ஆகஸ்ட் 23, 2014 அன்று திரு. ரவீந்திர பாரதி ஸ்ரீதரனின் நாதோபாசனா கவின்கலைப் பள்ளியின் சார்பில் ஷ்ரேயஸ் ராமஸ்வாமியின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது. திரு. நெய்வேலி சந்தானகோபாலன் கச்சேரியில், வித்வான் டெல்லி சுந்தர்ராஜன் (வயலின்), திரு. ரவி பாலசுப்ரமணியம் (கடம்), ஹரி தேவநாத் மற்றும் விவேக் சுந்தரராமன் (பாட்டு, தம்புரா) என உடனிருந்தனர். திரு. நெய்வேலி நாராயணன் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தார்.
ரீதிகௌளை வர்ணத்தில் தொடங்கி, பின் சந்தானகோபாலனின் சாகித்யமான ஹம்சத்துவனியில் அமைந்த பாதபஜனமேவும், அடுத்து வந்த தீக்க்ஷதர் கிருதியும் வெகு சிறப்பு.. அதற்குப் பின் நிரவல், கல்பனா ஸ்வரத்துடன் வராளி ராகத்தில் சேஷாசல நாயகம் பாடலுக்கு ஷ்ரேயசின் துல்லியமான வாசிப்பு மெருகேற்றியது. கல்யாணியில் "அம்பரமே தண்ணீரே" திருப்பாவையும், சுத்த சாவேரியில் தாரிணி தெளிசிகொண்டி ஆகியவற்றுக்குப் பின் கொன்னக்கோல் சொல்லி தனியாவர்த்தனம் விறுவிறுப்பு. பெஹாக் ராகத்தில் அமைந்த ராகம் தானம் பல்லவிக்கு ஷ்ரேயசின் வாசிப்பு எடுப்பாக இருந்தது. காபி ராக தில்லானா, இறுதியாகத் திருப்புகழுடனும் கச்சேரி இனிதே நிறைவடைந்தது. நெய்வேலி நாராயணன் ஷ்ரேயஸ் ராமஸ்வாமியின் வாசிப்பைப் பாராட்டிப் பேசினார்.
விஜயலக்ஷ்மி |