எஸ். பொன்னுத்துரை
எஸ்.பொ. என்று அறியப்படும் எஸ். பொன்னுத்துரை நவம்பர் 26, 2014 அன்று காலமானார். ஈழத்தின் முதன்மை எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். அவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். இலங்கையில் ஆசிரியப் பணியாற்றிய இவர் முற்போக்கு இலக்கியத்திற்கு மாறாக நற்போக்கு அணி ஒன்றைத் தொடங்கி நடத்தினார். சிறுகதை, நாவல், கட்டுரை என்று ஈழத்தமிழ் இலக்கியத்துக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்திருக்கிறார். இவரது 'சடங்கு', 'தீ' குறுநாவல்களும், 'ஆண்மை' சிறுகதைத் தொகுதியும் மிக முக்கியமானவை. 'நனவிடை தோய்தல்' என்ற இவரது கட்டுரை நூல் யாழ்ப்பாணத்தின் அக்கால வாழ்க்கையை நுணுக்கமாகக் காண்பிப்பதாகும். இரண்டாயிரம் பக்கங்களுக்கும் மேலுள்ள இவரது சுயசரிதையான 'வரலாற்றில் வாழ்தல்' ஈழப்போராட்டத்தின் பின்னணியைச் சொல்லும் சிறந்ததோர் ஆவணம். தனது 'மித்ர' பதிப்பகம் மூலம் ஈழப்படைப்புகள் உள்பட நல்ல பல நூல்களை வெளியிட்டு வந்தார். 'பூ', 'தேடல்', 'முறுவல்', 'இஸ்லாமும் தமிழும்', 'எஸ்.பொ. கதைகள்', 'கீதை நிழலில்', 'அப்பாவும் மகனும்', 'தீதும் நன்றும்', 'காந்தீயக் கதைகள்', 'காந்தி தரிசனம்' போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.

இவருக்குக் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது 2010ம் ஆண்டில் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்று சிட்னியில் வாழ்ந்த எஸ்.பொ. 'அக்கினிக்குஞ்சு' இதழின் கௌரவ ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். இவரைப்பற்றி மேலும் வாசிக்க.



© TamilOnline.com