SIFA: 'தெய்வீக ஒளி'
அக்டோபர் 19, 2014 அன்று கலிஃபோர்னியா சான்டா க்ளாரா நகரின் கன்வென்ஷன் சென்டர் அரங்கில் South India Fine Arts (SIFA) இளங்கலைஞர்களின் கர்நாடக சங்கீத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. SIFA போர்ட் உறுப்பினரான திருமதி. உஷா ராமஸ்வாமி நிகழ்ச்சியைத் துவக்கிவைத்து குரு திருமதி. லதா ஸ்ரீராம் மற்றும் அவரது பள்ளியான ஸ்ரீ லலிதகான வித்யாலயாவையும் அறிமுகம் செய்தார். 'தெய்வீக ஒளி' என்ற அன்றைய நிகழ்ச்சியின் தலைப்பையும், திவ்ய ஒளியான மகாபெரியவாள் என்று பக்தியுடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மகத்துவத்தையும் லதா ஸ்ரீராம் எடுத்துரைத்தார்.

லதா ஸ்ரீராமின் தகப்பனார் திரு. R. ராஜகோபாலன் இசைவடிவம் கொடுத்த ஸ்ரீ சத்குரு தசகத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. கணேசரைப் போற்றும் சுநாத விநோதினி வர்ணத்துடன் தொடர்ந்தது. அனைத்துப் பாடல்களும் மகாபெரியவாளின் சிறப்பைப் போற்றும் வண்ணம் அமைந்திருந்தன. "என்ன பெரும் தவம்" (சஹானா) என்ற பெரியசாமி தூரன் பாடல், "ஆனந்த வாஹேந" (ஆனந்த பைரவி) ஆகியவை சிறப்பு. "சந்திரசேகரம் ஆஷ்ரயே" என்ற கீரவாணிப் பாடல் மிகச்சிறப்பாக இருந்தது. சங்கராபரணத்தில் N.S. ராமச்சந்திரன் இயற்றிய "ஸ்ரீ சந்திரசேகர யதீந்த்ரம்" என்ற கிருதியை மேல்நிலை மாணவ, மாணவியர் ஆலாபனை, கல்பனா ஸ்வரத்துடன் பாடி மனதைக் கவர்ந்தனர். செல்வியர் ந்யந்தரா நரசிம்ஹனும், ஷ்ரியா ஆனந்தும் சிறப்பாக வயலின் வாசித்தனர். அமித் ரங்கநாதன் மிருதங்கத்தில் மெருகு சேர்த்தார்.

இரண்டாவது பகுதியில் மஹாராஜாபுரம் சந்தானம் இயற்றிய "சந்திரசேகர சரஸ்வதியே" (ஹிந்தோளம்), பசந்த் பஹார் ராகத் தில்லானா மற்றும் "வந்தேஹம் குருவரம்" (பேஹாக்), "கருணாரச" (யமுனா கல்யாணி) என்று இனிமையான பாடல்களை உணர்ந்து பாடினர். "சிவனார் மனம்குளிர" என்ற திருப்புகழைச் செவிகுளிரப் பாடினர். "வேதஸ்ய தத்வம்" என்ற சுலோகத்தை இளநிலை மாணவர்களும் சேர்ந்து பாடியது மனதைக் கவர்ந்தது. லதா ஸ்ரீராம் மனநெகிழ்வுடன் சுவாமிகளுக்கு நிகழ்ச்சியை சமர்ப்பித்தார். நிறைவாக SIFA தலைவர் திருமதி. மீரா சாரி நன்றி வழங்கினார். திருமதி. வசந்தி வெங்கட்ராமன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். "மைத்ரீம் பஜத" என்ற உலக அமைதிக்கான விண்ணப்பத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

ரமாதேவி கேசவன்,
சான்டா கிளாரா

© TamilOnline.com