அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் 'நலவாழ்வு நண்பர்கள்' என்ற குழுவினர், இயற்கை விவசாயம்மூலம் வீட்டுத்தோட்டங்கள், சமூகத் தோட்டங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைந்த டிசம்பர் 30ம் நாள் தமிழகத்தில் விதைநாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்நாளில் மரபணு மாற்றியமைக்கப்படாத உணவு விதைகளைப் பாதுகாக்கவேண்டிய தேவையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.
அதே நாளில் அமெரிக்காவிலும் விதைநாளை அனுசரித்து இயற்கை விவசாயம் செய்வதற்கான முயற்சியில் கலந்துரையாடல் நடைபெற்றது. இங்கு வீடுகளின் பின்புறம் தோட்டம் அமைக்க இடவசதி உள்ளது. அதில் தமக்குத் தேவையான காய்கறிகளை பயிரிடுவது வழக்கம். இந்தத் தோட்டங்களை முற்றிலும் இயற்கைமுறையில் மாற்றியமைக்க நலவாழ்வு நண்பர்கள் முடிவு செய்துள்ளனர்.
மற்ற நகரங்களிலும் 'நலவாழ்வு நண்பர்கள்' குழுக்களை விரிவுபடுத்த உள்ளனர். டாக்டர். பானுகோபன் இயற்கை உரம் தயாரிப்பது, பூச்சி மற்றும் களைகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல விவரங்களை எடுத்துரைத்தார். சொட்டுநீர்ப் பாசனம், பல்பயிர் வேளாண்மை குறித்தும் விவரித்தார்.
இது மட்டுமல்லாமல், சிறுதானிய உணவுப் பழக்கங்களுக்கு திரும்புவதற்கும் இந்த குழுவினர் முடிவுசெய்துள்ளனர். அதற்கான சிறுதானிய விருந்தொன்றையும் படைத்தனர். சோளப்பணியாரம், ராகி பக்கோடா, மருந்து குழம்பு, கொள்ளு ரசம், நெல்லிக்காய் சாதம், ராகி புட்டு, குதிரைவாலி உப்புமா, கேப்பைக்கூழ், சோள இடியாப்பம், உளுந்து சாதம், எள்ளுச் சட்னி, கம்பு அல்வா உள்ளிட்ட ஏராளமான உணவுப் பண்டங்கள் விருந்தில் இடம்பெற்றன. செய்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
இயற்கை விவசாயத்தின் முக்கிய அம்சங்களான, "அடி-மண்ணுக்கு, நுனி-வீட்டுக்கு, நடு–மாட்டுக்கு" என்ற அணுகுமுறையை நினைவுகூர்ந்தனர். உளுந்து, நிலக்கடலை செடிகள் மண்ணுக்கு உரமாக மாறுவதன் நன்மைகள் போன்ற கலந்துரையாடலும் இடம்பெற்றது. நம்மாழ்வாரின் பேச்சுக்களை வீடியோவில் திரையிட்டனர். அவருடனான நேர்முக அனுபவம் குறித்து யசோதா பொற்செழியன் உரையாற்றினார். இளங்கோ–யசோதா தம்பதியினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். செயிண்ட் லூயிஸ் நண்பர்கள் எதிர்வரும் பருவகாலத்தில் இயற்கை விவசாயம் செய்ய முடிவு செய்துள்ளார்கள். அடுத்த கட்டமாக அமெரிக்கத் தமிழர்கள் மத்தியில் 'வீட்டுத்தோட்டத்தில் இயற்கை வேளாண்மை' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு: டாக்டர். பானுகோபன் - kbanugopan@gmail.com
சின்னமணி, டாலஸ், டெக்சஸ் |