டாக்டர். முகுந்த் பத்மநாபன்
டாக்டர். முகுந்த் பத்மநாபன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு (UCLA) 2.5 மில்லியன் டாலரைக் கொடையாக வழங்கியபோது உலகின் கவனம் இவர்பக்கம் திரும்பியது. மைசூரில் ஒரு நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் பிறந்த முகுந்த் ஆரம்பக் கல்வியை இந்தியாவின் பல மாநிலங்களிலும் படித்து, IIT கரக்பூரில் எலக்ட்ரிகல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். பின் UCLAயில் MS, Phd (Electrical Engg.) செய்தார். இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சமூக, கலை, கல்விப் பணிகளை ஊக்குவிக்கக் 'குருக்ருபா ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பைத் தொடங்கி நடத்திவருகிறார். தான் கற்ற UCLAவுக்கு 2.5 மில்லியன் டாலர் நிதியுதவியை அவர் இதன்மூலமே வழங்கினார்.

இது அவர் கொடுத்த பெரியதொகை என்றாலும், இதற்கு முன்னரும் மூன்றுமுறை 500,000 டாலர் வீதம் அவர் கொடுத்ததுண்டு. அவை மின்சாரப் பொறியியல் பயில்வோருக்கு கல்வி உதவித்தொகைகளாக வழங்கப்பட்டன. இப்போது தந்துள்ள 2.5 மில்லியன் டாலர், Mukund Padmanabhan Systems Scaling Technology Laboratory என்னும் ஆய்வுக்கூடத்தை ஏற்படுத்தும். (பார்க்க)

Click Here Enlargeதந்தைவழித் தாத்தா தொடங்கிக் குடும்பத்தில் பலரும் பொறியியல் பட்டதாரிகள். நடுத்தர வர்க்கமென்பதால் பெரிய பள்ளிகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. என்றாலும், கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேற எண்ணினார். "சின்ன வயசுலயே நல்லா படிக்கணும், சொந்தக்கால்ல நிற்கணும்ங்கறதை அப்பா, அம்மா எனக்கு நல்லாப் புரிய வச்சாங்க. எளிய இந்துக்குடும்பச் சூழல் எனக்கு அஹிம்சை, தர்மம் போன்ற உயர்பண்புகளைக் கற்றுக்கொடுத்தது" என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார்.

IBM, T.J. Watson Research Centre போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய பின் தற்சமயம் Renaissance Technologies என்ற இடர்காப்பு நிதி (hedge fund) நிறுவனத்தில், நிதிசார் முறையாவண (financial instruments) ஆய்வாளராகப் பணிபுரிகிறார். இவ்வேலை, அவர் படித்த எலக்ட்ரிகல் துறையிலிருந்து மாறுபட்டது என்றாலும், எல்லாத்துறையிலும் பிரச்சனைகளை அணுகும் அறிவியல்வழி ஒரே மாதிரியானதுதான் என்கிறார். "வெற்று இரைச்சலிலிருந்து சரியான சமிக்ஞையைப் பிரித்தெடுப்பதுதானே இங்கும் நான் செய்வது" என்று அவர் கேட்கும்போது நமக்குப் புரிகிறது.

மனைவி, மகனுடன் வசித்துவரும் இவர் இந்துசமயக் கருத்துகளும் நம்பிக்கைகளும் தனது வழிகாட்டிகள் என்கிறார். "உயர்லட்சியங்கள், செம்மையான வாழ்முறை, கிடைக்காதவற்றுக்காக வருந்தாமல், கிடைத்தவற்றில் மகிழ்வது, தன்னைவிடக் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் பரிவு காட்டுவது போன்றவையே இந்து மதத்தின் அடையாளம், அல்லவா?" என்று கேட்கிறார்.

வளர்ந்துவரும் நாடுகளில் பின்தங்கிய மக்களுக்குக் குறைவில்லை என்பதைக் கண்ட இவர், அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் குருக்ருபா அறக்கட்டளையைத் தொடங்கினார். இதன் சமூகநலத் திட்டம், பொருளாதாரத்தில் மிகத்தாழ்ந்த நிலையில் உள்ளவர்களின் கல்வி மற்றும் பிற உடனடித் தேவைகளை பூர்த்திசெய்வதில் கவனம் செலுத்துகிறது. ஆனால், இதன் கல்வித்திட்டம் தொலைநோக்குப் பார்வை கொண்டது. அறிவைப் பெறவும், அதனை பத்திரப்படுத்தவும் நிதியுதவி தேவைப்படுகிறது. அதற்காக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கின்றது. பாரம்பரியமாக முன்னோர்கள் நமக்கு வழங்கிய ஆன்மீக அறிவைப் பாதுகாக்க உதவுவது இவர்களது கலைத்திட்டப் பிரிவின் செயல்பாடு. "குருக்ருபா என்ற பெயரைக் காஞ்சிகாமகோடி பாலபெரியவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்" என்று பக்தியோடு குறிப்பிடுகிறார்.

Click Here Enlarge"சரியானவற்றைக் கண்டறிந்து நிதி வழங்குவதற்குக் கடின உழைப்பு வேண்டும். ஆனாலும், வழங்கும் கொடை நல்லமுறையில் செலவழிக்கப்படுவதைப் பார்க்கும்போது மனநிறைவு ஏற்படுகிறது" என்கிறார் முகுந்த். வளரும், வளர்ந்த நாடுகளில் காணப்படும் வறுமையின் ஒரு விளைவு, பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாதிருப்பது. அதனால் பிள்ளைகளும் பின்னாளில் வறுமையில் உழலநேர்கிறது. இது ஒரு நச்சுச்சுழல். உயர்தரக் கல்வியைத் தருவதன்மூலமே இந்தச் சுழலை உடைக்கமுடியும். அதனால்தான் இவர்களுக்கான தமது திட்டங்கள் அடிப்படைக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்கிறார் முகுந்த். இந்தியாவில் அனாதை இல்லங்கள் போன்றவற்றுக்குக் குறைந்த தொகை கொடுத்தாலும் நிறையப் பயன் ஏற்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் கணிசமான மாறுதலை ஏற்படுத்த அதிக நிதி தேவைப்படுகிறது என்பதும் இவரது சரியான அவதானிப்பு.

சரி, இத்தனை நிதியைக் கொடுக்க UCLAவை ஏன் தேர்ந்தெடுத்தார்? சொந்த அனுபவம், UCLA ஆராய்ச்சித்துறையில் ஒரு முக்கியக் கல்வி நிறுவனமாக இருப்பது என இரண்டு காரணங்களைச் சொல்கிறார். "பணமின்மை ஒரு பட்டப்படிப்பு மாணவரை எப்படிப் பாதிக்கும் என்பதை என் அனுபவத்தில் அறிவேன். ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்ந்துவிட்ட ஒருவர், ஆரம்பத்தில் நிதி நெருக்கடியைச் சமாளித்துவிட்டால், பின்னர் பெரிய வெற்றிகளைப் பெறமுடியும். இதைக் கருத்தில்கொண்டே குருக்ருபாவின் நிதிநல்கைகளை வடிவமைத்திருக்கிறோம்" என்கிறார் இவர்.

Click Here Enlargeஅதேசமயம், UCLA ஒரு உயர்தரப் பல்கலைக்கழகமாக நீடித்திருக்க வேண்டுமென்றால், அதற்குத் தரமான ஆசிரியர்கள், மாணவர்கள், வெட்டுவிளிம்பு ஆராய்ச்சி (cutting edge research) போன்றவை அவசியம். "பொதுவாக நாம், அரசாங்கம்தான் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கிறதே என்று நினைக்கிறோம். ஆனால், அது போதுமானதாக இருப்பதில்லை. அதனால்தான் பல்கலைக்கழகங்கள் தனியாரிடம் உதவி பெறவேண்டியுள்ளது. எங்களது 2.5 மில்லியன் டாலர் கொடையில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிக்கூடம், இன்டக்ரேடட் மைக்ரோசிஸ்டம்ஸ், 3டி இன்டக்ரேடட் சர்க்யூட்ஸ் மற்றும் அசெம்ப்ளி இவற்றின் செயல்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும். அப்படி உருவாகும் மேம்பட்ட கருவிகள் ஆற்றலைத் திறம்படப் பயன்படுத்துவதோடு, விலையும் குறைவாக இருக்கும்" என்கிறார்.

குருக்ருபா ஃபவுண்டேஷனின் பங்களிப்பு சிறுதுளிதான் என அடக்கமாகக் கூறும் முகுந்த் பத்மநாபன், "எங்களது நிதி சிலரது வாழ்விலாவது ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்" என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

"நன்றாகப் படிக்கவேண்டும்: சவால்களைக் கண்டு அஞ்சக்கூடாது; சக ஊழியர்களுடன் இணக்கத்தோடு வேலைசெய்ய வேண்டும்; அவர்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்பதுதான் இளைய தலைமுறைக்கு இவர் கூறுவது. சமூகத்துக்கும், தாங்கள் நல்லநிலையை அடைய உதவிய நிறுவனங்களுக்கும், தங்களைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்கும் உதவவேண்டும் என்று ஆழ்ந்த விசுவாசத்தோடு சொல்லி முடிக்கிறார் முகுந்த் பத்மநாபன். செய்து காட்டியதைச் சொல்வதால் அந்தச் சொற்கள் வலிமையோடு வெளிப்படுகின்றன.

உரையாடல்: வெங்கட்ராமன் சி.கே.
தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com