ஜனவரி 18, 2015 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ நோர்ஸ் அரங்கத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் உரையாற்றினார். தொடக்கத்தில் ஒரு தன்னார்வத் தொண்டர், சத்குருவின் யோகவகுப்புகள் எப்படித் தமது வாழ்கையை மாற்றியமைத்தன என்பதைப் பகிர்ந்தார். தொடர்ந்து சத்குருவின் 25 வருடத் தன்னார்வப்பணிகள் பற்றிய குறும்படம் காண்பிக்கப்பட்டது. 'பசுமைக் கரங்கள்' மூலம் சத்குருவின் ஈஷா நிறுவனம் ஆற்றிய பணிகளுக்காக அது ஐக்கிய நாடுகளின் சிறப்பு ஆலோசனைக் குழுவில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் 'சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா' குழுவினர் இனிய பாடல்கள் வழங்கினர்.
சத்குருவின் உரையாடலில் பிறப்பு, இறப்பு, வாழ்க்கையின் அடிப்படைத்தன்மை குறித்துத் தமக்கே உரிய நகைச்சுவையுடனும், கூர்மையான தர்க்கத்துடனும் ஆழ்ந்த பரிமாணங்களை எளிதாக விளக்கினார். ஒவ்வொருவரும் தன்னிலுள்ள ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்த, தன்னை உணர, யோகப்பயிற்சியும் தியானமும் இன்றியமையாதவை என்பதை விளக்கினார். எவ்வாறு அமெரிக்காவில் அறிவியல் வளர்ந்திருக்கிறதோ, அவ்வாறே உள்நிலை வளர்ச்சிபெறுவதற்கான விஞ்ஞானம் அகப் பொறியியல் (Inner Engineering) என்று கூறினார்.
தொடர்ந்து எளிமையான தியானம் ஒன்றையும் சத்குரு நடத்தினார். அந்த அரங்கத்திலிருந்த 1500க்கும் மேலானோர் கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்தது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது. பின் கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்தார். எப்படி ஆன்லைன் வகுப்புமூலமாகவே யோகப்பயிற்சிக்கு தயார் செய்துகொள்ள முடியும் என்பதைக் கூறினார்.
மேலும் அறிய: www.innerengineering.com படம்: IshaUSA.org |