டிசம்பர் 6, 2014 அன்று அக்சஸ் பிரெய்ல் அமைப்பின் வருடாந்திர நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஸ்டேன்ஃபோர்டு பல்கலையில் இரண்டாமாண்டு கணினி அறிவியல் பயிலும் மாணவரும், பார்வையற்றவருமான திரு. கார்த்திக் சாஹ்னியின் சிறப்பான உரையோடு நிகழ்ச்சி தொடங்கியது. இந்தியாவில் பிறந்த அவர் அந்நாட்டில் இன்னும் பார்வைக் குறைபாடு உடையவர்களுக்குப் போதிய வசதிகள் இல்லை எனவும் இதில் தொண்டு நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.
அமைப்பின் இயக்குனர் திருமதி. சுதா ராஜகோபாலன் இந்தியாவில் பார்வைக் குறைபாடு கொண்டோருக்குக் கல்வி தருவதற்காக அக்சஸ் பிரெய்ல் செய்துவரும் வசதிகள் குறித்து விரித்துரைத்தார். பிரெய்ல் உதவிக் கருவிப்பெட்டிகளைத் தருவதோடு, 'The Reading Finger' என்ற பிரெய்ல் சஞ்சிகை ஒன்றையும் அது வெளியிடுகிறது. தவிர, பாடப்புத்தகங்களை ஒலிநூல்களாக வெளியிடுவதோடு, பார்வையற்றோருக்குக் கற்க உதவும் மடிக்கணினி போன்ற கருவிகளை வாங்கவும் நிதி நல்குகிறது. இந்தத் தொண்டில் இணைய விரும்புவோர் info@accessbraille.org என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.
பின்னர் நடந்த திருமதி. சுதா கிருஷ்ணன் அவர்களின் நாட்டிய நிகழ்ச்சிக்குத் திருமதி. ராதிகா சங்கர் (நட்டுவாங்கம்), திருமதி. ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு), திரு. அஷ்வின் கிருஷ்ணமூர்த்தி (புல்லாங்குழல்), திரு. விக்ரம் ரகுகுமார் (வயலின்) ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். பாசுரங்கள், அபங்கம், பஜகோவிந்தம் முதலியவற்றை உள்ளடக்கிய 'மொழிகளின் வழியே பக்தி' என்ற இந்த நிகழ்ச்சி செவிக்கும் கண்ணுக்கும் விருந்தாக அமைந்தது. அக்சஸ் பிரெய்ல் நிறுவனர் திருமதி. விஜி. திலிப் நன்றியுரை வழங்கினார். |