NETS: குழந்தைகள் தின விழா
நவம்பர் 8, 2014 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் (NETS) குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடியது. இந்த ஆண்டின் புதிய நிகழ்ச்சியாக தமிழ்த்தேனீ மேடையேறியது. மாறுவேடப் போட்டி, தனித்திறன் போட்டியோடு நிகழ்ச்சி மதியம் தொடங்கியது. இதில் சிறுவர், சிறுமியர் குழலூதும் கிருஷ்ணன், முருகன், அவ்வையார் வேடங்களில் தோன்றி மனதைக் கவர்ந்தனர். நான்கு அணிகளாகப் பிரித்து தமிழ்த்தேனீ போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வோர் அணிக்கும், பொருள் கூறுதல், கோடிட்ட இடத்தை நிரப்புதல், மொழிபெயர்த்தல் போன்ற பணிகள் அளிக்கப்பட்டன. கேள்விகள் எத்தனை கடினமாக இருப்பினும், சளைக்காமல், முயன்று வெற்றி பெற்றனர்.

வழமைபோலத் திருக்குறள் போட்டி நடைபெற்றது. குறளின் முதல், கடைச் சீர்கள், பொருள் என்று நடுவர்கள் எப்படி மடக்கினாலும், குழந்தைகள் சரியாகக் கூறினர். நடுவர்களாகத் திரு. வேல்முருகன், திருமதி. மாலா சிவனாண்டி, திரு. ஸ்ரீதர் ஆகியோர் பங்களித்தனர். அடுத்து பேச்சுப் போட்டி, "பாவேந்தர் பாரதிதாசன்" என்ற தலைப்பில் மிக இளநிலை குழந்தைகளுக்கும், "முயற்சி திருவினையாக்கும்" என்ற தலைப்பில் இளநிலை குழந்தைகளுக்கும் நடத்தப்பட்டது. கட்டுரைப் போட்டி ஒன்றும் நடந்தது.

"சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சி களைகட்டியது. வயதுவாரிக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டனர். சுதா, உமா மற்றும் பிரியா நடுவர்களாகச் செயல்பட்டனர். இறுதியாக இரண்டு நடன அணியினரின் 'சூப்பர் டான்சர்' நிகழ்ச்சி நடந்தது. தமிழ் சங்கத் தலைவர் திரு. ராஜ் வேல்முருகன் முன்னுரையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. திருமதி. பூங்கோதை மற்றும் திரு. பூங்குன்றன் தொகுத்து வழங்கினர். திரு. கமலநாதன் முடிவுரை வழங்கினார்.

பமிலா வெங்கட்,
பாஸ்டன்

© TamilOnline.com