முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக தமிழக அரசு கேரள அரசுடன் பல ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்காததால் வேறுவழியின்றி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
தமிழக அரசின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் (27.02.06) அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. அதுமட்டுமல்லாமல் இருமாநில அரசுகளும் இதுகுறித்து மேலும் பேசித் தீர்த்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழக அரசு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கடந்த 23ம் தேதி (அக்டோ பர்) கூட்டியது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற அக்கூட்டத்தில் முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து தமிழக அரசின் சார்பாக எடுத்து வைத்த நியாயங்களை ஏற்றுக் கொண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை நிறைவேற்றுவதற்கு முன்வராத கேரள அரசின் போக்கைக் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் நல்லெண்ண சமிக்ஞையாக, மத்திய அரசு முன்னிலையில் தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
மேலும் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால் மறுபடியும் உச்சநீதிமன்றத்தை அணுகுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதுபோல் அணையைப் பலப்படுத்தவதற்காக எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளும் போது கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தமிழக அரசு அதிகாரிகள் எவ்வித இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று உத்தரவிடுமாறு முறையீடு செய்வோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில் கேரள முதல்வர் திருவனந்தபுரத்தில் பத்திரியாளர்களிடையே பேசுகையில், முல்லைப்பெரியாறு அணைத் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த கேரள அரசு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசிடமிருந்து தமக்கு தகவல்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியது முக்கியமானதாகும்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |