'ஹரிமொழி' ஹரி கிருஷ்ணன்
'ஹரியண்ணா' என்று பிரபலமாக இணையத்தில் அறியப்படும் ஹரி கிருஷ்ணன் அவர்களைத் தென்றல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. 'பேராசிரியர் நினைவுகள்' தொடரில் ஆரம்பித்து இன்றைய 'மகாபாரதம் - சில குறிப்புகள்' வரை தென்றலுக்குத் தொடர்ந்து சிறந்த பங்களிப்புத் தந்துகொண்டிருப்பவர். சங்கப்பாடல்களிலும், கம்பனிலும், பாரதியிலும் தோய்ந்தவர். 'வாழும் நிகண்டு' என்று சொல்லுமளவுக்கு இலக்கணத்திலும், யாப்பிலும் தேர்ந்தவர். பண்டைத் தமிழிலக்கியத்தில் ஆழங்காற்பட்டவர். 'அனுமன் அந்தாதி', 'கௌமார சதகம்', 'அனுமன்: வார்ப்பும், வனப்பும்', 'ஒரு கோப்பைத் தேநீரும் கொஞ்சம் கவிதையும்', 'ஓடிப் போனானா?' போன்றவை இவரது நூல்கள். இணைய உலகில் 18 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான பக்கங்களுக்கு பல ஆய்வுக் கட்டுரைகளை, இலக்கண, இலக்கிய விளக்கங்களை, விமர்சனங்களை எழுதியிருக்கிறார். "சந்தேகமா, கூப்பிடு ஹரிகியை" என்று சொல்லுமளவிற்கு இணையத் தமிழுலகில் பிரபலமானவர். 'சந்தவசந்தம்' விழாவில் கலந்துகொள்ளச் சென்னை வந்திருந்தவரைச் சந்தித்து உரையாடினோம். அதிலிருந்து...

கே: இலக்கிய ஆர்வம் முகிழ்த்தது எப்போது?
ப: அதற்கு முழுமுதற் காரணம் என் அம்மா. அவர் ஆர்மியில் பணியாற்றியவர். இலக்கியம் படித்தவர். அடிப்படையில் ஒரு கவிஞர். கல்லூரியில் படிக்கும்போதே நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஒருமுறை அம்புலிமாமாவில் 'வாசுவும் தாணுவும்' என்ற சிறுகதையை நான் அம்மாவிற்கு எழுத்துக்கூட்டிப் படித்தேன். "ஓ... படிக்க ஆரம்பிச்சுட்டியா, அப்போ இந்தப் புத்தகத்தைப் படி" என்று என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அது ராஜாஜி எழுதிய 'சக்கரவர்த்தித் திருமகன்'. அதைப் படிக்கப் படிக்க அதுவொரு பரவச உலகைக் காண்பித்தது. 6, 7 வயதுள்ள சிறுவன் படித்தாலும் புரிந்து கொள்ளுமளவிற்கு எளிமையாக அந்த நடை இருந்திருப்பது இப்போது புரிகிறது. அடுத்து 'வியாசர் விருந்து' படித்தேன். திரௌபதியை திரெ-ள-பதி என்று படிப்பேன். எங்களுக்கு டைப்பிங் இன்ஸ்டிடியூட் ஒன்று இருந்தது. அங்கு வரும் மாணவர்கள் எல்லாம் நான் படிப்பதைக் கேட்டுச் சிரித்துவிட்டுப் பின்னர் சரியாகச் சொல்லிக் கொடுத்தார்கள். அப்படி ஆரம்பித்ததுதான் வாசிப்பு என்பது.

அடுத்து அம்மா கொடுத்தது 'பாரதியார் கவிதைகள்' குழந்தைகளுக்கான கையடக்கப் பதிப்பு. பாடப் புத்தகத்தில் இருந்த பாடல்கள் சில அதில் இருந்ததால் ஆர்வத்துடன் படித்தேன். அடுத்து சக்தி வை. கோவிந்தனின் பதிப்பில் பல கவிதைகளைப் படித்துக் காட்டினார். அதன் சந்த நயமும் கவிச்சுவையும் என்னைக் கவர்ந்தன. பாரதியால் நான் ஈர்க்கப்பட்டேன். சந்தத்தின் நயமும் மரபின் நுணுக்கங்களும் புலப்பட 13, 14 வயதில் நானும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். நடக்கும்போது எழும் 'சரக் சரக்' என்னும் செருப்பின் ஒலிக்குக்கூட கவிதைகள் எழுதிப் பார்த்திருக்கிறேன்.

கே: சென்னை நங்கநல்லூர் வாசம் உங்களுக்கு ஒரு முக்கியமான கட்டம் அல்லவா?
ப: ஆமாம். நங்கநல்லூரில் ஒரு பெரும் நண்பர் குழு எனக்கு இருந்தது. எல்லோரும் என்னையொத்த அல்லது சற்றே மூத்த இளைஞர்கள். பா. வீரராகவன், ரமணன், கிருஷ்ணன், குடந்தை கீதப்ரியன், நங்கை சிவன், சுந்தர்ராமன் என்று பெரிய குழு. ஆளுக்கொரு வெண்பா சொல்வது, ஈற்றடிக்கு வெண்பா அமைப்பது, பேச்சையே வெண்பாவாக்குவது என்றெல்லாம் விளையாடுவோம். உதாரணமாக, ஒருவர் "செருப்பு தொலைந்து போய்விட்டது" என்றால், "செருப்புக்கும் உண்டோ திருட்டு" என்பார் ஒருவர். "பருப்புக்கும் உண்டோ லிமிட்டு" என்பார் மற்றொருவர். "ஈற்றடி வேண்டாம் இனி" என்பார் இன்னொருவர். ஒருவர் "ஏனோ அறுப்பு இது" என்க, "தாங்கும் கழுத்தென்று தான்" என்பார் இன்னொருவர். இப்படி கேலியும் கிண்டலுமாய், அது ஒரு தமிழ் விளையாட்டாய்த் தொடரும்.

நான் பியூசி படித்துக் கொண்டிருந்த நேரத்தில் நங்கநல்லூரில் ராஜராஜேஸ்வரி கோயில் கட்டி பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பிரதிஷ்டை செய்தார்கள். அந்தக் காலக்கட்டத்தில் எழுதியது 'அனுமன் அந்தாதி'. 'கௌமார சதகம்' அப்போது எழுதப்பட்டதுதான். அட்டநாக பந்தம் எல்லாம் எழுதியிருக்கிறேன். எங்கள் இலக்கிய ஆர்வத்தைப் பார்த்துவிட்டு ரமணனுடைய அக்கா மாமனார் ஒருவர், அவரிடம் இருந்த நூல் சேகரத்தை எங்களுக்குக் கொடுத்தார். அதிலிருந்த தண்டியலங்கார உதாரணச் செய்யுளை அடிப்படையாக வைத்து அந்த அட்டநாக பந்தத்தை எழுதினேன். அந்தக் காலகட்டத்தில் அதெல்லாம் ஒரு சவால். அந்த ஆர்வத்தில் இலக்கண நூல்களை முழுமையாகப் பயில ஆரம்பித்தேன். தொடர்ந்து கவியரங்கங்களில் பங்கேற்க ஆரம்பித்தேன். அப்படித்தான் பாரதி கலைக்கழகத்துடன் தொடர்பு ஏற்பட்டது.



கே: ஓ. அதுபற்றிச் சொல்லுங்கள்..
ப: பியூசியில் என்னுடன் படித்த விஜயராகவனின் தந்தை கவிஞர். இளங்கார்வண்ணன். அவரது வீட்டில்தான் கழகத்தின் முதல் கவியரங்கம் நடந்தது. அந்தக் காலத்தில் கழகத்தின் கவியரங்கில் பங்கேற்றுவிட முடியாது. ஒரு லெவலில் உள்ளவர்கள் மட்டுமே நுழைய முடியும். இளங்கார்வண்ணன் மூலம் நான் கலைக்கழகக் கவியரங்குகளில் கவிதை வாசிக்க ஆரம்பித்தேன்.

கே: நல்லூர் இலக்கிய வட்டம் ஆரம்பித்தது எப்போது, எப்படி?
ப: நான் கலைக்கழகத்திற்குத் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். அதைப் பார்த்த (இசைக்கவி) ரமணன், நாமும் நம் ஊரில் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று சொல்ல ஆரம்பித்ததுதான் 'நல்லூர் இலக்கிய வட்டம்'. ஆரம்பத்தில் அதற்குப் பெயர் கூட வைக்கவில்லை. தலைவர், பொருளாளர், செயலாளர் என்று யாரும் கிடையாது. செயல்படுபவன் செயலாளர், அவ்வளவுதான். கவியரங்கத் தலைவரை நியமிப்பது, அவர்களை அழைத்து வருவது, திரும்பக் கொண்டுபோய் விடுவது போன்றவற்றை நான் செய்தேன். அது எனக்கு நிறைய அனுபவத்தையும், பலரது அறிமுகத்தையும் பெற்றுத்தந்தது.

பார்வையாளர்களாக ஒருமுறை வந்தார் நாகநந்தி (பேரா. தி. வேணுகோபாலன்). மிகக் கடுமையான விமர்சகர். எங்களுக்கு அந்தக் கடுமை தாங்காது. அந்த வயது அப்படி. கவிமாமணிகள் மஹி, இலந்தை ராமசாமி ஆகியோரும் வருவார்கள். எப்படிக் கவிதையை மாறுபட்ட வகையில் விதவிதமாக எழுதலாம் என்பதை அவர்களிடம் கற்க முடிந்தது.

கே: உங்கள் இலக்கிய நிகழ்வுகளுக்காக பல பிரபலங்களைச் சந்தித்திருப்பீர்கள். அந்த அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்..
ப: நல்லூர் இலக்கிய வட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி ஒரு சிறு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். முதல்நாள் கவிதை படித்து பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தல்; மறுநாள் பரிசளிப்பு விழா என்று திட்டம். முதல்நாள் விழாவுக்கு கொத்தமங்கலம் சுப்புவை அழைத்திருந்தோம். அவர், "தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிப் பார்க்க நான் வரமாட்டேன்" என்று சொல்லி விட்டார். அதனால் மறுநாள் நடக்க இருந்த பரிசளிப்பு விழாவுக்கு அவரைத் தலைமை தாங்க அழைத்தோம். முத நாள் சுரதா தலைமையில் கவியரங்கமும், பரிசுக் கவிதைகள் தேர்வும் நடந்தன. மறுநாள் பரிசளிப்பு விழாவில் சுப்பு கலந்து கொண்டு வாழ்த்தினார். அது டிசம்பர் 25, 1972. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே ராஜாஜி காலமானதாகச் செய்தி வந்தது. நிகழ்ச்சியை முடிக்க சிலர் வந்து அவசரப்படுத்தினார்கள். அவர்களைச் சமாளித்து நிகழ்ச்சியை முடித்தோம்.

பின்னர் கொத்தமங்கலம் சுப்புவிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து அதில் அவர் கையெழுத்தைக் கேட்டேன். "பேரைச் சொல்லு" என்றார். "ஹரி கிருஷ்ணன்" என்றேன். "ஹரிகிருஷ்ணா என்ற பெயர் அமெரிக்காவில் எதிரொலிக்கும்" என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அப்போது ஹரே கிருஷ்ணா இயக்கம் அமெரிக்காவில் பிரபலமாக இருந்தது. அதை வைத்து அவர் அப்படி எழுதினாரா அல்லது 'ஹ'னாவுக்கு 'அ'னவாக அப்படி அவர் எழுதினாரா என்பது தெரியவில்லை. ஆனால் கவி வாக்கு பலித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

கே: இணையத்திற்கு எழுத வந்தது எப்போது, எப்படி?
ப: அது எப்படி நேர்ந்ததென்றே சொல்ல முடியாது. 1997ல் ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். அப்போது இணையப் பயன்பாட்டிற்கு வாடகை 100 மணி நேரத்திற்கு 5000 ரூபாய் என்ற நிலை. அதனால் இணையத்தில் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த என் மாமா பையனுக்கு 100 மணி நேரம் இலவசமாகக் கிடைத்தது. அவர் அதை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது யாஹூ மிகப் பிரபலமாக இருந்தது. அதில் 'பாரதி' என்று தேட Forumhub குழு ஒன்று அறிமுகமானது. அதில் ஒருவர் பாரதி குறித்த சந்தேகம் ஒன்றைக் கேட்டிருந்தார். நான் அதற்கு விரிவாக விளக்கமளித்தேன். அதுதான் ஆரம்பம். அப்போதெல்லாம் ஆங்கிலம்தான். பின்னர் 'காதம்பரி'யைப் பயன்படுத்தினேன். அதன் பின்னர்தான் டிஸ்கி எழுத்துரு.

ஃபோரம்ஹப்பில் வெண்பாவிற்காக 'வெண்பா வடிக்கலாம் வா' என்றொரு குழு. அதில் நிறைய வெண்பாக்களை எழுதிப் போட்டேன். அதிலிருந்தவர்கள் வியந்து போனார்கள். உலகின் பல இடங்களில் பல பொறுப்புகளில் இருப்பவர்கள். 'யார் இது?' என்று என்னை கவனிக்கத் தொடங்கினார்கள்.



கே: இணைய உலகில் "ஹரிகி என்றாலே சண்டைக்காரர்" என்ற ஒரு இமேஜ் இருக்கிறது. அது ஏன்?
ப: அதற்குக் காரணம் என்னவென்றால், ஒரு படைப்பின் அல்லது செய்தியின் மூலத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அல்லது தான் நம்புவதையே சரி என்று நினைத்து சிலர் தங்கள் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்ததுதான். அப்போது தவிர்க்க முடியாமல் நான் அதற்கு எதிர்வினையாற்ற நேர்ந்தது. உதாரணமாக ஒரு குழு விவாதத்தில் ஒருவர் "பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாரதி, மசூதிகளையெல்லாம் இடித்துவிட்டுக் கோயில்களைக் கட்டச் சொல்லியிருக்கிறார்" என்று எழுதியிருந்தார். நான் அதற்கு விளக்கமாக மறுப்புத் தெரிவித்து எழுதினேன். பாரதி எத்தனை இடங்களில் முஸ்லிம்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார், அவர்களைச் சகோதரர்கள் என்று பேசியிருக்கிறார் என்பவற்றை விளக்கமாக எழுதியிருந்தேன். சீனி விஸ்வநாதனின் தொகுப்புகள் எல்லாம் வராத காலகட்டம் அது. பாரதி பாடல், உரைநடை அனைத்தும் என்னிடம் இருந்தன. அவற்றில் பல எனக்கு மனப்பாடமாகவே தெரியும் என்பதால் நான் உடனுக்குடன் மறுப்பெழுதினேன். அது தொடர்ந்தது. இப்படி உண்மையை விளக்கிச் சொல்ல ஆரம்பித்ததும் முதலில் கருத்துச் சொன்னவர்களுக்கு நான் சண்டைக்காரனாகி விட்டேன்.

இப்படித்தான் பலரும் ஏதாவது பாடலையொ, கருத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ எடுத்துக்கொண்டு பேசுவார்கள். ஆனால் அதன் உண்மையான பொருளுக்கும் அதற்கும் தொடர்போ முழுமையோ இருக்காது.

உதாரணமாக,

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ


என்ற பாடலை எடுத்துக் கொண்டு, சட்டியும் சட்டுவமும் கறிச்சுவையை அறியுமா என்று கேட்பார்கள்.

சரிதான். ஆனால் சட்டியும், சட்டுவமும் இல்லாமல் கறி சமைக்க முடியுமோ? அதைச் சிந்தித்துப் பார்க்கமாட்டார்கள். கறி சமைக்கும்வரை சட்டியும், சட்டுவமும் தேவை. ஆனால் சமைத்து முடித்ததும் தேவையில்லை. ஆன்மா, உடல்பற்றிக் கவிஞன் சொல்லியிருக்கும் நுட்பமான பொருள் இது. இதை விட்டுவிட்டு வேறெதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

கே: அப்படி இணைய குழு விவாதங்களில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதாவது ஒன்றிரண்டைச் சொல்லுங்களேன்...
ப: ஒருமுறை பாரதியார். ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பற்றிக் கண்டித்து ஏதும் எழுதவில்லை என்று ஒரு சர்ச்சை. நான் அலுத்துப் போய் விலகியிருந்த காலம் அது. ஆனந்த கணேஷ் இதற்கு நீங்கள் அவசியம் விளக்கம் எழுத வேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டார். அதனால் எழுதினேன்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது 1919ல். 1918-1920 காலகட்டத்தில் பாரதி எழுத்திற்குத் தடை இருந்தது. அப்போது அவரே எழுதினாலும், யார் பிரசுரிப்பார்கள்? 1920ல்தான் தடை நீங்கியது. அதை அவரே குறிப்பிட்டிருக்கிறார். பின்னால் அவர் பத்திரிகை ஆசிரியரானார். அப்போதும் அன்றன்றைய நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் எழுத முடியுமே தவிர பழைய விஷயங்களை அல்ல. ஆகவே ஜாலியன் வாலாபாக் பற்றி எழுதாததில் பாரதிக்கு உள்நோக்கம் ஏதுமில்லை. அவருக்கு என்ன உள்நோக்கம் இருந்திருக்க முடியும் என்று நீங்கள் சொல்லுங்கள் என்று கேட்டேன். பதில் வரவில்லை.

அப்போது இணையத்தில் மரத்தடி என்றொரு குழுமம். மதி கந்தசாமி, ஹரன் பிரசன்னா, ஆசிப் மீரான், சுபமூகா, ஐயப்பன் போன்றோர் அதில் இருந்தனர். அவர்கள் அழைத்ததால் அதில் எழுதத் தொடங்கினேன். ஹரன் பிரசன்னாவின் உண்மையான பெயர் ஹரிஹரன் பிரசன்னா. நானும் ஹரி, அவரும் ஹரி என்பதால் வரும் பெயர்க் குழப்பம் நீங்க அவர் 'ஹரி'யை நீக்கி ஹரன் பிரசன்னா ஆனார். அதுபோல இணைய உலகில் "ஹரியண்ணா" என்ற பதத்தை முதலில் கையாண்டவர் ஆசிப் மீரான். அதன் பின்னர் பலரும் அப்படியே கூப்பிட ஆரம்பித்தனர். "சந்தேகமா, ஹரியைக் கேள்" என்று வந்தது அப்போதுதான். அடுத்து இரா. முருகன் ஆரம்பித்த 'ராயர் காபி கிளப்' குழுமத்தில் எழுத அழைத்தார். ஜெயமோகனின் சங்க சித்திரங்கள்வரை என் விமர்சனம் தொட்டது.

'நேசமுடன்' ஆர் வெங்கடேஷ் தமிழ் சிஃபியில் தமிழ் பிரிவுத் தலைவராக இருந்தார். அவர் என்னை சிஃபிக்கு எழுதச் சொன்னார். அதிலும், தமிழோவியத்திலும் பாரதியார் பற்றிய பல கட்டுரைத் தொடர்களை எழுதினேன். குறிப்பாக வேல்ஸ் இளவரசருக்கான அவரது வரவேற்புக் குறித்தும் ஆராய்ந்து அதில் கட்டுரைகள் எழுதினேன்.

உண்மையில் "ஜனகணமன" என்பது வேல்ஸ் இளவரசருக்காக இயற்றப்பட்டது. தான் எழுதியிருந்த பல பாடல்களில் ஒன்றை வேல்ஸ் இளவரசருக்காக தாகூர் கொடுத்துவிட்டார். அவரால் மறுக்க முடியவில்லை. அது கண்ணனுக்கோ வேறு யாருக்கோ எழுதப்பட்டது. பாடல் வரிகளைப் பார்த்தால் இரண்டுக்குமே அது பொதுவாக இருக்கும். அந்தப் பாடலின் பொருளை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் 'தேர்' என்றெல்லாம் வரும். ஆனால் பாரதிக்கு அப்படியில்லை. மனப்பூர்வமாகத்தான் எழுதியிருக்கிறார். இப்படி பல விஷயங்களை ஆராய்ச்சி செய்து, ஒப்பிட்டு எழுதியிருக்கிறேன். சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே போகலாம்.

கே: கம்ப ராமாயணத்தில் ஆர்வம் வந்தது எப்படி?
ப: எதையுமே திட்டமிட்டுச் செய்தேன் என்று சொல்ல முடியாது. கல்லூரியில் "கும்பகர்ணன் வதைப் படலம்" பாடமாக இருந்தது. அப்போதுதான் நங்கநல்லூருக்கு வீடு கட்டிக் கொண்டு வந்தார் எங்கள் பேராசிரியர் நாகநந்தி. அவர் அற்புதமாகக் கம்பராமாயணத்தை நடத்துவார். அதனால் அதைப் படிக்க ஆர்வம் ஏற்பட்டது. நண்பர் ஒருவரின் லைப்ரரி கார்டை வாங்கிக் கொண்டு தேவநேயப் பாவாணர் நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை எடுத்து வருவேன். திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதால் பாடல்களைக் குறிப்பேட்டில் எழுதி வைப்பது வழக்கம். அப்படி ஒருமுறை யுத்த காண்டத்தை எடுத்துக் கொண்டு வந்து கும்பகர்ணன் வதைப்படலம் வரைக்கும் காப்பி செய்து விட்டேன். அதை ஒருமுறை ரொம்பப் பெருமையாக பேராசிரியரிடம் காண்பித்தேன். "என்ன காரியம் பண்றே, ஸ்டாப் இட்" என்று கடுமையாகச் சொன்னார்.

நான் ஆடிப் போய்விட்டேன். "இதை இப்படிச் செய்யக் கூடாது. நீங்கள் தலைகீழாக ஆரம்பிக்கிறீர்கள். கேக்கைக் கொடுத்தால் க்ரீமையா முதலில் சாப்பிடுவது; பின் மற்றதெல்லாம் எப்படிச் சுவைக்கும்? ஒரு வருஷம் வரைக்கும் இதைத் தொடாதீர்கள்" என்றார். நானும் படிப்பை முடித்து, வேலை, தொழில், வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள் என்று சில ஆண்டுகளுக்கு அந்தப் பக்கமே போக முடியவில்லை.

ஒருநாள் நாகநந்தி அவர்களைப் பார்த்தபோது, கம்பராமாயணம் படிக்க ஆசையாக இருக்கிறது என்றேன். "உனக்கு என்ன புத்தகம்தானே வேண்டும்? எப்போது வேண்டுமானாலும் வந்து எடுத்துக்கொள்" என்றார்.

மறுநாள் வீட்டிற்குச் சென்றபோது தன் புத்தக அலமாரியைத் திறந்து, எது வேண்டுமோ எடுத்துக் கொள் என்றார். அவரிடம் வை.மு.கோ. பதிப்பு, உ.வே.சா. பதிப்பு எல்லாம் இருந்தது. நான் சற்றுத் தயங்கி வர்த்தமானன் பதிப்பை எடுத்துக் கொண்டேன். உடனே அவர், "ஒ.. இதுவா. உனக்கு வாங்கின விலைக்கே கொடுத்து விடுகிறேன்" என்றார். அது அவருக்கு இலவசமாக அவரது நண்பர் ஜெ. ஸ்ரீசந்திரனால் அளிக்கப்பட்டிருந்தது. வர்த்தமானன் பதிப்பக உரிமையாளரான அவரே அதை எழுதி வெளியிட்டிருந்தார். அதை எடுத்துச் சென்று இங்கொன்றும் அங்கொன்றுமாகப் படித்தேன். முழுக்கப் படிக்கும் ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது.

ஒருமுறை மதுரபாரதி (தென்றல் முதன்மை ஆசிரியர்) வீட்டுக்குச் சென்றிருந்தபோது, "கம்ப ராமாயணம் நீ முழுக்கப் படித்திருக்கிறாயா?" என்று கேட்டேன். அவர் "இல்லை" என்றதும் இருவரும் சேர்ந்து படிக்க முடிவு செய்தோம். இறுதிவரை படித்து முடித்தோம். ஒரே நாளில் 10 மணி நேரம் வரை தொடர்ந்து 900 பாடல்கள் எல்லாம் கூடப் படித்திருக்கிறோம். தேவைப்படும் இடங்களில் கருத்துப் பரிமாறிக் கொள்வோம். ஆறு மாதத்தில் நிறைவு செய்தோம்.



கே: சென்னை ஆன்லைனில் பணி புரிந்த அனுபவம் பற்றி...
ப: அதில் தினந்தோறும் ஆங்கிலக் கட்டுரை எழுதும் பொறுப்பு எனக்குத் தற்காலிகமாக வந்தது. நானும் தயங்காமல் 'Time Management in Mahabharata' என்ற தொடரை ஆரம்பித்தேன். நல்ல வரவேற்பு. பாராட்டி நிறையக் கடிதங்கள் வர ஆரம்பித்தன. அதுமுதல் அந்தப் பத்தியை என்னையே எழுதச் சொல்லிவிட்டார்கள்.

முதலில் ஹனுமான் பற்றி எழுதினேன். Hanuman a Manager, Hanuman a Secretary, Hanuman an Ambassador என்றெல்லாம் எழுதினேன். வால்மீகி ராமாயணத்துடனும் ஒப்பிட்டு எழுதுவேன். ஐந்து வருடங்கள் தினந்தோறும் எழுதினேன். 14 பாத்திரங்களை மிக விரிவாக ஆராய்ந்து எழுதியினேன். சீதையைப் பற்றி மட்டும் 360 கட்டுரைகள். அதிலும் அக்கினிப் பிரவேசம் குறித்தே 60 கட்டுரைகள். அதில் சீதை தரப்பின் நியாயத்தோடு சேர்த்து ராமன் தரப்பு நியாயத்தையும் எடுத்துச் சொல்லியிருந்தேன். அதை யாரும் செய்ய மாட்டார்கள். அதற்கு நல்ல வரவேற்பு.

நான் அதைத் தமிழில் ராயர் காபி கிளப்பில் எழுதினேன். எனக்குக் கவிதைப் பயிற்சி இருந்ததால் கருத்துக்களை நறுக்குத் தெறித்தாற்போல் எழுத முடிந்தது. அதைப் படித்த பா. ராகவன் அதைக் கிழக்கு பதிப்பகத்தின்மூலம் வெளியிடுவதாகச் சொன்னார். நான் "அது ரொம்பப் பெரியதாக இருக்குமே" என்றேன். "நீங்கள் எவ்வளவு பெரிதாக எழுதுகிறீர்களோ அவ்வளவு பெரிதாக வெளியிடுகிறோம்" என்றார். அப்படி வெளியானதுதான் 'அனுமன்: வார்ப்பும் வனப்பும்'.

கே: ராயர் காபி கிளப்பில் நீங்களும் இரா. முருகனும் இணைந்து எழுதிய "நகரம் நானூறு" சுவாரஸ்யமானது. அதன் பின்னணியைச் சொல்லுங்களேன்...
ப: ராயர் காபி க்ளப்பில் இரா.முருகன் மத்தளராயன் என்ற பெயரில் வெண்பாக்களை எழுத, நானும் எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதியவைதான் "நகரம் நானூறு" வெண்பாக்கள். பிச்சைக்காரர், வண்டியோட்டி, அனுமார் வேஷதாரி என்று பலதரப்பட்ட நகரத்தின் காட்சிகளைக் கொண்டதாக இருந்தது.

ஒருமுறை எக்மோர் ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த வீரன் அழகுமுத்துக் கோன் சிலையைப் பார்த்தேன். அதில் அவன் கை வாளை உயர்த்திப் பிடித்திருக்க அதன்மேல் ஒரு காகம்! வாளைக் கண்டால் காக்கை பயப்பட வேண்டும். ஆனால் இங்கேயோ கத்தியின்மேல் காகம். அதை வைத்து "உயர்த்திய வாள் காக்கை அமரும் களம்" என்பதாக ஒரு வெண்பாவை எழுதினேன். அதை போட்டோவாகப் போட்டால் இன்னமும் எஃபெக்டிவாக இருக்குமே என்று தோன்றியது. அப்படிச் சில காட்சிகளை படமாக எடுத்து, பொருத்தமான கவிதையோடு போட, அதற்கு நல்ல வரவேற்பு.

ஒருநாள் நல்ல மழை. பக்கத்து வீட்டில் குயில் ஒன்று கூவிக் கொண்டிருந்தது. குயில் மழைக்காலத்தில் கூவுவது அரிது. "குயில் கூவுமோ மழை நாளிலே" என்று சொல்வழக்கே உண்டு.

சன்ன மழைத்தூறல்; சாத்திவைத்த சன்னல்கள்
முன்னோட்ட மேக முழக்கங்கள் - இன்னும்
சருகுதிரும் தாழ்கிளையில் தன்னுள்தான் ஆழ்ந்து
குரலுடைந்து கூவும் குயில்


என்று ஒரு வெண்பா எழுதினேன். இதுவரை 100 பாடல்களுக்கு மேல் எழுதிவிட்டேன். முடித்தபின் புத்தகமாக வரக்கூடும். இல்லாவிட்டால் என் கவிதைகளை மட்டுமாவது தொகுத்து மின்னூலாகக் கொண்டு வரும் எண்ணம் உண்டு.

கே: உங்களுடைய பாரதி பற்றிய "ஓடிப்போனானா?" நூல் மிக முக்கியமானது. அந்த நூலின் பின்னணி என்ன?
ப: பாரதி கலைக்கழகத்தின் பாரதி சுராஜ் அவ்வப்போது "பாரதி பாண்டிச்சேரிக்கு ஓடிப் போய்விட்டான்" என்று விமர்சிப்பார். நீங்கள் எப்படி அப்படிச் சொல்லலாம் என்று எனக்கும் அவருக்கும் ஒரு கடிதப் போரே நடந்தது. அதற்காக நான் தேடி வைத்திருந்த குறிப்புகளையும், மேலும் சில விவரங்களையும் சேர்த்து எழுதப்பட்டதுதான் 'ஓடிப் போனானா?' தொடர். தமிழ் ஹிந்துவில் வெளியாகிப் பின்னர் நூலாக்கம் பெற்றது.

மிக அதிகமாகத் தமிழில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்று பார்த்தால் அது பாரதியினுடையதுதான். மிக அதிகமாகக் குழப்பப்பட்டதும் அவர் வரலாறுதான். அவரவர் மனம்போனபடி பாரதியின் வாழ்க்கை, பாடல்கள் குறித்து எழுதியிருக்கிறார்கள். பாரதியார் பற்றிய காவல் துறையினரின் அறிக்கைகள், சி.ஐ.டி. குறிப்புகளைத் தொகுத்து ஒருவர் நூல் வெளியிட்டிருக்கிறார். அதைப் படித்தபோதுதான் பல விஷயங்கள் எனக்குப் புரிய ஆரம்பித்தன. 'ஓடிப் போனானா?' எழுதுவதற்கு அதுவும், சீனி. விஸ்வநாதன் எழுதிய பாரதி பற்றிய மூன்றாவது தொகுதியும் பெரிதும் உதவின.



கே: பெங்களூரில் நீங்கள் நடத்திவரும் கம்பராமாயண முற்றோதல் பற்றிச் சொல்லுங்கள்..
ப: ஏற்கனவே நானும் மதுரபாரதியும் இணைந்து அதனைச் செய்திருக்கிறோம். மீண்டும் செய்யும் சூழல் எழுத்தாளர் சொக்கன் மூலம் உருவானது. ஒரு தமிழ்ப்புத்தாண்டு அன்று 'சுந்தரகாண்டம்' படிக்கலாம் என்று அவர் சொன்னார். "ஏன் சுந்தர காண்டம் மட்டும்? முழு ராமாயணத்தையும் படிக்கலாமே" என்றேன் நான். அப்படித்தான் அது ஆரம்பித்தது. 10 பேர்வரை ஆர்வத்துடன் தவறாது கலந்து கொள்கிறார்கள். அதிலும் தமிழே தெரியாத மலையாளம் மட்டும் தெரிந்த ஒருவர் இதனைக் கேட்பதற்காக என்றே வந்தார். நடக்குமிடம் பெங்களூரிலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கிறது. நகரின் மையப்பகுதியில் இருந்தால் மேலும் பலர் வரக்கூடும்.

இதை யூட்யூப் வீடியோவாகப் பதிவேற்றி வருகிறோம். அதைப் பார்த்துவிட்டு UPSC தேர்வு எழுதும் மாணவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டனர். எங்களுக்கு கும்பகர்ணன் வதைப் படலம் பாடமாக இருக்கிறது. உங்களுடைய பதிவுகள் எளிமையாகப் புரியும் வகையில் இருக்கின்றன. எங்களுக்காக அதை நீங்கள் முன்கூட்டிப் படித்து விளக்க முடியுமா என்று கேட்டனர். நாங்கள் அந்தப் படலம்வரை செல்ல நிறைய நாட்கள் இருந்தன. அவர்களுக்கோ டிசம்பரில் தேர்வு. அந்த மாணவர்களுக்காக முதலில் அதை எடுத்து மூன்று அமர்வுகளில் படித்து முடித்தோம். ஃபிரான்ஸில் இந்த முற்றோதலைச் சிலர் செய்திருக்கின்றனர். அவர்கள் இங்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்.

பொதுவாக முற்றோதல் என்றால் பாட்டைப் படித்துக்கொண்டே போவார்கள். பொருள் சொல்ல மாட்டார்கள். இன்றைக்கு மரபுக் கவிதைகளை வாய்விட்டுப் படித்தல் என்பதே அருகிப் போய்விட்டது. அதனால் பெங்களூரு முற்றோதலுக்கு வருபவர்கள் முதலில் வாய்விட்டுப் படிக்க வேண்டும். அதன் பிறகு நானோ, ஜடாயுவோ பொருள் சொல்வோம் என்று முடிவுசெய்து, இன்றுவரை அப்படி நடந்து வருகிறது. பாடலுக்குப் பொருள் விளக்கம், இலக்கணக் குறிப்பு, வால்மீகி ராமாயணத்துடன் ஒப்பீடு என்று எல்லாம் கொண்டு சிறப்பாக நடந்து வருகிறது. இன்றைய இளைஞர்களுக்கு இந்த ருசியை ஏற்படுத்தியதில் ஒரு நிறைவுதான். .

கே: இந்த முற்றோதலினால் ஏற்படும் பயன் என்ன என்று கேட்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன?
ப: இந்த விதை எதிர்காலத்தில் பலன் தரும் என்று நம்புகிறேன். ஒரு சிலராவது எதிர்காலத்தில் இதே போன்று ஒரு முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தக்கூடும். இலக்கியம் வாசிப்பவர்களிடம் மூலத்தைப் படிக்கும் தூண்டலை ஏற்படுத்துவதுதான் எனது நோக்கம். இக்காலத்தில் மூலத்தைப் படிப்பதில்லை. அப்படி மறைய மறைய நாம் இந்த மண்ணின் பலத்தை, கலாசாரத்தை இழந்துகொண்டே வருகிறோம். அவரவர் தங்கள் கருத்தைக் கூறக்கூற, நாளைக்கு கம்பனின் கருத்து மறைந்து சொன்னவரின் கருத்துதான் உண்மை என்றாகிவிடும். அதைத் தவிர்க்க மூலத்தைப் படிக்க வேண்டும்.

நான் வாழ்க்கையின் மிக கஷ்டமான காலகட்டத்தில், வேலையிழந்து மிகக் கஷ்டமான சூழலில் இருந்தபோது எனக்கென்று இருந்தது சென்னை ஆன் லைனில் நான் தினசரி எழுதிவந்த அந்த கட்டுரைத் தொடர்தான். அந்தச் சூழலில் என்னைத் தூக்கி நிறுத்தியது கம்பன்தான். பாரதி எனக்கு அடிப்படை அமைத்துக் கொடுத்தான் என்றால் வாழ்க்கையில் உறுதுணையாக வந்தது கம்பன். அதற்கு நன்றி பாராட்டுதலாக இந்த முற்றோதலை வைத்துக் கொள்ளலாம். எனது கவனமெல்லாம் இப்போது கம்ப ராமாயணத்தில்தான் இருக்கிறது. அதனால் ராமாயணம், மஹாபாரதம், பாரதி, வள்ளுவர், சங்க இலக்கியம் தவிர்த்துப் பிறவற்றிலிருந்து நான் விலகித்தான் இருக்கிறேன்.

கே: கம்பனில் பல பாடல்கள் இடைச்செருகல் என்று சிலர் சொல்லியிருக்கின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: எனக்கு உடன்பாடில்லை. கவிச்சுவையை வைத்தோ அல்லது தனது அபிப்பிராயத்தை வைத்தோ இதெல்லாம் இடைச்செருகல், இதெல்லாம் மூலப்பாடல் என்று சொல்வது சரியானதாகாது. சுவையை வைத்து ஒரு பாடலின் தரத்தைத் தீர்மானிக்க முடியாது. பத்தாயிரம் பாடல்களில் அபாரமான காவியத்தைப் பாடும்போது எல்லாப் பாடல்களின் சுவையும் ஒரே தளத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆயிரக்கணக்கான பாடல்களைச் சுவையின் அடிப்படையில் இடைச்செருகல் என்று நீக்கிவிட்டால் பின்னர் முழுமைபெறாத, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் சிதறுண்ட பாடல்கள் மட்டுமே எஞ்சும்.

இந்த நூல்களைப் பதிப்பித்தவர்கள் சாதாரணமான ஆட்கள் இல்லை. உ.வே.சா., வை.மு.கோ. போன்றவர்கள் பல ஊர்களிலிருந்தும் சுவடிகளைத் திரட்டி, புலவர்களை வைத்து ஒப்புநோக்கி, பிழைநீக்கி, மாறுபாடுகளை ஆராய்ந்து பின்னர் பதிப்பித்திருக்கிறார்கள். சில பாடல்கள் இடைச்செருகலாக இருந்தாலும், பிரதிகளை ஒப்புநோக்கும்போது தெரிந்துவிடும். மற்றபடி, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாடல்கள் இடைச்செருகல்களாக இருக்கவே முடியாது.

கே: பேராசிரியரிடம் நீங்கள் மிகவும் வியக்கும் பண்பு?
ப: அவர் நாத்திகவாதி என்றாலும் ராமாயணத்தைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தால் ஒரு பௌராணிகர் கூட அப்படிப் பேசமுடியாது. அந்த அளவு ஈடுபாட்டோடு பேசுவார். திருவாசகம் பற்றிப் பேசும்போது, "திருவாசகத்தைப் படிக்கப் படிக்க என் கண்களில் நீர் பெருகுகிறது. என் மனைவிகூட, 'உங்களுக்கு எதற்குத் திருவாசகமும் கண்ணீரும். நீங்கதான் நாத்திகராயிற்றே' என்று கேலி செய்கிறார்" என்று எங்களிடம் சொல்வார். "படித்தால் கண்ணீர் வருகிறது. அது இயல்பாக இருக்கிறது. அதற்காக அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பது அர்த்தமல்ல" என்பார். 62 வயதில் அவர் காலமாகி விட்டார். ஐந்தாவது அட்டாக்கில் ஆஸ்திரேலியாவில் அவருடைய மகன் பார்த்திபன் இல்லத்தில் அவர் காலமானார். அவர் கண்கலங்கி யாரும் பார்த்ததில்லை. ஆனால், நங்கநல்லூரை விட்டுப் புறப்படும்போது மனம் கலங்கினார். "நீண்டநாள் வாழ வேண்டுமென்று ஆசிர்வதிக்காதீர்கள். ஆனால் வாழும் ஒவ்வொரு நாளும் பயனுள்ள நாளாய் இருக்க வேண்டும் என்று சொல்லி வாழ்த்துங்கள்" என்று சொல்லிக் கண்கலங்கி விடைபெற்றார்.

ஒரு புயலைப்போல அவர் ஆஸ்திரேலியாவைக் கலக்கினார். அங்கே அத்தனை சொற்பொழிவுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள். அவையெல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நாகநந்தி மணிமண்டபத்தில் இவற்றைக் கேட்கலாம். அவரது மனைவி திருமதி. சரஸ்வதி வேணுகோபாலன், அவற்றைப் புதிய கேசட்டுகளில் ஆண்டுதோறும் பதிவு செய்து பாதுகாத்து வந்தார். 60 மணி நேரப் பேச்சுக்கள். பேராசிரியர் மறைந்தாலும் அவரது குரல், கருத்து சாகாவரம் பெற்றதாக இன்றைக்கும் உள்ளது. பலருக்கும் பயன்படுகிறது.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: பரதன், குகன் ஆகிய பாத்திரங்களைப் பற்றி எழுதத் திட்டமுண்டு. எனது ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் தரவும் எண்ணமுண்டு. ஆங்கிலத்தில் 60 பக்கங்களில் எழுதியது தமிழில் 500 பக்கத்திற்கு மேல் வரலாம். 'அனுமன்: வார்ப்பும் வனப்பும்' அப்படித்தான் ஆனது. தமிழில் எழுதும்போது விரிவாக, எழுதவேண்டி இருக்கிறது. நேஷனல் ஜியாகிரஃபிக் சானலுக்காக டாகுமெண்டரிகளை தமிழில் மொழிபெயர்க்கிறேன். தென்றலில் கட்டுரை எழுதுகிறேன்.

வெளியே கார்த்திகை தீபங்கள் பிரகாசிக்கின்றன, ஹரி கிருஷ்ணனின் சொற்களைப் போலவே. சந்திப்புக்கு நன்றி கூறி நாமும் விடை பெற்றோம்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
படங்கள் 1, 5: ராமலக்ஷ்மி ராஜன்

*****


ஜயேந்திரர் கொடுத்த வெள்ளிக்காசு
1983ல் காஞ்சிப் பெரியவர் ஜயேந்திரர் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தார். கவிஞர் வாலி தலைமை. மூத்த கவிஞர்கள் கலை, சக்தி, இயற்கை என்று சந்த நயங்களைக் காட்டும் கவிதைகளை வாசித்தனர். ஜயேந்திரர் தனக்கேயுரிய பாணியில் கவிதைகளுக்குக் கருத்துச் சொல்லி வந்தார். எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்போ 'திருக்குறளில் அறம்'. நான் அதுவரை மரபுக்கவிதைகள் மட்டுமே எழுதியிருந்தேன். புதுக்கவிதை எழுதியது கிடையாது. அன்று முயற்சி செய்தேன். இது சரி, இது தவறு என்று சொல்லமுடியாத தன்மை கொண்டது அறம் என்பதை வைத்து,

அறநோக்கி வீடணன் அண்ணனைப் பிரிந்தான்;
அறநோக்கி கும்பகர்ணன் அவனோடு இருந்தான்


என்று சொல்லி, இரண்டுமே அறம்தான் என்பதை விளக்கினேன். நான் இரண்டாவது நபராகக் கவிதை வாசித்தேன். முதலில் வாசித்தவரின் கவிதையைக் கேட்டு, "ம்..ம்... விஷயத்துக்கு வாங்கோ... ஆகட்டும் மேலே...." என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த ஜயேந்திரர், இந்த வரிகளைக் கேட்டதும், "அம்பி... அதைத் திருப்பி வாசி" என்றார். உடனே நான் அதை மீண்டும் வாசித்தேன். உற்றுக் கேட்டவர், உடனே "இங்க வா" என்று சொல்லித் தன்னருகே அழைத்தார். "கவிதை ரொம்ப நன்னாருக்கு. வார்த்தை எல்லாம் ரொம்ப சிறப்பா அமைஞ்சிருக்கு" என்று சொல்லிப் பாராட்டி, வெள்ளிக்காசு ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். என்னால் மறக்கமுடியாத சம்பவம் இது.

- ஹரி கிருஷ்ணன்

*****


ஆவி துணையிருக்க…
'நேசமுடன்' ஆர். வெங்கடேஷ் அப்போது விகடன் பிரசுரத்தின் வைஸ் பிரசிடெண்ட் ஆக இருந்தார். விகடன், அப்போது என்சைக்ளோ பீடியா தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. சுதா சேஷையன் அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றார். அப்போது வெஙகடேஷ் என்னை அழைத்து 'ஒரு பார்வை பார்த்தால் போதும் வாருங்கள்' என்று சொல்லி அழைத்தார். நானும் சென்றேன். சுதா சேஷையனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அவர் என்னிடம், "நீங்கள் சாவிலிருந்து தொடங்குங்கள்" என்றார். நானும் உடனே, "ஆவி துணையிருக்க ஆகாத தொன்றில்லை. சாவில் தொடங்குவேன் சாற்று" என்றேன்.

அவர் சொன்னது 'ச' என்ற எழுத்திலிருந்து தொடங்குங்கள் என்றுதான். ஆனால் பேச்சு வழக்கில் "'சா'விலிருந்து தொடங்குங்கள்' என்று சொல்லி விட்டார். நானும் அதற்கு என்னையுமறியாமல் உடனடியாக பதில் சொல்லி விட்டேன். "ஆனந்த விகடன் துணையிருக்கும் போது என்னால் ஆகாதது ஒன்றுமில்லை. 'சா' என்ற எழுத்திலும் கூடத் தொடங்க முடியும்" என்பது ஒரு பொருள். ஆத்மா துணையாக இருக்கும்போது சாவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை" என்றும் பொருள் கொள்ளலாம்.

- ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com