அப்பா
என்னவோ தெரியவில்லை இந்த ஒரு வீட்டுக்கு மட்டும் பால் பாக்கெட் அல்லது ஏதாவது கொடுக்கச் சென்றால் எனக்கு வெறுப்புதான் வரும். நான் வேலைக்குச் சேர்ந்த மூன்று மாதங்களில் இந்த ஒரு வீடும் அந்த வீட்டில் வாழும் தாத்தாவும் என்னை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி விட்டார்கள். நான் யாருன்னு சொல்லவேயில்லையே. பத்தாம் வகுப்பு பெயில். படிப்பு வரலன்னு அப்பா அடிச்சாரு. அப்படியே ஓடிவந்திட்டேன். கொஞ்ச நாள் பிச்சை. அப்புறம அங்க இங்க வேலைனு கடைசியா இந்தப் பெரிய டிபார்மெண்டல் ஸ்டோர்ல வந்து சேர்ந்தேன். ஹோம் டெலிவரிதான் வேலை.

ஆனா இந்த ஒரு வீட்டுக்கு மட்டும் சென்னையில இருந்து ஃபோன் வரும், பால் பாக்கெட் கொடு, பிஸ்கட் கொடு, தைலம் கொண்டு போய் கொடுன்னு. எங்க முதலாளியும் அந்தத் தாத்தா பையனும் தோஸ்தாம். கிடந்து நா சாகுறேன்.

என்ன சொல்றீங்க? கொண்டுபோய் கொடுக்கிறதுதான உன் வேலைனா? கொடுக்கிறதுல பிரச்சினை இல்லைங்க. ஆனா அவரு பேசுவாரு பாருங்க. அதத் தாங்க முடியாதுங்க. அவர் பிறந்த கதை, போராடி ஜெயிச்ச கதை, அவர் ஒரே பையனோட பெருமை கதை, அவரு சென்னைல இருந்து டெய்லி ஃபோன் போட்டு சொல்ற கதைன்னு ஒரு வரி விடாம சொல்லுவாரு. அப்புறம் அவர் பேரனோட பெருமை, ஆச்சியோட பெருமைன்னு கொல்லுவாருங்க.

நா பாவமில்லையா? எங்க ஓனர்ட்ட சொன்னா அவர் கண்டுக்கக்கூட மாட்டேங்கிறார். பாருங்க இப்ப ஏதோ ஒரு பார்சல் வந்திருக்கு. கொண்டுபோய் கொடுக்கணும். இன்னைக்கு மதியம் சாப்பாடு 4 மணிக்குதான்.

தாத்தா. தாத்தா. எளவு காதுவேற கேக்காது. கதவு ஏறி, அந்த காலிங் பெல்ல அமுக்கணும். தாத்தாஆஆஆஆ என கத்திக்கொண்டே காலிங் பெல்லை அமுக்கினேன். உள்ளே இருந்து ஒரு ரியாக்சனும் வரல. ஒருவேளை போய்ட்டாரோ? வாசல்ல வச்சுட்டு போனா நாளைக்கு வசவு வாங்கணும். பேசாம கதவத் திறந்து உள்ளே போவோம். அவரும் பாட்டியும்தான் இருப்பாங்க. தாத்தாதான் அடிக்கடி சொல்வாரில்ல, பாட்டிக்கு முடியாது. அதான் நான் வேலை பார்க்கிறேன்னு. தாத்தக்கும் முடியாம இருக்கலாம். உள்ளே போவோம்.

மெதுவாகக் கதவு திறந்து உள்ளே போனேன். வீட்டு வேலைக்கு ஆட்கள் வருவார்கள்போல. எல்லாம் அதனதன் இடத்தில் அழகாக இருக்கிறது. ஹாலில் யாருமில்லை. இடதுபுறம் ஒரு அறை பாதி திறந்திருந்தது. மெதுவாக எட்டிப் பார்த்தேன். சன்னமாக ஒரு குரல் கேட்டது. வேறு யாருமில்லை தாத்தாதான் . பாட்டியிடம் பேசுகிறார்போல. ஒட்டுக் கேக்கும் ஆர்வம் வந்தது. கவனித்தேன்.

என்னமோ போடி. இது ஒரு வாழ்க்கைன்னு வாழ்ந்துகிட்டு. உனக்கு ஞாபகம் இருக்கா. என்னங்க இன்னைக்குப் பையனுக்கு ஹாஸ்பிடல் போகணும். நீங்க வந்தாதான் அவன சமாளிக்க முடியும்னு சொல்லுவ. நானும் என்ன வேலை இருந்தாலும் போட்டுட்டு ஒடிவருவேன். ஆனா இப்ப பாரு என்னையே என்னால சமாளிக்க முடியல. ஆனா என்கூட வர யாருமில்லைடி. பாரு இவ்ளோ பெரிய வீடு. வாட்ச்மேன் கூட நைட்தான் வருவான். நான் 5 வருஷமா முழுநேரமும் இங்கதான் இருக்கேன். உன் பையன் என்ட்ட பேசியே 9 மாசம் ஆச்சிடி. எல்லாம் கடைக்கார பையன்ட்டதான் சொல்லி அனுப்புறான். என் பேரன் குரலக் கேட்க முடியலடி என்று அழுதார்.

பேரிடியாக இருந்தது எனக்கு. என்ன பார்க்கும் போதெல்லாம் பையன் பெருமை பேசுவாரே. நேத்து பேசுனான், கார் வாங்கியிருக்கான், நேத்து என் பேரன் இங்கிலீஷ் பாட்டு பாடினான். சொல்லுவாரே, அவ்ளவும் பொய்யா? யோசித்துக்கொண்டே கவனித்தேன்.

இந்த வலது கால அப்பப்ப இழுத்துக்குதுடி. மாத்திரை போட வேற மறந்து போயிடுறேன். என்ன வாழ்க்கை இது. பேசாம நானும் உன்கூடவே செத்துருக்கணும். பாரு இப்ப அனாதையா இருக்கேன்.

இது இன்னும் பேரிடியாக இருந்தது. அப்ப பாட்டியும் இல்லையா! மெதுவாக எட்டிப் பார்த்தேன். அவர் பாட்டியின் ஃபோட்டோவோடு பேசிக் கொண்டிருந்தார். எனக்கு அழுகை வந்தது. என்ன வாழ்க்கை இது! இவ்ளோ பெரிய வீடு, வீட்டுக்குள்ள எல்லாமே இருக்கு. ஆனா... யோசித்துக்கொண்டே நின்றேன்.

நீ எப்படா வந்தா என்றபடியே தாத்தா வந்தார். நான் பேசாமல் இருந்தேன். அது, வீட்ல யாரும் இல்லையா? அதான் நீ வரும் போதெல்லாம் உன்ட்ட பேசுவேன். ரொம்ப பேசுறேன்னு எனக்குத் தெரியும். நீயும் இல்லாட்டி இந்த ஃபோட்டோட்ட மட்டும்தான் பேசமுடியும். நா உண்மையச் சொல்லியிருந்தா நீ அனுதாபப் பட்ருப்பா. அது எதுக்கு. இன்னைக்கு யாருமில்லாம நிக்கிறேன். இதெல்லாம் உன்ட்ட சொல்ல முடியுமா? அதான் அப்படி நடக்காததெல்லாம் நடந்த மாதிரி சொன்னேன். அது நடக்கலயே தவிர அதெல்லாம் நடக்கணும்னு என் ஆசை. நீ கொண்டுவந்த பார்சல் என்ன தெரியுமா? என் மகன் எனக்கு அனுப்பியிருக்க பாசம். நேர்ல பார்க்க முடியாத அப்பனுக்கு, ஃபோன்லகூட பேச முடியாத அப்பனுக்கு, மாத்திரையும் துணியும் அனுப்பியிருக்கான். கோயில்ல சாமி கும்பிட்டு வரும்போது அந்த சந்தோசத்துல பிச்சை போடுவோம்ல அந்த மாதிரி என்று கதறியழுதார்.

என் அப்பா யாரிடம் இப்படி சொல்லி அழுவார் என்று யோசித்த எனக்கும் அழுகை வந்தது. ஊருக்குப் போக முடிவெடுத்துக் கொண்டே தாத்தாவை நெருங்கினேன்.

சரவணகாந்த்,
சிவகாசி

© TamilOnline.com