா சற்றே குளிர்ந்தாள். "சரி சரி, சீக்கிரம் கெளம்புங்க, என்னாலே உங்க வேலை போகவேணாம். நான் வெளியேவே வெயிட் பண்றேன்."

"இதோ கெளம்பிட்டேங்க," ஃபோனை உடனே வைத்துவிட்டுப் பரபரவெனக் கிளம்பினான்.

பரத் தான் கடைசியாக அந்த ரகசிய ஆராய்ச்சிக்கூட அறையை விட்டு வெளியே வந்தான். வெளியே வட்டமாகப் போட்டிருந்த சோஃபாவில் நடுவில், களைப்பாக கேந்திரா அமர்ந்திருந்தாள். என்ன களைப்பாயிருந்தாலும்,

பரத்துக்கு அவளைப் பார்த்தபோது உற்சவம் முடித்த மறுநாள் தேர் போலவே அழகில் குறைவில்லாமல் தோன்றினாள்.

"என்னங்க தூங்கிட்டீங்களா? சாரி. என்னாலே உங்களுக்கு லேட் ஆயிருச்சு."

"தூங்கலை, யோசிச்சிட்டிருந்தேன்."

மெத்தென்றிருந்த குஷன் சோஃபாவிலிருந்து அவள் திடுமென எழவே அயர்ச்சி காரணமாக ஒரு கணம் தள்ளாடி நிலைகுலைந்தாள். பரத் அவளைத் தாங்கிப்பிடித்தான். கேந்திராவுக்கு, பவர்கட் நீங்கி மறுபடி பவர் வந்து

நல்ல படம் தொடர்வதுபோல் இருந்தது. அவளுக்கு வாழ்க்கையில் முதல்முறையாக நாணம், வெட்கம் போன்ற உணர்வுகள் பெரியமனுஷத்தனம், கார்ப்பரேட் லீடர் போன்ற போர்வைகளை விலக்கி எட்டிப்பார்த்தன.

பரத்துக்கு வெல்வெட் மெத்தையில், சந்தன மணம் கமழ யாரோ தள்ளிவிட்டதைப்போல் இருந்தது. இவை ஒரு கணமே ஆனாலும், இருவர் மனதிலும் ஒரு இனம்புரியாத கிளர்ச்சியை உண்டுபண்ணியது. ஆனாலும்,

நிஜவாழ்க்கையில் அவர்களின் இன்றைய நிதர்சனம் மீண்டும் அவர்களைச் சுய நினைவுக்குத் தள்ளியது.

"சாரிங்க, நீங்க விழப்போனீங்க, அதான்...."

"என்ன இன்னிக்கு சாரி டேயா? எல்லாத்துக்கும் சாரி சொல்றீங்க. நான்தான் தேங்க்ஸ் சொல்லணும்," ஒருவித அன்னியோன்னியத்தோடே பரத்துக்கு நெருக்கமாக நடந்தாள் கேந்திரா. கதிரேசனுக்கு கேந்திராவும்,

பரத்தும் சேர்ந்து வருவதைப் பார்த்ததும், "சே இன்னிக்கு பரத்கிட்ட வாணியைப்பத்தி பேசமுடியாது. கேந்திரா அம்மாவை வெச்சுக்கிட்டு, பரத்கிட்ட இதைப்பத்தி பேசக்கூடாது. என்னவோ, இந்தப் பொண்ணோட

கல்யாணவிஷயம் பத்தி எதை எடுத்துக்கூட்டினாலும் தட்டிக்கிட்டே போவுது" என்று கவலைப்பட்டார்.

கேந்திரா பின் சீட்டில் அமர்ந்தாள். பரத் டிரைவருக்கு அருகில் இருக்கும் சீட்டில் அமர எத்தனித்தபோது, கேந்திரா, "பரத் இங்க பின்னாலே வாங்க" என்றதும்,
பரத் உத்தரவுக்குப் பணிந்தான்.

"கதிரேசன் அண்ணே, இன்னிக்கு நான் அண்ணாநகர் பங்களாவுக்கு போறேன். நீலாங்கரைக்குப் போயிடப்போறிங்க."

"சரிம்மா, மொதல்ல உங்களை அண்ணாநகர்ல விட்டுட்டு அப்புறம் தம்பியை திருவல்லிக்கேணில விட்டுடறேன்." கதிரேசனுக்கு பரத்தோடு தனியாகப் பேச வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.

"இல்லை வழியில மொதல்ல திருவல்லிக்கேணிதானே வருது. இவர் எதுக்கு அண்ணாநகர் போயித் திரும்பவரணும்?" கேந்திராவுக்கு பரத்தை இறக்கிவிடும் சாக்கில் அவன் வீட்டையும், அவன் பெற்றோரையும் பார்க்க

ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொள்ளப் பார்த்தாள்.

"ரெண்டும் வேணாம், வழியில கிண்டியில என்னை எறக்கிவிடுங்க. நான் ஒரு ஆட்டோ எடுத்து வீட்டுக்கு போயிருவேன். அண்ணனுக்கு இப்பவே தூக்கம் சொக்குது. அவர் இதுக்கப்புறம் திரும்ப இங்க அவர் வீட்டுக்கு

வரணும். சிரமப்படுத்தவேணாம்" கேந்திரா, கதிரேசன் இருவர் நினைப்புக்கும் பரத் ஆப்பு வைத்தாலும், இருவரும் அவன் மற்றவர் இவனுக்காக சிரமப்படக்கூடாது என்று நினைப்பதை மனதுக்குள்

பாராட்டிக்கொண்டார்கள்.

*****


என்ன கைலாஷ், அந்த புதுத் துடைப்பம் பரத்தோட ஜாதகத்தை மொத்தமா கலெக்ட் பண்ணி குடுக்கறேனு சொன்னீங்க. ரெண்டு மாசமா மொக்கை ஸ்டாக்ல போட்ட பணம் மாதிரி அப்படியே இருக்கு. சக்கரவர்த்தி

கைலாஷை உசுப்பினார்.

"இவன் என்ன பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்டா? இல்லை பெரும்புள்ளியா? ஒண்ணுமில்லாத சாதாரணப் பூச்சி. இவனோட பலம், பலஹீனம், நண்பர்கள், எதிரிகள் எல்லாம் ஒரே சவசவ கேஸ். அதனாலேதான்

கொஞ்சம் டிலே."

"புரியலை."

"இப்ப ஒரு பெரும்புள்ளியோட பலஹீனம் என்னனா? ரேஸ், லேண்ட், தண்ணி, லேடீஸ்னு ஈசியா சார்ட் போட்டு, மடக்கலாம். இவனோட பலஹீனம் என்னனா? கிரிக்கெட் விளையாடறது, ஃப்ரெண்ட்ஸோட ஊர்

சுத்தறதுனு ரிப்போர்ட் தராங்க. மிஞ்சிப்போனா பெரிய கெட்டவழக்கம் என்னன்னா, ஜோதி தியேட்டர்ல ஷகிலா படம் பாக்கறதாம். இதெயெல்லாம் வெச்சு இவனை எப்படி மடக்கறது? நம்ம கைல போட்டு அந்த புது

கண்டுபிடிப்பு ரகசியத்தை அடையறது?"

"ஏதாவது இருக்கும், அவனைப்பத்தின எல்லா டீடெயில்சையும் என்கிட்ட குடு, நான் பிடிக்கறேன் அவனோட உயிர்நிலை எங்க இருக்குன்னு. அப்புறம் ஆரம்பிக்கலாம் ஆட்டத்தை."

"நோ சக்கி இதெல்லாம் டைம் வேஸ்ட். இதை ஈஸியா நான் முடிக்கணும்னு எறங்கிட்டேன்."

"என்ன சொல்றே?"

ஆளையே தீத்துடறதுனு முடிவு பண்ணிட்டேன். இவன் போனா நிச்சயம் கோவிந்த் வருவான் இல்லை. அவனை வெச்சு காரியம் முடிக்கலாம். இன் எனி கேஸ் இந்தாங்க நீங்க கேட்ட பரத்தோட டீடெய்ல்ஸ்."

சக்கரவர்த்தியின் டேபிளில் அந்த ஃபைலை வீசியெறிந்தான் கைலாஷ்.

"என்ன கேக்காம இப்படி ஒரு மடத்தனமான காரியம் ஏன் செய்யறே? இந்த எண்ணத்தை விடு. இந்த ஆளைத் தூக்கற வேலை வேணாம். நான் கார்ப்பரேட் வில்லன். என்னைக் குப்பத்து வில்லனாக்கிறுவ போலருக்கு.

தவிர பரத் போனா கோவிந்து வருவான்னு நிச்சயம் இல்லை. அந்த விஷ்வனாத் ஒரு விஷப்பாம்பு. பரத்தை தூக்கிட்டா அது இன்னும் உஷாராயிரும். இந்த ப்ராஜக்டையே க்ளோஸ் பண்ணாலும் பண்ணிரும். அது

கூடாது. எனக்கு இந்தக் கண்டுபிடிப்பு வேணும்.

"இப்படி சொல்வீங்கனு எதிர்பார்க்கலை. ஆனா டூ லேட். ஆளுங்க இன்னிக்கு ராத்திரி அவனைத் தீர்க்க முகூர்த்தம் குறிச்சுட்டாங்க. நிறுத்தமுடியுமானு பாக்கறேன். '

*****


பரத், கேந்திராவோடு ஒருவித "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" மனநிலையில் சொகுசுக்காரில் பயணித்துக்கொண்டிருந்தாலும், மனசு இந்த கவனக்கலைப்புகளுக்கு இடம் கொடுக்காதே என்று எச்சரித்துவந்தது.

அதனால் வேண்டுமென்றே கண்களை மூடியவாறு, கேந்திரா எதுவும் மேலே பேசிவிடாமல் மவுனசாமியார் வேடம் போட்டான். பரத் தன் அருகில் இருப்பதே கேந்திராவுக்குப் பிடித்திருந்தது அதனால் அவனது மவுனத்தை

அவள் கலைக்கவில்லை.

"கிண்டி வந்துருச்சு" கதிரேசன்தான் மவுனத்தைக் கலைத்தார்.

பரத் இறங்கினான், அதாவது இறங்கியதாக நினைத்தான். ஆனால் அவன் இன்னும் கேந்திராவின் மனதோடு பயணித்துக்கொண்டிருந்தான்.

"ஆட்டோ வருமா"

"எங்க போணும்?"

"திருவல்லிக்கேணி, மீட்டர் போடுங்க"

"ட்ரிப்ளிகேனா? அப்டி புரியறாப்ல தமிள்ல சொல்லலாமில்ல. ஏறி குந்து."

ஆச்சரியமாக மீட்டரைப்போட்டு வண்டியைக் கிளப்பினான் அந்தத் தெருவோர பாட்ஷா.

கண்களை மூடி கேந்திராவைப் பற்றிய எண்ணங்களைத் திறந்தான் பரத். அப்போது அந்த ஆட்டோவைத் தொடர்ந்து இன்னொரு ஆட்டோவில், ஒரு கும்பல் பரத்தைக் குறிவைத்து ஆயுதங்களோடும், தீர்த்துக்கட்டும்

எண்ணத்தோடும் கிளம்பியது.

(தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்

© TamilOnline.com