திருக்குறுங்குடி ஸ்ரீ வடிவழகிய நம்பி
திருநெல்வேலி மாவட்டத்தில், நாங்குநேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் திருக்குறுங்குடி. வாமன க்ஷேத்திரம் என்று புகழ்பெற்ற இத்தலம் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. மூலவர்: வடிவழகிய நம்பி; தாயார்: குறுங்குடிவல்லித் தாயார்.

திருமால் எடுத்த அவதாரங்களில் சிறப்பானதொன்று வாமன அவதாரம். அந்தக் குறள் வடிவங்கொண்ட வாமனமூர்த்தி இங்கு கோயில் கொண்டதால் இத்தலத்துப் பெருமாள் குறுங்குடி நம்பி என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் பெருமாள் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் அருள் பாலிக்கிறார்.

மிகப் புராதனமான இவ்வாலயம் ஐந்துநிலை ராஜகோபுரத்துடனும் பிரம்மாண்டமான பிரகாரங்களுடனும் காட்சி தருகிறது. ராஜகோபுரத்தைக் கடந்ததும் 'நம்பாடுவான்' என்ற பக்தன் நம்பியைத் தரிசிப்பதற்காக விலகிநின்ற கொடிமரம் காட்சியளிக்கிறது. வணங்கும் கருடாழ்வாரின் முன்னால் நின்ற நம்பியின் சன்னிதி. தொடர்ந்து அமர்ந்த நம்பியின் சன்னிதியும், கிடந்த நம்பியின் சன்னிதியும் அமைந்துள்ளன. பக்கத்தில் பரமேஸ்வரன் சன்னிதியையும் காணலாம்.

சிவபெருமான் ஒருமுறை பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்தபோது அவர் கையில் அந்தத் தலை ஒட்டிக் கொண்டதாம். அதனால் பிரம்மஹத்தி தோஷம் சிவனைப் பீடித்தது. குறுங்குடிநம்பியை அவர் வணங்கித் துதிக்க, நம்பி உபதேசித்த சுதர்சன மந்திரத்தை ஜெபித்து சாப விமோசனம் பெற்றார் என்கிறது தலபுராணம். இதனால் ஈசன் இங்கே மகேந்திரநாதர் என்ற பெயரில் காட்சி அளிக்கிறார்.

நின்ற நம்பிக்கு வலப்புறம் குறுங்குடிவல்லித் தாயார் சன்னிதியும் இடப்புறம் ஆண்டாள் சன்னிதியும் அமைந்துள்ளன. கருவறையில் சுதையினால் ஆன வண்ணத் திருமேனியுடன் ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக, வடிழகிய நம்பி கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் காட்சி தருகிறார். வலதுகரம் அபய ஹஸ்தம், இடதுகரம் கடிஹஸ்தம் மற்றும் மேலிரு கரங்கள் சங்கு, சக்கரம் தாங்கியுள்ளன. அகன்ற திருமார்பு, கருணை பொழியும் கண்கள், செங்கனி வாய், நீண்ட புருவங்கள் எனத் திகழும் காட்சி ரசித்து இன்புறத்தக்கது.

இறையருளைப் பெற குலம் ஓர் தடையல்ல என்பதை உணர்த்தும் வகையில் இத்தலத்தில் கைசிக ஏகாதசித் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நம்பாடுவான் என்ற பக்தன், ஒவ்வோர் ஏகாதசி நாளிலும் நம்பியின் சன்னிதிக்குச் சென்று துதிப்பது வழக்கம். அப்பகுதியில் ஒருவன் சாதுக்களின் சாபத்தினால் மனிதர்களைத் தின்னும் பிரம்மராட்சதனாகக் காட்டில் அலைந்தான். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்து நம்பாடுவான் நம்பியைப் பாடக் குறுங்குடி ஆலயத்திற்கு வந்தபோது, காட்டு வழியில் பிரம்மராட்சதனின் பிடியில் சிக்கிக்கொண்டான். அவன் மிகுந்த பசியுடன் நம்பாடுவானை உண்ண வந்தான். அந்த அரக்கனிடம், தான் திருக்குறுங்குடி வடிவழகிய நம்பிக்குத் தொண்டுபுரியச் செல்வதாகவும், சேவை முடிந்து வரும்போது தன்னை உண்ணுமாறும் வேண்டிக் கொண்டான்.

அதேபோல் சேவை முடிந்தபின் பிரம்மராட்சதனிடம் திரும்பி வந்து தன்னை உண்ணுமாறு வேண்டினான். பிரம்மராட்சதனின் மனம் இளகியது. தனக்கு ஏகாதசிப் பலனைத் தருமாறு வேண்டினான். நம்பியும் அவ்வாறே அப்பலனை அளிக்க, ராட்சதன் சாப விமோசனம் பெற்றதுடன், நம்பாடுவானுடன் சேர்ந்து வைகுந்தப் பதவியையும் அடைந்தான். அதுமுதல் இத்திருத்தலத்தில் கார்த்திகை மாத ஏகாதசி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதேபோல் திருவரங்கத்திலும் கார்த்திகை மாத ஏகாதசி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒருசமயம் தன் சீடன் வடுகநம்பியுடன் அனந்தபுரம் பத்மநாப ஆலயத்திற்குச் சென்ற ராமானுஜர் அங்குள்ள ஆலய மரபுகளைச் சீர்படுத்த முயன்றார். அது கண்டு பொறாத சிலர், மந்திர தந்திர சக்திகள் மூலம் அவரைத் திருக்குறுங்குடி அருகேயுள்ள பாறைக்கு அப்புறப்படுத்தினர். காலையில் எழுந்த ராமனுஜர் வழக்கம்போல் தன் சீடன் நம்பியை அழைக்க, குறுங்குடி அழகிய நம்பியே சீடன் வடிவில் வந்து குருவுக்குப் பணிவிடை செய்தார். ராமானுஜர் நெற்றியில் காப்புத் தரித்து மீதத்தை வடுகநம்பிக்கு அணிவித்தார். பின் குறுங்குடி ஆலயம் சென்று இறைவனைத் தொழுதபோது அங்கே வடிவழகிய நம்பியின் நெற்றியில் தான் அணிவித்த திருமண் காப்பு காயாமல் நிற்பது கண்டு திகைத்தார். நடந்ததை அறிந்து நெஞ்சம் கலங்கினார்.

நம்பியோ அவரைத் தேற்றி ஆசார பீடத்தில் அமர்த்தி, தான் சீடனாக அமர்ந்து குரு உபதேசம் பெற்றார். அருகில் உள்ள திருவட்டப் பாறையில் இன்னமும் அந்தக் காட்சியைக் காணலாம். இமயத்தில் உள்ள பத்ரிகாச்ரமம், நரனுக்கு நாராயணன் உபதேசம் செய்த தலம். குறுங்குடியில் நாராயணனுக்கு நரன் உபதேசம் செய்ததால் இத்தலம் 'தென்பத்ரி' என்று அழைக்கப்படுகிறது. மார்கண்டேய மகரிஷி, பிருகு மகரிஷி ஆகியோர் வணங்கிய நிலையில் இங்கே காட்சி தருகின்றனர்.

காரி, உடையநங்கை நாச்சியார் தம்பதி குழந்தை பாக்கியம் கேட்டு நம்பியை வேண்ட, நம்பி தானே குழந்தையாகப் பிறப்பதாக வாக்குறுதி அளித்தார். அவ்வாறே குழந்தை பிறந்தது. அதுவே வேதம் தமிழ்செய்த நன்மாறன் என்னும் சடகோபர். 'நம்மாழ்வார்' என்று பெருமாளால் கொண்டாடப்பட்டு ஆழ்வார்களில் முதன்மை பெற்றவர்.

கருவறைக்குப் பின்புறம் தசாவதாரக் கோலங்களை தரிசிக்கலாம். இங்குள்ள நாயக்கர் காலச் சிற்பங்கள் ஆலயத்தை ஓர் சிற்பக் களஞ்சியமாகக் காட்டுகின்றன.

சீதா துரைராஜ்

© TamilOnline.com