மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
உபப்லாவியம் என்பது விராட மன்னன், பாண்டவர்களுடைய அஞ்ஞாதவாசம் முடிந்ததன் பிறகு பாண்டவர்களுக்கென ஒதுக்கியிருந்த ஊர். அங்கே இருந்தபடிதான் ஆலோசனை, தூது அனுப்புவது, படை திரட்டுவது என்று எல்லாக் காரியங்களையும் செய்துகொண்டிருந்தார்கள்.

விராட மன்னனுடைய புரோகிதர் முதலில் துரியோதனாதியரிடம் தூது போகிறார். இவருடைய பெயரை உலூகன் என்று வில்லிபுத்தூரார் குறிக்கிறார். ஆனால் வியாச பாரதப்படி, உலூகன், சகுனியுடைய மகன். கடைசி கடைசியாக உலூகன் தூதுதான் போருக்கு முன்னதாக இடம்பெறுகிறது. அவன் பாண்டவர் சபையில் வந்து அவர்கள் அனைவரையும் சிறுமைப்படுத்தியும், கோபமுறச் செய்தும், தூதுவன் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று வள்ளுவர் சொல்கிறாரோ அதையெல்லாம் செய்தான். அவனுடைய அந்தப் பேச்சுகள் போரை உடனடியாக மூளச்செய்வதற்கான வழியை வகுத்தன. உலூகன் என்ற பெயரை வில்லி, விராடனுடைய புரோகிதன் என்று குறிப்பிடுகிறார்; வியாசர் சகுனியுடைய மகன் என்று குறிப்பிடுகிறார். இந்த வித்தியாசத்தை மட்டும் இங்கே கவனித்து வைத்துக்கொள்வோம்.

சஞ்சயன்-திருதிராஷ்டிரனுடைய தேரோட்டி-தூது வந்து போனதன் பின்பு, கண்ணனைத் தூதனுப்பலாம் என்று பாண்டவர் தரப்பில் தீர்மானமாகிறது. "போர்தான் முடிவு என்றாலும், நான் தூது போவதன் அடிப்படை நோக்கம் என்னவோ, போர் மூளாமல் பார்த்துக் கொள்வதுதான். வேறு வழியே இல்லை என்றால், போர் நடக்காமல் இருப்பதற்கான பாதையை துரியோதனன் விழுந்து மறித்தால், பிறகு போர்தான் வழி என்ற தீர்மானத்துக்கு வருவோம்" என்று கண்ணன் பேசுகிறான்.

அதன் பிறகு ஒவ்வொருவரிடமும், "இந்தப் போர் மூளாமல் இருக்க என்ன வழி?" என்றொரு கேள்வியை எழுப்பி, கருத்துகளைத் தெரிந்துகொள்ள முயல்கிறான். இதுவே ஒரு கள்ளத்தனம் என்பேன் நான். போர்தான் ஒரே வழி என்று தீர்மானித்திருந்த ராமன் எப்படி, "போர்தான் முடிவு என்றாலும் சமாதானத்துக்கான கதவை அடைத்துவிடக் கூடாது" என்று அங்கதனைத் தூது அனுப்பினானோ, அதேபோலக் கண்ணன் இங்கே ஒவ்வொருவரிடமும் கருத்துக் கேட்டுக்கொண்டு வருகிறான். சகாதேவனுடைய முறை வந்தது. "சகாதேவா! நீ என்ன நினைக்கிறாய்? போரை நிறுத்த வழி இருக்கிறதா?" என்று மகா அப்பாவித்தனமாகக் கண்ணன் கேட்கிறான்.

"எப்பொழுதும் பிரமத்திலே சிந்தை ஏற்றி, உலகம் ஓர் ஆடல்போல் எண்ணி, தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும் வகைதான் அறிந்தான் சகதேவனாம்" என்று பாரதி வருணிக்கும் சகாதேவனுக்கு, கண்ணனுடைய உள்மன எண்ண ஓட்டம் நன்றாகவே தெரிந்திருந்த்து. இருந்தபோதிலும் இப்படி ஒரு ‘அப்பாவித் தோற்றத்தில்’ இந்த மாதிரியான ஒரு கேள்வியை எழுப்பியதும் சகாதேவன் பதில் சொல்கிறான்:

நீபா ரதஅமரில் யாவரையும் நீராக்கிப்
பூபாரந் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணா!
கோபாலப் போரேறே! கோவிந்தா! நீயன்றி
மாபா ரதம்அகற்ற மற்றோர்கொல் வல்லாரே!


கிருஷ்ணா, பாரதப் போரை நடத்தி, அதில் அத்தனை பேரையும் சாம்பலாக்கி, பூமியின் பாரத்தைக் குறைக்க நீ மனத்தில் கருதிவிட்டாய். கோபாலர் குலத்துப் போரேறே! உன்னைத் தவிர மற்றவரால் இந்தப் போரைத் தடுத்து நிறுத்தவும் முடியுமா! (அப்படி மற்றவர்களால் நிறுத்த முடியுமென்று நீ கருதுவாயானால் அதற்கும் ஓர் உபாயம் சொல்கிறேன்.)

பாராளக் கன்னன்இகல் பார்த்தனைமுன் கொன்றுஅணங்கின்
காரார் குழல்களைந்து காலில் தளைபூட்டி
நேராகக் கைப்பிடித்து நின்னையும் நான் கட்டுவேனால்
வாராமல் காக்கலாம் மாபாரதம் என்றான்.


எவ்வளவு கேலி பாருங்கள். ஆட்சியைக் கர்ணனிடம் கொடுத்துவிடவேண்டும். அர்ஜுனனைக் கொன்றுவிட வேண்டும். பாஞ்சாலி கூந்தலை மழிக்க வேண்டும். அதெல்லாம் போதாது கண்ணா! உனக்கு முதலில் கையிலும் காலிலும் விலங்கு மாட்டி கட்டிப்போட்டு ‘உள்ளே தள்ளிவிட்டால்’ போர் மூளாது. இது ஒன்றுதான் போர் நடக்காமல் இருக்க வழி.

ராவணனிடத்தில் கும்பகர்ணன் பேசும் கேலியைப் போல் ஒலிக்கிறதல்லவா இது,

கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
சொல்லலாம்; பெருவலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது, சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால், ஐயா!


"அண்ணா! இந்த உலகம் முழுவதையும் அடியோடு கல்லி எடுக்கவேண்டுமா? செய்யலாம். அல்லது உலகத்தைச் சுற்றிலும் ஒரு வேலிகட்டச் சொல்லவேண்டுமா, அதையும் செய்யலாம். ஆனால், பெரிய வலிமை படைத்தவனான ராமனுடைய தோள்களை வெல்லலாம் என்பதும், சீதையுடைய தோள்களை அணைத்துக் கொள்ளலாம் என்பதும் ஒன்றுக்கொன்று சமமான (அபத்தக்) கற்பனைகள். இவ்வாறெல்லாம் நடக்க சாத்தியமே இல்லை" என்று எந்தத் தொனியில் கும்பகர்ணன் ராவணனிடத்தில் பேசுகிறானோ, அதே தொனியில்தான் சகாதேவன் கண்ணனிடத்தில் பேசுகிறான்.

இதைக்கேட்ட கிருஷ்ணன் முறுவலித்தான். "உன்னால் என்னைக் கட்டிப்போட முடியுமா?" என்று சகாதேவனைச் சீண்டினான். "எங்கே என்னைக் கட்டு பார்ப்போம்" என்றவாறு விதவிதமான வடிவங்களை எடுத்தான். அவற்றில் மூலவடிவைத் தேர்ந்து, தன் மனத்தில் பெருக்கெடுத்த கருத்தினாலும் அன்பினாலும் கண்ணனைப் பிணித்தான் சகாதேவன். அதற்குப் பிறகு நடந்தவை நமக்கு இப்போது தேவையில்லாதவை. ‘அனந்த சக்திக்குக் கட்டுப்படுவதிலே வருத்தமில்லை’ என்றானல்லவா பாரதி வசன கவிதையில், அந்த வாக்கியம் செயல்வடிவம் பெற்ற இடம் இது. இது வில்லி பாரதத்தில் மட்டும்தான் பேசப்படுகிறது. வியாச பாரதத்தில் இல்லை.

இதை எதற்குச் சொன்னேன் என்றால், "கண்ணா நீ கைதேர்ந்த நடிகன்" என்று கவிமாமணி வவேசு எழுதியிருந்தாரே அந்தக் கவிதை பேசுவதும் இங்கே சகாதேவன் பேசுவதும் எப்படி ஒத்துப்போகிறது என்று பாருங்கள். கண்ணன் கைதேர்ந்த நடிகன்தான். போர்தான் மூளப்போகிறது என்று மனத்தில் தீர்மானித்திருந்த போதிலும்-ராமனைப் போலவே-அமைதிக்கான கதவைச் சாத்தவில்லை. அமைதிக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே தூது நடந்தான் என்பது கவனத்தில் வைக்கப்பட வேண்டிய குறிப்பு.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com