ஹூஸ்டன் மீனாட்சி கோவில் பொங்கல் விழா
ஜனவரி 17, 2015 அன்று ஹூஸ்டன் மீனாட்சி கோவிலில் பொங்கல் விழா கொண்டாடப்பெற்றது. திருவிழாவில் தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து இங்குவந்து குடியேறியிருக்கும் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றது இவ்விழாவின் சிறப்பம்சமாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி, காஷ்மீரி, பஞ்சாபி மற்றும் நேபாளம் எனப் பல மொழிகளில் "பொங்கலோ பொங்கல்" என்ற உற்சாகக் கூக்குரல் எழுந்தது. சூரிய வணக்கத்தில் துவங்கி பட்டுப்பாவாடை, பட்டுப்புடவை, பட்டுவேஷ்டி என்று அவர்கள் அலங்காரமாக வந்தது, மண் அடுப்புக்களையும் பொங்கல் பானைகளையும் அலங்கரித்திருந்தது கண்களுக்கு விருந்தாக இருந்தது. இவையனைத்துக்கும் மகுடம் வைத்ததைப் போல் ஜனவரி முதல் தேதியன்று சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் அவர்களை மீனாட்சி கோவிலின் கௌரவத் தலைவராகவும், Dr. S.G. அப்பன் அவர்களை கோவிலின் கௌரவ அறங்காவலராகவும் நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தியத் திருநாளாகப் பொங்கல் நாளை மாற்றிய தலைவர் திரு. வடுகநாதன் அவர்களும் மீனாட்சி கோவில் குழு உறுப்பினர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

ஸ்ரீவித்யா ஸ்ரீதர்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com