முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 6)
பின்புலம்: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவுகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவமனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இதுவரை: ஷாலினி தம்பி கிரண் வீட்டிற்கு அம்மா அனுப்பிய உணவைக் கொடுக்க வந்தாள். அங்கே கிரண் ஒரு முப்பரிமாண ப்ரிண்ட்டரில் தயாரித்த போர்ஷா கார் மாடலின் நுணுக்கமான அம்சங்களைப் பார்க்கிறாள். அது ப்ரிண்ட்டரில் தயாரானது என்று அவள் நம்ப மறுக்கவே, கிரண் புதிதாகப் பதித்துக் காட்டி வியப்பளிக்கிறான். ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வரவே இருவரும் சூர்யாவோடு அங்கே விரைந்தனர். அங்கு அவர்களை வரவேற்ற அகஸ்டா க்ளார்க், சூர்யாவின் அதிர்வேட்டு யூகத்தால் வியப்புற்று, தன் ஆராய்ச்சிக்கூடத்தைச் சுற்றிக்காட்டினாள். குட்டன்பயோர்கின் தொழில்நுட்பத்தைப்பற்றி விளக்கும்படி சூர்யா கேட்டுக்கொள்ளவே, அகஸ்டா உயிரியல் முப்பரிமாணப் பதிப்பால் மனிதர்களின் உள்ளுறுப்புகளின் பற்றாக்குறையைத் தீர்க்க இயலும் என்பதை விளக்க ஆரம்பித்தாள். பிறகு...

*****


உயிரியல் முப்பரிமாணப் பதிப்புத் தொழில்நுட்பம் எவ்வாறு பயனளிக்கும் என்ற தனது கேள்விக்கு, வருங்காலத்தில் அதனால் உள்ளுறுப்புகளின் பற்றாக்குறையைத் தீர்த்து மனிதர்களின் உயிர்களைக் காப்பற்ற இயலும் என்று தன் கனவை அகஸ்டா விளக்கவும், கிரண் அடுத்து எழுப்பிய கேள்வி அவளை நனவுலகுக்கு இழுத்துவந்தது.

அத்தகைய பலன் மருத்துவரீதியாக மட்டும் பார்த்தால் பெரும்நன்மை தரக்கூடியதுதான் என்று ஷாலினி ஒப்புக்கொண்டதைக் கேட்ட கிரண் சந்தேகமடைந்தான். "ஆனால், மனிதர்களின் திசுக்களும், அங்கங்களும் உயிர்த்தன்மை வாய்ந்தவை ஆயிற்றே? மேலும் அவை ஒவ்வொன்றும் பலவகையான, மில்லியன் கணக்கிலான ஸெல்களால் ஆனவை, மிக நுண்மை கொண்டவை, சிக்கலானவை, அவற்றை எப்படிப் பதிக்க இயலும்? நம்பக்கூடியதாக இல்லையே, மேல்விவரம் கிடைத்தால் நம்ப இயலுமா என்று முயற்சிக்கிறேன்" என்றான் கிரண்.

அகஸ்டா சற்று உஷ்ணமாகப் பதிலளித்தாள். "என்ன இப்படி சொல்லிட்டீங்க கிரண்? உயிரியல் முப்பரிமாணப் பதிப்பு ஒண்ணும் ஆகாசக்கோட்டை இல்லை. சூர்யாவேகூடச் சற்று முன்புதானே சொன்னார் அவர் எதோ கட்டுரையில அதைப்பத்திப் படிச்சதாக. அப்படின்னா, அது இந்தத் துறையில மட்டுமல்லாம, ஏன் விஞ்ஞானத் துறையில மட்டுமல்லாம, பொதுமக்களைச் சென்று சேரும்படியான கட்டுரைகளில் வருமளவுக்கு நடைமுறைக்கு வந்து பிரபலமடைஞ்சிருக்குன்னுதானே அர்த்தம். அதுவும் நீங்க மருத்துவ ஆராய்ச்சியாளார் ஷாலினியோட தம்பி, முப்பரிமாணப் பதிப்புல மிக ஆர்வமுள்ளவர். உங்களுக்கு இது தெரியலங்கறது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு."

கிரண் தன் கையை உயர்த்தி மன்னிப்பு வேண்டினான். "அய்யயோ, எதோ தெரியாமக் கேட்டுட்டேன் அகஸ்டா அம்மணி அவர்களே! எனக்கு ப்ளாஸ்டிக், உலோகப்பதிப்புப்பத்திதான் எதோ பொழுதுபோக்கா தெரியும். சூர்யா மாதிரி எதோ விஞ்ஞானக் கட்டுரை எல்லாம் நான் படிக்கறதில்லீங்க! பொதுவா, பணம், கார்கள் இதுபத்திக் கேளுங்க வெளுத்துக்கட்டறேன்!"

ஷாலினியும் கிரணுக்குப் பரிந்துரைத்தாள். "ஆமாம் அகஸ்டா, தெரியாமக் கேட்டுட்டான். ஆனா அவனுக்கு தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப ஆர்வம். நான் நிச்சயமா விஞ்ஞான ஆய்வுப்பத்திரிகைகளில் முப்பரிமாண உயிர்ப்பதிவைப்பத்திப் பாத்திருக்கேன். ஆனா படிச்சதில்லை. அதனால எனக்குக்கூட ஆச்சர்யமாத்தான் இருக்கு. தொடர்ந்து விளக்குங்க."

அகஸ்டா புன்னகைத்தாள். "அப்ப சரி. உங்களுக்கு ஆர்வம்னா என் உயிர்ப்பணியான இந்தத் துறையையும் தொழில்நுட்பத்தையும் பத்தி விவரிக்கறது எனக்கு ஐஸ்க்ரீம் திங்கறாமாதிரி கிளுகிளுப்பா, இனிப்பா இருக்கு. சொல்றேன்."

சூர்யா இடைமறித்து, "குட்டன்பயோர்கின் நுட்பத்தைப்பத்தி சொல்றத்துக்கு முன்னாடி அதுக்கு அடிப்படையா, பொதுவா உயிரியல் முப்பரிமாணப் பதிப்பு எப்படி நடக்குதுன்னு கொஞ்சம் விளக்குங்க. அப்பதான் உங்க நுட்பம் நல்லாப் புரியும்" என்றார்.

"கரெக்டா சொன்னீங்க சூர்யா," என்று பாராட்டிய அகஸ்டா தொடர்ந்தாள். "ஆனா, அதே வகையில அதுக்கும் முதல்ல பொதுவான சாதாரண முப்பரிமாணப் பதிப்பு எப்படி வேலைசெய்யுதுன்னு நல்லாப் புரிஞ்சிகிட்டாதான் பலமான அடிப்படை கிடைக்கும்" என்றாள்.

"அது சரி, அப்படியே ஆரம்பியுங்க" என்று சூர்யா கூறியதும், அகஸ்டா மீண்டும் தன் கனவுலகுக்குச் சென்றுவிட்டாள். "முப்பரிமாணப் பதிப்புங்கறது காகிதத்துல கருப்பு வெள்ளை எழுத்துக்களைப் பதிக்கறாமாதிரியேன்னு சொல்லிட முடியாது. ஒரு வண்ணப் படத்தை சில வண்ணங்களைக் கலந்து பதிக்கறது வேணுமானா முப்பரிமாணப் பதிப்பின் வெகுபுராதன மூலம்னு சொல்லலாம். ஆனா முப்பரிமாணங்கறது அதைவிட மிக நுணுக்கமானது. சாதாரணக் காகிதப் ப்ரிண்ட்டர்களைப் போல முப்பரிமாண பதிப்புலயும், பதிப்புக் கருவியில் பல வண்ணங்களில் ப்ளாஸ்டிக், கண்ணாடி, உலோகங்கள் போன்ற பல மூலப்பொருட்களைத் தனித்தனியான பதிப்புப்குப்பிகளில் அடைத்து, பொருத்தி வைக்கப்பட்டிருக்கும். காகிதப் பதிப்புப் போலவே பதிக்கும்போது தேவையான மூலப்பொருட்கள் ஒவ்வொரு வரியிலும் வரிசையான சிறுபுள்ளிகளாக வெளியிடப்பட்டுப் பதிக்கப்படுகின்றன. ஆனால் சில வித்தியாசங்களும் உள்ளன. முக்கியமாக வெளியாகும்போது அந்தப் பொருட்கள் மிக அதிக வெப்பத்தில் உருகி வெளிவரும். மேலும் காகிதப்பதிப்பில் பதிக்கும் கூர்முனை (printing nozzle) ஒரு வரியை ஒருமுறைதான் கடக்கும். ஆனால் முப்பரிமாணப் பதிப்பில் ஒரே வரியில் வெவ்வேறு உயரத்தில் பல முறை கடந்துபோகும்."

ஷாலினி ஆர்வத்துடன் "ஏன் அப்படி?" என்று கேட்கவும், கிரணே முதலில் உற்சாகத்துடன் விளக்கினான். "ஓ ரொம்ப ஸிம்பிள் ஷாலு. இது முப்பரிமாணமாச்சே, அதனாலதான். காகிதப்பதிப்பை ரெண்டு பரிமாணம்னு வச்சுக்கலாம். அதுல இருக்கற ஒருவரி ஒருதடவை பதிச்சா அத்தோட முடிஞ்சுடுது. ஒவ்வொரு புள்ளியில பல வர்ணங்களை சேர்த்தாகூட ஒரு வரிக்கு ஒரேமுறை கூர்முனை பதிச்சா போதும். ஆனா முப்பரிமாணத்துல ஒரே வரியில மேலமேல பதிச்சாதானே உயரப் பரிமாணத்துல அந்தப் பொருள் வளரமுடியும். அதுனாலதான்!"

ஷாலினியும் சூர்யாவும் புரிந்ததாகத் தலையாட்டவும், "வெரி குட் கிரண், சரியா விளக்கிட்டீங்க" என்று அகஸ்டா பாராட்டவும், கிரண் உச்சிகுளிர்ந்து போனான்.

அகஸ்டா தொடர்ந்தாள். "காகிதப் பதிப்பில் வண்ணப் படங்களைப் பதிக்கும்போது ஒரே புள்ளியில் பலவண்ணங்களைப் பதிக்கறாமாதிரி, முப்பரிமாணப் பதிப்பில் ஒரு புள்ளிக்கு வெவ்வேறு மூலப்பொருட்களை வண்ணங்கள் கலந்து பதிக்கலாம். ஆனால் ஒரு புள்ளியில் ஒரு மூலப்பொருள் வகை அதாவது ப்ளாஸ்டிக், கண்ணாடி, உலோகம் போன்றவை வெளியிடப்படும். ஒரு வரியின் சில இடங்களில் காகிதத்தில் காலியாக வைப்பது போல் ஒன்றும் பதிக்கப்படாது."

ஷாலினி தலையாட்டினாள். "இதை நான் கிரண் வீட்டிலயே கவனிச்சேன், அப்புறம்?"

அகஸ்டா மேற்கொண்டு விளக்கினாள். "ஒருவரி முடிஞ்சதும் அதேமட்டத்தில் உள்ள மற்றவரிகளில் பதிக்கப்படும். ஒருவரி முழுவதும் ஒன்றும் பதிக்கப்படாமல் இடைவெளியும் விடப்படலாம். அந்த மட்டம் முடிஞ்சதும் அடுத்த மட்ட வரிகள் ஆரம்பிக்கும்."

சூர்யா இடைமறித்தார், "ஆனால் கீழ்மட்ட வரி இடைவெளியா இருந்து மேல்மட்ட வரியில் எதாவது புள்ளி பதிக்கணும்னா எப்படிச் செய்யும்?"

இப்போது ஷாலினி புகுந்து விளக்கினாள். "ஓ! அதைக்கூட நான் கிரண் வீட்டுல பாத்தேன். எதோ சுலபமாக உருகக்கூடிய ப்ளாஸ்டிக் பொருளை அதுக்குக் கீழ் அடிப்படையா பதிச்சுட்டு அப்புறம் மொத்தமா உருக்கி ஆவியாக்கிடறாங்க போலிருக்கு."

அகஸ்டா பாராட்டினாள். "ரொம்ப நல்ல கேள்வி சூர்யா, அதுக்கு சரியான நல்ல பதில் ஷாலினி. ஆனா இன்னொரு வழியும் இருக்கு. இது முப்பரிமாணம் இல்லையா, அதுனால பொருட்களை உள்ளிருந்து எந்த மட்டத்துலயும் ஆரம்பிச்சு, பொருளை நகர்த்தி, அல்லது சில கோணங்களில் திருப்பி அதைச்சார்ந்த வெளிமட்டங்களையும் பதிக்கலாம். ஒரு மட்டத்தை மொத்தமாப் பதிக்கவேண்டியதும் இல்லை. சில வரிகளைப் பதிச்சுட்டு வேற மட்டத்தை ஆரம்பிச்சு, பிறகு பாதில நிறுத்திய மட்டத்தைத் தொடரலாம். அதுமட்டுமில்லை. பல பதிப்புக் கூர்முனைகளை வச்சு பல மட்டங்களில் ஒரே நேரத்துல பதிக்கக்கூடும். பதிப்புக் கருவி எவ்வளவு முன்னேறியதுங்கறதப் பொருத்து முப்பரிமாணத்துல பலவிதமான பதிப்பு வசதிகள் இருக்கு. அதுனால இதை பதிப்புன்னு சொல்றதவிட, கூட்டு உற்பத்தின்னு (additive manufacturing) சொல்றது இன்னும் சரியாப் பொருந்தும். ஆனா முப்பரிமாணப் பதிப்புன்னுதான் எல்லாரும் பொதுவா பெயர் வச்சுட்டாங்க. அதான் நிலைக்கும் போலிருக்கு!"

சூர்யா சிலாகித்தார். "வாவ்! ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே இது. மின்வில்லைகள் தயாரிப்பு மாதிரி இருக்கு. அதுலயும் பலவிதமான இடைவெளிகளுள்ள மட்ட மூடிகள் (mask layers) வச்சு படிப்படியா வில்லைகள் செய்யறோம். ஆனா ரொம்ப வெவ்வேற மாதிரியான வடிவங்கள்செய்ய முடியாது. சதுரம், செவ்வகமாதான் வரும். பாக்கவும் முப்பரிமாணமாக் கூடத் தெரியறதில்லை. ஒரே மட்டமாத்தான் தெரியும். ஆனா ரெண்டு துறைக்கும் சில பொருத்தங்கள் இருக்குன்னு தோணுது."

அகஸ்டா முறுவலுடன் தொடர்ந்தாள். "ஒருவிதத்துல ரெண்டுத்துக்கும் சம்பந்தம் இருக்குதான். ரெண்டு துறையிலயும் சுத்த அறைகள் தேவையிருக்கே. நான் சொன்னபடி பலவிதமான பதிப்பு வசதிகள் இருக்கறதுனால, மிக உயர்தரமான முப்பரிமாணப் பதிப்புக் கருவிகளைக் கொண்டு மிக நுண்ணிய இயந்திரப் பகுதிகள் (machine parts) செய்யமுடியும். அதுனால, ஒரு இயந்திரம் எவ்வளவு பழசுன்னாலும், வழக்கற்றுப் (obsolete) போக வேண்டியதேயில்லை. ஒருதடவை அதோட பாகங்களை முப்பரிமாண உருப்படிவம் (model) செஞ்சுவச்சுட்டா போதும். எப்ப வேணும்னாலும் ஒண்ணு ரெண்டுகூட செஞ்சுக்க முடியும். தொழிற்சாலை உற்பத்தி மாதிரி ஆயிரக் கணக்குல செஞ்சாதான் கட்டுப்படியாகுங்கறதில்லை."

சூர்யா சிலாகித்தார், "பிரமாதந்தான். என்னுடைய பழைய தொழில்ல, ஆயிரம் என்ன மில்லியன் செய்யலன்னா கட்டுபடியாகாது. ஆனா இயந்திரப் பாகங்களை எப்ப வேணும்னாலும் ஒண்ணு ரெண்டு செய்யலாம்னா அது ரொம்பவே பிரமாதம். அதுலயும், எல்லாம் ஒரேமாதிரி செய்ய வேண்டியதில்லையே, அவரவருக்கு வேணுங்கற மாதிரி செஞ்சுக்கலாமே."

அகஸ்டா கைதட்டினாள். "அஹ்ஹா, அற்புதம் சூர்யா, அற்புதம்! நான் அடுத்தது என்ன சொல்ல வாயெடுத்தேனோ அதை கனகச்சிதமா நீங்களே சொல்லிட்டீங்க. முப்பரிமாண பதிப்பின் மிகமுக்கியமான பலன் இம்மாதிரி தனிப்படுத்தல் (customization) என்பது. அதுவும் வெகுஜன தனிப்படுத்தல் (mass customization) என்று சொல்வார்கள். காலணி நிறுவனமான நைக்கிகூட கூடியசீக்கிரம் முப்பரிமாண பதிப்பின் மூலமாக இளம் வயதினர் தமக்குத் தேவையானமாதிரி காலணிகள் உற்பத்தி செய்துகொள்ள அனுமதிக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.

அகஸ்டா முப்பரிமாணப் பதிப்பு நுட்பங்களைப்பற்றி மேற்கொண்டு விவரித்தது, நம் துப்பறியும் மூவருக்கும் மிக சுவாரஸ்யமாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருந்தது. ஆனால் இன்னும் பிரச்சனை ஏதோ இருக்கிறதே! அதைத் தீர்க்க வேண்டுமே...

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com