"இயக்குநர் சிகரம்" என்றால் அவர்தான். அறுபதுக்கும் மேற்பட்ட நடிகர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் (84) சென்னையில் டிசம்பர் 23, 2014 அன்று காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகே நல்லமாங்குடியில் ஜூலை 09, 1930 அன்று பிறந்த பாலச்சந்தர், உழைப்பாலும் திறமையாலும் மட்டுமே கலையுலகில் கொடி நாட்டியவர். பள்ளிக் காலத்திலேயே நாடகமும் சினிமாவும் இவரை ஈர்த்தன. கல்லூரி நாட்களில் பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். படிப்பை முடித்து, ஆசிரியராக ஓராண்டு பணியாற்றியவர், பின்னர் சென்னையில் ஏஜீஸ் அலுவலகத்தில் சேர்ந்தார். பணியாற்றிக்கொண்டே பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். 'மேஜர் சந்திரகாந்த்', 'நாணல்', 'எதிர்நீச்சல்' ஆகியவற்றின் அழுத்தமான கதையம்சமும், கட்டிப்போடும் இயக்கமும் இவர்மீது மக்களின் கவனத்தைத் திருப்பின.
நெஞ்சைத் தொட்ட 'நீர்க்குமிழி' படத்தின் மூலம் திரையுலகில் அழுத்தமாக அடியெடுத்து வைத்தார். 'கவிதாலயா'வைத் தொடங்கி அதன்மூலம் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து, இயக்கித் திரையுலகின் மடைமாற்றத்துக்குக் காரணமானார். 'தாமரை நெஞ்சம்', 'மேஜர் சந்திரகாந்த்', 'அபூர்வ ராகங்கள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'இருகோடுகள்', 'பாமா விஜயம்', 'தண்ணீர் தண்ணீர்', 'அச்சமில்லை அச்சமில்லை', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'சிந்து பைரவி', 'உன்னால் முடியும் தம்பி', 'வானமே எல்லை', 'புதுப்புது அர்த்தங்கள்' போன்ற படங்களின் அணிவகுப்பு இவரை எட்டமுடியாத உயரத்தில் கொண்டு நிறுத்தின.
தேசிய விருது, பத்மஸ்ரீ, பல்கலைக்கழகங்களின் கௌரவ டாக்டர் பட்டம், ஃபிலிம்ஃபேர் விருது, தாதா சாஹேப் பால்கே விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல கௌரவங்கள் இவரைத் தேடிவந்தன. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் படங்களை இயக்கிச் சாதனை படைத்த பாலசந்தர், சின்னத்திரையிலும் ரயில் சிநேகம், கையளவு மனசு, ரகுவம்சம், அண்ணி போன்ற தொடர்களால் மனம் கவர்ந்தார். சிலவற்றில் தாமே நடிக்கவும் செய்தார். சில மாதங்களுக்கு முன் காலமான இவரது மகன் கைலாசத்தின் மறைவு இவரது உடலையும், மனதையும் ஒருசேரப் பாதித்தது. இவருக்கு மனைவி ராஜம், மகள் புஷ்பா, மகன் பிரசன்னா ஆகியோர் உள்ளனர். ஆயினும் இவரது கலையுலக வாரிசுகள் எண்ணற்றவர்.
இயக்குனர் சிகரத்துக்கு தென்றலின் அஞ்சலி! |