நீச்சல் குளத்தருகே சிமிண்டு தரையில் சாக்கட்டியால் ஏரோப்ளேன் பாண்டி கட்டம் கட்டமாக கோடு கிழிக்கப்பட்டிருந்தது. சுவேதா கண்ணைப் பொத்திக்கொண்டு அந்தச் செவ்வகக் கட்டங்களில் குதிக்க, என் பெண் சுதா, சுவேதாவின் கால் கோட்டைத் தொடுகிறதா என்று கூர்மையாகக் கண்காணித்துக் கொண்டிருந்தாள்.
கொஞ்சதூரத்தில் நானும் நண்பன் ரகுவும் நாற்காலியில் அமர்ந்து இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். சென்னைக் கல்லூரியில் நாங்கள் இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். வேலை நிமித்தம் நான் லாஸ் ஏஞ்சலஸ் வர அவன் ஜெர்மனிக்குப் போனான். திருமணத்தின் போது கூடச் சந்திக்கவில்லை. பல வருஷம் கழித்து இப்பொழுதுதான் சந்திக்கிறோம்.
சுதாவுக்குப் பன்னிரண்டு வயது. சுவேதா இரண்டு வயது சின்னவள். அதிக வயது வித்தியாசம் இல்லாததால் இருவரும் நன்றாகப் பழகினார்கள்.
"லாஸ் ஏஞ்சலஸ்ல பார்க்க இவ்வளவு எடம் இருக்குன்னு நினைக்கல. ஊரைச் சுத்திப் பார்த்ததுல ஒரு வாரம் போனதே தெரியல. நான் இன்னிக்கு சிகாகோ போயிட்டு மறுநாள் மெக்சிகோல ஒரு வாரம் மீட்டிங்குக்குப் போகணும். நீ சுவேதாவை நாளைக்கிச் சாயங்காலம் ஜெர்மனிக்குப் பிளேன்ல ஏத்திடு" என்றான் ரகு.
சுவேதாவைப் பார்த்து, "சுவேதா, நாளக்கி அங்கிள் ஒன்ன மூணு மணி ·பிளைட்ல ஏத்திடுவாரு. சமத்தா போ. நான் மீட்டிங் எல்லாம் போயிட்டு வந்து பாக்கறேன், என்ன" என்று சொல்ல, சுவேதா ஒரு கணம் பெரிய மனது பண்ணித் திரும்பிப்பார்த்து தலையை அசைத்தாள்.
"அடுத்த தடவை வரச்ச உன் மனைவியையும் அழச்சிட்டு வா ரகு" என்றேன்.
"பார்க்கலாம். என் மனைவிக்குக் கூட கொஞ்சம் கவலைதான், சுவேதாவ நான் எப்படி தனியா சமாளிப்பேன்னு. அவளுக்கு லீவும் இல்ல. இவள அழச்சிட்டு போன்னுட்டா. ஒவ்வொரு வருஷமும் ஒரு வாரம் இவளை எங்கியாவது அழச்சிட்டு போகணும்பா. என் மேல இவளுக்கு ரொம்ப பிரியம்" என்ற ரகு, அதை நிரூபிப்பது போல, சுவேதாவைப் பார்த்து "என்ன சுவேதா ஒனக்கு அப்பாவைப் பிடிக்குமா, இல்ல அம்மாவப் பிடிக்குமா" என்று கேட்டான்.
சுவேதா ஒரு கணம் அவனை முறைத்துப் பார்த்தாள். பின்னர் பதில் சொல்லாமல் விளையாடத் தொடங்கினாள். விளையாட்டு மும்முரத்தில் பதில் வரவே இல்லை.
"பெண் குழந்தைகள் அப்பாகிட்ட ஆசையா இருப்பாங்க. ஆண் குழந்தைகள் அம்மாகிட்ட ஆசையா இருப்பாங்க" என்று ரகு சொல்ல நான் அதை ஆமோதித்தேன்.
நான் அன்றிரவு ரகுவை விமான நிலையத்தில் விட்டுத் திரும்பும்போது சுவேதாவும் சுதாவும் லயன் கிங் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
மறுநாள் காலை. நான் காலையில் ஒரு சுற்று நடந்து விட்டு வந்தபோது, என் பெண் சுதா டெலிபோனருகே இருந்தாள்.
"அப்பா, ஏர்லைன்ல போன் பண்ணினாங்க. இன்னிக்கு சுவேதாவோட லண்டன் ·ப்ளைட் கிளம்ப நேரமாகுமாம்"
"எவ்வளவு நேரமாகுமாம்?"
"தெரியல. ஒரு மணி நேரம் கழிச்சுக் கூப்பிடச் சொன்னாங்க"
மாடிக்குப் போனால் அங்கே சுவேதா துணிகளை எடுத்துப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டிருந்தாள்.
"ஏன் சுவேதா, அதுக்குள்ள மூட்ட கட்டிட்ட. மத்தியானம் மூணு மணிக்குதானே பிளேன். இன்னும் காலைல எட்டு மணியாகலே."
"என்னால லேட் ஆகக்கூடாதில்ல. அதான் எடுத்து வெச்சிட்டேன்."
"சரி, பிரேக்·பாஸ்ட் சாப்பிடு. வா."
"அங்கிள், சாப்பிட்டு ஏர்போர்ட் போயிரலாமா"
"இல்ல சுவேதா. முதல்ல ஏர்லைனக் கூப்பிட்டு எப்ப பிளேன் கிளம்பும்னு கேக்கணும்"
"டிக்கட்டுலதான் மூணு மணின்னு டயம் போட்டிருக்கே"
"அது சரிதான். போட்டிருக்காங்க. இன்னிக்கு லேட்டாகலாம்"
"எங்க ஊர்ல நேரத்துலதான் கிளம்பும்"
"பனி மூட்டமாயிருந்தா, பனி மழை பெஞ்சா, புயல் அடிச்சா லேட்டா கெளம்பாதா?"
"பிளேன் ஒயரப்போயிட்டா இதெல்லாம் இருக்காது. தவிர இங்க பனியா பெய்யுது"
"இல்லம்மா. பிளேன் ரிப்பேரா இருக்கலாம்ல"
"நீங்க ஏன் அவ வாயெ கிளப்புறீங்க. அது குழந்த. அதுகிட்ட போயி என்ன வாக்குவாதம். சுவேதா. நீ கவலப்படாதே. இன்னொரு இட்லி வெக்கவா?"
ஒரு மணி நேரம் கழித்து விமான நிலையத்தை அழைத்து விசாரித்தேன். விமானத்தில் சின்னக் கோளாறாம். மூணு மணிக்கு பதிலாக எட்டு மணிக்குக் கிளம்புமாம். இதனால் இந்த விமானம் லண்டனுக்கு போகும்போது லண்டனிலிருந்து ஜெர்மனி கிளம்பும் விமானம் போய்விடுமாம். ஆறு மணி நேரம் கழித்துதான் அடுத்த விமானமாம். சுவேதா லண்டன் ஏர்போர்ட்டில் ஆறு மணி இருக்க வேண்டும்.
எனக்கு இதில் இஷ்டமில்லை. ஆறு மணி நேரம் பத்து வயசுப் பெண் ஏர்போர்ட்டில் என்ன செய்யும்? என்னதான் பார்த்துக் கொள்ள ஆள் இருந்தாலும்...
இந்த ப்ளைட்டை கான்சல் செய்ய சொல்லி விட்டேன். மறுநாள் ஐந்து மணி விமானத்தில் புக் செய்யச் சொன்னேன்.
"சுவேதா. இன்னிக்கு நீ போகமுடியாது. நாளக்கி போகலாம்."
சுவேதாவின் முகம் வாடியது. முகத்தில் மெதுவாக அழுகைக்குறிகள் தோன்றின.
"ஏன் அழற. இந்த பிளேன்ல இன்னிக்கு போனா லேட்டாயிரும். லண்டன்ல போயி ஆறு மணி நேரம் ஒக்காரணும். ஜெர்மனி கனெக்டிங் விமானம் கிடைக்காது."
"பரவாயில்ல. லண்டன் ஏர்போர்ட்ல டிவி இருக்கு. கடையெல்லாம் இருக்கு. நான் சுத்திப் பாப்பேன்."
"இல்லம்மா. அது மட்டும் இல்ல பிரச்னை. ஜெர்மனி பிளேன் லேட்டா கிளம்பும். ராத்திரி ஒரு மணிக்கு ஜெர்மனிக்கு போகும். அதுக்கு பதிலா நாளக்கி போனா, நீ நேரத்துக்கு வீட்டுக்குப் போகலாம்"
அம்மா, ஏர்போர்ட்டுக்கு வந்திருப்பாங்க. நான் வரலைன்னா அழுவாங்க. நான் இந்த பிளேன்ல போகலன்னு அப்பா திட்டுவாரு. எனக்கு ஸ்கூல் திறக்கறாங்க ரெண்டு நாளுலே."
"அதைப்பத்தி நீ கவலப்படாதே. நான் ஒங்கம்மாவக் கூப்பிட்டு சொல்லிடறேன். ஒங்கப்பா இங்க இருந்தா இதைத்தான் சொல்லுவாரு."
"இன்னிக்கு மூணு மணி பிளேன்ல போகணும்னு நேத்திக்கு எங்கிட்ட சொன்னாரே. மறந்திட்டீங்களா?"
"அப்ப இது மாதிரி பிளேன் ரிப்பேராகும்னு ஒங்க அப்பாக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது."
விசும்பல் குறையவில்லை. என் மனைவியை உதவிக்கு அழைத்தேன். "சுவேதா, இங்க வாம்மா. நாம தோட்டத்துல போயி பூப்பறிக் கலாம். தொடுக்கலாம். அப்புறமா நீச்சல் குளத்துல போய் நீஞ்சறியா". சுவேதாவை அணைத்தபடி, "இன்னும் ஒரு நாள்ல என்ன கொறஞ்சு போயிடும். நாளைக்கிப் போயிக் கலாம். போயி நீச்சல் டிரஸ் போட்டுக்க" என்றாள்.
சுவேதா நீச்சல் குளத்தைப்பார்த்தாள். முகத்தில் ஒரு மலர்ச்சி தோன்றியது.
மறுநாள் காலை ஏழு மணிக்கே எழுந்து விட்டாள். கீழே வரும்போது பெட்டியுடன் வந்தாள். "அங்கிள், இன்னிக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு ப்ளைட்."
"இன்னும் நெறய நேரம் இருக்கும்மா. குளிச்சிட்டயா?"
"நேத்து ராத்திரியே தலை வாஷ் பண்ணிட்டு குளிச்சேன்."
"நம்ம காலையில ஷாப்பிங் போகலாமா?"
அவள் லட்சியம் செய்யவில்லை. அவளுடைய பெட்டி, தோள்பை, தண்ணீர் பாட்டில், பொம்மை எல்லாம் வரிசையாக சோபா அருகில் வைத்தாள். டிவி பார்க்கத் தொடங்கினாள்.
என் மகள் மாடியிலிருந்து கீழிறங்கி வந்தாள். காலண்டரைப்பார்த்தாள். "அப்பா இன்னிக்கு எனக்குப் பல் டாக்டர்கிட்ட போகணும் 2 மணிக்கு."
"இன்னிக்கு கான்சல் பன்ணிடலாமா? சுவேதாவ ஏர்போட்டுக்கு அழச்சிட்டுப் போகணும்."
என் மனைவி குறுக்கிட்டாள், "கான்சல் பண்ணாதீங்க. அவருகிட்ட அப்பாயின்மென்ட் கிடைக்கறது கஷ்டமா இருக்கு. என்ன ஒரு அரை மணி ஆகும். பல் கிளீனிங்தானே. சாயங்காலம் அஞ்சு மணிக்குதானே பிளேன்?"
பல் டாக்டரிடம் போய் திரும்பி வீட்டுக்கு வந்தால் நேரமாகிவிடும், சுவேதாவின் பெட்டியைக் காரில் எடுத்துக் கொண்டு அவளையும் அழைத்துக்கொண்டு டாக்டரிடம் போனோம்.
டாக்டர் அலுவலகத்தில் நல்ல கூட்டம். இரண்டரை மணிக்குதான் உள்ளே அழைத்தார்கள். முடிந்து வெளியே வரும்போது மூன்றரையாகியிருந்தது.
நான், சுதா, சுவேதா மூவரும் காரில் ஏறி விமான நிலையம் போனோம்.
"அங்கிள். எவ்வளவு நேரம் ஆகும் ஏர்போர்ட் போக?"
"சாதாரணமா முக்கால் மணி நேரமாகும். நமக்குதான் ஒண்ணரை மணி நேரம் இருக்கே"
அன்று என்றுமில்லாத திருநாளாய் சாலையில் போக்குவரத்து அதிகமாயிருந்தது. வேகத்தைக் குறைக்க வேண்டியிருந்தது. சுவேதா மெதுவான குரலில் பாடிக்கொண்டிருந்தாள்.
ஐந்து பாதைகள் கொண்ட அந்த சாலை திடீரென மூன்றாய்க் குறுகியது. வழியில் ஆரஞ்சுக் கூம்புகள். சாலை பழுது பார்க்கிறார்களாம். மணி நாலரை.
"அங்கிள். ஏன் மெதுவா போறீங்க. இன்னும் அரைமணிதானே இருக்கு. இடது பக்கம் பாதையில யாருமே இல்லயே."
"அது கார் ஓட்டறதுக்கு இல்ல. காருல ஏதாச்சும் கோளாறுன்னா நிறுத்தறதுக்கு."
"ஜெர்மனில ஆட்டொபான்ல எவ்வளவு வேகமா வேணா போகலாமே."
"டிராபிக் அதிகமா இருக்கு. போயிரலாம். இன்னும் அஞ்சு மைல்தானே."
"நீங்க ஏன் இந்த லேன்ல போறீங்க. அந்தக் காரைப் பாருங்க. வலது லேன்ல வேகமாப் போகுது."
"அது போலீஸ் காரும்மா. அவங்க போகலாம். எதுனாச்சும் விபத்து நடந்திருக்கும்."
வானொலிப் பெட்டியைத்திருப்பினேன். இரண்டு மைல் தூரத்தில் ஒரு லாரியும் காரும் மோதிவிட்டதாம். மூன்று பாதைகளில் இரண்டை அடைத்திருக்கிறார்களா¡ம். விபத்து நடந்த இடத்தில் மெதுவாகப்போய் வேடிக்கை பார்க்காமல் நேராக போகச் சொன்னார்கள்.
திரும்பிப்பார்க்க, பின்புற இருக்கையில் சுவேதா தலையை சாய்த்து கண்ணைமூடி கைகூப்பி வாய் முணுமுணுப்பது தெரிந்தது.
"என்ன சுவேதா என்ன பண்ற?"
"கடவுள் கிட்ட வேண்டிக்கறேன், நேரத்துக்குப் போகணும்னு."
நானும் மானசீகமாக வேண்டிக்கொண்டேன். நேரமாகிவிட்டால் இந்த பெண் என்னைக் கொன்று விடுவாள்.
ஒரு விசும்பல் ஒலி. விசும்பலூடே திக்கித் திக்கி "எதுக்கு இன்னிக்கு... பல் டாக்டர்கிட்ட போகணும்... அத கான்சல் பண்ணிருந்தா... இப்ப நேரத்துக்கு போயிருப்பம்."
இது காதில் விழுந்தவுடன், ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த சுதா, சீண்டப்பட்ட வளாய், சீறினாள். "இங்க டாக்டர் அப்பாயின் மென்ட் கெடைக்கிறது கஷ்டம். நம்ம இஷ்டத்துக்குப் போக முடியாது"
"ஜெர்மனில எப்ப வேணா போகலாமே."
"நான் இதுக்குன்னு ஜெர்மனிக்கா போகமுடியும்?"
"எனக்கு லேட்டாகுது. இப்பவே ஏர்ப் போர்ட்டுல இருக்கணும்"
"போயிட்டுதானே இருக்கோம். இதவிட எப்படி வேகமா போறது?"
"சுதா, அவள அழவிடாத. சுவேதா வந்துட்டம். இன்னும் அஞ்சு நிமிஷந்தான்"
பெருஞ்சத்தத்துடன் மேலே எழும்பிய விமானமொன்று அவள் கவனத்தைக் கவர, "ஆ... அதோ... கிளம்பிடுத்து என் ப்ளேன்..." என்றாள் கீச்சிடும் குரலில்.
"அது அமெரிக்கன் ஏர்லைன்ஸ். ஒன் பிளேன் இல்ல" என்று சமாதானப்படுத்தினேன்.
லண்டன் விமானம் கிளம்பும் டெர்மினலில் காரை நிறுத்திய போது நான்கு ஐம்பத்தி ஐந்து.
"சுதா. நான் காரை பார்க்கிங்ல நிறுத்திட்டு வரேன். நீ சுவேதாவோட பிரிட்டிஷ் ஏர்வேஸ் கெளண்டர்ல போய் டிக்கட்டை காட்டி லக்கேஜை உள்ளே ஏத்தச் சொல்லு. பெட்டிய நீ இழுத்துட்டு போ"
நான் காரை நிறுத்திவிட்டு உள்ளே போன போது சுவேதா அழுதுகொண்டிருக்க, சுதா அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
"அப்பா. பிளேன் போயிடுத்து. சுவேதா அழறா. இப்ப என்ன பண்றது ?"
நான் கெளண்டரில் இருந்த பெண்மணியிடம் பேசினேன். அவள் சலிப்புடன் " பிளேன் கிளம்ப ஒரு அரை மணி முன்னாலயாவது வரணும். எக்ஸ்-ரே, செக்யூரிட்டி எவ்வளவு இருக்கு. இப்படி கடைசி நிமிஷத்துல வரீங்க. அடுத்த பிளைட் புதன்கிழமைதான்."
இதைக்கேட்டதும் சுவேதா பெருங்குரலில் அழுதாள்.
"மேடம் இன்னிக்கு வேற பிளைட் இல்லயா. இந்த பெண்ணு ஸ்கூலுக்கு போகணும். நாளைக்கு இவ ஜெர்மனில அவசியம் இருந்தாகணும்"
என் கெஞ்சலுக்குச் செவிசாய்த்து அந்தப் பெண்மணி கணினித்திரையை ஆய்ந்தாள்.
"எஸ். எட்டு மணிக்கு ஒரு பிளைட் இருக்கு. அது போனா லண்டன்ல ரெண்டு மணி தங்கணும். அப்புறம்தான் ஜெர்மனி பிளேனுக்கு கனக்ஷன். லுப்தான்ஸால போகணும்"
"அதுலயே புக் பண்ணிடுங்க. சுவேதா. கவலப்படாதே. இன்னொரு பிளேன் இருக்கு. அதுல போகலாம்"
புக்கிங் முடிந்தது. பெட்டி உள்ளே தள்ளப் பட்டது. கைப்பைக்கு ஒரு அடையாள அட்டை கட்டப்பட்டது.
"சுவேதா. ஏழு மணிக்குதான் உள்ள போகணும். உனக்கு பசிக்குதா? நாம ஓட்டலுக்கு போயி ஏதாச்சும் சாப்பிடலாமா"
"எனக்கு பிட்சா வேணும். வெளியில் போக வேண்டாம். இங்கயே ஏர்போர்ட்டிலயே சாப்பிடுவோம்"
பிட்சா கடை தேடினோம். புக் ஸ்டால், காபி, சாண்விட்ச், ஐஸ்கிரீம், கேக், சாலாட்... உம்...ஹ¥ம். பிட்சா மட்டும் இல்லை. அதற்குள் சுதா கண்டுபிடித்தாள். "அப்பா அதோ மாடில பிட்சா ஹட்." அருகில் போனால் மூடி இருந்தது. சீரமைப்புப் பணி நடக்கிறதாம். கதவில் ஒட்டி இருந்த பேப்பர் டிசம்பரில் திறப்புவிழா என்று அறிவித்தது.
விமான நிலையம் அருகில் இருக்கும் கடை நினைவுக்கு வந்தது. அவளைச் சமாதானப் படுத்திக் காரில் ஏறிக் கடைக்கு போனோம். பிட்சா வாங்கி சாப்பிட்டோம். சுவேதா கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே அவசர அவசரமாகச் சாப்பிட்டாள்.
சரியான நேரத்துக்குத் திரும்பிவந்தோம். விமான பணிப்பெண்ணிடம் சுவேதாவை ஒப்படைத்தேன். "கவலைப்படாதீங்க, எங்க பொறுப்பு" என்று சொல்லி அவள் கையைப் பற்றி உள்ளே அழைத்துப் போனாள். அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சுவேதா திடீரெனத் திரும்பி ஓடி வந்தாள். நான் திகைத்து நிற்க, அவள் என்னை அணைத்து, "குட் பை சொல்ல மறந்திட்டேன். ஒங்க உதவிக்கு ரொம்ப நன்றி. நான் ஒங்களுக்கு ரொம்பச் சிரமம் கொடுத்திட்டேன், மன்னிச்சிருங்க" என்று சொல்ல நான் நெகிழ்ந்தேன்.
"போயிட்டு வாம்மா. ஒனக்குதான் ஸ்கூல மேல எவ்வளவு ஆசை. பொறுப்பு. நேரத்துக்குப் போகணும்னு துடிக்கற"
"அதுல்ல அங்கிள். ஸ்கூலுக்கு ரெண்டு நாள் லேட்டானா பரவயில்ல. எங்கம்மாவுக்குக் கார் ஓட்டத் தெரியாது. எங்க ஊர்ல பஸ் ஏறி பிரான்க்பர்ட் வந்து டிரெய்ன் புடிச்சு ஏர்போர்ட்டுக்குப் போகணும். நேரமாயிடுச்சுன்னா பஸ் இருக்காது. நடக்கும்படியா ஆயிரும். அம்மா ரொம்ப பாவம்ல. அவங்களுக்கு நடக்கமுடியாது. காலு வலிக்கும்" கண்களில் பொலபொலவென நீர் முத்துக்கள்.
"என்ன சுவேதா, ஏன் அழற? அம்மா வர மாட்டாங்கன்னா? நீ போய்ச் சேரறதுகுள்ள நான் உங்கம்மாவுக்கு போன் பண்ணி நீ வர செய்தி சொல்லிடுவேன். கவலப்படாதே. உங்கம்மாவும் அப்பாவோட சேர்ந்து வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். நான் உங்கம்மாவைப் பார்த்ததில்ல"
சற்றுத் தயக்கத்துடன் "அப்பாவோட சேர்ந்து வரமுடியாது. அப்பாவும் அம்மாவும் ரெண்டு வருசம் முன்னால டிவர்ஸ் ஆயி பிரிஞ்சிட்டாங்க. அப்பா பக்கத்து ஊர்ல தனியா இருக்காரு. நான் என் அம்மாகூட இருக்கேன். வருஷத்துல ஒரு வாரம் மட்டும் நான் அப்பாகிட்ட இருக்கணும். இதப்பத்தி யார்கிட்டயும் சொல்லிட வேண்டாம்னு அப்பா சொல்லியிருந்தாரு. நான் சொன்னேன்னு அப்பாகிட்ட நீங்க சொல்லிடாதீங்க அங்கிள்" என்றாள். என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்தேன்.
அவள் சிறு கைப்பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து "இதான் என் அம்மா" என்று காட்டினாள். அதில் சுவேதாவின் தாய் வலது காலில் பெரிய கட்டுடன், அக்குளில் இடுக்கிய தாங்கும் கட்டைகளோடு நின்றிருந்தாள்.
"அம்மாக்கு காலில ஆபரேஷன்... நடந்தா வலிக்கும். அதான் அவங்களை ரொம்ப சிரமப்படுத்தாம நேரத்துக்குப் போகணும்னு ஆசைப்பட்டேன்" என்று சொல்லிப் படத்தை வாங்கித் தன் பையில் வைத்து, என் பதிலை எதிர்பாராது திரும்பி குடுகுடுவென்று ஓடி விமானப் பணிப்பெண்ணுடன் திருப்பத்தில் மறைந்தாள்.
எல்லே சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ் |