மீட்சி
நந்தவனத்தின் இடையே துள்ளித்துள்ளி ஓடியது மீகா. "விடாதே,..பிடி, பிடி. பிடி.." என அந்த அழகுச் செம்மறியாட்டைப் பாசாங்காய் ஓடவிட்டு, சிரிப்பும், குதூகலமுமாய்த் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தார்கள் லியாவும், வெராவும். சற்றும் எதிர்பாராத விதமாய்த் தூறலடித்தது. என்னவென்று அண்ணாந்து பார்த்து யோசிக்குமுன் மழை கொட்டிப் பெருவெள்ளம் கரை புரண்டோடியது. "லியா, மீகா..." எனக் கத்தி அழைத்தாள் வெரா. என்னவோ அவள் வாயிலிருந்து சத்தம் வரவேயில்லை. பயம் மிக ஆட்கொண்டவளாய் வேகவேகமாய் ஓடினாள் வெரா. அவளைக் காட்டிலும் வேகமாய் ஓடிவந்த வெள்ளநீர், அவள் காலை நனைத்துக் கழுத்துவரை ஏறியது. மூச்சு முட்டி "அம்மா!" என அலறி எழுந்தாள் வெரா என்ற வெரோனிகாள். "நல்லவேளை கனவுதான்!" என்ற பெருமூச்சு விட எத்தனித்தவள் ஒருமுறை தன் கீழுடம்பை உற்றுப் பார்த்தாள் அவள் இடுப்பு முழுவதும் நனைந்திருந்தது.

அழுகையும், அயர்வும் சேர்ந்துகொள்ள, மெதுவாய் கிணற்றடிக்கு நடந்து போனாள் வெரா. முழுநிலா அழகாகக் காய்ந்துகொண்டிருந்து. அத்திப்பழ மரக்கிளைகளை அசைத்து, அசைத்து அந்த சாம வேளையைக் காற்று மெல்லத் தாலாட்டியது. கிணற்று நீரை மொண்டு தலைக்கு ஊற்றிக் குளித்தவள், நனைந்த ஆடையைக் களைந்துவிட்டு உடை மாற்றிக்கொண்டாள். படுத்திருந்த சாக்கையும் களைந்தாள். நாளை அவற்றைச் சுட்டுப் பொசுக்கிடுவார்கள், இல்லையெனில் தீட்டு. கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வடிந்தது. அடி வயிற்றின் இரு பக்கங்களிலும் வலி பிசைந்தது. இன்னும் எத்தனை காலம் ஆண்டவரே, இன்னும் எத்தனை காலம் இந்த வலி, வேதனை! இந்த பன்னிரண்டு ஆண்டுப் பாடு என்று ஓயுமோ என மனம் அங்கலாய்க்கக் கேவி அழுதாள் வெரா.

வெரோனிகாள், செல்வச் சீமாட்டியாய் வளர்ந்தவள். வெரா அவள் செல்லப் பெயர். அன்பெல்லாம் கொட்டி அழகுப் பதுமையாய் வளர்த்தாள் அவள் தாய். அவள் தந்தையோ பெருவணிகர். கிட்டிய பணத்தைக் கொட்டி வைக்க வீடு கொள்ளவில்லை. லியா, அவளது ஆசைத் தங்கை. லியாவுக்கு அக்கா சொல் மிக்க மந்திரமில்லை. இரு கண்களாய் போற்றி வளர்த்தார்கள் இருவரையும். மகனில்லாக் குறைபோக்க வந்த அத்தை மகன் சிமியோனின் சிந்தையும் உழைப்பும் அந்த வட்டாரத்திலயே அவர்கள் வணிகத்தை இன்னும் சிறக்கச் செய்தது. அவள் பூப்பெய்திய இரண்டாம் மாதம் சிமியோனுக்கும் வெராவுக்கும் கோலாகலமாய் ஊரே மெச்சும்படி மணமுடித்து வைத்தார் அவள் தந்தை.

சிமியோன் அவளைக் கண்ணின் மணிபோலப் பார்த்துக்கொண்டான். இனிதான இல்லறத்தின் சாட்சியாக அவள் உண்டாகியபோது. வெரா தன்னைப்போல பாக்கியசாலி யாரும் இல்லையெனப் பெருமிதம் கொண்டாள், மூன்றாம் மாதம் கரு கலைந்து போகும்வரை. அடுத்த இரண்டு வருடங்களில் மூன்று முறை கருவுற்றுக் கலைந்தபோது, சொல்லொணாத் துயரத்தில் தவித்தாள், வெரா. அதனினும் பெரிதாக ஒரு துன்பம் வந்தது. நிற்காமல் போன உதிரப்போக்கு வெராவை உடைத்துப் போட்டது. மனைவியின் வேதனை சகிக்காத சிமியோன் வைத்தியத்துக்குக் கொண்டுவந்த மருத்துவர்களை எண்ணி மாளாது.

சாத்திரப்படி அவள் தள்ளி வைக்கப்பட்டவள். வீட்டில் சமையலோ, ஒரு நல்லதிற்கோ, நிகழ்ச்சிக்கோ... ஏன் பொதுவில் நடந்து போகக்கூட அவள் லாயக்கற்றவள். அவளைத் தொட்டால் தீட்டு. பின்கட்டில் அவளுக்கென்று ஓரிடம் நிரந்தரமாய் ஆயத்தமானது. வெராவின் தாய், அவள் சித்திக்கு வந்த பரம்பரை நோய்தான் அவளையும் தாக்கிற்று என ஒவ்வொரு நாளும் மருகி, மருகி மாய்ந்து போனாள். தாயும் தந்தையும் கவலையில் மரித்துப் போக, அவள் தங்கை லியாதான் ஆதரவாய் அவளுக்கு இன்னொரு தாயாய் ஆகிப் போனாள். அவள் அன்பின் கணவன், அவள்பால் கொண்ட பாசத்தின் காரணமாய் லியாவையே மணந்து கொண்டான். இதோ ஆயிற்று பன்னிரண்டு ஆண்டுகள். நோய் தீர்ந்தபாடில்லை, தீவிரம்தான் ஆயிற்று.. வெராவின் வைத்தியமே குறிக்கோளாய் அலைந்த சிமியோன் வணிகத்தை மறந்தான். தொழில் முன்போல் அத்தனை செழிக்கவில்லை. ஆனாலும் முத்துகள் போன்று மூன்று பெண்குழந்தைகள், இரட்டையராக ஆண்பிள்ளைகள் என லியா அவர்கள் வாழ்வின் வெறுமையை ஐந்து குழந்தைச் செல்வங்களால் நிரப்பியிருந்தாள்.

மூத்தவள் அன்னா. "அம்மா" என அழைத்துக் கொண்டு துள்ளிவரும் அன்னாவை, பசுவைத் தேடிவரும் கன்றுக்குட்டி போல, தான் பெற்ற மகள்போன்று பாசத்துடன்வளர்த்தாள் வெரா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை கொண்டு வருவாள் அன்னா. கண்களை உருட்டி, சிமிட்டி, கைகளை ஆட்டி அவள் சொல்லும் உலக நடப்புகளும், சேதிகளும் தான் வெராவின் வெளியுலகத் தொடர்பு. பட்சணங்களையும், பண்டங்களையும் இவளுக்கு ஒளித்துக் கொண்டுவரும் பாசக்காரி! கடந்த சில தினங்களாக அன்னா, நாசரேத் நகரத்தின் இயேசுவைப் பற்றித்தான் பேச்சாய்ப் பேசிக் கொண்டிருக்கிறாள். அவருடைய போதனைகளையும், அற்புதங்களையும் மகள் அன்னா சொல்லச் சொல்ல அவர்பால் ஆவல் பெருகிற்று வெராவுக்கு. தன் வியாதி தீர எத்தனை வைத்தியம் பார்த்தாலும், மந்திரீகங்களில் வெராவுக்கு நம்பிக்கை இல்லை. அப்படி யார் உபதேசித்தாலும் அவள் உடனே அதை மறுதலித்துவிடுவாள். நோய் நொடிகளைத் தீர்க்கும் இயேசு ஒருவேளை மாயக்காரரோ என எண்ணியபடி உறங்கிப் போனாள் வெரா.

"அம்மா, அம்மா..." என அன்னா அழைத்துத்தான் கண்விழித்தாள் வெரா. காலைச்சூரியன் கிழக்கில் எழும்பிக் கொண்டிருந்தது. சோர்வில் உறங்கிவிட்டோமே, அதிகாலை ஜெபம் செய்ய மறந்தோமே என எண்ணியபடி எழுந்தவள், மகளின் அழகை அந்த இளவெயிலில் ரசித்தாள். உலகைப் படைத்த ஆண்டவர்தான் எத்தனை நல்லவர். ஒளியை பகலில் ஆள ஆதவனையும், இரவில் ஆளச் சந்திரனையும், பயிர்கள் செழிக்க மழையையும், உயிர்கள் வாழ மரம், செடி, கொடி, காய், கனிகளையும், மனிதன் ஆள விலங்குகளையும், கடலும், மலையும், அவன் பல்கிப் பெருக எத்தனை அருமையாய் ஆசிர்வதித்திருக்கிறார். ஆம், அவர் பூரணமான வரங்களை பரத்திலிருந்து அள்ளி அனுப்பித்தரும் அருமையான தேவன் என்றேல்லாம் பூரித்து நன்றியால் தொழுதாள்.

கண்கள் பனிக்கத் தன்னை உற்று நோக்கிக்கொண்டிருக்கும் தாயை, அன்னா "அம்மா... உனக்கு நான் என்ன கொண்டு வந்திருக்கேன் சொல்" என்றபடி ஒரு சின்னக் குவளையை நீட்டினாள், அதில் தேனில் தோய்த்த உலர் அத்திப்பழங்கள் இருந்தன. "இது ரத்த விருத்திக்கு ரொம்ப நல்லதாம், எலிசாவின் பாட்டி சொன்னாள். சோகையான உன் கன்னங்கள், இனி ஜொலிக்கும் பார்!" என்று சொல்லிக்கொண்டே வெராவின் வாயில் ஒரு பழவிள்ளலை ஊட்டினாள். அவளுடைய அன்பில் மளுக்கென்று கண்ணீர் உடையக் கரைந்து போனாள் வெரா. "ம்,..அப்பறம். என் செல்லம், வேறென்ன சேதி கொண்டு வந்துள்ளது" எனப் பரிவுடன் அன்னாவின் தலையைக் கோதியபடி வினவினாள்.

அவள் ஏதோ ஞாபகம் வந்ததுபோல " நாசரயேனாகிய இயேசு கிறிஸ்து நம் ஊருக்கு வந்திருக்கிறார் தெரியுமா? அவரைக் காண கூட்டம் அலை மோதுகிறதாம். அவர் பிறவிக் குருடர், முடவர் என எல்லா நோய்களில் இருந்தும் விடுதலை தருகிறாராம், அவர் ஆண்டவரைக் குறித்த அன்பின் சேதி உள்ளத்தை உருக்குகிறதாம், அது ஏன், நேற்றுப் படகினை பெரும் சூறைக் காற்றிலிருந்து காப்பாற்றினாராம்" எனக் கண்கள் விரிய விவரித்தாள்.

வெரா தன் சந்தேகத்தைக் கேட்டேவிட்டாள் "மகளே, இவர் மாயக்காரராய் இருப்பாரோ!". அன்னா "அம்மா, மாய மாந்திரீகம் செய்பவர், பணம் காசை எதிர்ப்பார்த்துதானே செய்வார். இவரோ ஊருக்கு வெளியே விரட்டியடிக்கப்பட்ட, மறந்துவிடப்பட்ட தொழுநோயாளிகளையும், தெருவோரக் குருடர்களையும் அல்லவா குணப்படுத்துகிறார். ஆண்டவரை துதியுங்கள், புறஜாதியாராய் இருந்தாலும் உங்களை நேசிப்பதுபோல் அவர்களை நேசியுங்கள், உங்கள் எதிரிகளை மன்னியுங்கள், அவர்களை ஆசிர்வதியுங்கள் அப்போது தான் பரலோகத்தில் இறைவனுடன் போஜனம் செய்வீர்கள், எனக் கர்த்தரின் அன்பைப் போதிப்பவர் எப்படி மந்திரவாதி ஆவார்!" என அன்னா பேசிக்கொண்டே போனாள்.

வெராவின் மனதில் ஒருவிதமான மாற்றம். அதனினும் தீவிரமாய் அவரைக் காணவேண்டும் என ஆவல். எப்படி அவரைக் காண்பது? வீட்டை விட்டு வெளியே போய் வருடங்கள் ஆயிற்றே, ஊரார் என்னைக் கண்டால் தீட்டான பெண், மரபுமீறி வெளியே வந்தாள் எனக் கலகம் விளைவித்தால் என்ன செய்வது? அவ்வளவு தூரம் நடக்க எனக்கு வலிமை இருக்கிறதா? எழுந்த எல்லா வினாக்களையும் புறந்தள்ளினாள். ஆம், நான் அவரைக் காணத்தான் வேண்டும், இந்தப் பரம்பரை நோயிலிருந்து எனக்கு விடுதலை வரத்தான் வேண்டும், ஆண்டவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது என்ற வேத வசன வாக்கியம் என் வாழ்வில் உண்மையுறத்தான் வேண்டும் என்ற முடிவுடன் எழுந்து நடக்கலானாள்.

திரளான கூட்டத்தின் நடுவே வெரா, அவரைக் கண்டுகொண்டாள். இன்னும் கொஞ்சம் எப்படியாவது முண்டி அவரருகே போனால் போதும். விஸ்தாரமான ஜெபமோ, ஆசிர்வாதங்களோ தேவையில்லை அவர் ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதும் என திணறித் திணறி, தள்ளும் கூட்டத்தின் நடுவே அவரை நோக்கி நகர்ந்தாள். "அய்யோ! யாரது, யாரோ ஊர்ப்பெரியவர் அவரை வீட்டுக்கு அழைத்தல்லவா போகிறார்..." வார்த்தை வேண்டாம் அவருடைய அங்கியின் ஒரத்தைத் தொட்டால் போதும், நான் சுகமடைவேன் என முண்டியடித்து அவரருகே போய் அவர் அங்கியைத் தொட்டே விட்டாள். தொட்ட அக்கணத்தில் அவள் வலியும் வேதனையும் மறைந்ததை உணர்ந்தாள், மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி, சமாதானம் பொங்க உறைந்து நின்றாள்.

அப்பொழுது அவர் திருவாய் மலர்ந்து "என்னைத் தொட்டது யார்?" என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, அவருடைய சீடர் பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: "ஐயனே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யாரென்று எப்படிக் கேட்கிறீர்?" என்றார்கள். அதற்கு இயேசு: "என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு" என்றார். அப்பொழுது அவள்தான் அவருக்கு மறைந்திருக்கவில்லை என்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சுகமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.

அவர் அவளைப் பார்த்து: "மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை ரட்சித்தது, சமாதானத்தோடே போ" என்றார். வெராவின் உள்ளம் அவர் அன்பினால் நெகிழ்ந்தது, "ஆம், இவர் கர்த்தரின் திருக்குமாரன்தான்! தேவன் தாம் நம்மை இவ்வளவாக நேசிக்கமுடியும். ஆசாரியானோ, வேதபாரகனோ "நீ என்னைத் தொட்டது தீட்டு" எனக் கடிந்திருப்பான்.

ஆகா, என் நோயிலிருந்து எத்தனை பெரிய சுகம், விடுதலை. இனி இந்த நோய் என் சந்ததியைத் தொடர்வதில்லை. ஆம், எனக்கு வலி, வேதனை, அவமானம், வெட்கத்திலிருந்து மீட்சி! உலகின் எல்லா வகையான துன்பங்களுக்கும் அன்புதான் அருமருந்து என இரக்கத்தையும், மன்னிப்பையும், சமாதானத்தையும் போதிக்கும், எனக்கு மீட்சியை வழங்கிய இவரே என் மீட்பர். ஆமேன்!" எனச் சுகத்துடன் கிறிஸ்துவை வணங்கினாள் வெரா.

தேவி அருள்மொழி அண்ணாமலை,
சிகாகோ

© TamilOnline.com