ஜெர்மனியின் பெர்லின் நகரிலுள்ள Deutsche Welle (DW) தொலைக்காட்சி நிறுவனம் வழங்கும் உலக நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. "தொகுத்து வழங்குவது சுமி சோமாஸ்கந்தா..." என்று தொடங்கி மளமளவென அழகான ஆங்கிலத்தில் பேசுகிறார் சுமி என்ற சுமங்கலி சோமாஸ்கந்தா. இலங்கைத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்று, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஜெர்மனியில் பணியாற்றும் சுமி நன்றிநவிலல் நாள் (Thanksgiving) விடுமுறைக்கு இங்கு வந்திருந்தார். அவரோடு தென்றலுக்காக உரையாடியது மிகச் சுவையான அனுபவம்.
சுமியின் தந்தை டாக்டர் சோமாஸ்கந்தா நியூ யார்க் மாநிலம் ராச்செஸ்டரில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றியவர். சுமியின் தாயார் திருமதி சாந்தி, அங்கேயே மருத்துவமனை ஒன்றில் தன்னார்வச் சேவை செய்துவருகிறார். சுமிக்கு ஒரு மூத்த சகோதரனும், சகோதரியும் இருக்கிறார்கள்.
பத்தாம் வகுப்புப் படிக்கும்போதே இதழியல் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த சுமி, ராச்செஸ்டரின் ஈஸ்ட்மன் இசைப்பள்ளியில் சேர்ந்து வயலின் இசையிலும் தேர்ச்சி பெற்றார். ‘இசையா? இதழியலா?' என்ற கேள்வி வந்தபோது இதழியல் வெற்றி பெற்றது. சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இதழியலில் இளநிலை, அடுத்து முதுநிலை பட்டங்களைப் பெற்றார். கல்லூரி நாளிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியும், பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியும் பயிற்சி பெற்ற சுமி, புறந்தவிர்மை (autism) குறித்த ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து விருது பெற்றதில் தனக்குப் பங்கிருந்ததைப் பெருமையோடு கூறுகிறார். ஒருமாதம் வாஷிங்டன் DCயில் அமெரிக்கப் பாராளுமன்ற (Capitol HIll) செய்திகளை NBC தொலைக்காட்சிக்காகத் தொகுத்து வழங்கியதுண்டு.
பின்னர் நியூ யார்க் மாநிலத் தலைநகரான ஆல்பனியில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு மாநிலச் செய்திகளை வழங்கும் நிருபராகப் பணிபுரிந்தார். அப்போது முன்னாள் அதிபர் பில் கிளின்டனை நேர்காணுகையில் தன்னைப் பெயர்கூறி அழைத்ததை மகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார். முன்னாள் துணையதிபர் அல் கோர் தொடங்கிய Current TV தொலைக்காட்சி நிலையத்தில் ஒரு புதிய செய்தி நிகழ்ச்சியைத் தொடங்கவும் துணையிருந்திருக்கிறார்.
2009ன் பொருளாதாரச் சரிவு தன்னையும் ஓரளவு பாதித்ததாகச் சொல்லும் சுமி, ஜெர்மனியின் Robert Bosch Foundation மூலம் பெர்லினில் உள்ள Deutsche Welle (DW) தொலைக்காட்சி நிறுவனத்தில் பயிற்சி பெறக் கிடைத்ததைத் திருப்புமுனையாகக் கருதுகிறார். 2010ம் ஆண்டு ஜெர்மனியிலேயே நிரந்தரமாகத் தங்க முடிவுசெய்தார். DW தொலைக்காட்சி வழியாக சுமி தொகுத்து வழங்கும் ஆங்கில நிகழ்ச்சி பல ஐரோப்பிய நகரங்களுக்கும் செல்கிறது.
"ஆரம்பத்தில் ஜெர்மன் மொழியில் பேசச் சற்றுச் சிரமமாக இருந்தது. ஆனால், அந்த நாட்டுத் தலைவர்கள் என்னோடு பேட்டியில் பொறுமையாகப் பேசுவார்கள்" என்று கூறும் சுமி, இப்போதெல்லாம் அம்மொழியில் சரளமாகப் பேசுகிறாராம்.
அமெரிக்காவோடு ஜெர்மனியை ஒப்பிடுகையில் அவர், "ஜெர்மனியில் நிரந்தரக் குடியுரிமை பெறுவது அமெரிக்காவைப் போல் அவ்வளவு எளிதல்ல. ஆகவே, அங்கே நிறைய இந்தியக் குடும்பங்களைப் பார்க்க முடியாது. ஆனால், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரை ஜெர்மானிய அரசு அகதிகளாக ஏற்றுக் கொண்டிருப்பதால், அவர்களை நிரம்பப் பார்க்க முடிகிறது. அமெரிக்காவில் ஒரு தலைவரைப் பேட்டி எடுக்க அதிக முயற்சி வேண்டாம். ஆனால், ஜெர்மனியில் குறைந்தது பத்து நாட்கள் காத்திருந்த பின்னர்தான் அனுமதி பெறமுடியும்" என்கிறார். பொதுவில் அமெரிக்கர்கள் 'எதுவும் இயலும்' என்பார்கள். ஜெர்மானியர்களிடம் நம்பிக்கையின்மையை (pessimism) அதிகம் பார்க்க முடிகிறதென்றார்.
துருக்கி நாட்டின் எல்லைப்புறத்தில் இருந்த அகதிகள் முகாமில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியைத் தன்னால் மறக்க முடியாதென்கிறார். மணமகன் துருக்கியர். மணமகள் சிரியா நாட்டவர். அவர்களுடன் பேட்டி முடிந்த பின்னர் திருமணத்திலும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றதை சுமி நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
தொலைக்காட்சியோடு நின்றுவிடாமல் சுமி நேரம் கிடைக்கிற போதெல்லாம் USA Today, The Atlantic, Global Post, The Washington Times, Foreign Policy போன்ற பிரபல பத்திரிகைகளில் அரசியல், பொருளாதாரம், சமூகம் என்று பல தலைப்புகளிலும் எழுதி வருகிறார்.
சுமியின் கணவர் ஜூலியன் ரமிரேஸ் (Julian Ramirez) ஒரு கொலம்பியர், கணவரின் தாயார் ஜெர்மானியர். "எங்களுடைய திருமணம் இரண்டு நாட்டு வழக்கப்படியும் நடந்தது" என்கிறார். தன் அம்மாவின் கத்திரிக்காய் வத்தக்குழம்புக்கு மிகவும் ஏங்குவதாகக் கூறும் சுமி, கடவுள் ஆசி இருந்தால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா திரும்ப விரும்புவதாகக் கூறுகிறார். உற்சாகம் கொப்பளிக்கப் பேசிய சுமிக்கு வாழ்த்துக்களைச் சொல்லி உரையாடலை முடித்தோம்.
உரையாடல்: நளினி முள்ளூர்; உதவி: கோம்ஸ் கணபதி |