க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை
சென்னை இசைவிழாவுக்குப் பின் உலக அளவில் இந்திய இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழா க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனைதான். திரு. க்ளீவ்லேண்ட் சுந்தரத்திடம் ஒருசமயம் அங்கு வந்திருந்த மிருதங்கக் கலைஞர் ராம்நாத் ராகவன், "தியாகராஜ உற்சவம் ஆரம்பிக்கலாமே" என்று சொல்ல, "இங்கே பஞ்சரத்னமே யாருக்கும் தெரியாதே" என்று இவர் சொல்ல, 'நான் சொல்லித் தருகிறேன்' என்று ராம்நாத் ராகவன் முன்வந்ததால் 1978ல் தொடங்கியது க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை. ஒரு சின்ன சர்ச்சின் தரைத்தளத்தில் தொடங்கி, இன்றைக்கு சென்னை இசைவிழாவுடன் போட்டிபோடுமளவுக்குச் சிறப்பாக நடக்கிறது இந்த விழா.

Click Here Enlargeஇந்த ஆண்டு ஏப்ரல் 1ம் நாள் தொடங்கி 12 வரை நடக்கவிருக்கிறது இந்த இசைவிழா. சுந்தரம் விவரிக்கிறார், "12 நாட்களில் 90 கச்சேரிகள் நடக்க இருக்கின்றன. முதலில் கர்நாடக சங்கீதம் மட்டும் இருந்தது. அப்புறம் டான்ஸ் வந்தது. இப்போது ஹிந்துஸ்தானி, ஒடிஸி, கதக் என்று பல பாணிகளும் கொண்டுவந்திருக்கிறோம்." இந்த விழாவில், சமீபத்தில் அமரரான இசைக்கலைஞர்கள் எம்.எஸ். கோபாலகிருஷ்ணன், புரொஃபசர் டி.ஆர். சுப்பிரமணியம் ஆகியோருக்கு இசையஞ்சலி வழங்கப்போகிறார்களாம். 90 நிகழ்ச்சிகளில் சுமார் 10-15 கச்சேரிகள் இவர்களுக்கு அஞ்சலியாக அமையும்.

இந்தியாவிலிருந்து 120 கலைஞர்களும் அமெரிக்கக் கலைஞர்கள் 100 பேரும் பங்கேற்க உள்ளனர். இவர்களோடு அமெரிக்கா, கனடாவிலிருந்து 70 குழந்தைகள் பங்கேற்பர். வேதவல்லி, பி.எஸ். நாராயணசாமி, சுகுணா வரதாச்சாரி, சாருமதி ராமச்சந்திரன் போன்ற வித்வான்களிடம் தீவிரப் பயிற்சி பெற்றவர்கள் இந்த வளரும் கலைஞர்கள். இதுபற்றி சுந்தரம், "Sustaining Sampradhaya (பாரம்பரியம் காத்தல்) என்பதில் எப்போதும் இரண்டு ஸ்ட்ரீம்கள் இருக்கும். முதல் ஸ்ட்ரீம் மேலே கூறிய அஞ்சலி. எம்.எஸ்.ஜி. எப்படி வாசித்தார், அவருடைய பிடிகள் எப்படி இருக்கும், அவருடைய அணுகுமுறை என்ன, புரொபசர் டி.ஆர். சுப்பிரமணியத்தின் அப்ரோச் என்ன என்பதைப் பிரதிபலிக்கிற மாதிரி கச்சேரிகள் அமைந்திருக்கும். ஒவ்வொருவருக்கும் ஐந்து கச்சேரி என்று அவர்களது தனித்திறன்கள் குறித்துப் பேசப்போகிறோம். மற்றொரு ஸ்ட்ரீம் என்னவென்றால் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் பெயரில் உள்ள கீர்த்தனைகளை 'The Glory of Venkateswara' என்று தருகிறோம். புகழ்பெற்ற பல கலைஞர்கள் இதில் பங்கேற்க இருக்கின்றனர்" என்கிறார்.

Click Here EnlargeSustaining Sampradhaya குழந்தைகள் தொடக்க நாளன்றே எல்லா வித்வான்கள் முன்பும் மாலையில் முக்கியநேரத்தில் பாட இருக்கிறார்கள். மற்றுமொரு சிறப்பு நிகழ்ச்சி ஜாஸ் (Jazz) இசை! இந்த ஜாஸ், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். மேற்கத்தியக் கலைஞர்கள் மேற்கத்திய இசைக்கருவிகளுடன் பாடுவார்கள். அதில் நம் கலைஞர்களுடன், அமெரிக்காவில் பிறந்துவளர்ந்த இளங்கலைஞர்கள் ஆறுபேர் பங்கேற்பர். இந்த வருடமும் நாதஸ்வரக் கச்சேரி உண்டு. திருமெய்ஞானம் ஐயப்பன் குழுவினர் மங்கள இசை வழங்குகின்றனர். ஜெயந்தி குமரேஷ் வீணயிசை விருந்து தரவிருக்கிறார்.

அமெரிக்காவின் இளம் கலைஞர்கள்பற்றிக் கேட்டோம். "இங்கு பிறந்து வளர்ந்த, கர்நாடக சங்கீதத்தில் ஓரளவு தேர்ச்சிபெற்ற குழந்தைகளுக்கு முதல் சனிக்கிழமை அன்று மாலை பிரைம் டைமில் நேரம் ஒதுக்கியுள்ளோம். பிரபல வித்வான்கள் அமர்ந்துகொண்டு "ஓ.. நீ சங்கராபரணம் பாடியிருக்கிறாயா, சரி, காந்தாரத்தில் கொஞ்சம் ஸ்வரம் பாடு, எங்கே கொஞ்சம் திஸ்ரம் பாடு" என்று அவர்களை மென்மையாச் சோதனை பண்ணவைத்து, ஆர்வத்தை அதிகரிப்பதற்கான முயற்சியைச் செய்ய இருக்கிறோம்."

"பாரம்பரியமான கோலாட்டம், பஜனை எல்லாம் உண்டு. மேலும் இம்முறை வித்தியாசமாக, 20 குழந்தைகளை 10, 10 ஆகப் பிரித்து, அவர்கள் கற்றிராத அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், பதம், ஜாவளி, தில்லானாவை எடுத்துக்கொண்டு அவர்களாகவே அதற்கு கொரியாகிராஃபி செய்து மேடையேற்றச் சொல்லியிருக்கிறோம். தாமாகவே கிரியேடிவ் ஆகச் சிந்தித்து உருவாக்குவதன்மூலம் அக்குழந்தைகளின் ஞானம் விருத்தியாகும். தன்னம்பிக்கை வளரும். புதுப்புது உத்திகள் வெளிவரும். பக்கவாத்தியத்திற்கு, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இசைக்கலைஞர்களை அவர்களே ஏற்பாடு செய்துகொள்ளலாம். ஒரே கண்டிஷன் என்னவென்றால் இதற்கு முன்னால் அவர்கள் க்ளிவ்லேண்ட் ஆராதனையில் பங்கேற்றுப் பரிசு வாங்கியிருக்க வேண்டும் என்பதுதான். அப்போதுதான் தரமானதாக இருக்கும் என்பதால் இந்தக் கட்டுப்பாடு" என்கிறார். உள்ளூர் மேளத்தை உயர்த்த இதைவிட வேறென்ன யுக்தி இருக்கமுடியும்!

Click Here Enlarge"இன்னொரு ஸ்பெஷாலிடி என்ன தெரியுமா?" என்று உற்சாகமாகத் தொடர்கிறார் சுந்தரம், "நெய்வேலி சந்தானகோபாலன் தனது மாணவ, மாணவியர் 250-300 பேரை நன்றாகப் பயிற்சி கொடுத்து, முதல் சனிக்கிழமையன்று ஒரு நிகழ்ச்சியைத் தருகிறார். நமது இசை, ஓம்கார நாதத்தில் இருந்து துவங்கி, எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை அவர் அதில் இசைத்துக் காட்டுகிறார். அதுபோல் பாபநாசம் அசோக்ரமணி, பாபநாசம் சிவனின் 125வது ஜயந்தி தினத்தை முன்னிட்டு 125 மாணவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார். இதுமாதிரி கிட்டத்தட்ட 1200 முதல் 1500 வரை குழந்தைகள் ஆராதனை விழாவில் பங்கெடுத்துக் கொள்ளப்போகிறார்கள். குழுப்பாடல்கள் நிறைய ஏற்பாடு செய்திருக்கிறோம். எல்லாருக்குமே மேடையேறிப் பாட வாய்ப்புத் தரவேண்டுமல்லவா?" என்று அவர் கூறும்போது இளைய தலைமுறையை ஊக்குவிக்க அவர் எப்படியெல்லாம் சிந்திக்கிறார் என்றெண்ணி வியப்பு உண்டாகிறது.

தமிழ்நாடுகூடச் செய்துபாராத புதுமை ஒன்று இந்த வருட க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை விழாவில் நடக்க இருக்கிறது. சுந்தரம் சொல்கிறார், "பிராட்வே தியேட்டர் மியூசிகல் மாதிரி கர்நாடிக் தியேட்டர் மியூசிகல் ஒன்று செய்யப்போகிறோம்" என்று சொல்லும்போது அவர் கண்களில் பெருமிதம் ஜொலிக்கிறது. நெய்வேலி சந்தானகோபாலன், சௌம்யா, கிருத்திகா சுரஜித் எல்லாரும் அதில் நடிக்க இருக்கிறார்கள். அதில் நிறையப் பாட்டுக்கள் இருக்கும்; கூடவே வசனமும். மியூசிகல் டிராமா என்று சொல்லலாம். My Fair Lady மாதிரி இது My Fair Thodi. கதை என்னவென்றால், டப்பாங்குத்து ஆடும் ஒரு பெண் எப்படி கர்நாடக இசை கற்றுத்தேர்ந்து பெரிய பெரிய வித்வான்கள் முன்னிலையில் க்ளீவ்லேண்டில் பாடுமளவிற்கு உயர்கிறாள் என்பது. அதை நகைச்சுவை கலந்து சொல்கிறோம். சுபஸ்ரீ தணிகாசலம் இதை வடிவமைக்கிறார்" என்கிறார். நியாயமான பெருமிதம்தான்.

சவால், சவால்!
இதில் சவால்கள் என்னென்ன என்று கேட்கிறோம். "முதல் சவால் விசா வாங்குவது. இந்தியாவிலிருந்து வரும் ஒவ்வொரு கலைஞர் தேவையும் ஒவ்வொரு மாதிரி. சிலர் குறிப்பிட்ட தேதியில் மட்டுமே வரமுடியும். சிலர் வருகிறேன்; ஆனால் சீக்கிரமாக அனுப்பிவிடுங்கள் என்பார்கள். சிலரோ நிகழ்ச்சி முடிந்து சில நாட்கள் இருக்க விரும்புவதாகச் சொல்வர். இப்படித் தேவைக்கேற்றவாறு விசா எடுக்க வேண்டும். டிக்கெட் எடுக்கவேண்டும். தங்குவதற்கு 3 ஹோட்டல்களை முழுக்க எடுக்கிறோம். உணவளிப்பது ஒரு சவால். இதற்காக பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா ஆலயமடைப்பள்ளியில் இருக்கும் கணேசன் என்பவரை வரவழைக்கிறோம். அமெரிக்கன் கிச்சனை முழுமையாக எடுத்துக்கொண்டு, கலைஞர்களுக்கு, விருந்தினர்களுக்குப் பிடித்த உணவைத் தயாரித்து வழங்கப் போகிறோம்."

Click Here Enlarge"அடுத்த சவால் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாகச் சிகிச்சை தருவது. ஒரு டாக்டர் எப்போதும் தயாராக இருப்பார். மிகப்பெரிய சவாலாக இருப்பது வாலண்டியர்ஸ் சேவைதான். திறப்புவிழா வீக் எண்டில் எப்படியும் ஒரு 3000 பேர் வருவார்கள். அவர்களிலிருந்து தொண்டர்கள் கிடைப்பார்கள். ஆனால் வார நாட்களில் கிடைப்பது மிகக் கஷ்டம். ஏதேனும் தேவையென்றால் ஓடிப் போய் வாங்கி வருவது என எப்போதும் ஆள் தேவை இருக்கும். அப்போதுதான் நிறையச் சிரமம். தன்னார்வச் சேவையில் ஆர்வமுள்ளவர்கள் www.aradhana.org/volunteer.html என்ற தளத்தின்மூலமோ அல்லது shankar@aradhana.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டால் ரொம்ப நல்லது."

"தவறாமல் சந்திக்கும் மிகப்பெரிய சவால் நிதி. 120 பேரை கூட்டிக்கொண்டு வருவது என்றால் ஏர்லைன் டிக்கெட்டே 150,000 டாலருக்குமேல் ஆகும். பிறகு தங்க இடம், சாப்பாடு, ஆடிட்டோரியம், அன்பளிப்பு என்று நிறையச் செலவுகள். பார்த்தால் அரை மில்லியன் டாலரைத் தாண்டிவிடும். ஆனால் டிக்கெட் வருமானம் அந்த அளவு இராது. நன்கொடை வருமென்ற தைரியத்தில் இவற்றைச் செய்கிறோம். 38 வருடமாக இது எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்றால் இப்படித்தான்! We beg, we borrow and we don't steal என்று நான் சொல்வதுண்டு. மேடையில் நிதி வேண்டுவது, கடன் வாங்குவது என்று எப்படியோ நடத்தி வருகிறோம். நாங்கள் 501(c)(3) பிரிவின்கீழ் வரி விலக்கு பெற்றுள்ளதால் தாராளமாக நிதி அளிக்கலாம். எப்படி, எந்த நிகழ்ச்சிக்கு எவ்வாறு நிதி அளிப்பது என்பதற்கான விவரங்களை www.aradhana.org/donate.html என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அல்லது என்னை vvsundaram@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்." என்றார்.

அமெரிக்கக் குழந்தைகளின் திறமையில் அவருக்கு மிகவும் பெருமை. "இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி, அமெரிக்காவில் இருக்கும் குழந்தைகள் இசை, நடனம் என்று அழகாகச் செய்வதற்கான உந்துதலாக நாங்கள் இருக்கிறோம் என்பதில் பெருமைதான். ஒரு மாறுபட்ட கலாசாரத்தில் இந்தக் குழந்தைகள் வளர்கின்றன. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே நம்முடைய பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் அவர்கள் ஈடுபடுவது பெருமைக்குரிய விஷயம். அவர்களுக்கு நாங்கள் வாய்ப்புக் கொடுக்கிறோம். அதன் பிரதிபலனை கண்கூடாக இன்று பார்க்கிறோம்." என்கிறார்.

Click Here Enlargeஇந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் அமெரிக்கத் திறமை!
"சென்னையில் நடக்கும் "டைம்ஸ் தியாகராஜா" போட்டியில் ஆறு பேர் இறுதிச்சுற்றுக்கு வந்தார்கள். இந்தியா, அமெரிக்கா என்று பலரும் பங்கெடுக்கும் போட்டி. இந்தமுறை அந்த ஆறுபேரில் மூன்றுபேர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த குழந்தைகள். மூவருமே க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனையில் பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக ஜெயித்தவரும் சான் ஃபிரான்சிஸ்கோவின் மானஸா சுரேஷ். The Voice of Future என்று அவரை வர்ணித்தார்கள். அருணா சாயிராம், சுதா ரகுநாதன் போன்றோர் நடுவர்கள். எங்கோ அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து, ஆர்வத்தால் சங்கீதம் கற்றுக்கொண்டு, இந்தியாவுக்கு வந்து போட்டியில் பங்கேற்று, முதல்பரிசை வென்றவர் ஒரு அமெரிக்கத் தமிழர் என்னும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது."

"தொலைக்காட்சியில் 'நாதபேத்' என்றொரு நிகழ்ச்சி. அது கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி என இரண்டுக்குமானது. இதற்கு ஜட்ஜாக டி.என். கிருஷ்ணன், வேதவல்லி, பண்டிட் ஜஸ்ராஜ், சிவகுமார் ஷர்மா மாதிரிப் பெரிய பெரிய ஆட்கள். இதில் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் முதல் பரிசு கிடைத்தது கர்நாடக சங்கீதத்திற்குத்தான். ரவளி என்ற பெண்ணுக்குக் கிடைத்தது. விசாகபட்டினத்தில் இருக்கிறார். அவர் அம்மா மந்தா சுதாராணி மிகப்பெரிய பாடகி. இருவரும் க்ளீவ்லேண்ட் விழாவுக்கு முன்னரே வந்தவர்கள், இந்த ஆண்டும் வருகிறார்கள். இரண்டாவது பரிசு வயலினுக்கு. பெற்றவர் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த அபூர்வா கிருஷ்ணா. சான் ஹோஸேயில் இருக்கும் அனுராதா ஸ்ரீதரின் மாணவி. அபூர்வா கடந்த 10 வருடங்களாக க்ளீவ்லேண்டுக்கு வந்து கொண்டிருக்கிறார். "I am inspired by Cleveland" என்பார் அவர். இதெல்லாம் எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதுதான் எங்களது ஆவல்."

தொடர்புகொள்ள
இணைய தளம் - www.aradhana.org
முகவரி - Aradhana Committee, 3447 Granton Ave., Cleveland (OH) 44111-2971
தொலைபேசி - வி.வி. சுந்தரம் 216.702.9971 (அமெரிக்கா); 91-44-2491-4103, 91-98410 61528 (இந்தியா)
மின்னஞ்சல் - vvsundaram@yahoo.com, vvs@aradhana.org

*****


இந்த ஆண்டு விருது பெறுபவர்கள்:
நாகை முரளிதரன் - சங்கீத ரத்னாகரா
மன்னார்குடி ஈஸ்வரன் - சங்கீத ரத்னாகரா
எல்லா வெங்கடேஸ்வர ராவ் - சங்கீத கலாசாகரம்
சோனால் மான்சிங் (ஒடிசி) - நிருத்ய ரத்னாகரா
ராஜா ரெட்டி, ராதா ரெட்டி (குச்சுபுடி) - நிருத்ய கலாசாகரம்
நெய்வேலி ஆர். சந்தான கோபாலன் - ஆச்சார்ய ரத்னாகரா
சட்னம் பி.வி. பாலகிருஷ்ணன் - ஆச்சார்ய ரத்னாகரா
எம். கிருஷ்ணமூர்த்தி (பார்த்தசாரதி சுவாமி சபா) - சேவாரத்னா
மதுரை சுந்தர் (டெட்ராய்ட்) - புரொஃபசர் டி.ஆர்.எஸ். விருது
திவ்யா எலூரி (நியூ ஜெர்சி) - நிருத்ய சேவாமணி விருது
லக்ஷ்மண் ராகடே - கலா சேவாமணி
ஐஸ்வர்யா பாலசுப்பிரமணியம் (இளங்கலைஞர்) - கலாரத்னா (நாட்டியம்)
அமிர்தா முரளி (இளங்கலைஞர்) - கலாரத்னா (வயலின், வாய்ப்பாட்டு)

ஸ்ரீவித்யா ரமணன்,
சென்னை

© TamilOnline.com