இந்தியாவின் முன்னோடி கேலிச்சித்திரக்காரரும், படைப்பாளியுமான ஆர்.கே.லக்ஷ்மண் (94) காலமானார். ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் மைசூரில் பிறந்தார். ஓவியக் கல்லூரியில் பயில இடம் கிடைக்காமல், மைசூர் மகாராஜா கல்லூரியில் இளங்கலை படித்தார். ஓவிய ஆர்வம் காரணமாகப் பொதுவிடங்களுக்குச் சென்று மக்களின் நடை, உடை பாவனைகளை அவதானித்துப் படங்கள் வரைந்தார். அண்ணன் ஆர்.கே. நாராயண் புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது கதைகளுக்கு லக்ஷ்மண் ஓவியம் வரைய ஆரம்பித்தார். சில இதழ்களுக்குக் கார்ட்டூனும் வரைந்தார். படிப்பை முடித்ததும் டெல்லி, கல்கத்தா, மும்பை சென்று வாய்ப்புகள் தேடினார். மும்பையில் புகழ்பெற்ற 'தி ஃப்ரீபிரஸ் ஜர்னல்' இதழில் கேலிச்சித்திரக்காரர் வேலை கிடைத்தது. அந்த நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள் பிடிக்காமல் வேலையிலிருந்து விலகினார். பின் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் சேர்ந்தார். அதில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பணியாற்றினார். அவர் உருவாக்கிய 'திருவாளர் பொதுஜனம்' (Common man) என்ற பாத்திரம் மிகப் புகழ்பெற்றது. ஒரு குடை, கோட், மீசை, வழுக்கைத் தலை ஆகியவை கொண்ட அந்தப் பொதுஜனம் ஒருவகையில் லக்ஷ்மண் தான். 50 ஆண்டுகளாகியும் அவர் அந்தப் பாத்திரத்தின் தோற்றத்தை மாற்றவில்லை. தனது கேலிச்சித்திரங்கள் மூலம், சராசரி இந்தியனின் துயரங்களைக் கிண்டலும், கேலியும் கலந்து ஆழமாக உறைக்கும்படி அவர் சொன்னார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் 150வது ஆண்டு விழாவின்போது பொதுஜனத்தை அஞ்சல் உறையில் அச்சிட்டுப் பெருமைப்படுத்தியது இந்திய அஞ்சல்துறை. பத்மவிபூஷண், ரமன் மகசாஸே போன்ற விருதுகள் பெற்றார் லக்ஷ்மண். சிறுநீரகத் தொற்று காரணமாகப் புனே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றிக் காலமானார். கேலிச்சித்திரச் சக்கரவர்த்திக்குத் தென்றலின் அஞ்சலி!
|