கொலுக் குழப்பம்
''அத்தை இந்த வருஷம் நீங்க இந்தியாவிலிருந்து யு.எஸ். வந்து இருக்கீங்க. பாருங்க இங்கே நவராத்திரி கொண்டாட்டத்தை...'' பெருமை பொங்கக் கூறினாள் சுமதி.

''என்னமோ கேள்விப்பட்டேன் சாப்பாடு, கி·ப்டுன்னு ஒரே அமர்க்களப்படுமாமே. இன்னும் இரண்டு வாரம் இருக்கே எனக்கும் எல்லாம் பார்க்க ரொம்ப ஆசையாத்தான் இருக்கு'' என்றார் மாமியார் சிவகாமி.

''அம்மா உன் மருமக இருக்காளே, ஒரு மாசம் முன்னாலே இருந்தே பட்டியல் போட்டு 'ஆர்கனைஸ்டா' பண்ணுவா. அதுல பலே கெட்டிக்காரி. சும்மா சொல்லக்கூடாது பொங்கல், இட்லி, சேவை, பஜ்ஜின்னு அமர்க்களமாச் செய்து... பாரேன் நீயே'' சிவகாமியின் பிள்ளை ராகவன் மனைவி சுமதியைப் புகழ்ந்து தள்ளினான்.

''அதென்ன, சாப்பாடு வேறயா! அதிசயமாத் தான் இருக்கு. வரவங்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சுண்டல்தான் கொடுக்கறது ஊருல வழக்கம். பொங்கலாவது புளியோதரையாவது. உம்... எல்லாம் காலம் தலைகீழாய்ப் போயிண்டிருக்கு.'' சிவகாமியின் அங்கலாய்ப்பில் சந்தோஷமும் மெருகிட்டிருந்தது.

உடனே ''அத்தை, எல்லாரும் சந்திக்க இது ஒரு சந்தர்ப்பம். அதோட எவ்வளவோ தூரத்தில் இருந்து கார் ஓட்டிட்டு வராங்க. சாப்பாடு செய்து வைத்தால் செளகரியம் தானே'' என்றாள் சுமதி.

''என்னமோ போங்க. ஏதோ நம்ப கலாசாரம் விடாம செய்யறீங்க. அதுவே மனசுக்கு திருப்தியாயிருக்கு'' என்று முடிவுரை வழங்கினார் சிவகாமி.

சுமதியும் ராகவனும் அலையாய் அலைந்து ஹோம் டிப்போ சென்று பலகைகள் வாங்கி வந்து கொலுப்படி கட்டினர். ''ஐயையோ இதென்ன தடதடன்னு ஆடுது பொம்மை எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தியாலேர்ந்து கொண்டு வந்திருக்கேன். விழுந்தா நிமிஷத்துல உடைஞ்சு போயிடுமே! பேசாம ஸ்டீல் ஸ்டாண்ட் வாங்கிட்டு வாங்க. கொலு முடிஞ்சதும் அலமாரியாப் பயன்படுத்திக்கலாம்.'' உடனே ராகவன் இரும்புப் படிகள் வாங்க ஓடினான்.

கொலுவும் தொடங்கிவிட்டது. சுமதி ஒரு நாள் குறிப்பிட்டு எல்லாரையும் ·போன் மூலம் அழைத்தவண்ணம் இருந்தாள். ''அத்தை பேஸ்மெண்ட்தான் கொலு வைக்க வசதி நீங்க கொஞ்சம் ஏறி இறங்கக் கஷ்டப்படப் போறீங்க. உடம்பையும் பார்த்துக் கோங்க'' அன்பொழுகப் பேசினாள் சுமதி.

மருமகளின் சாமார்த்தியத்தையும், அன்பையும் கண்டு சிவகாமி பூரித்துப் போனாள்.

''இதோ பாருங்க. இந்த வருஷம் நம்ம வீட்டு கொலுதான் டாப் கிளாசா இருக்கப்போறது. அதுல இன்னொரு சர்ப்ரைஸ். இந்தியா விலேர்ந்து நல்ல விலையுயர்ந்த பொருளா பார்த்து கி·ப்டு வாங்கிக் கொண்டு வந்திருக்கேன்'' சுமதிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

''அம்மா, பாரு சுமதி என்னமா பிளான் பண்ணிச் செய்யறா!'' ராகவனுக்குப் பெருமை பிடிபடவில்லை.

யாருக்கு என்ன கொடுக்கணும்னு பெரிய பட்டியல் தயார் செய்து முடித்தாள். ராத்திரி கண்விழித்து பட்சணங்கள் ரெடியாயின. சிவகாமியும் மருமகளுக்கு உதவி செய்தாள். 'அப்பாடா!' ஒருவாறு வேலைகள் முடிந்ததும் படுக்கைக்குப் போகுமுன் ஆபீஸிலிருந்து ·போன்...

அவசர வேலையாம். காலை எட்டு மணிக்கே வரவேண்டும் என்று சொன்ன வுடன் சுமதிக்கு அழுகை பீறிட்டது.

''என்னங்க நாளைக்கு அவசர வேலையா நியூயார்க் போகணுமாம். இத்தனை ஏற்பாடும் செய்து இருக்கேனே, எல்லாரும் வரும்போது நான் இல்லாம எப்படி?'' நெஞ்சு வெடிக்கக் கூறினாள் சுமதி.

''சுமதி, இதோ பாரு இப்போ இருக்கற நிலைமையில வேலை ரொம்ப முக்கியம். நேற்று உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். எங்க ஆபீஸ்ல நாலு பேரை வீட்டுக்குப் போகச் சொல்லிட்டான் தீடீர்னு. வேலை இருக்கேன்னு சந்தோஷப்படு. அம்மா இருக்காங்க. வெற்றிலை பாக்கு கொடுப் பாங்க. கவலையில்லை. ·போன்ல எல்லார் கிட்டேயும் சொல்லிக்கலாம். லிஸ்ட்தான் ரெடியாயிட்டது'' சமாதானம் சொன்னான் ராகவன்.

பொழுது விடிந்து அழுத கண்ணும் சிவந்த முகமுமாய் சுமதி ஆபீஸ் புறப்பட்டாள். சிவகாமியிடம், ''அத்தை! லிஸ்ட் பேஸ் மெண்ட்ல இருக்கு. பழம், தாம்பூலம் எல்லாம் பழுப்புக் கவர்ல போட்டு அங்கே அலமாரி யில வெச்சிருக்கேன். பார்த்துக் கொடுத் திடுங்க. நான் அப்பப்போ ·போன்ல பேசிக்கறேன்'' சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது.

சிவகாமியும் இட்லி, சட்னி, பொங்கல் என்று எல்லாம் தயார் செய்துவிட்டாள். மூன்று மணியிலிருந்தே எல்லாரும் வர ஆரம்பித்தனர். புடவை, நகை என்ற பெருமைப் பேச்சுக்களும், பாட்டு, ஆட்டம் என்று வீடே கல்யாணக்களையுடன் அமர்க்களப்பட்டது.

''நான் தான் ஆண்ட்டி. அனிதா இவ மீரா" என்று வருகிறவர்கள் தாமே சிவகாமிக்கு அறிமுகம் செய்து கொண்டனர். சிவகாமியும் "எம் மருமக ரொம்ப கெட்டிக்காரி. எல்லாம் ரொம்ப அழகா ஏற்பாடா செய்துட்டாள்" என்று பெருமையுடன் கூறியபடி அலமாரியில் இருந்து பரிசுகளையும், தாம்பூலப் பைகளையும் எல்லாருக்கும் கொடுத்து முடித்தாள். கடைசி விருந்தினர் கிளம்பிப் போக மணி ஒன்பது ஆகிவிட்டது.

சுமதி அரக்கப் பரக்க வந்து சேர்ந்தாள். மூச்சு இரைக்க ''அத்தை, நிறையப் பேர் வந்தாங்களா? எப்படி சமாளிச்சீங்க பாவம். எல்லாம் வச்சுக்குடுத்தீங்களா?'' சரமாரியாகக் கேட்டாள்.

''ஓ, எவ்வளவு பிரெண்ட்ஸ் உங்களுக்கு! மூணு மணிலேர்ந்து ஓயவில்லை. ஆச்சரியமா இருக்கு. இவ்வளவு இந்தியர்கள் இருக்காங்களா? நீயும் பேர் எழுதி கி·ப்டுகளை அலமாரியில வச்சுட்டுப் போனதால எனக்கு ரொம்பச் சுலபமாப் போச்சு...''

''என்ன அத்தை சொல்றீங்க? அலமாரியில கி·ப்டுல பேர் எழுதியா? லிஸ்ட்ல இல்லே இன்னாருக்கு இன்னதுன்னு எழுதி வச்சிருந்தேன்!'' சுமதியின் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

''என்ன சுமதி. டேபிள் மேல ஒரு பட்டியலும் இல்லையே. நிலவறை அலமாரியில பேர் எழுதிச் சமான்கள் வச்சிருந்தே இல்லே. அதன்படி அவங்களைக் கேட்டுக் கொடுத்தேனே.''

''ஐயய்யோ! அத்தை என்ன காரியம் செய்திருக்கீங்க! அதெல்லாம் போன வருஷம் அவங்க அவங்க எனக்கு வச்சுக் கொடுத்தது. அடையாளத்துக்காக மேல பேர் எழுதி வச்சிருந்தேன். அதை அவங்களுக்கே கொடுத்திருக்கீங்க! நான் வாங்கிட்டு வந்த கி·ப்டுகளை மேல் அலமாரியில இல்ல வச்சிருந்தேன். லிஸ்டையும் மறந்து போய் என் ஹேண்ட் பாக்லயே எடுத்துட்டுப் போயிருக்கேன். அடக்கடவுளே!'' தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டாள் சுமதி.

உள்ளே நுழைந்த ராகவன் ''வெரிகுட். நல்ல கலாட்டா இது. வாங்கிட்டுப் போன ·பிரண்ட்ஸ் எல்லாம் என்ன நினைப்பாங்களோ! நல்லாச் செஞ்சே போ! மறக்கவே முடியாது'' என்று கூறவும் சுமதி இன்னும் கொஞ்சம் கூனிக்குறுகிப் போனாள்.

சிவகாமி ஒன்றும் பேசமுடியாமல் உறைந்து போய்விட்டார்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com