கீஸ்டோன் XL (Keystone XL) நெடுங்குழாய்த் திட்டம் கனடாவின் அல்பெர்ட்டாவிலிருந்து அமெரிக்காவின் நெப்ராஸ்காவிலுள்ள ஸ்டீல் சிடி பகுதிக்கு அகலமான குழாய்த்தொடரொன்றின் மூலம் கச்சா எண்ணெய் கொண்டுசெல்வதற்கான திட்டமாகும். இதனால் நெப்ராஸ்காவின் சேண்ட்ஹில்ஸ் பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று சூழலியலாளர் கூறி இதனை எதிர்த்தனர். இதற்கான சட்டமுன்வரைவை அதிபர் வீட்டோ செய்திருப்பது குடியரசுக் கட்சியினரின் கசப்பை அதிகரித்துள்ளது. சூழல் பாதுகாப்பு முகமை (Environmental Protection Agency - EPA) தொடர்பான இரண்டு மசோதாக்களை, குடியரசுக் கட்சியினரின் ஆதிக்கத்திலுள்ள பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. இவை சட்டமாகுமேயெனில் சூழல் பாதுகாப்பு முகமை சுதந்திரமாக இயங்கமுடியாமல் போகுமென்கிற அச்சம் இருக்கிறது. எனவே இவற்றையும் அதிபர் மறுதலிக்கலாம் என்னும் எதிர்பார்ப்பே அதிகம் இருக்கிறது. இரண்டு அவைகளிலும் எதிரெதிர்க் கட்சிகள் வலுவில் விஞ்சியிருப்பது எப்போதுமே பிரச்சனைதான். ஒபாமா அரசும் இந்தச் சிக்கலைத்தான் சந்தித்து வருகிறது. கட்சிகள் தமது நிலைப்பாடுகளை அழுத்திக் கூறுவதொன்றையே நோக்கமாகக் கொள்ளாமல், எதனைச் சட்டமாக்குவதால் நாட்டுக்கு நன்மை, எதைச் சட்டமாக்குவதில் இருவரும் இணக்கமான கருத்துக் கொள்ளலாம் என்பன போன்றவற்றைச் சிந்தித்து, விவாதித்து, ஒத்திசைந்து செயல்படுவது நாட்டுக்கு நன்மைதருவதாக இருக்கும். சட்ட மசோதாக்களை வைத்துக்கொண்டு நிழல்யுத்தம் நடத்துவதால் திருவாளர். பொதுஜனத்துக்கு எந்தப் பயனும் இல்லை.
*****
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசமைக்க மக்கள் ஜனநாயகக் கட்சியும் (PDP) பாரதீய ஜனதா கட்சியும் கைகோத்திருப்பது வரலாற்று முக்கியத்துவமிக்க வாய்ப்பாகும். சட்டப்பிரிவு 370 போன்றவற்றால் அந்த மாநில மக்களைத் தேவைக்குமீறிக் கொஞ்சிக்குளிப்பாட்டி வைத்தாலும் வன்முறை, மதவெறி முதலியவற்றால் நசுக்கப்படும் அவர்களால் பெரிய முன்னேற்றம் எதையும் காணமுடியவில்லை. தனிப்பட்ட முறையில் கறைபடியாதவர், ஜம்முவில் வாழும் பெருவாரி இந்துக்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்காதவர் என்று கருதப்படும் முஃப்தி மொஹமது சயீது முதல்வர் பதவி ஏற்பார் எனத் தெரிகிறது. இதை வரவேற்க வேண்டும். ஒருவருக்கொருவர் வெறுப்பும் சந்தேகமும் கொண்டிருக்கும் அந்த மாநிலத்தின் இந்து-முஸ்லிம் மக்களுக்கிடையே நல்லிணக்கமும் புரிதலும் கொண்டுவருவதற்கான முதல் படியாக இது அமையலாம். காஷ்மீரத்தைத் தாயகமாகக் கொண்ட லட்சக்கணக்கான துரத்தப்பட்ட காஷ்மீரி பண்டிட்டுகளுக்குத் தாய்மாநிலம் திரும்ப இதுவொரு வாய்ப்பாக அமையலாம். மதச்சார்பில்லாதவை எனப் பறையறிவிக்கும் கட்சிகளால்கூட இப்படியொரு மாற்றத்தை அந்த மாநிலத்தில் கொண்டுவர முடியவில்லை. இதனை மோதி தலைமையில் பி.ஜே.பி. செய்திருப்பது உண்மையான மதச்சார்பின்மை எப்படி இருக்கும் என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பாக அந்தக் கட்சிக்கு அமையலாம். அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில் ஜம்முவில் ஒரு IIM, காஷ்மீரில் ஒரு AIIMS என தேசிய அளவிலான நிறுவனங்கள் தொடங்கப்படுமென அறிவிக்கப்பட்டது, சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்ட முதல் அடியாகும். ஆனால், அரசியல் கைகுலுக்கல்கள் எளிதில் விரிசல் காணுபவை என்பதையும் நாம் அறிவோம். எனவே, இதில் மிக அதிகமான நல்விளைவுகள் ஏற்படும் என்று நம்புகிற அதே நேரத்தில் மேலே நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்தவாறு இருப்போம்.
*****
புற்றுநோய் இன்னாருக்கு வரவேண்டும் என்று தேர்ந்தெடுத்து வருவதில்லை. எவருக்கும் வரக்கூடாதுதான். ஏழைகளுக்கு அது வரும்போது இலவச மருத்துவம் செய்ய அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் போன்ற உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைக்கூடங்கள் இருந்தாலும், சென்னைக்குச் சென்றால், தங்குமிடம், உணவு, பராமரிப்பு போன்றவை அவர்களது சக்திக்கு மீறியதாகத்தான் இருக்கும். அத்தகையவர்களின் சிரமத்தைப் புரிந்துகொண்டு, மிகுந்த கருணையோடு இந்த வசதிகளை இலவசமாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஸ்ரீ மாதா ட்ரஸ்ட்டின் V. கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஸ்ரீ மாதா கேன்சர் கேரின் D. விஜயஸ்ரீ ஆகியோரின் நேர்காணல்கள் எவர் மனத்தையும் உருக்கிவிடும். இத்தகைய அறநிறுவனங்கள் செயல்படுவதைச் சாத்தியமாக்குவது Dr. முகுந்த் பத்மநாபன் போன்றோரின் வள்ளன்மையினால்தான். அவரைப்பற்றிய கட்டுரை நமக்கோர் அகத்தூண்டல் ஆகக்கூடும். 'அடாராவின் பார்வை' மிக வித்தியாசமான சிறுகதை. தென்றலில் நீங்கள் நேசிக்கும் எல்லா வழமையான அம்சங்களும் இந்த இதழில் தனிக்கவனத்தோடு தரப்பட்டுள்ளன. வாசியுங்கள்.
*****
தென்றல் வாசகர்களுக்கு ஹோலிப்பண்டிகை, ஸ்ரீராம நவமி, யுகாதி வாழ்த்துக்கள்.
தென்றல் குழு
மார்ச் 2015 |