சைவசமயத்தின் பெரியகோயில் என்றும், பழம்பெருமை வாய்ந்த சிவாலயங்களுள் சிறப்புமிக்கது என்றும் புகழப்படுவது திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில். இத்தலம் சைவத்தலங்களுள் முதன்மையானதாகவும், சப்தவிடங்கத் தலங்களுள் மூலாதாரத் தலமாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் விளங்குகிறது. பிறக்க முக்திதரும் தலம் என்ற மற்றுமொரு சிறப்பும் இதற்குண்டு. சமயக்குரவர்களால் பாடப்பட்ட பெருமையுடையது. இத்தலத்து இறைவன் வன்மீகநாதன் என வடமொழியிலும் புற்றிடங்கொண்ட பெருமான் எனத் தமிழிலும் அழைக்கப்படுகிறார். தியாகேசர் என்ற பெயரும் உண்டு. 'ஆரூரான்' என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநாமங்களால் திருமுறைகளில் புகழப்படுகிறார். தில்லை ரகசியம்போல ஆரூர் ரகசியம் என்பது தியாகேசரின் திருமேனி ஆகும். ஸ்ரீசக்ரத்தை மார்பில்கொண்ட திருமேனியைப் போல வேறெங்கும் பார்க்கமுடியாது. முகதரிசனம் மட்டுமே நமக்குக் கிடைக்கும் என்பதால் அது திருவாரூர் ரகசியம் என்று அழைக்கப்படுகிறது.
மஹாவிஷ்ணுவின் மூச்சுக்காற்று, ஆதிசேஷனின் மூச்சுக்காற்று, பள்ளிகொண்ட பெருமாளின் பாற்கடல் அலைகள் இவை மூன்றின் அசைவினாலும் தியாகேசப்பெருமான் ஆடுவதாகவும், மஹாவிஷ்ணுவின் மூச்சுக்காற்றால் ஆடுவதால் அது 'அஜபா நடனம்' என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மார்கழித் திருவாதிரை, பங்குனி உத்தர நாட்களில் ஆரூரனின் கூத்தினைக் காணப் பதஞ்சலி, வியாக்ரபாதர் உள்ளிட்ட முனிவர்கள் வந்து தரிசனம் செய்வதாக ஐதீகம்.
சங்கீத மும்மூர்த்திகள் பிறந்த ஊர். மனுநீதிச் சோழனின் நீதி வழங்கும் முறையை மெச்சித் தியாகேசப்பெருமானே நேரில் காட்சியளித்து தேர்ச் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கன்றையும், சோழன் மகன் வீதிவிடங்கனையும் உயிர்ப்பித்துத் தந்தார் என்பது வரலாறு. தண்டியடிகள், நமிநந்தி அடிகள், விறன்மிண்ட நாயனார், கழற்சிங்க நாயனார் உள்ளிட்ட பலரது வரலாறுகளும் தியாகேசருடன் தொடர்புடையன.
ஆலயத்தின் முக்கிய தீர்த்தம் கமலாலயத் திருக்குளம்.
பல்லவர்கள் முதல் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், தஞ்சை நாயக்கர்கள், மராட்டியர் எனப் பலரும் இக்கோயில் திருப்பணிகளுக்குப் பங்காற்றியுள்ளனர். ஓவியங்களும், மண்டபங்களும், கல்தூண்களும் கொண்டு சிறப்புடன் இக்கோயில் விளங்குகிறது.
ஆலயத்தின் மற்றொரு சிறப்பு அன்னை கமலாம்பிகை சன்னிதியாகும். அன்னை இங்கே தலையில் பிறையைச்சூடி கங்கையைச் சிரசில் அடக்கி ஈசான்யதிசை நோக்கி முப்பெருந்தேவியரின் சங்கமமாக அமர்ந்திருக்கிறாள். 64 சக்திபீடங்களில் அன்னை ஆட்சிபுரியும் 5 பீடங்களில் இவளே முதன்மையானவள். (ஆரூர் - கமலாயதாட்சி, நாகை - நீலாயதாட்சி, காசி - விசாலாட்சி, காஞ்சி - காமாட்சி, மதுரை - மீனாட்சி என்பன அவை) முத்துசாமி தீக்ஷிதர் அன்னையின் அருளை மிகச்சிறப்பாக நவாவர்ண கீர்த்தனையில் பாடியுள்ளார். அன்னைசெய்த தவத்திற்கு மெச்சியே வன்மீகநாதர் இத்தலத்தில் எழுந்தருளினார் என்ற நம்பிக்கையும் உண்டு. அன்னையின் திருக்கோயில் தனிக்கோயிலாக, தனிக் கொடிமரம், தனிப் பலிபீடம், தனி வாகனம், தனித் திருமதில் ஆகியவை கொண்டு விளங்குவது சிறப்பு.
ஆலயத்தின் மற்றொரு சிறப்பு, நீலோத்பலாம்பாள் சன்னிதி. 'அல்லியல் கோதை' என அழகுத்தமிழில் இவள் அழைக்கப்படுகிறாள். அம்பாளுக்கு அருகிலுள்ள தோழியின் தோளில் முருகப்பெருமான் அமர்ந்துள்ளது சிறப்பு. அவரது தலையைத்தொட்டுத் தடவிக்கொடுப்பதுபோல அன்னையின் திருமேனி அமைந்துள்ளது காணக்கிடைக்காத அழகு. இக்கோயிலில் எட்டு துர்க்கைகள் அமைந்துள்ளது மற்றுமொரு சிறப்பம்சம். நவராத்திரியில் துர்கா பூஜை மிகச் சிறப்பாக நடந்தேறும். நவக்கிரகங்கள் அனைத்தும் தியாகராஜரை நோக்கி ஒரே வரிசையில் அமைந்துள்ளது மற்றுமொரு சிறப்பம்சமாகும். தீராத கடன்தொல்லைகளைத் தீர்க்கும் ருணவிமோசனர் இங்கு எழுந்தருளியுள்ளார்.
இரண்டாம் பிரகாரத்தில் விஸ்வகர்மா வழிபட்ட விஸ்வகர்மேஸ்வரம் சன்னிதி, சகஸ்ரலிங்கர் சன்னிதி, ஆதிசண்டேஸ்வரர் என சிறப்புப் பொருந்திய சன்னிதிகள் அமைந்துள்ளன. எமனே தாடி, சடையுடன் ஒரு காலையூன்றி, முழங்காலில் முகத்தை வைத்துள்ள எமசண்டேஸ்வரர் மற்றுமொரு சிறப்பு. இங்கு பிறப்பவர்களை இறைவன் முக்திக்கு அழைத்துச்செல்வதை உறுதிப்படுத்தவே இவர் இங்கே எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.
இங்குள்ள வாதாபி விநாயகர் சன்னிதியும் சிறப்பு வாய்ந்ததாகும். முத்துசாமி தீக்ஷிதர் இவரையே 'வாதாபி கணபதிம்' என்று பாடியுள்ளார். வீதி விடங்க விநாயகர், வல்லப கணபதி, ஐங்கலக்காசு விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், உச்சிஷ்ட கணபதி எனப் பல்வேறு விநாயகத் திருமேனிகள் கமலாலயக் கரையில் அமைந்துள்ளன. நந்தி தியாகேசர் சன்னிதிக்குமுன் நின்ற நிலையில் காட்சி தருவது சிறப்பு. சுந்தரருக்காக தூதுசென்ற ஆரூரர் அவசரத்தில் நந்திமீது ஊர்ந்து செல்லாமல் நடந்தே சென்றாராம். அதுகண்டு வருந்திய நந்தி இனிப் பெருமானை நடக்கவிடக்கூடாது என எப்போதும் தயார்நிலையில் இருக்கிறார் என்பது ஐதீகம்.
தமிழகத்தின் மிகப்பெரிய தேர் இங்குள்ளது. அதனால் 'ஆழித்தேர்' என அப்பர் இத்தேரைப் புகழ்ந்துரைக்கிறார். 'ஆரூர் தேரழுகு' என்பது பல ஆண்டுகளாக வழக்கில் இருந்துவரும் மொழியாகும். கோவிலைப் போன்ற வடிவிலமைந்துள்ள இத்தேர் நகர்ந்து வருவது, கோவிலே நகர்ந்து வருவதைப் போன்ற தோற்றத்தைத் தரும். திருக்கோயிலின் புகழுக்குத் தேர் சிகரமாய் விளங்குவதால் தியாகேசர் ஆழித்தேர் வித்தகர் என்று போற்றப்படுகிறார். திருவாரூருக்கு வாருங்கள்! ஒரு தெய்வம் சிரிப்பதைப் பாருங்கள்!
சீதாதுரைராஜ், கலிஃபோர்னியா |