அதன் புழுதியும் புனிதமானதே
விவேகானந்தர் லண்டனைவிட்டுப் புறம்படும் சமயம். ஒரு ஆங்கிலேய நண்பர் கேட்டார்: "சுவாமி, நான்கு வருடங்களாக சொகுசான, மகத்தான, சக்திவாய்ந்த மேற்கு நாடுகளில் வசித்த அனுபவத்துக்குப் பிறகு, உங்கள் தாய்நாட்டை எப்படி விரும்புகிறீர்கள்?"
சுவாமி விவேகானந்தர் கூறினார், "இந்தியாவிலிருந்து புறப்படுமுன் அதை நேசித்தேன். இப்போதோ அதன் புழுதிகூட எனக்குப் புனிதமாகிவிட்டது, அதன் காற்றும் புனிதம், அதுவே புனிதபூமிதான். இந்தியாவுக்குப் போவது எனக்குத் தீர்த்த யாத்திரை!".
*****
"இவரே உண்மையான வேதாந்தி!"
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை பாரிஸ் நகரின் வீதியில் தனது ஐரோப்பிய சிஷ்யையுடன் கோச் வண்டியில் சென்று கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் ஒரு வீட்டிலிருந்து இரண்டு பணக்காரச் சிறுவர்கள் வெளியே ஓடி வந்தனர். வண்டியை ஓட்டியவர் அதை நிறுத்திப் பணக்காரச் சிறுவர்களைக் கட்டியணைத்து முத்தமிட்டார். சில வார்த்தைகள் பேசினார். மறுபடியும் வந்து வண்டியை ஓட்டிச்சென்றார்.
"யார் அந்தச் சிறுவர்கள்?" என்று கேட்டார் சிஷ்யை. பதிலுக்கு வண்டியோட்டி "என் குழந்தைகள்தான்" என்றார். சுவாமிஜிக்கும், சிஷ்யைக்கும் ஒரே ஆச்சரியம். கோச் வண்டிக்காரர் திரும்பிப் பார்த்தார். பாரிஸில் இருந்த ஒரு வங்கியின் பெயரைச் சொல்லி அதைப்பற்றித் தெரியுமா என்று கேட்டார்.
"ஒ! தெரியும். மிகப்பெரிய வங்கிதான். ஆனால், தற்போது திவாலாகிவிட்டது போல் தெரிகிறது!" என்றார் சிஷ்யை.
இதை கேட்டுவிட்டு வண்டியோட்டி அமைதியாக, "நான்தான் அந்த வங்கியின் சொந்தக்காரன்! அது இப்போது கொஞ்சம் சிரமநிலையில் இருக்கிறது. இப்போது நான் மற்றவர்களுக்குச் சிறிதும் சுமையாக இருக்க விரும்பவில்லை. மீதமிருந்த சொத்தை விற்று இந்தக் கோச் வண்டியை வாங்கினேன். இதை வாடகைக்கு ஒட்டுகிறேன். என் மனைவியும் சிறிது சம்பாதிக்கிறார். கடன்களை அடைத்ததும் மீண்டும் வங்கியைத் திறந்துவிடுவேன்!" என்றார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த சுவாமிஜி மிகவும் மகிழ்ந்து, "இதோ இந்த மனிதரைப் பார்! இவர்தான் சரியான வேதாந்தி. வேதாந்த தத்துவத்தைத் தம் வாழ்க்கையில் செயல்படுத்தியுள்ளார். பெரிய அந்தஸ்திலிருந்து விழுந்தும்கூட இவர் சூழ்நிலைக்கு இரையாகிவிடவில்லை. என்ன ஒரு தன்னம்பிக்கை இவரிடம் உள்ளது!" என்று கூறி ஆச்சரியப்பட்டார்.
அதற்குப் பிறகு அவர் வீட்டுக்குப் போய்த் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார் சுவாமி விவேகானந்தர்.
(சுவாமி விவேகானந்தர் ஜனவரி 12, 1863 அன்று பிறந்தார். அவரது பிறந்தநாள் இந்தியாவில் 'தேசிய இளைஞர் நாள்' ஆகக் கொண்டாடப்படுகிறது).
*****
வீரத்துறவியின் விவேகச் சொற்கள்
"எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்குமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன் சொந்தக்காலில் நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை. மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி. அறிவு வளர்ச்சிக்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அதுதான் மனதை ஒருமுகப்படுத்துதல். கல்வியின் இலட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான்." - சுவாமி விவேகானந்தர்
"கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் உள்ளே உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக்கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது." - சுவாமி விவேகானந்தர்
"மிகவும் துணிவுடையவர்கள் மட்டுமே (ராஜயோகம் என்னும்) இந்தப் பாதையைப் பின்பற்ற முடியும் என்பதை முதலிலேயே சொல்லி உங்களைத் தயார்படுத்த விரும்புகிறேன், கோயிலை நம்பாதவனும், எந்த மதப்பிரிவையும் சாராதவனும், 'எதையும் நம்பமாட்டேன்' என்று சொல்லித் திரிபவனும் பகுத்தறிவுவாதி என்று எண்ணிவிடாதீர்கள். அப்படி இல்லவேயில்லை, அப்படியெல்லாம் பிதற்றித் திரிவது இன்று ஒரு வீரமாகக் கருதப்படுகிறது." - சுவாமி விவேகானந்தர்
"பகுத்தறிவையும் நம்பி, உண்மையையும் கடைப்பிடிப்பது மிகவும் கடினமானது. மூடத்தனமாக எதையாவது பின்பற்றுபவர்கள் அல்லது அரை ஆஷாடபூதிகள் – இவர்களால்தான் இந்த உலகமே நிறைந்திருக்கிறது. இந்த வேஷதாரிகளைவிட முட்டாள்களும் மூடர்களும் எவ்வளவோ மேல்! அவர்கள் நல்லவர்கள்." - சுவாமி விவேகானந்தர் |