நாலாவது நபர்
இதுவரை: திருவல்லிக்கேணி ஒண்டுகுடித்தன, மத்தியவர்க்க இளைஞன் பரத் குடும்ப பாரத்தைச் சுமக்க, எதிர்காலக் கனவுகளை இறக்கி வைத்துவிட்டு ஒரு சாதாரண வேலைக்குத் தயாராகிறான். அதிர்ஷ்டவசமாக கேந்திரா மோட்டார்சின் உரிமையாளர் மகள் கேந்திராவின் அறிமுகமும், அதே கம்பெனியில் பிடித்த வேலையும் கிடைக்கிறது. இதே வேளையில் கேந்திரா மோட்டார்சின் நிர்வாகம் கேந்திராவின் தந்தை விஷ்வனாத்தால் சீரமைக்கப்பட்டு அவர் நண்பர் கோபால்ரத்னத்தின் பொறுப்புக்கு வருகிறது. கேந்திரா மோட்டார்சின் போட்டிக் கம்பெனியான கேடிகே மோட்டார்சின் சதிவலை இவர்களைச் சுற்றி பின்னப்படுகிறது. எப்படி?
*****
சக்கரவர்த்தியின் செல்ஃபோன் சிணுங்கியது. "கைலாஷ், கோபால்தான் கூப்பிடறாரு. தானே வலையில விழுவார் போலிருக்கு. ஐ காட் டு டேக் திஸ் கால்" பரபரத்தார்.
"அமைதி அமைதி" சக்கரவர்த்தியை ஒரே நொடியில் ரெஸ்டாரண்டுக்கு வெளியே தள்ளி இருட்டான, அமைதி நிறைந்த பூங்காவின் ஓரத்தில் நிறுத்திய கைலாஷ், "ஸ்பீக்கரை ஆன் பண்ணுங்க. பேசுங்க, ஜல்தி" என்றான்.
கருமேகங்கள் சூழ்ந்த வானில் நிலவு கல்லெறிந்த குளம்போல கலகலத்துக் கொண்டிருந்தது. கோபால்ரத்னம், ஏறக்குறைய அதே பதட்டத்தோடு "சக்கி நீ.. நீங்க சொன்ன மாதிரியே இன்னைக்கு போர்டு மீட்டிங்ல கேந்திராவை அடுத்த வாரிசா விஷ்வா அறிவிச்சிட்டான். எனக்கு ஒரே குழப்பமாயிருக்கு. விஷ்வா என்கிட்டயே எதையோ மறைக்கிறான்னு என் உள்ளுணர்வு சொல்லுது. ஆனா அவனை நான் ஓப்பனா எதுவும் கேக்கமுடியாது. எதுக்கவும் முடியாது. அயம் ஹெல்ப்லெஸ் அண்ட் க்ளூலெஸ்."
"காம் டவுன் கோபால். நான் ப்ரெடிக்ட் பண்ணது நடந்துருச்சுனு ஒருவிதத்துல சந்தோஷமாயிருந்தாலும் உங்க வேதனையை பாக்கும்போது ரொம்ப துக்கமாயிருக்கு" சோகம் தூக்கலாக கண்ணடித்தவாறு சக்கரவர்த்தி சொன்னதும், ஃபேஸ்புக்கில் போஸ்டிங் போட்ட நொடியே லைக் கொடுக்கும் நண்பனைப்போல, கைலாஷ் தன் கட்டைவிரலை தூக்கி அவரது நடிப்பை இன்ஸ்டன்டாக பாராட்டினான்.
"ஆனா நீங்க ஹெல்ப்லெஸ்னு சொல்ற அளவு ஒண்ணும் ஆகிடலை. நான் உங்க நலம்விரும்பி. மத்த டைரக்டர்சயும் நம்மோட சேர்க்கவும், புது இன்வெஸ்டர்ஸை நம்ம துணைக்குக் கொண்டுவரவும் என்னால முடியும். கேந்திரா மோட்டார்ஸ் நிர்வாகம் முழுக்க உங்களுக்கும் உங்களையடுத்து உங்க பையன் வினய்க்கும் கிடைக்கவைக்க இனி முழுமூச்சா நாம எறங்கணும்."
"விஷ்வாவை மீறி என்னால ஒண்ணும் பண்ணமுடியாது. நானும் அவனுக்கு இணையா இந்தக் கம்பெனியை உருவாக்க பாடுபட்டிருந்தாலும், நான் எப்பவும் ரெண்டாவது எடத்துலயே இருந்திருக்கேன். விஷ்வாவா இல்லை நானான்னு ஒரு நிலைமை வந்தா ஷேர்ஹோல்டர்ஸ், கஸ்டமர்ஸ் எல்லாரும் அவன் பக்கந்தான் நிப்பாங்க."
"கோபால், அப்படி ஒரு நிலைமை இப்ப வந்தா நீங்க சொல்றமாதிரி நடக்கும். ஆனா இன்னும் ஆறே மாசத்துல பொதுப் பங்குகளை உங்களை சப்போர்ட் பண்ற இன்வெஸ்டெர்ஸ் வாங்கினா, அதிகாரம் உங்க கையில முழுக்க வந்துடும். அதேநேரம், விஷ்வாவை V09 புது எஞ்சினை டெவலப் பண்ணவிடுங்க. பேடண்ட் மட்டும் கேந்திரா கம்பெனி பேர்ல வாங்கற வழியைப் பாருங்க. இந்தப் புது எஞ்சின் கேந்திரா மோட்டார்சுக்கு சொந்தமாயிருச்சுனா, விஷ்வனாத்தை செக்மேட் பண்றது ரொம்ப சுலபம்."
"தேங்க்யூ சக்கி, இப்பதான் கொஞ்சம் நம்பிக்கை வருது. இத்தனை வருஷம் கூடப்பழகின விஷ்வாவைவிட என் மேல நிஜமாவே அக்கறை வெச்சிருக்கிற உங்களை நான் பரிபூரணமா நம்பறேன். நான் ரெண்டாவது பொசிஷன்லேயே இருந்து என் வாழ்க்கையை ஓட்டிட்டேன். என் பையன் அப்படி ஆயிடக்கூடாது. பணத்தோட முழு அதிகாரம் யார்கிட்ட இருக்கோ அவங்கதான் வாழ்க்கையிலே நிஜமான வின்னர். நான் வெறும் ரன்னர்."
"தைரியமா இருங்க கோபால். நான் நாளை மதியம் சென்னை வரேன். நிர்வாகம் முழுக்க உங்க அதிகாரத்துக்கு நாம நெனச்சபடி வர்றவரைக்கும் நான் சென்னையிலேதான் இருக்கப்போறேன். நான் சொல்ற மாதிரி நீங்க காய் நகர்த்தினா போதும்."
"இப்ப என்ன செய்யணும் சொல்லுங்க?"
"விஷ்வனாத் புது எஞ்சின் தயாரிக்கிற டீமை உருவாக்கிட்டாரா? விவரம் ஏதாவது தெரியுமா?"
"இல்லை இன்னும் இல்லை. பரிசீலிச்சிட்டிருக்கேன். டீடெயில் வேலைக்கு ரிசர்ச் டிபார்ட்மெண்ட் ஆட்கள் எல்லாம் உதவினாலும், மெயின் டீம்ல நாலு இல்லை அஞ்சுபேர்தான் இருப்பாங்கனு சொன்னான். நாளைக்கு டீம் செலக்ட் பண்ணிடுவேன்னு சொன்னான்."
"அந்த மெயின் டீம்ல உங்களுக்கு நம்பிக்கையான ஒரு ஆள் நிச்சயம் இருந்தாகணும். விஷ்வனாத்தோட ரிசர்ச் பத்தின தகவல்களை நமக்கு குடுக்க இந்த சேனல் ரொம்ப ரொம்ப முக்கியம். எப்படியாவது இதை நீங்க சாதிச்சாகணும்."
"விஷ்வா பரிசீலிச்சிருக்கிற ஆட்கள்ல ரொம்ப சீனியர் எலக்ட்ரானிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட் கோவிந்த் எனக்கு நம்பகமானவர்."
"கோவிந்தை விஷ்வனாத் செலக்ட் பண்ணுவார்னு என்ன நிச்சயம்? கோவிந்தா ஆயிடுச்சுனா?"
"கண்டிப்பா பண்ணுவான். நாலு பேர் டீம்னா கண்டிப்பா விஷ்வாவைத் தவிர்த்து மூணு பேர்தான். நிச்சயம் ஒரு எலக்ட்ரானிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட் தேவை. ஷார்ட்லிஸ்ட் பண்ணின ஆட்கள்ல கோவிந்த் ஒருத்தர்தான் எலக்ட்ரானிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட்."
"வெரிகுட், அப்புறம் விஷ்வனாத்கிட்ட டீம் டீடெயில்செல்லாம் ரொம்ப நோண்டாதீங்க. உங்கமேலே எந்த சந்தேகமும் வரா மாதிரி நடந்துக்காதீங்க. விஷ்வனாத் உஷாராயிட்டா நம்ம திட்டம் மொத்தமும் பாழாயிடும்."
"நான்... நான் ஜாக்ரதையா இருக்கேன். அப்ப நாளை சந்திப்போம். குட்நைட்."
"பிரில்லியண்ட் சக்கி. கோபால்ரத்னம் ஒரு தொடைநடுங்கி. நமக்கு தேவைப்படறவரை அவனுக்கு தைரியம் குடுத்துட்டேயிருக்கணும். இல்லைன்னா நம்ம திட்டத்தை இவனே சொதப்பிடுவான். நீங்க இனி சென்னையில இருக்கிறதுதான் நல்லது. நௌ வீ ஹாவ் அஃபிஷியலி லான்ச்டு ஆபரேஷன் V," முஷ்டியை மேலும் கீழும் உயர்த்தினான் கைலாஷ்.
"ஆபரேஷன் V? அதாவது ஆபரேஷன் விஷ்வனாத்?"
"அப்படினு கோபால்ரத்னத்துக்கு சொல்லுவோம். நம்ம இலக்கு விஷ்வனாத் இல்லை, நம்ம இலக்கு கேந்திரா மோட்டார்ஸ். K ஐ இடதுபக்கம் புரட்டினா V, நாம கேந்திரா மோட்டார்சை புரட்டிப் போடப்போறோம்." கைலாஷ் சொல்லி முடிக்குமுன் அவனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அந்த இருட்டான நேரத்தில், அவன் செல்ஃபோன் ஒளியில் செய்தியைப் படிக்கும்போது விகாரமான சிரிப்போடு அவன் முகம் பயங்கரமாகத் தோன்றியது.
"சக்கி நாம நினைக்கிறதை விட வேகமா எல்லாம் நடக்குது. ஆயில் லாபியிஸ்ட்ஸ் ஹாவ் கமென்ஸ்ட் தேர் ஆக்ஷன்."
"என்ன சொல்றீங்க கைலாஷ்"
"சர்வதேச சந்தையில ஆயில், கேஸ் விலை திடீர்னு சரிய ஆரம்பிச்சிருக்கு. இன்னும் சில வாரங்கள்ல பாருங்க பேரல் 120 டாலர்லேருந்து பாதியா குறைஞ்சிரும்."
"அதுக்கும் ஆபரேஷன் Vக்கும் என்ன சம்பந்தம்?"
*****
"சம்பந்தம் இருக்கு மை டியர்" அதிகாலையில் மணக்கும் ஃபில்டர் காபியை பருகியபடி நீலாங்கரை கடற்கரையை எதிர்நோக்கி அமைந்த பண்ணைவீட்டு சோஃபாவில் ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையை புறந்தள்ளியவாறே பதில் கூறிக்கொண்டிருந்தார் விஷ்வனாத்.
விரிந்த கடற்கரை கூப்பிடு தொலைவில் இருந்தாலும், அரக்கப்பரக்க ட்ரெட்மில்லில் அன்றைய கணக்குக்குக்கு கலோரிகளைக் குறைத்துக்கொண்டே "சுத்தமா புரியலைப்பா. ஆயில், கேஸ் விலை குறையறதுக்கும் நம்ம புது எஞ்சின் ரிசர்ச்சுக்கும் என்ன சம்பந்தம்பா?" என்றாள் கேந்திரா.
"அல்ட்ர்னேடிவ் எனர்ஜி, ஆயில், கேஸ் தேவையை குறைக்கிறது அப்படினு உலக அளவுல எப்பவும் ஒரு விவாதம் நடந்துட்டேயிருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, பெட்ரோல், டீசல் இதுக்கெல்லாம் மாற்றா, கட்டுபடியாகற விலையில கடந்த நூறு வருஷத்துக்குள்ள ஏதாவது வந்துருக்கா?"
"இல்லை," தூக்கிக்கட்டிய குதிரைவால் தலைமுடியும் சேர்ந்து இல்லை என்று சொன்னது. "ஆனா அதுக்காக ஆயில், கேஸ் லாபிதான் இதுக்கு காரணம்னு எப்படி சொல்றீங்க டாடி?"
"ஃபேக்ட்ஸ் இருக்கு. ஹைப்ரிட் கார் எப்ப கண்டுபிடிச்சாங்க தெரியுமா?"
ட்ரெட்மில் இயக்கத்தை நிறுத்தி வியர்வையைத் துடைத்தவாறே, "மஸ்ட் பி 1990, ஹைப்ரிட் கார் மார்கெட்டுக்கு வந்தது 1997ல தானே?"
"தப்பு. முதல் ஹைப்ரிட் கார் ஃபெர்டினண்ட் போர்ஷ் 1900லேயே கண்டுபிடிச்சாச்சு. ஆனா அது மக்கள் உபயோகத்துக்கு வர கிட்டதட்ட நூறு வருஷம் ஆயிடுச்சு. எந்த ஆல்டர்னேடிவ் எனர்ஜி கண்டுபிடிப்பு வந்தாலும், அது தேவையா இல்லையான்னு தீர்மானிக்கிறது கன்வென்ஷனல் எனர்ஜியோட விலை. அந்த விலையை நிர்ணயிக்கறவங்க ஆயில் லாபியிஸ்ட்ஸ்."
"அதாவது போட்டி வர்ற அபாயம் இருந்தால் விலையைக் குறைச்சு, புதுக் கண்டுபிடிப்புக்கு அவசியமே இல்லாமல் பண்றது. போட்டி அபாயம் போனதும், விலையை மறுபடி ஏத்துறதுனு ஆயிட்டிருக்குனு சொல்றீங்க!"
"எக்ஸாக்ட்லி. செவ்வாய் கிரகத்துக்குக்கூட போயாச்சு, இன்னும் குலோபல் வார்மிங் பத்தி பேசிக்கிட்டு, ஒரு க்ளீன் எனர்ஜி சோர்சுக்கு நாம வழியே கண்டுபிடிக்க முடியலைங்கறது வேடிக்கையாயில்லை? வழி நிச்சயம் இருக்கு. ஆனா அந்த வழியை வேணும்னே அடைச்சிருக்காங்க. இதை நான் ஸ்விட்சர்லாந்த் போனபோது தெரிஞ்சுக்கிட்டேன். பெட்ரோல் இனாமாவேகூடக் கிடைக்கட்டும் இந்த ரிசர்ச்சை நிறுத்தப்போறதில்லை. ஓகே டைமாயிடுச்சு. லெட் அஸ் கெட் ரெடி. என்னோட டீமை ரெடி பண்ணனும். கமான்."
விஷ்வனாத், கோபால்ரத்னம், வினய், கேந்திரா இவர்களோடு சக்ரவர்த்தியும் வேதாந்தமும் கேந்திரா மோட்டார்ஸ் போர்டுரூமில் இளவெயில் மதிய வேளையில் குழுமியிருந்தனர். சூடான டீயும், பிஸ்கெட்டுகளும் அனைவர் முன்னாலும் இருந்தாலும் யாரும் அவற்றைத் தொடாமல், விஷ்வனாத் பேசுவதையே கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
"கோபால் இதோ நம்ம புது எஞ்சின் தயாரிப்பு ப்ராஜெக்டோட பட்ஜெட் ப்ரபோசல். போர்டோட, அதோட தலைமை நிர்வாகிங்கிற முறைல உன்னோட அப்ரூவல் வேணும்" என்றவர், மற்றவர்களைப் பார்த்து "உங்க எல்லார் முன்னாலேயும் ஒரு காபி இருக்கு" என்றார்.
"பதினைந்து மில்லியன் பட்ஜெட்டா?" விஷ்வா இது விஷப்பரிட்சை. கொஞ்சம் பிசகினாலும் கைல காசில்லாம நடுத்தெருவுக்கு வந்துடுவோம்" கோபால்ரத்னம் விஷ்வனாத் கொடுத்த ஃபைலின் முதல் பக்கத்திலேயே ஆட்சேபம் தெரிவித்தார். "அதுவும் இப்ப ஆயில் ப்ரைசோட ட்ரெண்டுக்கு, இந்த புது எஞ்சினுக்குத் தேவையே இல்லாம போயிடலாம். இந்த ரிசர்ச்சுக்கு செலவழிக்கிறதுக்கு பதிலா இப்ப இருக்கிற எஞ்சின் ப்ரொடக்ஷன்ல நாம கவனம் செலுத்தினா நிச்சயம் இந்த வருஷம் பெரிய லாபம் பாத்துடலாம்" கோபால்ரத்னம் அன்று காலை சக்கரவர்த்தி அவருக்கு என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை அப்படியே ஒப்பித்தார்.
"கோபால் யூ நோ ஆயில் ப்ரைஸ் குறைப்பெல்லாம் தற்காலிகமானதுனு. இப்ப நாம இந்த ரிசர்ச்சுக்கு முனையலைனா எப்பவும் முடியாது. பொலிடிக்கலாவும் இப்ப இந்தியாவுல ரிசர்ச் அண்ட் டெவலப்மென்டுக்கு நல்ல ஊக்கம் இருக்கு."
"ஐ அக்ரி வித் விஷ்வனாத்" தீர்க்கமான குரலில் இடைமறித்தார் சக்கரவர்த்தி. "இந்தப் புது எஞ்சின் தயாரிப்பை நாம சப்போர்ட் பண்ணனும். போர்டுக்கு நாம எடுத்துச் சொல்வோம்." விஷ்வனாத்தும், கோபால்ரத்னமும் ஒரே நேரத்தில் தடம்மாறிய சக்கரவர்த்தியின் பேச்சை ஆச்சர்யமாகக் கேட்டனர்.
"ஆனா விஷ்வனாத், இவ்வளவு பெரிய இன்வெஸ்ட்மென்ட் நிச்சயம் எந்த கம்பெனிக்குமே ரிஸ்க்தான். ஸ்மூத்தா போர்டு, இன்வெஸ்டர்ஸ் அப்ரூவல் வாங்கணும்னா இந்தக் கண்டுபிடிப்போட மொத்த உரிமையும் கேந்திரா மோட்டார்சுக்கு மட்டுமேங்கிறதை எடுத்துச் சொல்லணும். நீங்க பேடன்ட்டோட உரிமையைச் சொந்தம் கொண்டாடமாட்டீங்கனு தெளிவா சொன்னா போர்டு சம்மதத்தை ஈசியா வாங்கிடலாம்."
கோபால்ரத்னம் ஆச்சர்யம் கலைந்து மனதுக்குள் சக்கரவர்த்தியின் சாமர்த்தியக் காய் நகர்த்தலை பாராட்டினார்.
சற்றும் யோசிக்காமல் தனக்கு விரிக்கப்பட்ட வலையை உணராமல், விஷ்வனாத், "அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. நான் வேற, கேந்திரா மோட்டார்ஸ் வேற இல்லை. இந்த பேடன்ட்டோட மொத்த உரிமையும் கேந்திரா மோட்டார்சுக்கு மட்டுமே சொந்தமாகயிருக்கும். ஐ வில் டூ தி நீட்ஃபுல்."
கோபால்ரத்னம் சக்கரவர்த்தியின் ரகசிய தலை அசைப்புக் குறிப்பறிந்து, அந்த ஃபைலில் தன் கையொப்பமிட்டு, "ஆல் தி பெஸ்ட் விஷ்வா. இதோ என்னோட அப்ரூவல். போர்டுக்கும் இதை அப்ரூவ் பண்ண சிபாரிசு பண்றேன்" என்று சொல்லி விஷ்வனாத்திடம் கொடுத்தார்.
"ஆல் தி பெஸ்ட் அங்கிள். ஆமா உங்க ரிசர்ச் டீம் செலக்ட் பண்ணிட்டீங்களா? அதைபத்தி அனவுன்ஸ் பண்ணுங்க" என்றான் வினய். மீண்டும் அந்த அறையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. "நாலு பேர் கொண்ட core team. நம்ம ரிசர்ச் டிபார்ட்மென்ட்ல ரகசியப் பாதுகாப்போட தனி டிவிஷன் இதுக்காக ஏற்பாடு பண்ணப்போறோம். எஞ்சின் தயாரிப்போட முழு விவரங்கள், இந்த நாலு பேர் டீமுக்கு மட்டுந்தான் தெரியும். ரொம்ப ரகசியமா இருக்கணும்னுதான் இந்த ஏற்பாடு. நம்ம ரிசர்ச் டீம்ல நூறு பேர் வேலை செய்வாங்க. இவங்களுக்கு புது எஞ்சின் தயாரிப்போட ரகசியங்கள் துளியும் தெரியாது. அதுமாதிரி வேலைகளை பிரிச்சு குடுப்போம். இந்த ரிசர்ச்சோட ஹெட் நான்தான். நெக்ஸ்ட் இன் மை டீம் வாணி. சீஃப் டிசைனர் கம் அனலிஸ்ட். CAD, CAM specialist. மூணாவதா டாக்டர் மித்ரன் கெமிக்கல் டெக்னாலஜிஸ்ட் அண்ட் மெடலர்ஜிஸ்ட். இவங்க ரெண்டு பேருமே ரொம்பவும் நம்பிக்கையானவங்க. வாணி, கேந்திரா எடுகேஷன் ட்ரஸ்ட் ஸ்காலர்ஷிப்ல படிச்ச பொண்ணு. என்கிட்ட 20 வருஷத்துக்கு மேல டிரைவரா வேலை பாக்கிற கதிரேசனோட பொண்ணு. பிரிலியண்ட் கேர்ல். டாக்டர் மித்ரனும் 20 வருஷத்துக்கு மேலே நம்மகூட வேலை பாக்கறவர். ஆல்டர்னேட் எனர்ஜி பத்தி நிறைய ரிசர்ச் பேப்பர்ஸ் எழுதியிருக்கார். இந்த ப்ராஜக்ட என்னைவிட அதிகமா, ஒரு சேலஞ்சா எடுத்துக்கிட்டிருக்கார்."
"யாரு அந்த நாலாவது டீம் மெம்பர்?" வினய்க்கு சஸ்பென்ஸ் தாங்கவில்லை.
"கோவிந்த், கோவிந்த். கோவிந்த்னு சொல்லு" மனதுக்குள் கோபாலுக்குத் துடித்தது.
"மத்த ரெண்டுபேரையும் சுலபமா செலக்ட் பண்ணிட்டேன். ஆனா இந்த நாலாவது நபரை டெஸ்ட் பண்ணி செலக்ட் பண்ணினேன். அந்த நாலாவது நபர் பேர்……."
(தொடரும்)
சந்திரமௌலி, ஹூஸ்டன் |