கூடு
தூசி கிராமம்... எந்தவொரு நாகரீகச் சாயத்தையும் இன்னும் தன்மேல் பூசிக்கொள்ளாமல் இருக்கும் கிராமம். பழைய எச்சங்களைத் தன்னுடன் இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. சுதந்திரத்துக்கு முன், சுதந்திரத்துக்குப் பின் என்று வரையறை ஏதும் தூசி கிராமத்து மக்களிடம் இல்லை. முன்பு சிம்னி விளக்கு இரவுகளில் வெளிச்சம் வீசிக்கொண்டிருந்தது. இப்போது குண்டு பல்புகளின் வெளிச்சத்தில் மரத்தின் நிழல்கள் தவழ்ந்தபடியே இருக்கின்றன.

தூசி கிராமத்திற்கு மேற்கே இருக்கிறது தாணி மலை. அந்த மலையில் உள்ள கிராமங்களுக்கு சரக்குவண்டி ஓட்டுவது மாணிக்கத்தின் தொழில். கரடு முரடான மலைப்பாதையில் மாணிக்கத்தைத் தவிர வேறெந்த வண்டியும் சவாரிக்கு போவதில்லை. சிறு வயதில் தன் அப்பாவுடன் மாட்டுவண்டியில் சரக்கு ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பழக்கம். தற்போது சரக்கு வண்டி ஓட்டுபவனாக மாணிக்கத்தை மாற்றியிருந்தது.

கனவில் மூழ்கிருந்த மாணிக்கத்தின் தூக்கம் எதோ ஒரு பெரும் சப்தத்தில் கலைந்தது. இடுப்பில் நழுவிய கைலியைச் சரி செய்துகொண்டு, வாசலுக்கு நடந்தான். இரவு பெய்த மழையில் தேங்கியிருந்த தண்ணீரையே வெகுநேரம் உற்றுப் பார்த்தான். ஏதேதோ எண்ணங்கள் வேகமாக ஓடிக் கலைந்தன. ஐந்தாம் வகுப்புவரை படித்திருந்த மாணிக்கம் புத்தகங்களைவிட மனிதர்களை நன்றாகவே படித்து வைத்திருந்தான்.

பராலி தாணி மலையில் வாழும் இருளர் இனத்தலைவர். வாரம் ஒருமுறை தூசி சந்தைக்கு வரும் இருளர் இன மக்கள் நம்பியிருப்பது மாணிக்கத்தின் வண்டியினை மட்டுந்தான். சந்தைக்கு அழைத்து வரும் நாளில்மட்டும் மாணிக்கம் எந்தச் சவாரியும் ஒத்துக்கொள்வது இல்லை. அந்த அளவுக்கு மாணிக்கத்திற்கு அந்த மக்களின் மீது எதோ ஒரு இனம்புரியாத நேசம். மாணிக்கம் சரக்கு ஏற்றிச் செல்வதற்கு எப்போதும் பேரம் பேசுவதில்லை அந்த மக்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறார்களோ அதை அப்படியே வாங்கிக் கொள்வான்.

அந்த மக்களிடம் பேரம் பேசாமல் பணம் வாங்கி வண்டி ஓட்டுவது மாணிக்கத்திற்கு எதோ ஒரு மனத் திருப்தியை தந்தது. மாணிக்கத்திற்கு இருக்கும் இன்னொரு சந்தோஷம் மகள் வள்ளி. பிரசவத்தின்போது தன் மனைவியைப் பறிகொடுத்த மாணிக்கத்திற்கு வள்ளி இன்னொரு சந்தோஷமாய் மாறியிருந்தாள்.

"வள்ளி நேரமாகுது பாரு நான் சவாரிக்குப் போகும்போது உன்னை பள்ளிக்கூடத்துல விட்டுட்டுப் போறன் கிளம்பு சீக்கரம்."

"அப்பா, கொஞ்சம் இரு."

பாட்டியிடம் அவசர அவசரமாகத் தலை வாரிக்கொண்டு கிளம்பினாள்.

பல் விழுந்த ஓட்டை வாய். தோள்பட்டையில் ஜோல்னா பை. தன் அப்பாவுடன் வண்டியில் செல்லும்போது தன்னை ஒரு இளவரசியாக எண்ணிக் கொள்வாள் வள்ளி. வண்டி ரதமாகும். சாலையில் ஊர்ந்து போகும் எறும்புகள் அவளின் தோழர்களாக உருமாறுவார்கள். மாணிக்கத்துக்கு ஒரு குட்டி சிநேகிதனும் உண்டு. வள்ளியுடன் ஒரே வகுப்பில் படிக்கும் கோவிந்தா. மனிதர்கள் புழங்காத சாலையில் வெறுமையான கால்களுடன் கோவிந்தா பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான். கோவிந்தா நடந்து செல்வது தூரத்தில் வண்டியை ஓட்டி வந்த மாணிக்கத்திற்கு நன்றாகவே தெரிந்தது. வண்டி மெதுவாக அவன் அருகில் போய் நின்றது. வள்ளி, மாணிக்கம் இருவரும் கோவிந்தாவைப் பார்த்து சிரித்தார்கள்.

"வாடா கோவிந்தா வந்து ஏறிக்கோ."

கோவிந்தாவின் உயரத்தைவிடப் பெரியதாய் இருந்தது வண்டியின் கதவு. முட்டி மோதித் திறக்க முயற்சித்துப் பார்த்தான். ஊஹும்... முடியவில்லை. மாணிக்கம் கதவைத் திறந்துவிட்டான். பெருமூச்சு விட்டபடி வண்டியில் ஏறி வள்ளி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். வள்ளி, கோவிந்தா இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

"என்னாடா எப்படி படிக்கிற?"

"படிக்கறன்… என்ன இந்த எழவு இங்கிலீஷ்தான் வந்து தொலைக்க மாட்டிக்குது."

"அது சரி..."

"இங்கிலீஷ்னா ஏன்டா எல்லாரும் தெரிச்சு ஒடூறிங்க?"

"நாங்க என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றோம்" சிணுங்கிக்கொண்டான் கோவிந்தா.

வழியில் பள்ளிக்கூடத்திற்கு வெளியில் கிழங்கு விற்கும் ஆயாவும் வண்டியில் ஏறிக்கொண்டார். பள்ளிக்கு வெளியில் வள்ளி, கோவிந்தா, ஆயா மூன்று பேரை இறக்கிவிட்டு, சவாரிக்கு மாணிக்கம் கிளம்பினான்.

தாணி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இருளர் மக்களுக்கு காட்டுக்குள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. சமைக்கத் தேவையான விறகுகளை எடுத்து கொள்ளலாம், மற்றபடி காட்டுக்குள் உள்ள எந்த பொருளையும் எடுத்துச் செல்லக்கூடாது. பெரிய அறிவிப்புப் பலகை ஒன்று தாணி மலையின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்தது.

வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடத்திலிருந்து இருளர் இனமக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். அருகிலுள்ள கல்மலையில் இருளர் இன மக்கள் தற்காலிகமாகக் குடியிருந்தார்கள்.

மாலை சவாரி முடித்து, வீட்டிற்குள் படுத்திருந்தான் மாணிக்கம். அருகில் வள்ளி பள்ளிப் பாடங்களை படித்துக் கொண்டிருந்தாள். வெளியே லேசாகப் பனி பொழிந்து கொண்டிருந்தது.

"அப்பா!"

"சொல்லு செல்லம்."

"எனக்குப் பாவாடை சட்டை வேணும். ஸ்கூல்ல ஆண்டு விழா. அதுக்கு மிஸ் புதுப் பாவாடை சட்டை போட்டுட்டு வரச் சொன்னாங்க."

"சரிடா… வாங்கிடலாம்."

"இன்னும் பத்து நாள்தான் இருக்கு… வாங்கித் தந்திருவ இல்லை. ஏமாத்திர மாட்டியே."

"சீ… கழுத… கண்டிப்பா வாங்கித் தரேன்."

தூசி கிராமத்தில் உள்ள லோக்கல் ஏஜண்ட் குமாரிடம் தார்ச்சாலை போடும் வேலைக்கு பராலி சொல்லி வைத்திருந்தான். வேலைக்கு பதினைந்து ஆட்களையும் தயார் செய்து வைத்திருந்தான்.

கதவில் மாட்டப்பட்டிருந்த செல்ஃபோன் சப்தமிட, அதை எடுத்துப் பார்த்தான். பராலி அழைப்பு…

"மாணிக்கம், நான்தான் பராலி பேசுறன். தூசி நாட்டுல நாளைக்கு ரோடு போடுற ஜோலிக்குப் போகணும். வண்டியை ஓட்டியாந்துறு. நாங்க எல்லாரும் ஜீருலி பாறை வளைவில் காத்துக் கிடக்கோம்."

"ஆகட்டும் பராலி, வந்துறன்."

மாணிக்கம் சவாரிக்கு ஆடுகளை ஏற்றிக்கொண்டு சென்றதால் ஆட்டுப்புழுக்கை வண்டியில் நிரம்பியிருந்தது. வேகமாகத் தண்ணீர் அடித்து வண்டியைக் கழுவினான்.

"தாய்வழி சமூகமாக வாழ்ந்து கிடக்கிற நம்மால இந்தக் காட்டுக்கு என்ன சேதாரம் வந்திடப் போகுது" கெம்மியன் புலம்பிக் கொண்டிருந்தான். பராலி தன் தலைப்பாகையைச் சரிசெய்தபடி வெகுநேரம் வானத்தில் மூன்றாம் பிறையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"வரகு, சாமை திண்ணுட்டு கிடந்த நம்ம குழந்தைகளே இப்ப நெல்லு சோறு கேக்குதுங்க. அதுங்களுக்கு அது பிடிச்சுப்போச்சு. நம்ம புள்ளை, குட்டிங்களே மாறும்போது காடு மாறாதா என்ன?"

கெம்மியன் சிறிது நேரம்….அமைதி காத்த பிறகு… "காட்டுல நம்மால எந்த பாதிப்பும் இல்லை… நாட்டுல இருக்கிற மனுஷன்லாம் காட்டுக்குள்ள பண்ற தப்பலாம் பாரஸ்ட் அதிகாரங்களோட கண்ணுக்குத் தெரியாது. புளிப்பழம், களாக்காய் எடுக்குற நாம தப்புப் பண்ணவங்களாம். ஆனா, பொறி வச்சு யானையைக் கொல்ற கொள்ளக்கூட்டத்தை இன்னும் கண்டுபிடிச்ச பாடில்லை…" நீண்டுகொண்டே இருந்தது பேச்சு.

"போடா போய்ப் படு… விடியக்கால எழுந்திருச்சு ஜோலிக்குப் போகணும். நாளைக்கு தூசி நாட்டுல ரோட்டுக்கு ஜல்லி போடற வேலை சொல்லி வச்சிருக்கன். போனா எதாவது இரண்டு நாளைக்கு நம்ம பொழப்பு ஓடும்."

உடம்பை உறைய வைக்கும் அளவுக்குக் கடும்பனி கொட்டிக்கொண்டே இருந்தது. சிறிய கம்பளிப் போர்வைக்குள் சுருங்கியவாறு எதோ ஒரு யோசனையில் பராலி படுத்திருந்தான்.

பராலியிடம் இருக்கும் செல்ஃபோன் தூசி கிராமத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பயிற்சி வேலைக்கு வந்த ஒரு டாக்டர் பராலிக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்துக் கொடுத்தது.

பராலி கையில் செல்போன், ஆனால் அதை எப்படி ஆபரேட் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு புதிய கருவி ஒன்றை இன்றுமுதல் பயன்படுத்தப் போகிறோம் என்ற சந்தோஷம் மட்டும் பராலியின் முகத்தில் பளிச்சிட்டுச் சென்றது. அன்றுமுதல் தூசி கிராமத்திற்கும் பராலி இருக்கும் தாணி மலைக்கும் ஒரு நண்பனாக அந்த செல்ஃபோன் மாறியிருந்தது.

காட்டில் வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்திருந்த புளியங்காய், கடுக்காய் போன்றவற்றை ஒரு மூட்டையில் கட்டிவைத்தான் பராலி. சில விறகுகளையும் சுமந்து கொண்டு ஜீருலிபாறையின் அருகே பராலியுடன் மாணிக்கத்தின் வண்டிக்காக காத்திருந்தனர். தார் பிய்ந்து கிடந்த சாலை. லேசான பனி மலைமுழுவதும் படர்ந்திருந்தது. மங்கிய வெளிச்சத்தில் வண்டியை மாணிக்கம் ஓட்டினான். பராலி இருமிக்கொண்டே செல்ஃபோனை எடுத்து "மாணிக்கம் எங்க வர? ரொம்ப நாழிய காத்துகிடக்கோம்….." என்றான்.

"இதோ ஒரு பத்து நிமிஷம் வந்துடறன்."

வண்டியைக் கொஞ்சம் வேகமாக ஓட்டினான். வழக்கமாக மாணிக்கம் போகும் சாலையில் செக்போஸ்ட் ஒன்று எப்போதும் பூட்டப்பட்டு இருக்கும். மாணிகத்திற்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து செக்போஸ்ட்க்கு கார்டாக இருப்பது சுந்தரம். சுந்தரத்துக்குச் சொந்தம் என்று எவரும் இல்லை. ஒரு குவார்ட்டர் பாட்டிலும், பழைய பாடல்கள் ஒலிபரப்பும் ரேடியோவும்தான் சுந்தரத்தின் உலகம்.

எந்த வண்டி வந்தாலும் பணம் கொடுத்தால் மட்டுமே செக்போஸ்ட் கேட்டினை சுந்தரம் திறந்து விடுவான். மாணிக்கத்திற்கு மட்டும் பணம் வாங்காமல் எப்போதும் கேட் திறக்கப்படும். மாணிக்கத்தின் வண்டி எதற்கு மலைக்கு செல்கிறது என்று சுந்தரம் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தான். ஜீருலி பாறையை கொஞ்சம் கொஞ்சமாக மாணிக்கம் நெருங்கிக் கொண்டிருக்க, பனியின் பொழிவு கொஞ்சம் குறைந்திருந்தது. சாக்கில் சுற்றப்பட்டிருந்த விறகுக் கட்டைகளுடன், மரத்தின்கீழ் பராலி ஆட்களுடன் காத்திருந்தார்.

இருளில் அனைவரின் கண்ணும் கூசும்படி வண்டி வந்து நின்றது. பராலி, கெம்மியன் உட்பட இருபது பேர் வண்டியில் ஏறிக்கொண்டனர்.

"எப்படி இருக்க மாணிக்கம்?"

"நல்லா இருக்கேன் பராலி, என்ன கொஞ்ச நாளா சவாரிக்கு கூப்பிடவே இல்ல, வசதியோ?" நக்கலாக மாணிக்கம் கேட்டான்.

"அட போ மாணிக்கம், நீவேற, காட்டுக்குள்ள எதையும் வெட்டக்கூடாதுன்னு பாரஸ்ட் ஆபிஸர்காரங்க சொல்லிட்டாங்க. பொறவு எங்க வசதியா இருக்குறது! தூசி நாட்டுல ஜோலி கிடைச்சாதான் உன்னைக் கூப்பிட முடியும்." தழுதழுக்கப் பேசின பராலியின் குரலிலில் இருந்த சோகத்தை மாணிக்கம் நன்றாக உணர்ந்திருந்தான். கெம்மியன், பராலி, மாணிக்கம் வண்டியில் முன்பக்கம் அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் வண்டியின் பின்பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.

"மாணிக்கம்..."

"சொல்லு பராலி."

"இந்தச் சவாரிக்குக் கொடுக்கப் பணம் இல்லை. ஜோலில கிடைக்குற கூலி வச்சுதான் உனக்குக் கொடுக்கணும்."

"அட, என்ன பராலி எனக்கு உன் நிலைமை தெரியாதா? கூலி வத்ததும் சவாரி பணம் கொடு."

"பணமுன்னு ஒண்ணு இல்லாத வரைக்கும் நாங்க சந்தோஷமா இருந்தோம். அது என்னிக்கு வந்துச்சோ எங்கிட்ட இருந்த சந்தோஷம் போயிடுச்சு."

மாணிக்கம், பராலி இரண்டுபேரின் மனதும் ஒன்றை யோசித்துக்கொண்டே பயணித்தன…. பணம்… உலகில் மனிதரிடம் உயரம், தாழ்வு என எல்லாவற்றையும் நிர்மாணித்திருந்த அது இந்த இரண்டு பேரையும் விட்டுவைக்கவில்லை.

மிதமான பனி. விடிந்தும் விடியாமல் இருக்கும் பொழுது. வண்டியில் உள்ளவர்கள் குளிரில் நடுங்கியபடி உட்காத்திருந்தனர். வண்டி செக்போஸ்ட் அருகே போய் நின்றது. வண்டிச் சத்தத்தில் சுந்தரம் விழித்துக் கொண்டான். கையில் நீண்ட கம்பின் உதவியுடன் மெதுவாக நடந்து வந்தான்.

"மாணிக்கம், ரொம்பக் குளிர் அதிகமா இருக்கு, சிகரெட் கிடைக்குமா?"

மாணிக்கம் தடவிப் பார்த்தான். காலி சிகரெட் பெட்டி மட்டுமே கையில் அகப்பட்டது….

"சிகரெட் இல்லையே சுந்தரம்."

"சாமி"

"என்ன, பராலி"

"நம்மகிட்ட பீடி இருக்கு. இப்போதைக்கு உங்களுக்கு தாங்கும்னு நினைக்கிறேன்."

தன் தலையில் சுருட்டப்பட்டிருந்த பீடி கட்டினை உருவி மூன்று பீடிகளை பராலி, சுந்தரத்திடம் நீட்டினான். பீடி பற்ற வைத்தவாறே செக் போஸ்டைச் சுந்தரம் திறந்துவிட்டான்.

"திரும்ப வரும்போது எனக்கு ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கிட்டு வா, மாணிக்கம்."

"கண்டிப்பா வாங்கியாரன்."

வண்டி ஊர் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது குளிரில் நடுங்கி கொண்டிருந்தான் கெம்மியன்…

"என்னடா நடுங்குற"

"ஒரு டீ குடிச்சா தேவல" என்றான் கெம்மியன்….

வண்டி ஊருக்கு வெளியே உள்ள பாக்குத்தோட்டம், தென்னந்தோப்பு, திராட்சை தோட்டம் இவற்றுக்கு நடுவில் பயணித்தது. பராலியும் அவனது ஆட்களும் டீ குடிக்க பஷீர் பாய் டீக்கடை முன் வண்டி நின்றது.

"பஷீர் பாய்!"

"இருபது டீ. நல்லா ஏலக்காய் போட்டு கமகமன்னு இருக்கணும்."

"என்ன மாணிக்கம், இந்தப்பக்கம்?"

"இதோ நம்ம பராலி, அவிங்க ஆளுங்க ஜோலிக்கு போறாங்க, அதான் சவாரிக்கு ஜீருலி பாறை போய் கூட்டி வரேன்."

பஷீர் பாயின் டீக்கடையில் கிடைக்கும் ஏலக்காய் டீக்கு எப்போதும் தனி மௌசு. பஷீர் பாய்க்கு அறுபது வயது. முப்பது வருடமாக அவருக்கு தொழில் டீக்கடை. மண் குழைத்து எழுப்பப்பட்ட சிறிய அறை. கடைக்கு முன் கல்லால் கட்டப்பட்ட மேசை, நாற்காலிகள். ஐந்து வருடத்துக்கு முன் வாங்கிய மின்சார இணைப்பில் ஒரே ஒரு குண்டு பல்பு. அதுமட்டும் பிரதானமாக எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும். அதன் வெளிச்சம் ஒரு ரம்மியச் சூழலை உருவாக்கி வைத்திருக்கும். டீக்கடை இருக்கும் இடம் பஷீரின் மனைவி சமீராவுக்குச் சொந்தமானது. திருமணம் ஆன புதிதில் சமீராவும், பஷீரும் சேர்ந்து நட்ட பூவரச மரம். தாயின் மடியில் படுத்திருக்கும் குழந்தைபோல். மரத்தின் கீழ் பஷீரின் டீக்கடை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது ஒரு மரம். ஆனால் எளிய தம்பதிகளாக வாழும் பஷீர், சமீராவுக்கு அவர்களின் வாழ்வு கடந்து வந்த பாதையின் பதிவாக அந்த மரம் இருந்தது.

பால் கொதித்துக் கொண்டிருந்தது. டீ அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.பராலியின் ஆட்களுக்கு டீயின் கதகதப்பு அவர்களின் குளிரைக் கொஞ்சம் குறைத்திருந்தது . ஹாரன் அடித்து அனைவரையும் வண்டியில் ஏறுமாறு சைகை கொடுத்தான் மாணிக்கம். டீக்கான மொத்தப் பணத்தையும் பஷீரிடம் மாணிக்கம் கொடுத்திருந்தான்.

"பஷீர் பாய்"

"எவ்வளவு ஆச்சு?"

"மாணிக்கம் கொடுத்துருச்சு"

வண்டியில் அமர்ந்திருந்த மாணிக்கத்தை கண் சுருங்கப் பார்த்தான் பராலி. ஆனால் ஏதும் பேசவில்லை.

"வந்து ஏறு பராலி நாழி ஆகுது"

வழியில் இருக்கும் நாயக்கர் பலசரக்கு கடையில் தான் கொண்டு வந்திருந்த வாழைத்தாரினை இறக்கி வைத்து விட்டுச் சிறிது பணம் வாங்கிக் கொண்டான் பராலி. மாணிக்கத்தின் வண்டியருகே ரேஞ்சர் ஆதிமூலத்தின் ஜீப் வந்து நின்றது. பராலிக்கும் அவனது ஆட்களுக்கும் பிடிக்காத ஒரு மனிதன் ஆதிமூலம். தன்னை உயர்சாதிக்காரன் என்று சொல்வதில் அவனுக்கு ஒரு பெருமை.

"என்னாடா காலை கும்பலா எங்க கிளம்பிட்டீங்க?"

"இல்ல சாமி. தூசி நாட்டுல ஜோலி..."

"வண்டியில என்ன மூட்டை?"

மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான் ஆதிமூலம். விறகு கட்டைகள்! யாரும் எதிர்பாராத விதமாக பராலியை ஒரு அறை அறைந்தான். தேகம் சுருங்கிய பராலி தடுமாறி கீழே விழுந்தான். நடந்தவற்றைப் பார்த்துகொண்டிருந்த மாணிக்கம் வண்டியைவிட்டுக் கீழே இறங்கினான். ஆனால் ஏதும் பேசமுடியாதவனாய் இருந்தான்.

"ஏண்டா எத்தனை தடவை சொல்றது, விறகு வெட்டி எடுத்து வராதீங்கனு. கேக்கவே மாட்டீங்களா?"

"திரும்பத் திரும்ப இப்படியே செஞ்சிங்க, ஏதாவது கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன்."

விறகுகளைப் பிடுங்கிக்கொண்டு, பராலியை முறைத்துப் பார்த்தான் ஆதிமூலம். கெம்மியன், மாணிக்கம் மற்றும் பராலியின் ஆட்கள் ஆதிமூலத்தை ஏதும் கேட்க முடியாதவர்களாய் இருந்தனர். ஆதிமூலத்தின் பதவிக்கு மட்டுமே அவர்கள் அமைதியாக இருந்தனர்.

"அவன் போட்டு இருக்கிற உடுப்பால ஒவ்வொரு முறையும் தப்பிச்சிட்டு இருக்கான், உடுப்பு இல்லாம இருக்கட்டும் அவன் கறியை நரிக்கு போட்டுறவன்."

கெம்மியன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றான். பராலி எதுவும் பேசாமல், வண்டியில் அனைவரையும் ஏறுமாறு கூறினான். வண்டி நகர்ந்து தூசி கிராமம் அருகே போய்க் கொண்டிருந்தது.

"அந்த பாரஸ்ட் ஆபிஸர் காட்டுல எவ்வளவு மரத்தை வெட்டி, வீட்ல வச்சிருக்கான்! நானே அந்த மரத்தை அவன் வீட்டுக்குக் கொண்டுபோய் இருக்கேன். என்னமோ நேர்மையான ஆபிஸர் மாதிரி சீன் காட்டுறான். விடு பராலி, பெரிய ஆபிஸர் கிட்ட சொல்லி அவன் வேலையை காலி பண்ணிடலாம்."

மாணிக்கம் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினான். ஆனால் பராலியின் மனம் எதையும் ஏற்கத் தயாராக இல்லை. தன்னுடைய ஆதி நிலத்தில் தனக்கு ஏதும் சொந்தமில்லை! இறுக்கமான நிலையில் பராலி தன்னை ஒரு அகதிபோல் நினைத்துக் கொண்டான்.

"மாணிக்கம் வண்டியை நிறுத்து, இடம் வந்திருச்சு."

ரோட்டின் இருபுறமும் ஜல்லி கொட்டப்பட்டிருந்தது. பராலியின் ஆட்கள் வண்டியை விட்டுக் கீழே இறங்கினர். ஏஜண்ட் குமார் பராலியை நோக்கிக் கையசைத்தபடி வந்தான்.

"பராலி, கூலி ஆளுக்கு 150 ரூபாய்."

"எத்தனை பேரை கூட்டிட்டு வந்திருக்க?"

"பதினஞ்சு சாமி"

"ஒரு ஆளுக்கு இருபது ரூபாய் கமிஷன் போக, கூலி கொடுப்பாங்க. என்ன புரியுதா?"

"சரி, சாமி. வேலை எத்தனை நாள் நடக்கும்?"

"உங்களுக்கு இரண்டு நாள்தான் வேலை இருக்கும்."

பராலி குனிந்த தலையுடன், மாணிக்கம் அருகே வந்து நின்றான்.

"மாணிக்கம், வண்டி சவாரி கூலியை நாளைக்கு வீட்டுக்கு வந்து கொடுத்துடறன்."

"டீசல் காசு மட்டும் கொடு, சவாரி பணம் வேணாம். வள்ளியை பள்ளிக்கூடத்துல விடணும். நாழி ஆவுது நான் கிளம்புறேன்."

அன்று இரவு வேலை முடிந்து பராலியின் ஆட்கள் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள இடத்தில் படுத்துக் கொண்டனர். நடுநிசியில் எதோ ஒரு வண்டி சப்தம் கேட்டு பராலி எழுந்து பார்த்தான்.

அடுக்கடுக்கான மரங்கள் லாரியில் போய்க் கொண்டிருந்தன. அது தாணி மலையில் இருந்து வெட்டி எடுத்துச் செல்லப்படும் மரங்கள் என்று பராலிக்கு நன்றாகவே உணர முடிந்தது. மீண்டும் காலையில் நடந்த சம்பவம் பராலிக்கு நினைவுக்கு வந்தது. தன் எதிரே தன் ஆதிநிலம் சீரழிக்கப்படுவதை தடுக்கமுடியாமல் போகிறதே என்று கூனிக்குறுகிப் போனான் பராலி.

விடிந்ததும் பஷீர் டீக்கடைக்கு செல்லத் தயாரான போது பறவைகள் கட்டிய கூட்டின் சருகுகள் சாலையில் சிதறியிருந்தன. இரவு சாலையில் மரங்களை ஏற்றிச்சென்ற லாரி, காட்டில் மரத்தோடு இருந்த கூட்டினையும் விட்டு வைக்கவில்லை.

மாணிக்கம் வீட்டில் படுத்துக்கொண்டிருந்தான். அவனை அவரசமாக வள்ளி தட்டி எழுப்பினாள். "அப்பா எழுந்திரிப்பா என்கூட வா, உனக்கு ஒண்ணு காட்டுறன்."

"எங்கடி?"

மாணிக்கத்தின் கையைப் பிடித்து தோட்டத்திற்குள் நடந்தாள். தோட்டத்தில் வானம் நோக்கிக் கையை நீட்டினாள். அங்குள்ள ஒரு மரத்தில் புதிய கூடு ஒன்று உருவாகியிருந்தது.

N. ஹரிபிரசாத்,
கடலூர், இந்தியா

© TamilOnline.com