அன்புள்ள சிநேகிதியே:
என்னுடைய சிறுவயது நண்பன். பல வருடங்களாகப் பழக்கம். நல்லவன்தான். ஆனால் unpredictable. காலேஜ்வரை ஒன்றாகப் படித்தோம். அப்புறம் வேறு வேறு திசை. மறுபடியும் அமெரிக்காவில் எம்.எஸ். படிக்க வந்தபோது தொடர்புகொண்டு பழைய நட்புநிலை வந்தது. எனக்கு ஐந்து வருடம் முன்னால் திருமணம் ஆகியிருந்தது. அவனும் செட்டிலாக முயற்சி செய்தான். திடீரென்று அமெரிக்க டேடிங் சிஸ்டத்தைத் தீவிரமாக சப்போர்ட் செய்தான். அங்கங்கே இளம்பெண்களுடன் தொடர்புகொண்டு பார்த்தான். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.
அப்புறம் இந்திய கலாசாரத்தை ஆதரிக்க ஆரம்பித்தான். 2, 3 முறை இந்தியா போய், பெண்களைப் பார்த்துவிட்டு வந்தான். இப்போதெல்லாம் அமெரிக்க மோகத்தில் எந்தப் பெண்ணும் உடனே 'சரி' என்று சொல்லித் தாலியைக் கட்டிக்கொண்டு இவனுடன் வரத்தயாராக இல்லை. அதனால் கொஞ்சம் depressed ஆக இருந்தான். என்னைப் பார்த்துக் கொஞ்சம் பொறாமைகூட இருக்கும் என்று நினைக்கிறேன். I got lucky. எனக்கு ஒரு ideal wife கிடைத்தாள். பார்ப்பதற்கும் நன்றாக இருப்பாள் .மிகவும் நட்பாக எல்லோருடனும் பழகுவாள். என் மனைவி இவனுடைய தர்க்க வாதங்களை சிரத்தையுடன் கேட்டுக்கொள்வாள். எனக்கு அதற்கெல்லாம் பொறுமையில்லை. கொஞ்சநாள் முன்பு இவள் இந்தியாவிற்குப் போயிருந்தபோது அவளுடைய ஃப்ரெண்ட் ஒருத்தியைப் பார்த்திருக்கிறாள். அவளுக்குத் திருமணம் ஆகவில்லை. கொஞ்சம் சுமாராக இருப்பாள். மிக நல்லபெண் என்று என் நண்பனுக்கு ரெகமெண்ட் செய்தாள். அவன் அப்போது கொஞ்சம் depressed ஆக இருந்திருக்கிறான். சரியென்று ஒத்துக்கொண்டுவிட்டான்.
ஈமெயில், ஸ்கைப் என்று 4-5 மாதமாகத் தொடர்பு கொண்டார்கள். வரும் ஜூனில் திருமணத் தேதியும் குறித்துவிட்டார்கள். நாங்களும் அந்தச் சமயம் விடுப்பு எடுத்துக்கொண்டு போகலாம் என்று நினைத்தோம். இதற்கிடையில் அந்தப் பெண் பிஸினஸ் ட்ரிப்பில் இரண்டு மாதம் இங்கே வரப்போவதாகத் தெரிவித்திருந்தாள். என் மனைவிக்கு மிகவும் சந்தோஷம். அவர்கள் இரண்டு பேரும் பழக நல்லவாய்ப்பு என்று நினைத்தாள். இந்தச் செய்தி கிடைத்த இரண்டு தினங்களில் என் நண்பன் எங்கள் வீட்டுக்கு வந்தான். நான் வெளியில் போயிருந்தேன். என் மனைவியிடம் ஒரு ஷாக்கிங் நியூஸ் கொடுத்திருக்கிறான். இந்தப் பெண்ணைச் சந்திக்க அவன் தயாராக இல்லையாம். சமீபகாலமாக இங்கேயே வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அவள் மிக அழகாக, ஸ்மார்ட்டாக இருப்பாளாம். இந்த ஊரிலேயே இருப்பதால் விசா பிரச்சனை இல்லை. சீக்கிரம் சந்தித்துக் கொள்வார்களாம். இந்தப் பெண்ணின் விசிட் clash ஆகிறதாம். இந்தப் புது உறவு ஒர்க் ஆகவில்லையென்றால், திட்டமிட்டபடி ஜூனில் கல்யாணம் நடக்கச் சம்மதமாம். "ஒரு சகோதரியிடம் மனந்திறந்து பேசுகிறேன். நீ பார்த்துக் கொள்வாய் என்று தெரியும். வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் திருமணம் செய்துகொள்கிறோம். என்னுடைய 'டிரீம் கேர்ள்' கிடைக்க வாய்ப்புக் கிடைக்கும்போது நான் ஏன் நழுவவிட வேண்டும். உன் ஃப்ரெண்டை நான் நேரே பார்த்துப் பேசி உடல்ரீதியாக எந்தத் தொடர்பும் ஏற்படுத்தி ஏமாற்றவில்லை. எத்தனையோ இடங்களில் எங்கேஜ்மென்ட்டுக்கு அப்புறம்கூடப் பின்வாங்கிவிடுகிறார்கள். தயவுசெய்து எப்படியாவது உன் தோழியிடம் ஏதாவது சொல்லி இப்போதைக்கு இந்த மீட்டிங்கைத் தவிர்க்க முயற்சி செய்" என்று கேட்டிருக்கிறான்.
நான் வீட்டுக்கு வந்தபோது அவன் கிளம்பியிருந்தான். கோபமே வராத என் மனைவிக்குக்கூட மிகவும் வெறுப்பாகப் போய்விட்டது. "உன்னுடைய ஃப்ரெண்டை நம்பி, நான் என் ஃப்ரெண்டுக்குக் கெடுதல் செய்துவிட்டேன். நான் இனிமேல் இவனை வரவேற்கத் தயாராக இல்லை" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள்., எனக்கு இவனுடைய கிறுக்குத்தனம் தெரியும் அதனால் அவ்வளவு அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் கோபம் வந்தது. கூப்பிட்டுக் கண்டபடி திட்டினேன். அவனுக்குப் பேச்சு சாதுரியம் இருக்கிறது. சரியோ, தவறோ அவன் வாதம் செய்யும்போது, வக்கீல்கள் தோற்றுவிடுவார்கள். அந்த அளவுக்கு கன்வின்ஸிங்காக இருந்தது. அவன் பேசி முடித்தபின் நானே, அவன் நினைப்பது சரிதான். எங்கேஜ்மெண்ட் என்று ஒன்றும் நடக்கவில்லை. கல்யாணத்துக்குத் provisional ஆகத்தானே தேதி குறித்திருக்கிறது. இவனை இந்தப் பெண்ணைத்தான் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. என் மனைவியின் தோழியாக இருப்பதால் அவள் கொஞ்சம் சமாதானமாகப் பிரச்சனையைத் தீர்த்துவைக்க வேண்டுமென்று அவன் எதிர்பார்ப்பதில் தவறில்லை என்று நினைத்தேன். இதை அவளிடம் சொன்னபோது, "நீங்கள் ஆண்களே மோசமானவர்கள்" என்று முதன்முறையாக இந்த ஐந்துவருட வாழ்க்கையில் சண்டைபோட்டாள். அவள் தன் கோபத்தைச் சத்தம் போட்டுக் காட்டமாட்டாள். 'Silence treatment' கொடுத்துக் கொண்டிருக்கிறாள். இதெல்லாம் எனக்கு அவசியம்தானா? நான் யாருக்கு எதை எடுத்துச் சொன்னால் இந்தப் பிரச்சினை சுமுகமாக முடியும்!
இப்படிக்கு
...................
அன்புள்ள சிநேகிதரே:
ஒருவருக்கு உதவிசெய்ய நினைக்கும்போது அதோடு சில சவால்களும் வரத்தான் செய்யும். அதற்கும் நாம் பொறுப்பேற்கத்தான் வேண்டும். நிறைய பேர், "எனக்கு ஏன் தலையெழுத்து. நான் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும்" என்று பொருமுவதைக் கேட்டிருக்கிறேன். எனக்கு அது சரியாகப்படுவதில்லை. ஒருவருக்கு உதவி செய்யும்போது நாம் ஒரு பொறுப்பை உணர்ந்திருக்கிறோம். அதைக் காப்பாற வேண்டிய கட்டாயத்தையும் உணரவேண்டும். உதவி செய்யும்போது ஒரு பாசிடிவ் ரியாக்ஷனைத்தான் எதிர்பார்க்கிறோம். பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். ஆனால், சில சமயங்களில் கல்லடிகளுக்கு நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.
உங்கள் நண்பர் cranky, unreliable but a good friend. நீங்களும் உங்கள் மனைவியும் ஒரு நல்ல உறவை ஏற்படுத்தப் பார்த்திருக்கிறீர்கள். அருமை. ஆனால், எப்போது அவருக்கு ஒரு கமிட்மெண்ட் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறாரோ, அதற்குப் பிறகும் அவரைக் கட்டாயப்படுத்துவது நல்லதல்ல என்று உங்களுக்கே புரியும். ஒருமுறை அவருக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் ஏற்படுத்திய உறவில் அவர் ஆழத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. It was more of a 'timepass' relationship. ஜூன் மாதம்வரை வேறு பெண்ணை சந்திக்காமல் இருந்து, திருமணத்தையும் செய்துகொண்டு, அதற்கப்புறம் அவர் கண்களுக்கு அழகாக ஸ்மார்ட்டாகத் தென்படும் பெண்களை கம்பேர் செய்து கொண்டிருந்தால் அது இன்னும் வருத்தப்பட வைக்கும் விஷயம். Just leave it to the concerend persons to tackle it in their way. கோபமே படாத உங்கள் மனைவி, பேச ஆரம்பித்துவிடுவார். உங்கள் நண்பர் குற்றவுணர்வில் சில மாதங்கள் உங்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பார். உங்களது மனைவி அவரது ஃப்ரெண்டிற்கு முதலிலேயே விஷயத்தைத் தெரிவித்து விட்டால், இங்கே வருவதற்குள் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஜீரணித்துவிட்டு, வந்த வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொள்வார். சுயநலத்திற்கு முன்னால் கமிட்மெண்ட், லாயல்டி போன்ற சொற்கள் அர்த்தமிழந்துதான் போகின்றன. இதுதான் எதார்த்தம். உங்கள் மனைவியை நீங்கள் விவரித்த விதத்திலிருந்து பார்த்தால், உங்கள் உறவில் இது மிகச்சிறிய பின்னடைவு. அவ்வளவுதான்.
வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்